சென்னை உயர்நீதிமன்றம் சந்திக்கும் விசித்திரமான வழக்கு:

நவம்பர் 24ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு ஒன்றில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடிகள் நலத்துறை அரசுச் செயலரும், அரூர் ஆர்டிஓ அவர்களும் நேரில் பங்கேற்று நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோரினர். அதை ஒப்புக்கொள்ள மறுத்த நீதிபதிகள் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலிடம் இந்த அதிகாரிகள் மீது தலைமைச் செயலாளர் / தமிழக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை, 2016 ஜனவரி 5 ஆம் தேதி அன்று தெரிவிக்குமாறு உத்திரவிட்டதாக தொலைக்காட்சி மற்றும் செய்தி ஊடகங்கள் பரபரப்பான செய்தியை வெளியிட்டன. தமிழ்நாட்டில் உண்மையான பழங்குடிகள் யார்? போலிகள் எவர் என்ற பிரச்சனையில், சென்னை உயர்நீதிமன்றமே லஞ்சம் வாங்கி தீர்ப்புகளை வழங்கிவிட்டது என இந்த அரசு அதிகாரிகள் விமர்சித்ததுதான் அவமதிப்பு வழக்கிற்கான பின்னணி என செய்தித்தாள்கள் தெரிவித்தன.

tribes 318தருமபுரி மாவட்டம், அரூர் கோட்டத்தைச் சார்ந்த வீரமணி (இந்திய உணவுக் கழகம் –FCIயில் பணியாற்றுபவர்) என்பவர், தான் குருமன்ஸ் என்ற பழங்குடி இனத்தைச் சார்ந்தவர் என்றும், தனது பிள்ளைகளுக்கு இதே சான்றிதழை வழங்க வேண்டும் என அரூர் வட்டார வருவாய்க் கோட்ட அதிகாரியிடம் விண்ணப்பித்தார். விண்ணப்பித்தவர் பழங்குடி அல்லவென்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த குரும்பக் கவுண்டர் எனவும், ஏற்கனவே இதே பழங்குடி சாதிச் சான்றிதழ் வைத்திருப்பவர்களும் போலிகள் எனவும், குருமன்ஸ் என்ற பழங்குடி இனம் நீலகிரி மலையில்தான் உள்ளது என்பதும் மறுப்பிற்கான காரணமாக அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே போலிகள் உயர்நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு தொடுத்து, தங்களுக்கு சாதகமான தீர்ப்பை வாங்கி வந்து பழங்குடி சாதிச் சான்றிதழ்களை வழங்குமாறு, அரூர் ஆர்.டி.ஓவை வலியுறுத்தினர்.

அரசுs செயலர் அவர்களும், குருமன்ஸ் பழங்குடிச் சான்று கோருபவர்கள் பற்றிய முறையான விசாரணை நடத்தப்படாமல் வழங்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். எனவே, மனுதாரர் வீரமணி வழக்கில் விசாரித்த சென்னை உயர் நீதி மன்றத்தின் திரு. சத்தீஷ். கே. அக்னிகோத்ரி உட்பட்ட நீதிபதிகள் அமர்வு, குருமன்ஸ் பழங்குடி சாதிச் சான்றிதழை வழங்க வேண்டும் எனவும், தவறினால் கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுs செயலர் மற்றும் அரூர் ஆர்.டி.ஓ.விற்கு எச்சரிக்கை செய்து ஆணையிட்டது.

தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் சில மாவட்டங்களைச் சார்ந்த குருமன்ஸ் பழங்குடி என சான்றிதழ் கோரும் விண்ணப்பதாரர்களுக்கு, பழங்குடி சான்றிதழ் வழங்கக்கூடாது என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளராகப் பணியாற்றும் திரு. அண்ணாமலை அவர்கள் உத்தரவிட்டு இருந்தார். போலிப் பழங்குடி குருமன்ஸ் சங்கத்தைச் சார்ந்தவர்கள், அவர்களை ஆதரிக்கும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் (சிபிஎம் கட்சி சார்பு) என்ற அமைப்பின் மாநிலத் தலைவரும், அரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான டில்லி பாபுவிடம் முறையிட்டனர்.

