‘மேன்மை தாங்கிய தங்களது அரசாங்கத்தின் கீழ்நிலை உத்தியோத்தரின் அட்டூழியத்தில் சிங்கள பவுத்தர்கள் இன்னலுறுகின்றனர். தமது புராதன வரலாறு மிக்க சமயத்துக்கு இடையூறு ஏற்படுவதால் அவர்கள் ஆத்திரமடைகின்றனர். நிர்வாகத்தினரால் சாராயம், அபின், மாட்டிறைச்சி முதலியவை கிராம மக்களுக்கு கொடுக்கப்படுகின்றன. சாராயக் கடைகள், மாட்டிறைச்சி விற்பனை நிலையங்கள், அந்நிய தேவாலயங்கள் ஆகியவை அகற்றப்பட வேண்டும் என்பதையே சிங்களவர் கோருகின்றனர்’.

     (சிங்கள பவுத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் அநாகரிக தர்மபால பிரித்தானிய அரசருக்கு அன்றைக்கு எழுதிய கடிதம்..!)

அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் இருபது, இருபத்தி அய்ந்து மாடுகளாவது இருக்கும். உதிக்கும் கதிரவன் முழுநாளும் மாடுகளையும், மாட்டுத் தொழுவத்தையும் மட்டுமே சுற்றிக் கொண்டுபோவது போல தோன்றினாலும் அதுவும் கூட பத்தாதுதான். எப்படியும் அவற்றில் இரண்டு சோடி மாடுகளாவது கன்று போட்டு நிற்கும். அதிகாலையில் எழும்பி அவற்றை வீட்டு குட்டையில் குளிக்கச் செய்து பொட்டிட்டு, பால் கறப்பது என்பது தினசரி செயல். இத்தனைக்கும் அதன் பால் விற்பனைக்கு அல்ல குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களுக்கே அது சரியாக இருக்கும். அப்படியே மீய்ந்தாலும் அது அக்கம் பக்கத்திற்கு இலவசமாக செல்லும். அத்தனையும் நாட்டு பசுக்கள். மாடுகளை அம்மா பிள்ளைகளில் ஒன்றாகவே கருதினார்கள். அதற்கு உடம்புக்கு முடியவில்லை என்றால் அன்றைக்கு கன்றுக்குத்தான் முழு பாலும். பெரும்பாலும் கைவைத்தியம் பலிக்க வில்லை என்றால்தான் மாட்டாசுபத்திரிக்கு கூட்டி சொல்வோம். இத்தனைக்கும் ஆசுபத்திரி பக்கத்தில்தான் இருந்தது. காரணம் அவர்கள் ஊசி போடுவதிலிருந்து மருந்து கொடுக்கும் முறைவரைக்கும் மாடுகளை வதைப்பதாக அம்மா கருதினார்கள். ஆடு, மாடுகளுக்கு புழை வழியாகவும், வாய்வழியாகவும் குழாய் செருகி மருந்து கொடுப்பதை பார்த்த மாத்திரத்தில் தலை சுற்றல் வந்துவிடும். வீட்டில் என்றால் மூங்கில் குழாய் ஒன்று மாட்டுக் கொட்டகை எறவாணத்தில் இருக்கும். கன்றாக இருந்தாலும் மருந்தை கொடுத்துவிட்டு அதன் தலை சுற்றி வீசப்படும் எந்த நோயும் அவற்றை மீண்டும் துன்பப்படுத்தக்கூடாது என்பது ஓர் நம்பிக்கை.

beef 300காளைகள் குறைந்து போன காலத்தில் ஊசியில் கருத்தரித்த பசு ஒன்று கன்றின் எடை தாங்காமல் பேறுகால வலியில் துடித்தபோது கன்றை வயிற்றிலிருந்து துண்டு துண்டாக வெட்டி வெளியே எடுத்தால்தான் தாய்ப்பசு பிழைக்கும் என்று மருத்துவர்கள் கூறி கன்றை வெட்டி எடுத்தும் தாய்பசு இறந்துபோன போது வீடே துக்கம் கொண்டது. அக்கம் பக்கம் பரிதவித்து வீடு தேடிவந்து நெஞ்சிலடித்து அழுதது. அம்மா உண்ணாமல் உறங்காமல் மூன்று நாள் படுக்கையில் சுருண்டார்கள். அதும் கொஞ்ச நாள்தான் பிறகு ஏதாவது புதிதாகப் பிறக்கும் கிடாரிக் கன்றில் இறந்து போன பசுவின் முகத்தை கண்டு துக்கம் மறப்பார்கள். குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக உழவை கைவிட்டுக் கொண்டிருந்த ஏக காலத்தில் ஊரின் வயல்கோட்டகம் கண்முன் மறைந்து பைபாஸ் சாலைகளும், வணிக வளாகங்களுமாக மாறத்தொடங்கி, மேய்ச்சல் நிலங்கள் அருகியபோது துன்பம் பொறுக்காமல் அதே அம்மாதான் தனது கால்நடை செல்லங்களை மாட்டுத்தரகரிடம் ஒரே நாளில் கிழக்காக நின்று கயிறுபிடித்து, கைநடுங்க விலைபேசி விற்றுத் தொலைத்து அதன் தவிக்கும் அழைப்புக் குரலை தொலைவில் தேய்ந்து மறையும் வரை கேட்டபடியே செவிமரத்து திரும்பினார்.

தான் வளர்க்கும் ஆடு, கோழிகளை தமது செருவாடு தீரும்போது மட்டுமே விற்பதற்கு இசைவார் அம்மா. அதுபோல அன்பாய் வளர்த்தவற்றை சமைத்து சாப்பிடுவதற்கு ஒருபோதும் விரும்பவும் மாட்டார், வெளியிலிருந்து எடுத்துவரும் இறைச்சியை மட்டும் சிறிது எடுத்துக் கொள்வார். பெரும்பாலும் அசைவம் என்றால் மீன்தான் அவர்களைப் பொருத்தவரை. இந்த உணவு சார்ந்த அறம் முதலில் இது போன்ற பெண்களிடமிருந்து தோன்றியிரு க்காலம்.

