தேசியம் என்பது புவியியல் பரப்பு சார்ந்ததாக அல்லாமல், அவர்களின் வாழ்வைத்தாமே தீர்மானிக்கும் உரிமையைக்கொண்ட, அவர்களுக்கென சொந்த அரசியல் அதிகாரத்தைக் கொண்ட தனித்தன்மையான மக்கள் சமூகம் என்ற விரிவான அர்த்தத்தைக் கொண்டது. இதன் அடிப்படையில் தமிழ்த்தேசிய இனம் அதற்கென்று நீண்ட தனித்தன்மை வாய்ந்த வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது; சொந்த பண்பாட்டு மரபுகள் இருக்கின்றன. அவர்களின் வாழ்கைமுறை தனித்துவம் வாய்ந்தது. அதனால்தான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக சிறிலங்கா அரசின் ஆதிக்கத்தையும், ஆக்கிரமிப்பையும் எதிர்த்து வீரம் செறிந்த போராட்டத்தை நடத்திவருகின்றனர். இப்போராட்டத்தில் புலிகளின் தலைமையில் வெளிப்படுத்திய‌‌ துணிவு, வலிமை, அர்ப்பணிப்பு, தியாகம் என்பவற்றின் மூலமாக தமிழ்தேசிய இனமாக உலகம் முழுவதும் அடையாளப்படுத்திக் கொண்டு தனியான அரசியல் வாழ்வின் அவசியத்தை உலகின் முன் தெளிவாகவும், உறுதியாகவும் வெளிப்படுத்தியிருக்கின்றன.

தமிழீழத் தேசியம் என்ற வகையில், ஏனைய தேசங்களுக்கு இருப்பது போன்ற அனைத்து உரிமைகளும் இத்தேசத்திற்கும் இருக்கும். அதன்மூலம் நிலத்தின் மீதும், அதன் கடல் பகுதியின் மீதும், வான்பரப்பின் மீதும் முழுஆதிக்கம் இருக்கும். அத்தகைய ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சொந்த பொருளாதார உற்பத்தி முயற்சிகள், உள்கட்டமைப்புக்களை உருவாக்குவதற்கும் முழுஉரிமைத் அத்தேசத்தின் தமிழ்மக்களைச் சார்ந்தது. தமிழர் பண்பாட்டு மரபுகளை பேணி வளர்ப்பதற்கும், மக்கள் விரும்பும் விதத்தில் புதிய முற்போக்கான கூறுகளை அவற்றுடன் இணைத்து வளர்ப்பதற்குமான உரிமையையும் இவை அனைத்திற்கும் மேலாக சுதந்திரமான, இறையாண்மைமிக்க அரசைக் கொண்டிருப்பதற்கும் இவ்வரசின் மூலமாக சர்வதேச சமூகங்களுடன் சமத்துவ அடிப்படையில் நல்லுற‌வைப் பேணுவதற்கும் உரிமையுண்டு என்ற அளவில் தமிழீழத்தேசியம் முக்கியத்துவம் பெறுகிறது.