டில்லி பாபு எம்.எல்.ஏ. போலி பழங்குடி சங்கத்தைச் சார்ந்த பத்துப் பேருடன், கடந்த நவம்பர் 2ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்துக்குச் சென்று அண்ணாமலை அவர்களை சந்தித்துப் பேசினார். அவருடன் பேசியதை வேறொருவர் செல்போனில் பதிவு செய்தார். இந்த உரையாடலின்போது “எல்லோருக்கும் பணத்தைக் கொடுத்து, உத்தரவைப் பெற்றுவந்து பொய்யான பழங்குடிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என மிரட்டுகிறீர்களா?” என அண்ணாமலை கேள்வி எழுப்பினார். இந்த உரையாடலின் சி.டி.யை சென்னை உயர்நீதிமன்றத்தில், மனுதாரர் வீரமணி தாக்கல் செய்து, நடவடிக்கை எடுக்கக் கோரினார்; அரசு அதிகாரிகளை நவம்பர் 24 அன்று கோர்ட்டில் ஆஜராகும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதும், அவ்வழக்கில்தான் அவர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து, மன்னிப்பு கேட்டனர் என்பதும்தான் இந்த வழக்கின் பின்னணியாகும். 

குரும்ப கவுண்டர் எதிர் குருமன்ஸ்

இவ்வழக்கைப் புரிந்து கொள்ள தமிழகப் பழங்குடியினர் பற்றி சில விவரங்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகும். தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் குரும்பாஸ், குருமன்ஸ் என்ற இரண்டு சாதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் நீலகிரி மலைப்பகுதியில் (மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில்) கர்நாடகா, கேரளா மாநில எல்லைகளில் மலபார், வயநாடு, மைசூர் ஒட்டிய பகுதிகளில், இனவரைவியல் ஆய்வுகளின்படி, ஆலுகுரும்பா, பாலுகுரும்பா, பெட்டகுரும்பா, தேனு குரும்பா, முள்ளுக் குரும்பா, ஊராளிக் குரும்பா, முடுகர் என ஏழு விதமான பழங்குடி குழுக்கள் இருக்கின்றன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சாதிகள் / பழங்குடியினரை வகைப்படுத்தும்போது பெயர் உச்சரிப்புத் தவறுகளில் தொடங்கி, வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட சில பிரிவினர்களுக்கு (சாதிகளுக்கு) குற்றப் பழங்குடிகள் எனப் பெயர் சூட்டுவதுவரை தவறுகள் நடைபெற்றன. பழங்குடியினர் பட்டியலை உருவாக்கியபோது, இந்திய அரசாங்கம் தமிழகத்தில் இருந்த சில பழங்குடி இனங்களுக்கு ஏரியா ரெஸ்ட்ரிக்ஷன் (Area Restriction) குறிப்பிடாததும் பிரச்சனைக்கு வாய்ப்பாக அமைந்தது.

மிகவும் பிற்பட்டோர் (MBC) பட்டியலில் 17 ஆவது இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குரும்பர், குரும்பா, குருபா, குரும்பக் கவுண்டர் எனப்படுவோர், ‘குருமன்ஸ்’ பழங்குடி எனக் கோருவதுதான் பிரச்சினையின் அடிப்படையாகும். ஆங்கிலேயர்கள் குரும்பா என்பதை குருமன்ஸ் என்று உச்சரித்து, பதிவு செய்ததை, ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பயன்படுத்திக் கொண்டனர். (நீலகிரியில் உள்ள தொதவர்களைத் தோடா எனவும், கோத்தர்களை கோத்தா எனவும், சோளகர் பழங்குடியினரை சோளகா/ சோளிகா எனவும் பிரிட்டீஷார் உச்சரித்தனர்; அதேபோலே அட்டவணைப் பழங்குடியினர் பட்டியலிலும் பெயர்களைப் பதிவும் செய்தனர்.) குரும்பர் – குரும்பக் கவுண்டர் எனப்படுவோர் ஆடு மேய்ப்பதை பூர்வீகத் தொழிலாகக் கொண்ட மிகவும் பிற்பட்ட சாதியினராவர். தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம் போன்ற மாவட்டங்களில், சமவெளிப் பகுதிகளில் கணிசமாக வாழ்ந்து வருபவர்களும் ஆவர். 5 இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள் தொகையைக் கொண்ட குரும்பக் கவுண்டர்களில் சுமார் 25,000 பேர் இதுவரையிலும் போலியாக எஸ்.டி. (ST) பழங்குடி குருமன்ஸ் என்ற சான்றிதழ்களை வைத்திருக்கின்றனர். இவர்களுடைய சாதிச் சான்றிதழ்கள் பழங்குடி / ST என்றிருந்த போதிலும், ரத்த உறவுகள், மண உறவுகள், சமூக உறவுகள், பண்பாடு அனைத்தும் மிகவும் பிற்பட்ட சாதியினரான குரும்பக் கவுண்டர் உடையதாகவே இருக்கிறது. இவர்கள், குரும்பக் கவுண்டர் சாதியின் ஓர் அங்கமே ஆவர். 