எனினும் அம்மா ஒருவர் மட்டுமல்ல. அநேகமாக இதுதான் தமிழகத்தின் அல்லது கிராமமப்புற திணை வாழ்க்கையின் பண்பாடாக, அறமாக இருந்து கொண்டுள்ளது. இது போன்ற எளிய மனிதர்களின் உணவுகள் அவர்களது உணவு மேசையிலிருந்தும், வணக்கமுறைகள் வழிபாட்டு அறைகளிலிருந்தும் ஒருபோதும் தெருவிற்கு வருவதில்லை. இப்படியான இந்த பண்பாட்டு அறத்திற்கும் புதிதாக தலையெடுத்திருக்கும் மாட்டிறைச்சி அரசியலுக்கும் தொடர்பிருப்பதாக புரிந்து கொள்ள வேண்டியதில்லை.

நண்பர் ஒருவர் சொன்னார் தனக்குத் தெரிந்து பல இசுலாமியக் குடும்பத்துப் பெண்கள் மாட்டுகறி என்றாலே குமட்டலுடன் பேசுவார்கள் என்று. இறைச்சி வகைகளிலேயே ஒருவருக்கு பிடிப்பது மற்றவருக்கு பிடிக்கும் என்று சொல்விட இயலாத நிலையில் ஏதோ வரிந்து கட்டிக் கொண்டு மாட்டிறைச்சியை இஸ்லாமியர், தலித்துகள் சாப்பிடுவதான பிம்பம் திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது.

பக்ரித் பண்டிகையை ஒட்டி மகாராட்டிரம் தாத்ரிக்கு அருகே உள்ள பிசோதா என்ற இடத்தில் கடந்த அக்டோபர் 29 திகதி அன்று பசுவை பலி கொடுத்து அதை சாப்பிட்டதாக பரவிய வதந்தியின் கூட்டுவன்முறைகு முதியவரான முகமது இசுலாக் என்ற இஸ்லாமிய பெரியவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கோவில் ஒன்றில் பூசை நடந்து கொண்டிருந்த போது அக்கோவிலில் இருந்த சிலர் இங்கு பூசை நடந்து கொண்டிருக்கும் போது நம்மை அவமானப்படுத்துவதற்காகவே பக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் பசுவை கொன்று கறி சமைத்திருக்கறார்கள் என்று ஆவேமாக கூறி வெறியேற்றிருக்கிறார்கள். பின்னர் அக்லசின் வீட்டிற்கு கூட்டமாக சென்று தாக்கியிருக்கிறார்கள் அவரது மகன் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தன்னை கொல்ல வரும் பசுவையும் கொல்லாம் என்று அவர்களது மதநூல் கூறுவதை கூட அறியாதவர்களாக அந்த மனிதன் எவ்வளவு கெஞ்சியும் அடித்தே கொன்றுள்ளது அக்கூட்டம். ஒரு கனத்தில் சகிப்பின்மை என்ற அசிங்கமான சொல்லும் மனிதமும் மதிப்பிழந்து போயின.

மனிதனைவிட மதம்(!) அல்லது பசு(!) அல்லது அரசியல் பெரியது என்று காட்டுவதற்காக நிகழ்த்தப்பட்ட அவ்வன்முறை நிகழ்வை சாதாரணமான ஒன்றை, பெரிதுபடுத்துவதாக ஆர்.எஸ்.எஸ். இன் தலைவர் மோகன்பாகவத் கூறுகிறார். கொசுவை அடித்ததற்காக யாரவது கவலைபட இயலுமா என்பது போல. நாகபுரியில் நடந்த தசராவிழாவில்தான் அவர் இவ்வாறு பேசினார் இது அரசின் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு வெய்யபட்டது. மாட்டிறைச்சி தின்றவரை தேடிப்போனவர்கள் அந்த வீட்டிலிருந்த இளம் பெண்ணை தொடாமல் வந்தது பெரிய விடயமாகத் தெரியவில்லையா என்கிறார் ஆட்சி பொறுப்பிலிருக்கும் பிறிதொருவர். மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற காரணத்திற்காகவே சட்டத்திற்கு புறம்பான வகையில் வாகன ஒட்டுநர் ஒருவர் அடித்துக் கொள்ளப்பட்டுள்ளார். இனி உணவகங்களில், வீடுகளில் சாப்பிடும்போது யாருக்கேனும் அய்யம் ஏற்பட்டால் சாப்பிடுபவர் எதுவித கேள்விகளுமற்று கொல்லப்படலாம்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல மேற்கு வங்கத்தில் இறந்த பசுமாட்டின் தோலை உரித்ததற்காக அம்மாட்டை உரிந்த மனிதனின் தோல் உரிக்கப்பட்டது. புனிதமான மாட்டின் முன் மத அரசியல் மனிதனை இழிவானவனாக மாற்றிவிடும் துயரம் கொடியதாகும். இரவு உணவு மட்டும் இல்லாமல் தூங்கப்போகும் கோடிக்கணக்கான இந்தியர்கள் பசி பற்றி கவலைபடாமல் என்ன சாப்பிட வேண்டும் எப்போது எப்படி சாப்பி வேண்டும் என்று முடிவு செய்யும் மத அரசியல் நமது உணவு மேசைக்கு வந்துவிட்டது. மெய்யாகவே பசுமாடுகள் பற்றி பேசும் யாதொருவரும் இதர விலங்குகள் உயிர் பற்றி பேசுவதாயில்லை. மாட்டின் மீதான கரிசனம் என்பது இவர்களது அரசியலின் மீதான, பதவியின் சொந்த நலன்களின் மீதான கரிசனம் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.