இத்தகைய தேசியத்தின் பிரிக்க முடியாத உரிமைகளை சிறிலங்கா அரசு முற்றாக மறுப்பதோடு, தமிழ்த்தேசியத்தின் இருப்பை அழிப்பதற்கான திட்டத்தில் மூர்க்கத்தனமாக செயல்பட்டுவருகிறது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் மூலமும், இராணுவ ஆக்கிரமிப்பின் மூலமாகவும் தமிழர் பகுதிகளில் தனது ஆதிக்கத்தை ஏற்படுத்த சிறிலங்கா அரசு தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசியத்தில் உறவாடிக்கொண்டிருக்கிற வரலாற்றுத் தடயங்களை அழித்து வருகிறது. அத்தேசியத்தின் பொருளாதாரத்தையும் அதன் இயல்பான வளர்ச்சியையும் திட்டமிட்டு சீர்குலைத்துவருகிறது. தமிழீழத் தாயகத்தில் பல்துறை சார்ந்த அபிவிருத்திகளும், உள்கட்டமைப்பு வளர்ச்சிகளும் ஏற்படுத்துவதையும் தடுத்துவருகிறது. அத்தாயகத்தின் இயற்கை வளங்களை கண்மூடித்தனமாக சிதைத்தழிப்பதோடு செயற்கைப் பஞ்சத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ்த்தேச மக்களை ஆற்றலற்றவர்களாக, வலிமையற்றவர்களாக உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவருவதோடு கொடூரமான யுத்த சூழலுக்குள் தொடர்ச்சியாக அழுத்தி ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கிறது. இதன் மூலம் வலுவற்ற, ஆரோக்கியம் குன்றிய உடல், மனரீதியில் ஊனமுற்ற சமூகமாக தமிழர்களை மாற்றியமைக்க முயற்சிக்கின்றது. இவை அனைத்தின் மூலமாக, தமிழர்தேச இருப்பை அழித்து, தமிழரை நிரந்தரமாக தனது ஆதிக்கத்தின் கீழ் வைப்பதற்கு முயற்சிக்கிறது.

சிறிலங்கா அரசின் இத்தகைய நடவடிக்கைகள் தற்செயலானவை அல்ல; யாரோ சில சிங்கள அரசியல்வாதிகளால் அல்லது இராணுவ அதிகாரிகளால் திட்டமிட்டு செயற்படுத்தப்படுபவையுமல்ல. மாறாக இவை சிறிலங்கா அரசின் அடித்தளமாகவுள்ள சிங்கள பௌத்த பேரினவாத பண்புகளின், ஆக்கிரமிப்புப் பண்புகளின் தெளிவான வெளிப்பாடுகள். ஒரு தேசம் பிறதேசங்களை ஒடுக்குகிறபோது அங்கு செயற்படுகின்ற அரசியலால் தீர்மானிக்கப்படுகின்ற விளைவுகள்தாம் இவை.

சிறிலங்கா அரசுக்குரிய பேரினவாத அடித்தளமானது ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்புக்காலத்திலேயே இடப்பட்டுவிட்டது. இக்காலகட்டத்தில் உருவான சிங்கள தொழிலதிபர்களும், ஏற்கனவே சிங்கள மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த பண்ணையார்களும் ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவதற்கு உறுதியுடன் போராடக்கூடிய பண்பை வெளிப்படுத்தவில்லை. மாறாக இவர்கள் தமது அரசியல், பொருளாதார நலன்களை உயர்த்திக்கொள்ளும் நோக்கில் ஈழத்தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத்தமிழர்கள் போன்றோருடன் முரண்படுபவர்களாக மாறினர். சிங்கள மக்களின் அரசியல் தலைமையாக தம்மை நிறுவிக்கொள்ளவும், அவர்களை எப்போதும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கவும் ஈழத்தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத்தமிழர்கள் போன்றேரை சிங்கள மக்களின் எதிரிகளாகவும், சிங்கள மக்களை சுரண்டுபவர்களாகவும், சிங்கள மக்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாணவர்களாகவும் அடையாளம் காட்டினார்கள்.

ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்புக் காலத்திலேயே, சிங்கள அரசியல் தலைமை மற்றும் ஆளும்பிரிவினர் மத்தியில் தோன்றிவிட்ட இத்தகைய பேரினவாதப் போக்கு, இன்றுவரை தணியவில்லை. மாறாக இப்போக்கு மேலும்மேலும் தீவிரம் அடைந்தே வந்தது. ஒவ்வொரு தேர்தலிலும் இப்போக்கு தீவிரப்படுத்தப்பட்டது. சிறிலங்கா அரசிற்கு எதிராக, சிங்கள மக்கள் மத்தியில் உணர்வலைகள் தோன்றுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இப்போக்கு கூர்மை அடைந்தது. ஏனைய சமூகங்கள் அடக்கிவைப்பதையும், ஆக்கிரமிப்பதையும் இலக்காகக்கொண்டு, சிங்கள அரசியல் தலைமையினாலும், ஆளும் பிரிவினராலும் முன்னெடுக்கப்பட்ட இப்பேரினவாதப் போக்கு கால ஓட்டத்தில் சிங்கள தேசத்தைச் சேர்ந்த பல்வேறு பிரிவினரையும் தன்னுள் இனைத்துக்கொண்டது. தரகு முதலாளிகள், நிலவுடமைப் பிரிவினர், பௌத்தமத நிறுவன‌ங்களைச் சேர்ந்தவர்கள், ஊடகங்களைச் சேர்ந்தவர்கள், சிங்கள அரசியல்வாதிகள், அரச படையினர், நிர்வாக மற்றும் பண்பாட்டுத் துறை சார்ந்தோர் என சிங்கள தேசத்தின் பல்வேறுபிரிவினர் மத்தியிலும் பேரினவாதப் போக்குகள் ஆழ வேரூன்றிவிட்டன. இவர்கள் அனைவரும் தமது பொருளாதார மற்றும் ஆன்மீக ரீதியான நலன்களை தொடர்ச்சியாகப் பேணுவதற்கு, ஏனைய தேசிய இனங்களின் உரிமைகளையும், நலன்களையும் பறிப்பது ஒரு முக்கிய வழிமுறையாக மாறிவிட்டது. இப்பிரிவினர்களின் எண்ணிக்கையும், அவர்களின் நலன்களும், தேவைகளும், அதிகரிப்பதற்கேற்ப, ஏனைய சமூகங்கள் மீதான அடக்குமுறைகளும், ஆக்கிரமிப்புகளும் மேலும்மேலும் அதிகரிக்கின்றன, தீவிரமடைகின்றன.

சிங்கள தேசத்தைச் சேர்ந்த பல்வேறு பிரிவினர்கள் மத்தியிலும் ஆழவேரூன்றிவிட்ட பேரினவாத, ஆக்கிரமிப்பு போக்குகள் இனி மறைந்து விடப்போவதில்லை. இந்த உண்மையைத்தான், மீண்டும் மீண்டும் வெளிப்படுகின்ற நிகழ்வுகள் நமக்கு உனர்த்துகின்றன. இப்பிரிவினர் அவர்களின் பேரினவாத மற்றும் ஆக்கிரமிப்புப் போக்குகளை கைவிடுவார்களேயானால் அதன் காரணமாக தமது நலன்களுக்குரிய முக்கிய ஊற்று மூலத்தை இழக்கக் கூடிய நிலை ஏற்பட்டுவிடும்; தமது அதிகாரங்களையும், செல்வாக்கையும் கணிசமாக இழக்கவேண்டி இருக்கும். ஆனால் அதிகாரத்தையும், செல்வாக்கையும் தமது கைகளில் கொண்டிருப்பவர்கள், அவற்றின் மூலமாக நலன்களை தொடர்ச்சியாக அனுபவித்து வருபவர்கள் அவற்றைத் தாமாகவே கைவிட்டதாக வரலாறு எந்தக்காலத்திலும் சொல்லவில்லை. எனவே இப்பிரிவினர் ஈழத்தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் மலையகத்தமிழர்கள் மீதான தமது ஆதிக்கத்தையும் ஆக்கிரமிப்புகளையும் தொடர்ந்தும், தீவிரமாக மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

இவற்றைச் சாத்தியமாக்குவதற்கு, சிங்கள மக்களின் ஆதரவை இப்பிரிவினர் தொடர்ச்சியாகப் பெறுவது அவசியம். எனவே இவர்கள் "ஈழத்தமிழர்களும், முஸ்லிம்களும் மற்றும் மலையகத் தமிழர்களும் சிங்கள மக்களை சுரண்டிக் கொழுக்கிறார்கள்' என்றும் "சிங்கள மக்களின் உரிமைகளைப்  பறித்து அவர்களை இந்தநாட்டிலிருந்து விரட்டியடிக்கத் திட்டமிடுகிறார்கள்' என்றும்  மீண்டும் மீண்டும் பிரச்சாரப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