அட்டவணைப் பழங்குடி (ST) பட்டியலில் நிரம்பி வழியும் போலிகள்

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள மொத்தப் பழங்குடி மக்கள் தொகை 7,94,697 (1.1 சதவிகிதம்) ஆகும். இவர்களில், ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்டோர் போலி பழங்குடி சான்றிதழ் வைத்திருப்போர் என்பதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயமாகும். 1971 சென்சஸ் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, தமிழகப் பழங்குடியினர் எண்ணிக்கை 3,11,515 மட்டுமே ஆகும். ஆனால், 1981 கணக்கெடுப்பில், 5,20,226 என உயர்ந்துவிட்டது. அதாவது 1971 – 1981ற்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் மட்டும், பழங்குடி மக்கள் தொகை (அதிர்ச்சிகரமான வகையில்) 67% உயர்ந்து விட்டது. 1981 – 91 பத்தாண்டுகளில், மக்கள் தொகையில் 10%மும், 1991 – 2001 பத்தாண்டுகளில், தமிழகப் பழங்குடி மக்கள் தொகையில் உயர்வு 13% மட்டுமேயாகும். 1971-81, பத்தாண்டுகளில் உயர்ந்த 67% எண்ணிக்கையில், 50%ற்கு மேற்பட்டவர்கள், சுமார் ஒன்றரை இலட்சம் பேர் போலி பழங்குடி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் ஆவர். கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பல்வேறு உயர் பதவிகளை அபகரித்துக் கொண்ட இந்த போலிகள் உண்மையான பழங்குடிகளின் இட ஒதுக்கீட்டிற்கு மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளனர். அன்றைக்கு ரூ. 5,000 / ரூ. 10,000க்காக, தாசில்தார்கள் போலிச் சான்றிதழ்களை வழங்க ஆரம்பித்தது, இன்றைக்கு மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

யார் இந்த போலி பழங்குடிகள்? எந்தெந்தப் பெயரில், பழங்குடிப் பட்டியலில் நுழைந்துள்ளனர் என்ற விபரங்களைப் பரிசீலிக்கலாம். பழங்குடிப் பட்டியலில் உள்ள 36 வகையான சாதிகளில், பெரும்பான்மையான பழங்குடி இனங்களில் போலிகள் இருந்தாலும், ஒட்டு மொத்தமாகப் போலிகளே பழங்குடிச் சாதிகளாக இருப்பது காட்டு நாய்க்கன், குருமன்ஸ், கொண்டா ரெட்டி, மலைக்குறவன், மலைவேடன் போன்ற சாதிகளின் பெயரில் நடைபெற்றுள்ளது. கிட்டத்தட்ட 20 சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் போலியாக உள்ளன.

2007–08ல் பழங்குடியினருக்கான மத்திய அமைச்சரகம் மற்றும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பூரியா கமிட்டி (2004) அறிக்கைகள் போன்றவை புள்ளி விபரங்களைத் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில், பழங்குடி அல்லாதோர் பழங்குடியினராக உருவாகும் போக்கு அதிகரித்திருப்பதாகவும், பின்வரும் பழங்குடியினர் விஷயத்தில், அவர்களின் மக்கள் தொகையில் திடீரென்று எழுச்சி இருப்பதை ஆய்வு செய்ய வேண்டும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் தெரிவித்து இருப்பதாகவும், பூரியா கமிட்டி அறிக்கை சுட்டிக் காட்டியது. அப்பட்டியல் 1961-1991 வரை உள்ள விவரங்களைச் சுட்டிக் காட்டியுள்ளது. 2001 கணக்கெடுப்பை கூடுதலாக இணைத்துள்ளோம்.