மத இலக்குகளை அரசியலும், அரசியல் இலக்குகளை மதங்களும் ஒன்றை ஒன்று கலந்து தழுவத் தொடங்கிய அரசியல் இன்றைக்கு மனிதனை ஏதிலியாக்கி உலகெங்கும் அலையவிட்டுக் கொண்டுள்ளன. இந்தியாவில் கடந்த காலங்களில் மதசகிப்பின்மையின் வரலாறு என்பது இரத்தம் தோய்ந்த ஒன்றாகும் அதன் தொடர்ச்சியை தற்போது தேசபக்தி என்ற பெயரில் சொந்த அரசியல் நலன்களுக்காக மீண்டும் கடைவிரிக்கத் தொடங்கியுள்ளனர். உலகமயத்தின் பக்கவிளைவுகளில் ஒன்றான இவ்வரசியல் சுதேசத்தை ஓதிக் கொண்டே சர்வதேசத்திடம் அடகுவைக்கும் அத்தனை கயமைத்தனங்களும் நிறைந்த ஒன்றாகும். மனிதர்களை மனிதர்களிடமிருந்தே பிரித்து வைத்துக் கொண்டு அவர்களது குருதியை, சொந்த நிலங்களை, உரிமைகளை விலைபேசும் அறமற்ற அரசியலைக் கொண்டதாகும். கற்காலத்தை திட்டமிட்டே இழுக்கும் இவ்வரசியலுக்கு சாதி, மதம் என்பவை அதற்கான துருப்புச் சீட்டேயாகும்.

அரசியலில் மத வன்முறை கோலோச்சும் அண்மைகாலத்தில்தான் அதன் ஆதரவு சக்திகளும், பரிவாரங்களும் வழமை போல தலையெடுத்து ஆடத் தொடங்குவது புதிதல்ல. இலக்கியத்திலிருந்து இறைச்சிவரை முகர்ந்து பார்த்தும், வாசித்துப் பார்த்தும் அனுமதிப்பது தடைசெய்வதுமான தன்னியல்பான அரசதிகாரத்தின் துணை கலாசாரப் படையாக அவை உருவெடுத்துக் கொண்டுள்ளன. முதலில் மகாவீர் பிறந்தநாள் என்று சொல்லிக் கொண்டு மகாராட்டிரத்தில் அரசின் சட்ட வழியிலாகத் தொடங்கிய மாட்றைச்சித் தடையரசியல் தொடர்ந்து பிற மாநிலங்களில் உள்ளூர் கலாசார படைகளின் கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டன. ஜம்மு காஷ்மீரில் இதை எதிர்த்து நீமன்றம் போனபோது நீதிபதி இத்தடைக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டனர். இப்போது இவ்வரசியலின் தேடுதல் வேட்டைக்கு தில்லியில் உள்ள கேரள அரசு இல்ல உணவகமும் தப்பவில்லை. கலாசரப் படையின் வேலையை தன்னுடையதாக எடுத்துக் கொணட தில்லி பொலீசார் அங்கு மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாக வந்த தகவலை அடுத்து ஆய்வில் ஈடுபட்டனர். இனி மாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்களை அல்லது அதற்கு இனையான நுகர்வு சக்தி கொண்ட மனிதர்களை அவர்கள் பயன்படுத்தக்கூடும். மலையாள மக்களின் ஒரு பகுதியினரின் உணவு விடயத்தில் தலையிடுவதாக கேரளம் கொதித்ததையடுத்து நடுவணரசின் அதிகாரவர்க்கம் பின்வாங்கிற்று. நடுவணரசின் காவல் துறையினர் மீது சட்ட வழியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உம்மன்சாண்டி எச்சரிக்கை செய்தார். இனி காடுகளுக்குள் புகுந்து வனக்குடிகளும் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும் சாத்தியங்கள் ஆராயப்படலாம்.

மத, சாதி மேட்டுக்குடி அரசியலின் பிறிதொரு முகமாக உணவு, பண்பாட்டு அரசியல் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. எதை சாப்பிடக்கூடாது என்று மத அரசியல் தீர்மானிக்கிறதோ, அதுவே எதை சாப்பிட வேண்டும் என்பதையும் தீர்மானிப்பதால்தான் சமையலறைக்கும், நமது தொண்டைக் குழிக்கு மட்டுமேயான உணவு அரசியலாகிக் கொண்டுள்ளது. இக்கலாசார வன்முறை எங்கெல்லாம் பழங்குடிகளும், தலித்துகளும், இசுலாமியர்களும் வதிந்திருந்தார்களோ அங்கெல்லாம் அவர்கள் மீது பாயத்தொடங்கிற்று வரலாற்றில் எஞ்சிய எளிய மனிதர்களின் பண்பாட்டின் மீதான திட்டமிட்டத் தாக்குலே இவ்வுணவு வன்முறையாகும். அதனை நோக்கித்தான் அவர்களது சகலவிதமான கலாசார ஆயுதங்களும் பயன்படுத்ப்படுகின்றன. பழங்குடி மனங்களைக் கொல்வது அவர்களது கலாசாரங்களை அழிப்பது. தமது மதங்களுக்குள் விழுங்கிச் செரிப்பது பின்னர் காடுகளையும் அதன் வளங்களையும் கொள்ளையடிப்பது இது உணவரசியலின் பின்னணியாகும்.

கடந்த காலங்களில் இது பண்பாட்டு அரசியலாக வலம் வந்தது நினைவிருக்கலாம். தமிழகத்தில் ஆடு, மாடுகள் பலியிடுவதை தடைவிதிக்கச் செய்தது அது. காங்கிரஸ் ஆட்சியில் அன்றய வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் காளை மாடுகளை வனவிலங்குகளில் ஒன்றாக்கி காட்சிப்படுத்துவதிலிருந்து விலக்கிவைத்து சல்லிக்கட்டை தடைசெய்ததுடன் அதன் ஒரு பகுதியாக பசு வதையையும் அதற்குட்படுத்தினார். ஆக இந்த மேட்டுக் குடி உயர்சாதி, மத பண்பாட்டு ஆயுதம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகிறது. அது நகர மேட்டுக்குடி அரசியல் சார்ந்த்து கட்சி கொள்கைக்கு அப்பாற்பட்டதுமாகும். அது மதவாத நேரடி ஆட்சியில் மேலும் அதிகரிக்கிறது என்பதைத் தவிர.