சிறிலங்காவின் அரசியல், பெருளாதாரம், பண்பாட்டு தளத்தில் பேரினவாத அடக்குமுறைப் போக்குகள் ஒரு விஷ‌ச் சூழல் போன்று ஏன் திரும்பத்திரும்ப தோன்றிக் கொண்டிருக்கின்றன? சர்வ அதிகாரமும் பெற்ற ஒரு தலைவரால் அல்லது குழுவினரால் இப்போக்குகளை முற்றாகவே ஒழிக்க முடியாதா? இக்கேள்விகளுக்கு விடைகளைக் காண வேண்டுமாயின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தின் அரசியல் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பது குறித்து விளங்கிக்கொள்வது அவசியம். ஒரு சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவினர்களுக்கிடையில் நிலவுகின்ற உறவுகள், அவர்களின் நலன்கள், இந்நலன்களைப் பேணிக்கொள்வதற்கு அப்பிரிவினர் பயன்படுத்துகின்ற வழிமுறைகள், சர்வதேச நிலைமை போன்ற பல்வேறு காரணிகளால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தின் அரசியல் தீர்மானிக்கப் படுகின்றது. இவ்வாறு ஒன்று கலப்பதால் தோற்றுவிக்கப்படுகின்ற விளைவுகள், அக்கட்டம் முழுவதும், மாற்ற முடியாதவைகளாக நிலைத்து நிற்கக்கூடிய ஆற்றலைப் பெறுகின்றன. இவையே அக்கட்டத்திற்குரிய அரசியல் விதிகளாக அமைகின்றன. இந்த அரசியல் தளத்தில் செயற்படுகின்ற ஒவ்வொருவரும், இவ்விதிகளுக்குக் கட்டுப்பட்டு அதற்கேற்ப செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர். ஒருவர் இந்த விதிகளை எந்த அளவுக்கு அனுசரித்து செயற்படுகின்றாரோ, அந்த அளவிற்கு அவர் அரசியலில் "உயர்நிலையை' அடைய முடிகின்றது. இவ்விதிகளுக்கு முரணாக செயற்படுகின்ற ஒருவர், அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்படுகின்றார்.

இத்தகைய பின்புலத்தில் சிறிலங்காவின் அரசியலைப் பரிசீலிப்போமாயின் அது இறுகிக்கட்டிப் போயுள்ளது. சிங்கள, பௌத்த பேரினவாத சித்தாந்தத்தாலும், தனது சொந்த மக்களையே பலி கொடுக்கும் கழிச்சடைப் பண்புகளினாலும், உலகை விழுங்கிக் கொண்டிருக்கிற வல்ல‌ரசின் நலன்களினாலும் தீர்மானிக்கப்படுகின்றது என்ற எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.

சிறிலங்கா அரசும் அதன் கூட்டாளிகளும் சிறிலங்காவின் அரசியல் செயல்படுகின்ற விதிகளுக்கு முற்றிலும் இசைவாகவே செயற்படுகின்றனர். இதன் காரனமாகத்தான் ஒவ்வொரு தேர்தல் களமும் பேரினவாத முழக்கங்களினால் சூடேற்றப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலின் பின்பும், முன்னைவிட கொடூரமாக ஈழத்தமிழர்களும், முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும் அடக்கப்படுகின்றனர். அவர்களின் உரிமைகளும், நலன்களும் வன்மையாக நசுக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஒப்பந்தமும் கிழித்தெறியப்படுகின்றது, பெரும் ஆரவாரத்துடன் முன்வைக்கப்படுகின்ற ஒவ்வொரு தீர்வுத்திட்டமும் குப்பைக் கூடைக்குள் வீசப்படுகிறது. மாபெரும் 'சமாதானப் புறாக்களாக' உயர்ந்தெழுகின்ற ஒவ்வொரு சிங்களத் தலைவரும், மிக விரைவிலேயே அப்பட்டமான பேரினவாதிகளாக தம்மை உரித்துக் காட்டிவிடுகிறார்கள். இவர்கள் அவ்வப்போது தம்மை மூடிப் போர்த்திக் கொள்கிற முற்போக்கான, ஜனநாயக, மனிதாபிமான திரைகளெல்லாம் கிழித்தெறியப்பட்டு, அவர்களின் அசிங்கம் பிடித்த கோரத்தனமான பேரினவாத முகங்கள் துவக்கமாக வெளிப்படுத்தப்படுகின்றது. தமிழீழத்தில் உருவாக்கப்படுகின்ற ஒவ்வொரு சிங்களக் குடியேற்றமும், இராணுவ முகாமும், தமிழ்தேசியத்தின் மீது சுமத்தப்படுகின்ற பொருளாதாரத் தடைகளும், வீசப்படுகின்ற ஒவ்வொரு குண்டும், கலாச்சார ரீதியான ஆக்கிரமிப்புகளும் சிறிலங்காவின் பேரினவாத ஆக்கிரமிப்பு அரசியலில் செயற்படுகின்ற விதிகளின் கொடிய விளைவுகளே என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