பழங்குடியின் பெயர் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பில் எண்ணிக்கை
1961 1971 1981 1991 2001
காட்டு நாய்க்கன் 6,459 5,042 26,383 42,761 45,227
கொண்டா ரெட்டி 8 855 31,525 30,391 19,653
குருமன்ஸ் 112 11,269 14,932 17,458 24,963
மலைக் குறவன் 2 130 7,079 18,969 18,296
மலை வேடன் 2 85 7,098 8,910 6,411

குரும்பர் / குரும்பக் கவுண்டர்கள்பழங்குடி குருமன்ஸ் அல்ல 

மத்திய பழங்குடியினர் அமைச்சரகம், மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பல்வேறு காலகட்டங்களில் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் உண்மையான பழங்குடி அமைப்புகளால், மாநில கூர்நோக்கு குழுவிற்கு அனுப்பப்பட்ட புகார்கள் ஆகியவற்றின் பின்னணியில், பின்வரும் முக்கிய குழுக்கள் ‘குரும்பர்-குரும்பக் கவுண்டர் எனப்படுவோர் பழங்குடி குருமன்ஸ் அல்ல’ என்ற அறிக்கைகளை வழங்கியுள்ளன.

(அ) ‘குரும்பன் மற்றும் குரும்பக் கவுண்டர்களுக்கு பழங்குடி குருமன்ஸ் என சாதிச் சான்றிதழ் வழங்கலாம்’ என்ற தமிழக அரசாணை எண் 388 (6. 5. 77)க்கு எதிராக டாக்டர் அம்பேத்கர் சமூக நல சங்கத்தினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் டபுள் யூ பி எண் 2401/1977) இத்தகைய ஆணைகளை இந்திய குடியரசுத் தலைவர்தான் பிறப்பிக்க முடியும், தமிழக அரசுக்கு அதிகாரம் கிடையாது என தீர்ப்பு வழங்கி அரசாணை 388ஐ ரத்து செய்தது.

(ஆ) குருமன்ஸ் குலசங்கத் தலைவர் கே.எல். கரிபிரான் எதிர் தமிழக அரசு வழக்கில் (11933/ 1983, 3238 /1984) 8.07.94ல் வழங்கிய தீர்ப்பில், நீலகிரி மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் குரும்பாஸ் மற்றும் குருமன்ஸ் பழங்குடிகள், வேறு மாவட்டங்களில் உள்ளவர்கள் பழங்குடியினர் என்று கூற முடியாது என்று தெளிவாகத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

(இ) P. கர்தான்    (அமைப்பாளர், குலமகள் சீகேஸ்) என்பவரின் வழக்கு, மோசடியை நன்கு தெளிவாக்குகிறது. பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியில் இருந்த குரும்பா மற்றும் குரும்பக் கவுண்டரை மிகவும் பிற்பட்டோர் (MBC) பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற P. கர்தான் என்பவரின் கோரிக்கையின் அடிப்படையில்தான் அரசாணை எண் 96 (8.09.2008) பிறப்பிக்கப்பட்டு குரும்பக் கவுண்டர்கள் மிகவும் பிற்பட்ட சாதியினர் ஆயினர். இதே P. கர்தான் (அமைப்பாளர் குலமகள் சீகேஸ்) சென்னை உயர்நீதிமன்றத்தில் சில மாதங்கள் கழித்து, குரும்பக் கவுண்டர்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வழக்கு (WP No 1819/ 2010) தொடுத்தார். உயர்நீதிமன்றம் இந்த வழக்கை கடந்த 5.10.2010ல் தள்ளுபடி செய்தது. மீண்டும் இவரே மேல்முறையீடும் (WP Civil Appeal No 176/ 2011) செய்தார். இந்த மேல் முறையீட்டையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