கர்நாடக அரசியலிலும் இறைச்சி புயல் ஓர் சூறாவளியாக மாறி அதற்கேயுரிய பண்புடன் வீசிக் கொண்டுள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா, ‘தேவைப்பட்டால் நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதை யாராலும் தடுக்க முடியாது!’ என எதிர்வினையாற்றினார். அதே நேரம் பெரும்பான்மை மக்களின் மனங்களை கர்நாடக முதல்வர் சித்ராமைய்யா புண்படுத்திவிட்டதாகக் கூறி, கர்நாடகாவின் பாஜ.க தலைவர் அவரது தலையை வெட்டி கால்பந்து விளையாடப்போவதாக சொன்னார். மாநிலத்தின் ராம்சேனா அமைப்பினரோ அவருக்குப் பன்றி இறைச்சி அனுப்பும் போராட்டத்தை தொடங்கினார். இறைச்சிப் போர் இன்னும் முடிவடைந்துவிடவில்லை. அது கர்நாடக அரசு எடுதுத திப்பு சுல்தான் விழாவிலும் பிரதிபலித்தது. மாற்று மத்த்திற்கு எதிராக இன அழிப்பு செய்த்து அசோனா, திப்புசுல்த்தான என்ற பட்டிமன்றம் சூடு பிடித்துக் கொண்டுள்ளது. மாற்று மத்த்தினர் விடுதலைக்கு போராடியிருந்தாலும், தேசத்தை சொந்தம் கொண்டாடுபவர்கள் வெள்ளையர் அரசை எதிர்க்கத் துணியாததும் இப்போதைக்குத் தேவைபடுவதாக இருக்கவில்லை.

மத சகிப்பின்மைக்கு எதிரான மாற்று கருத்து கூடாது என்பதும் மாட்டிறைச்சியின் பிறிதொரு முகம் என்பதால் இலக்கியவாதிகளை பசுவதைக்கு எதிராக பலி கொடுக்கும் ஒன்றாகியுள்ளது. கர்நாடகத்தில் புகழ்பெற்ற எழுத்தாளரும், ஆய்வாளருமான கல்புர்கியின் படுகொலையில் தொடங்கியுள்ளது அது. பல எழுத்தாளர்களையும், படைப்பாளிகளையுமே மிரட்டலுக்கு ஆளாக்கியுள்ளது. நரேந்திர தபோல்கர், கோவிந் பாண்சரே என மரணப்பட்டியல் ஒன்று நிரப்பப்பட்டு கொண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட மதத்தின் அரசியல் நடைமுறைபடுத்தப்படும் போது எழும் சகல சிக்கல்களும் தலைக்காட்டத் தொடங்கியதை அடுத்து மனித நேயத்தை மத இணக்கத்தை சதா வலியுறுத்தக் கூடிய படைப்பாளிகள் முதலில் விழித்துக் கொள்ள தொடங்கினார்கள். மதம் அடிப்படையில் தவறவிட்டதை அவர்கள் சரிசெய்ய வேண்டியவரானார்கள். அரசு தமக்கு வழங்கிய விருதுகளை அவர்கள் திருப்பித் தரத்தொடங்கினார்கள். நயன்தாரா சேகல், அசோக் வாஜ்பாய், ரகுமான் அப்பாஸ், சாராஜோசப், அருந்த்திராய் என்று அந்த பட்டியலும் மதப் படுகொலைகளுக்கு எதிராய் நீண்டு கொண்டே செல்கிறது. இதனிடையே சாகித்திய அகாதமி தனது மவுனம் கலைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைக்கத் தொடங்கினார்கள். உள்ளார்ந்த ஈரத்தை கோரும் கலை படைப்புகளை விருதுக்கு தேர்ந்தெடுக்கும் அவ்வமைப்பு சமூகத்தில் ஏற்படும் விரும்பத்தகாத சூழல்களுக்கு எதிர்வினையாற்ற விருதாளர்கள் கோருவது இயல்பே.

மறுபக்கம் வழமை போல இது நீதியற்றவகையில் பரவலாக விமர்சனத் திற்குள்ளாக்கப்படுவதும் நடந்து கொண்டுள்ளது. விருதை திருப்பியனுப்பும் படைப்பாளிகள், கலைஞர்களின் அரசியல் சார்பு பற்றி பேசப்படுகிறது. அவர்களது இயலாமையின் கண்டனத்திற்கு ஒர் வடிவம் உருவாக்கப்படுகிறது. விருதுகளைத் திருப்பித் தரும் அறிவுசீவிகள் யாதொருவரும் பா.ஜ.க. எதிர்ப்பு சக்திகள் என அருண்ஜேட்லி கூறுகிறார் பா.ஜ.கவின் எதிர்ப்பு சக்திகள் என்பது தேசவிரோத சக்திகளும் கூட என்பது அவர் சொல்லாது விட்டதாகும். மட்டுமல்லாது திருப்பிக் கொடுக்காதவர்கள் பா.ஜ.க ஆதரவாளர்கள் அல்லது தேச பக்தர்கள் என்றாகிறது. விருதுகளை திருப்பி கொடுக்கும் எழுத்தாளர்களுக்கு மதசார்பின்மை நோய் தாக்கியுள்ளதாக ஆர்.எஸ.எஸ்.இன் பாஞ்ன்யா எழுதுகிறது. 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களின் போது இவர்கள் எங்கே போனார்கள் என்றும், 2007இல் மேற்கு வங்கத்தில் இடது சாரி ஆட்சியின் போது நந்திகிராமில் உழவர்கள் படுகொலை செய்தபோதும் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்றும் அது கேள்வியெழுப்புகிறது. மேலும், வி.எச்.பி. இன் செய்தி தொடர்பாளர் சுரேந்தி ஜெயின் இந்த எழுத்தாளர்கள் அரபு நாடுகளுக்குப் போய் வெளிப்படையாக பன்றிக் கறி சாப்பிட்டு உயிருடன் திரும்பிவிட முடியுமா என ஏளனம் செய்கிறார். கேட்பவர்கள் யார் என்று பார்ப்பதும் அவசியம்தான். அவர்களிடமும் திட்டவட்டமான நோக்கம் இருக்கவே செய்கிறது.