காலத்திற்குக் காலம் சிறிலங்காவின் தேர்தல் தமிழர்மீது திணிக்கப்பட்டு வந்துள்ளது. இப்போதும் அவ்வாறே தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தமிழர்களைப் பொருத்தவரை முப்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்தவகைத் தேர்தலை ஒரு திருவிழாவாகக் கிண்டலடித்து தெருவெங்கும் நாடகங்கள் நடாத்தப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டியள்ளது. இது தமிழ்தேசம் கடந்துவந்துள்ள வரலாறு என்பதை இத்தேர்தலில் தமிழர் பகுதிகளில் குறைந்தபட்சமாக 10 சதவிதமும், அதிகபட்சமாக 30 சதவித வாக்கும் பதிவாகியிருப்பது நிரூபித்திருக்கிறது.

1972 இல் சிங்கள - பௌத்த அரசியல் சாசனத்தை சிங்களத் தலைமை இயற்றியது. இதனையடுத்து தமிழ்த் தேசத்திற்கும் அவர்களின் ஆட்சிமுறைக்கும் இடையிலான அரசியல் ஒட்டுறவை தமிழர்கள் அறுத்துக் கொண்டனர். தந்தை செல்வாவின் தலைமையில் தமிழ்மக்களின் அரசியல் உணர்வு தட்டியெழுப்பப்பட்டது. 1976 இல் ஏகமனதாக தமிழர்களுக்கென தமிழீழக் குடியரசை நிறுவத்தொடங்கினர். 1977 இல் அதற்கான சட்ட அங்கீகாரத்தையும் ஆணையையும் திரட்டிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து அதிகாரபலத்துடனும் அரசபயங்கரவாதத்துடனும் சிங்கள அரசால் தமிழர்கள் தேசமாகத் தண்டிக்கப்பட்டனர். 90களின் பின்பு ஒட்டுமொத்த இன அழிப்புக்கு – உண்மையில் தேசிய ஒழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டனர்.

அடக்குமுறையின் ஒவ்வொரு வடிவமும் விடுதலைப் போராட்டத்தை தீவிரப்படுத்தியது. இதன்வழி புதிய போராட்ட வடிவங்கள் பலவற்றைத் தேசம் தகவமைத்துக் கொண்டது. ஒன்றன்பின் ஒன்றாக வெற்றிகள் பல குவியத்தொடங்கின. இந்தக் காலகட்டங்கள் முழுவதும் சிறிலங்கா அரசும், இந்திய ஆக்கிரமிப்புப் படைகளும் தமிழர்மீது விதவிதமான தேர்தல்களைத் திணித்துள்ளன. அந்தக் காலங்களில் தமிழ்த் தேசத்தையும் தேசவிடுதலைப் போராட்டத்தையும் பலவீனப்படுத்துவதிலும் பிளவுபடுத்துவதிலும் அவர்கள் குறிப்பிட்டளவிற்கு தற்காலிக வெற்றிகளைப் பெற்றுள்ளனர். ஆனால் நினைத்தவை எதுவும் நடக்கவில்லை. அதே வழிமுறையை இன்றைக்கும் பயன்படுத்திவிடலாம் என நினைத்து சிங்கள அரசு முறைமைக்குள் தமிழரைக் கொண்டு வரும் விதமாக மீண்டும் தமிழர்மீது தேர்தலைத் திணிக்கும் இத்திட்டத்திற்கு விடுதலைப்புலிகள் தற்காலிக பின்னடைவு சந்தித்திருக்கும் இத்தருண‌த்தில் முறையான பாடம்புகட்டி இருக்கின்றனர்.