தமிழகத்தில் பா.செயப்பிரகாசம் தனது மனக்கொதிப்பை மின்னஞ்சலில் சகல படைப்பாளிகளுக்கும் அனுப்பி எதிர்வினையாற்றினார். இந்திரா பார்த்தசாரதி சாகித்திய அகாதமி தலைவர் திவாரிக்கு எழுதிய கடிதம் அதன் மனசாட்சியை உலுக்குவதாக இருந்தது. தமிழ் விருதாளர்களை நோக்கியும் விமர்சனங்களின் கொடிய நாக்குகள் நீண்டுள்ளன. எழுத்தாளர்கள் எழுதுவதற்காகவே கொல்லப்படும் அசாதாரண சூழல் ஒன்று உருவாகி வருவதை அடுத்தே அவர்கள் தம்மாளான முதலும் இறுதியுமான அஸ்திரத்தை தொடுத்துக் கொண்டுள்ளார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எப்போது விருதுகளை வாங்க வேண்டும் அல்லது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று எழுத்தாளருக்கு நிகழ்ச்சி நிரல் தயாரித்து கொடுப்பதிலுள்ள அரசியல் நிச்சயம் வெளிபடுத்தப்பட்டாக வேண்டும். எதிர்ப்பு அணிக்கு குறிப்பிட்ட அரசியல் இருப்பதாக கூறுபவர்கள் அரசிற்கு ஆதரவாக பெருந்திரள் ஊர்வலம் நடத்தும் கலை இலக்கியப் படையின்(!) அரசியல் குறித்தும் பேச வேண்டும்.

ஆயினும் அரசு என்பது மேட்டுக் குடி நலன் சார்ந்த ஓர் அமைப்பு முறை என்பதால் அதில் அடிப்படை உயிர் நேயத்தை தேடும் படைப்பாளிக்கு அவ்விருதால் ஒன்றுமில்லை என்பதோடு முதுகு சொறியவே அது பயன்படுவதாக இருக்கக்கூடும். படைப்பாளிகளுக்கு அவ்விருது பயன்படுகிறதோ இல்லையோ, அது மக்கள் விரோத அரசுகளுக்கு பயன்படவே செய்கிறது. எளிய மனிதர்களை படைக்கும் எழுத்துக்கு அரசு விருது கொடுக்கும்போது அது எளிய மக்கள் பக்கம் நிற்பதான கருத்தை உருவாக்கிக் கொள்ளும் அரசியலுக்கு உதவுவதாகிவிடுகிறது. பொதுவாகவே படைப்பாளிகள் என்போர் அரசு அதிகார வர்க்கத்துடன் இணைந்து போவது என்பது முரணான, சாத்தியமில்லாத ஒன்றாகும் அப்படி இணைந்து போவது என்றால் அவ்வெழுத்து, எழுத்தாளனும் அய்யத்திற்குறியவர்களே. இதில் விருது பற்றி தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. மக்கள் விரோத அரசுகளுடன் மக்கள் நல எழுத்துக்கள் எப்படி இணைய முடியும் என்று தெரியவில்லை.

சுயமான கலைபடைப்பாளிகள் விருதுகளை திருப்பியளிப்பது வியப்பளிக்க ஏதுமில்லை என்றாலும் அரசு சார் அறிவியல் துறை அறிவியலாளர்கள் தமது விருதுகளை திருப்பியளிப்பது என்பதும் அரசின் ஆய்வுத்துறை உதவியையும் அல்லது அதில் பணியாற்றிக் கொண்டுமிருக்கும் இவர்களின் எதிர்ப்பு நடவடிகைகை என்பதும் முக்கியமானதாகும். இது வெறும் மாட்டிறைச்சியிடனோ அல்லது பிறிதொரு மததிற்கு ஆதரவான நிலைப்பாடகவோ கருதிவிட முடியாது. உலகெங்கும் தொன்று தொட்டே மதங்கள் அறிவியலின் மீதும், அறிவியலாளர் மீதும் தொடுக்கும் போரும், மீறலுமே அறிவியலாளரை நாத்திகராகவும், மதப்பகைவராகவும் காட்டி வந்துள்ளன.

வரலாறு நெடுக அறிவியல் ஏளனத்திற்கும், அறிவியலாளர்கள் படுகொலைக்கும் ஆளாகிவந்துள்ளனர் அதன் தொடர்ச்சியோடு இவற்றையும் காணலாம். கலிலியோ தொடங்கி அய்ன்ஸ்டீன் வரையில் அதற்கு எடுத்துக் காட்டுகள் உண்டு. மதங்கள் அவற்றின் அரசுகள் அவர்களை ஒன்று படுகொலை செய்தன அல்லது நாடு கடத்தின. அவர்களாகவும் வெளியேறினர். அதனால்தான் மதங்கள் அறிவியலை தமது வழிக்கு கொண்டுவர இயலவில்லை என்றாலும் அறிவியலாளர்களை கட்டுப்படுத்த முனைகின்றன. அதனால்தான் மதமாக மக்களைப் பிளவுப் படுத்துவது அணுகுண்டைவிட ஆபத்தான போக்கு என பார்கவா, அசோக் சென் போன்றவர்கள் சுட்டிக் கட்டியிருப்பதுடன் அரசின் மதவாதப் பார்வை ஆய்வு நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்கு தமது கண்டனங்களையும் தெரிவித்திருப்பது அவதானிக்க வேண்டிய ஒன்றாகும். அண்மையில் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர்கள் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கலந்து கொண்டதானது சி.எஸ.அய்.ஆர் வராலற்றிலேயே இல்லாத ஒன்றாகும். ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் அரசியல் அசல் முகம் என்பதால் அது அறிவியல் துறையை கட்டுப்படுத்தவும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளை அரசு குறைத்துக் கொள்ளவும் காரணமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