தனியான தனித்துவமான தேசிய இருப்பைக் கொண்ட தமிழர்கள் சிறிலங்கா அரசுக்கட்டமைப்பினுள் தற்போதும் பலவந்தமாகவே வைக்கப்பட்டுள்ளனர். தமிழீழத் தேசியத்தைப் பொருத்தவரை அதன் இருப்பை சிதைப்பதற்கு சிறிலங்கா அரசு இத்தேர்தலையும் ஒரு கருவியாக பயன்படுத்தகிறது. இத் தேர்தல் அடக்குமுறைகளுக்கான சட்ட அங்கீகாரத்தை இராஜபட்சேவிற்கு பெற்றுத்தந்துள்ளது. இத்தேர்தலுக்கும் தமிழர்களுக்கும் அடிப்படையில் எந்தவித தொடர்பும் இல்லாதபோதும், இதன் மூலம் நிறுவப்படும் சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கொண்டு தமிழர்கள் அடக்கப்பட்டுவருகின்றனர். சிங்களவர்கள் சட்டப்பூர்வமென்று செல்லிக்கொள்ளும் இந்நிறுவனம், தமிழரது சட்டப்பூர்வ உரிமைகள் அனைத்தையும் பறித்தெடுப்பதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று வரையிலும் தமிழ்த்தேசத்திற்கு எதிரான யுத்தத்தை தீர்மானிக்கும் அரங்காக இருந்து வருகின்றது. நமக்கெதிராக அடக்குமுறைச் சட்டங்களையும் பொருளாதாரத் தடையென்ற கூட்டுத் தண்டனையையும் அங்கீகரிக்கும் கூடமாக இருந்து வருகின்றது. மொத்தத்தில் தமிழ்த்தேசிய இருப்பை அழிப்பதற்கான, போருக்கு அவசியமான நிதி ஆதாரங்களை ஒதுக்கித் தருகின்றது. இதைப் போன்றதொரு நாடாளுமன்றத்திற்கே சிங்களர்களும் அவர்களின் எஜமானர்களும் சட்ட அந்தஸ்து கொடுத்து வைத்திருக்கின்றார்கள். இப்படிப்பட்ட ஒன்றிற்கு தமிழர்கள் துணைபோக வேண்டுமா என்பதுதான் இன்றைய கேள்வி. புலிகளை ஒழித்துவிட்டதாய்ச் சொல்லும் இராஜபட்சே அரசு பயங்கரவாதச் சட்டத்தைக் கைவிடுமா? அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தாமல் விடுமா? சிங்கள - பௌத்த அரசியல் சாசனத்தை மீளப் பெறுமா? யுத்தத்திற்கும் படையினருக்கும் நிதியை வாரி வழங்காமல் இருக்குமா? சிறைப் படுகொலைகளையும், சித்திரவதைகளையும் நிறுத்திவிடப்போகின்றதா?

இராஜபட்சே அரசு அல்லது சிங்கள அரசு என்றைக்கும் தமிழர்களுக்கு எதிரானதாகத்தான் இருக்கமுடியும். இனி அமையப்போகும் எந்த சிறிலங்கா அரசாங்க நிர்வாகமும் நிச்சயம் தமிழர் தேசம்மீதான யுத்தத்தை தொடரத்தான் போகின்றது.

- பாலன்