modi cowமதத்தை மனிதன் பயன்படுத்துகிறானா மதம் மனிதனைப் பயன்படுத்துகிறதா என்ற கேள்விக்கு இரண்டும்தான் என்று சொல்லத் தோன்றுகிறது. நவீன அறிவியல் யுகம் வளர்ந்து, வளர்த்தெடுக்கப்பட்டள்ளது போல மதம் அதற்கிணையாக தன்னை புதுப்பிக்கத் தவறியதிலிருந்தே அதன் எல்லா தவறுகளும் தொடங்குவதாக இருக்கிறது. நேற்றைய முடிவை இன்றைக்கு அறிவியல் பார்வை மாறிக் கொள்வது போல மதம் தனது முடிவுகளை மாற்றிக் கொள்வதாக இருக்கவில்லை. மாறத எதுவும் தேக்கமடையவே செய்யும். அது புனிதம், புனிதமற்றது என்ற அடிப்படைப் பார்வையை மாற்றிக் கொள்வதாக இருக்கவில்லை. கற்கால வழக்கங்களை அல்லது கேள்விகளற்ற உள்ளீடுகளைக் கொண்டிருக்கும் ஒன்றை எதுவித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் திணிக்கப்படும் வன்முறை மதங்கள் வழியாக நிகழ்த்தப்படுகின்றன. மதமும் அரசியலும் இணையும் புள்ளி இதுவாகவே இருக்கிறது. இரண்டும் எதிர்ப்பார்ப்பது அடிபணிதலை மட்டுமே.

உணவு அரசியலின் ஒரு பகுதியாக இறைச்சி எப்போது அருவருப்பான ஒன்றாக, இழிவான ஒன்றாகப் மாறிப்போனது என்றால் அதற்கு மதம் முக்கியமான காரணமாக இருப்பதை அறிவோம். புனிதம், அபுனிதம் அல்லது சுத்தம், அசுத்தம் என்ற அடிப்படை(வாத) கட்டமைப்பிலிருந்தே அவ்வரசியல் தொடங்குகிறது. இனக்குழு காலத்தில் யாதொருவரும் சைவமில்லை. தன்னை மற்றவர்களிலிருந்து உயர்த்திக் கொள்வதற்கு இந்த புனிதம், சுத்தம் என்பது ஒரு கருத்தாக்கமாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் செல்வாக்கு மிக்க மதங்கள் மேலிருந்து கீழாக சென்றமையால் விளிம்பு நிலை மனிதர்களின் அசைவ பண்பாட்டை மாற்ற முயன்று தோல்வியடைந்தன. இறுதியில் அவர்களை இழிவானவர்கள் புலையர்கள் என்று சபித்தன. இன்றும் சற்று மேலே சென்று, அவை அரசனையும், அதிகாரத்தையும் பயன்படுத்தத் தொடங்கின எனலாம். மேலும் அசைவம் சாப்பிடும் மன்னனான இருந்தாலும் அவனை விடவும் தாம் புனிதமானவன் என மதகுரு மற்றும் அவரை சார்ந்தோர் தம்மை நிறுவுவதற்கு அவை பயன்பட்டிருக்கலாம். சங்க பாடல் ஒன்று மாறு வேடத்தில் புரவியில் வந்த மன்னன் பசியால் வாடிக் கொண்டிருந்த தமக்கு அற்புதமான ஊண்சோறு(பிரியாணி) வழங்கியதை புகழ்ந்து பேசுகிறது. அது பேரரசுகளின் மதங்கள் கோலோச்சாத காலம் என்பதை அறிக.

ஒர் விலங்கு புனிதம் என்றால் அதை சாப்பிடுபவன் புனிதமாகிவிடுவதில்லை என்பது கவனிக்கத் தக்கது. இவை பெருந்தெய்வ வழிபாடு, மற்றும் அதனுடைய பண்பாட்டிலிருந்தே தொடங்குகிறது. இதற்கு நேரெதிரான உழைக்கு மக்களின் குலக்குடி தெய்வங்களுக்குப் படைக்கப்படும் உணவுகளில் ஆடு மாடு, கோழிகள் இருப்பதை காணலாம். பெரும்பாலும் இவற்றில் பசுக்களும், உழவு எருதுகளுமிருப்பதில்லை. எனினும் எருமைகள் மட்டுமே பலிகொடுக்கப்படுகின்றன. ஒரு வேளை பின்னாளில் அவை நிறத்தின் காரணமாக ஒதுக்கப்பட்டவையாக இருக்கலாம். வாழ்வாதாரத் தேவைகளின் பொருட்டு பசுக்களும், எருதுகளும் கவனமாக தவிர்க்கப்பட்டுவிடுகின்றன. போர்களில் கூட பசுக்கள், கொல்லப்படுவது தடைசெய்யக் காரணம் இனம் பெருகுவதற்கும், உணவுத் தேவையில் பெரும் பகுதியை அதன் பால் நிறைவு செய்து கொண்டிருந்ததுமே. பெண்கள் போரில் ஈடுபடுவதும், கொல்லப்படாது தவிர்க்கப்பட்டதும் இதன் பொருட்டே.

இந்த பலியிடல்கள் பழங்குடியின் எச்சமென்றாலும் இவை இயற்கையின் ஒர் தகவமைப்பாகவும் உள்ளன. சில இனக்குழுக்களில் பருவ காலங்களில் கால்நடைகளை பராமரிப்பதில் ஏற்படும் அவதியை குறைப்பதற்காக அவ்வாறு செய்யப்படுகின்றன. மங்கோலிய நாவலான ஒநாய் குலச்சின்னம் , ஒநாய்கள் கால்நடைகளை கொன்று தின்பதன் வழியே மேய்ச்சல் நிலமும் அதன்வழி மனிதர்கள், கால்நடைகள் இயற்கை போன்றவற்றின் உயிர் சூழல் காக்கப்படுவதையும் பேசுகிறது. எனவே ஓநாய் அவர்களின் வழிபடலுக்கு உரியதாகிறது. ஒநாய்க்கு ஒரே தேர்வுதான் மனிதக்கு அப்படி அல்ல என்பதாலேயே(!) அசைவம் அரசியலாகியிருக்கிறது.

பாக்கிஸ்தான் போன்றவை தம்மை வெளிப்படையாக மதநாடாக அறிவித்துக் கொள்வதால் அதற்கேற்றவாறு நடந்து கொள்வதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் அப்படி வெளிப்படையாக அறிவிக்காத இந்தியா போன்ற நாடுகள் அதன் மக்கள் மீது மறைந்திருந்து தாக்கும் வன்முறை ஆபத்தானதாகும். ஏனெனில் மத அரசுகளின் முகங்கள் எல்லாம் ஒன்றுதான். அதன் வன்முறைகளும் வழிமுறைகளும் ஒன்றுதான் அவை ஒடுக்கப்பட்ட, எளிய பழங்குடி மற்றும் பெண்கள், குழந்தைகள் போன்றவர்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன. அன்றாட உணவை பட்டியலிட்டு வன்முறையாக வற்புறுத்துவது போலவே, அசைவத்தை வற்புறுத்தும் மதங்களையும் நினைத்துப் பார்க்கத்தான் வேண்டும். பண்டிகையன்று குர்பானியிடாத பெண் சுட்டுக் கொல்லும் நாடுகளின் மதவாத அமைப்புகளும் இருப்பதை கேள்விபடுகிறோம். பெண்கள் கல்வி கற்பதை, பொது இடங்களில் பங்கேற்பதை, உடைகளில் கட்டுப்பாடு விதிப்பது என்பவற்றை விரும்பாத மதவாதிகள் எல்லா மதததிற்கும் பொதுவானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் யாதொருவரும் ஆணாதிக்க பார்வையிலிருந்தே தமது மதங்களில் இருப்பதை வசதியாக உருவி எடுத்து நடைமுறைகளை கொண்டு வருகிறார்கள்.

மதங்களுக்குள்ளாக விடுதலை அரசியல் பேசிய ஏசுவும், புத்தரும் மத்திலிருந்து விலக்கப்பட்ட மனிதர்களாகவே காட்சியளிக்கிறார்கள். இன்றைக்கு ஒருவிதமான அரசியல் மதம்தான் இருக்கிறது. காந்தி மதம் என்பதை அரசியலுக்கு தேவை என்றார். அவர் மதம் என்றது யாதொரு மனிதனின் மேன்மைக்குமான சகல மதங்களின் சாரங்களைக் கொண்டிருந்தது. அதனால்தான் அவர் மதவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவில் தோன்றிய மதங்கள் மனிதனை நெறிபடுத்துவதில் ஒன்றை ஒன்று அனுசரித்து போட்டியிட்டுக் கொண்ட வரலாறுகள் உண்டு. வாதப் பிரதிவாதங்கள் நடத்திக் கொண்டதுண்டு. ஆயினும் அவை அவற்றை அரசியலாக்கிக் கொண்டதில்லை. இன்றைக்கு மனிதம் நீக்கப்பட்ட மதமே இப்போதைய அரசியல் தேவையாக மாறிக் கொண்டள்ளது.

இந்த மத அரசியலின் ஆக்டோபாஸ் கரங்கள் மற்றொரு பக்கம் ஏக காலத்தில் தலித்துகள் மீது பாய்கிறது. கடந்த அக்டோபர் 19ஆம் திகதி அரியானா மாநிலம் சன்பெட் கிராமத்தில் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த ஜிரேந்தர் என்பவரின் வீடு உயர்சாதி இரஜபுத்திரர்களால் தீவைத்து எரிக்கப்படுகிறது. இதில் அவரது இரண்டரை வயது குழந்தை வைபவ், பதினைந்து திங்களே ஆன திவ்யா உயிருடன் எரிந்துபோயின இவர்களுடன் ஜிதேந்தரின் மனைவி படுகாயமடைந்தார். பாதிக்கப்பட்டவரின் உறவினர்களும் தலித் மற்றும் பிற கட்சியினரும் தில்லி ஆக்கார நெடுஞ்சாலையில் இறந்த குழந்தைகளின் உடலங்களுடன் போராட்டம் நடத்திக் கொண்டுள்ளனர். ஒவ்வொன்றிர்கும் தமக்கேயுரிய பாணியில் எதிர்வினையாற்றும் மோடி அமைச்சரவை சகாக்கள் மற்றும் பா.ஜ.க. பரிவார அமைப்பு பிரதிநிதிகளில் நடுவணரசின் இனையமைச்சர் வி.கே.சிங் முந்திக் கொண்டார். அரியானாவில் நாய் மீது கல்லெறிந்து கொன்றாலும் மோடி அரசுதான் காரணமா என்றார் அவர். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது போல யார் ஆட்சிக்கு வந்தாலும் அரியானா தலித்துகள் நிலை இதுதான் என்றாலும், ஆதிக்கச் சாதிகள் மீது உயிர்ப்புடன் இயங்கும் மத சக்கதிகளின் துணிவுக்கு மதவாத அரசு முக்கியமான காரணமாயிருப்பதை வசதியாக மறந்துவிட்டு வி.கே.சிங் இறந்த குழந்தைகளை நாயுடன் ஒப்பிட்டதில் தீவிர வன்மமிருக்கவே செய்கிறது.

கன்னடத்தில் சாதி படிநிலையை விமர்சித்து கவிதை வெளியிட்டதாக அக்டோபர் 23 அன்று கூசங்கி பிரசாத் என்ற தலித் எழுத்தாளர் ஒருவர் தாக்கப்படுகிறார். கடந்த காலங்களில் இது துரை.குணா, புலியூர்முருகேசன், பெருமாள் முருகன், தற்போது ம.க.இ.க பாடகர் கோவன் என்று பேய்கள் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரம் என்பது போல தொடர்கிறது. மொத்தமாகப் பார்த்தால் இது வரலாற்றை முன் நகர்த்துபவர்களுக்கும் பின்னிழுப்பவர்களுக்குமான மறைமுகப் போராக உருவெடுத்துக் கொண்டுள்ள தை அறியலாம்.

உலகெங்கும் மதவாதிகள் யாதொருவரும் தலிபான்களின் குரல்களிலேயே பேசுகின்றனர். அய்.எஸ். போலவே தமக்கான தேசத்தை கட்டமைக்க மனித பலியை கோருகின்றனர். நேபாளத்திலும், பர்மாவிலும் அடிப்படைவாதம் தேச எல்லைகளை கடந்து விரிகின்றன. மத பயங்கரவாதம் என்பதை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டுமே உரியது என்று ஒருபோதும் பிரித்துப் பேசிவிட முடியாது என்று தோன்றுகிறது. இந்தியாவின் பக்கத்தில் சின்னஞ்சிறு இனவாத நாடான இலங்கையில் தொடரும் படைப்பாளிகள் மற்றும் மாற்று மதத்தினரின் மீதான படுகொலைகள் என்பன நீண்ட வரலாற்றைக் கொண்டவையாகும். இலங்கையின் தொடக்கக் காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து எழுந்த சிங்கள தேசியவாதம் சகல தேசிய இனங்களையும் இணைத்துக் கொண்டு விடுதலையை கோராமல் அது சிங்கள பவுத்த பேரினவாத பார்வையில் ஆங்கிலேயரை கலாசார வழியில் எதிர்த்தபடிக்கு சிங்கள பண்பாட்டுப் புரட்சியை எதிர்பார்த்தது. இதன் காரணமாக ஆங்கில ஆட்சியளர்களை பண்பாடில்லதவர்களாக சித்தரிக்க முன்னைந்தனர் பவுத்த கலாசாரவாதிகள் குறிப்பாக பவுத்த பிக்குகள். அநாகரி தர்மபாலவின் ‘ஹன்சாட்’, ‘வீரய’ போன்ற இதழ்களின் மத வெறுப்பு எழுத்துக்களை பார்த்தேமென்றால் ஏறக்குறைய ‘பான்ஞ்சன்யா’, ‘சாம்னா’ போன்ற ஏடுகளுக்கும் எதுவித வேற்றுமையையும் காண இயலாது. அந்த அளவிற்கு மாற்று மத பண்பாடுகளை நோக்கி அவை வெறுப்பை கக்குகின்றன. இவையெல்லாமே பவுத்த நாடாக இலங்கை அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

உயிர்களை கொல்லக்கூடாது(!) என்ற புத்த மகானின் தூய்மையான வழியில் வந்த சிங்களருக்கு ஆடு, மாடு போன்றவற்றின் இறைச்சிகளைத் தின்ற ஆங்கிலேயர்கள், இஸ்லாமியர், மலையாளிகள் மற்றும் தமிழர் தூய்மையற்றவர்களாக வெறுக்கத்தக்கவார்களாகவே பார்க்கப்பட்டார்கள். மலையாளிகளின் மீதான பண்பாட்டு வெறுப்பே அவர்களின் மீதான தொடக்க கால தாக்குதல்கள் உறுதிபடுத்தின. ஆங்கிலேயரின் ஆட்சியின் மீதான வெறுப்பைவிட பண்பாட்டின் மீதான வெறுப்பே அவர்களிடம் காணப்படுவதாக இருந்தது. இந்த உணவு மாற்றுப் பண்பாட்டு எதிர்ப்பு அரசியல் தமது இனவாத அரசியலுக்கு கைகொடுப்பதாக இருந்தது. விலங்கின் இழிவான இறைச்சியை சாப்பிடும் தமிழர்களை அவர்கள் பறையர் என்றே அழைத்தனர். அந்த பார்வையிலிருந்தே தமிழர் குறித்த கண்ணோட்டம் அவர்களிடம் உருவாகி வளர்ந்து வந்திருந்தது. ஆனால் அதே சமயம் யாழ் மேல்சாதி சைவர்களிடம் சிங்களர்கள் ஓர் இணக்கத்தை கடைபிடித்தனர்.

இறுதியாக பிகாரின் தேர்தல் சூட்டிலும் கூட மாட்டிறைச்சி வேக வைக்கப்பட்டது. ‘இந்துக்களிலும் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் உண்டு என்று சொன்னதற்காக லாலுவின் பேச்சை பிரதமர் மோடி தமது, தேர்தல் பிரசாரத்தில் யாதவர் முன்வைத்து பிளவு அரசியலுக்கு முயன்றார். எனினும் பிகாரில் இந்த அரசியல் எடுபடாது என்று தெரிந்த இறுதி கட்டத்தில் தாத்ரி நிகழ்வு குறித்து போனால் போகிறது என்று தமது வருத்தத்தை பகிர்ந்து கொண்டார். பிகார் தேர்தல் தந்த படிப்பினையும், முதலீட்டு நிறுவனங்களின் சந்தையின் அமைதி குறித்த கண்டனங்களையும், எச்சரிக்கையும் அடுத்தே இலண்டனில் மதசகிப்புத்தன்மையே இந்தியாவின் முகம் என்று மோடி ஒரு வழியாக வாய் திறந்தார். இதைத்தானே எல்லோரும் அவரவர் வழிகளில் சொல்ல முயன்று கொண்டிருக்கிறார்கள். மோடி தேர்ந்த அரசியல்வாதியல்லவா அதனால்தான் முதலிலிருந்து தொடங்குகிறார் போலும்.

- இரா.மோகன்ராஜன்