போலிப் பழங்குடிகள் விவகாரத்தில், உண்மைத் தன்மையை மெய்ப்பித்து மாநில கூர்நோக்கு குழுவிற்கு அனுப்பப்பட்ட மனுக்களின் மீதான பரிசீலனையில், அதன் தலைவராகத் திகழ்ந்த முன்னாள் செயலாளர் (ஆ.தி.மற்றும் ப.கு.நலத்துறை) அவர்களும் அதன் முன்னாள் உறுப்பினரான சென்னைப் பல்கலைக் கழக மானுடவியல் பேராசிரியர் அவர்களும் ஏராளமான போலி பழங்குடிச் சான்றிதழ்களுக்கும் போலிகள் நீடிப்பதற்கும் வழிவகுத்தனர். இதனால், இவர்கள் மாநில கூர்நோக்குக் குழுவிலிருந்தும் விலக்கப்பட்டனர். தற்போது இவர்கள் மாநில கூர்நோக்கு குழுவில் இல்லாததால் உண்மை வெளியே வந்து விவாதப் பொருளாக மாறிவிட்டது.

மக்கள் பிரதிநிதிகள் முதல் நீதிமன்றங்கள் வரை 

திரு.அண்ணாமலை அரசு செயலராக (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடிகள் நலத்துறை) பொறுப்பேற்ற பிறகு, போலி சான்றிதழ்களுக்கு தடை விதித்தார்; கீழ்மட்ட அதிகாரிகளுக்கும் ஆணையிட்டார். போலி பழங்குடி சான்றிதழ்கள் கிடைக்காத குரும்பக் கவுண்டர்கள் நீதிமன்றத்தை நாடினர். சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 5 மாதங்களில் இருநூற்றுக்கும் மேற்பட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டன. போலி குருமன் சங்கம், போலி காட்டுநாயக்கன் சங்கம், போலி குறவன் சங்கம், போலி கொண்டாரெட்டி சங்கம் ஆகியவற்றின் கூட்டமைப்பாக, அரூர் எம்எல்ஏ டெல்லிபாபு தலைமையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தலைகீழாக மாறியிருப்பதுதான், அரசியல் சந்தர்ப்பவாதம், சீரழிவிற்கு இட்டுச் சென்றதற்கு அடையாளம் ஆகும். கடந்த 5 மாத காலத்தில், இருநூற்றுக்கும் மேற்பட்ட குருமன்ஸ், கொண்டா ரெட்டி, குறிச்சான் போலி பழங்குடி சான்றிதழ்கள் மீதான தீர்ப்புகள், மனுதாரர்களுக்கு ஒரே வழக்கறிஞர், ஒரே சிறப்பு அரசு வழக்கறிஞர், அனைத்தும் ஒரு நீதிபதி அங்கம் வகித்த கோர்ட்டுகளில் நடைபெற்றது. போலிகளுக்கு விசாரணையின்றி பழங்குடியினர் சான்றிதழ்களை வழங்கக் கூடாது என முடிவெடுத்த நேர்மையான இரண்டு தலித் அரசு அதிகாரிகளும் குற்றவாளிகளா?

தமிழகத்தில், நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மலையாளி என அழைக்கப்படுகிற மலைகளில் வாழ்கிற தமிழ் பேசுகிற பழங்குடி இனத்தவர் ஆவர். இவர்களின் இட ஒதுக்கீட்டின் பலன்களை, வேலைவாய்ப்புகளை போலி பழங்குடி சான்றுகள் வைத்திருக்கக் கூடியவர்கள் அபகரித்துக் கொண்டதால் பல்லாயிரக்கணக்கான, படித்த உண்மையான பழங்குடிகள் (ஏற்கனவே தங்கள் பாரம்பரியமான நிலங்களையும் அன்னியரிடம் இழந்துவிட்டதால்) மலைகளில் வேலை கூட கிடைக்காமல், திருப்பதி காடுகளுக்கு மரம் வெட்ட கூலி வேலைக்குச் சென்று உயிர்களை தொலைத்துக் கொண்டு இருக்கிறார்கள்; 2000த்திற்கும் மேற்பட்டோர் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 500க்கும் அதிகமானோர் பத்தாம் வகுப்பில் இருந்து பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் ஆவர். ஆனால், குரும்பக் கவுண்டர் உட்பட்ட போலி பழங்குடிகள் பலரும் மத்திய, மாநில அரசுப் பணிகளில் உயர்நிலை அதிகாரிகளாக சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பா.ஜ.க. உட்பட பல்வேறு கட்சிகளின் ஆதிவாசிப் பிரிவிற்கும் போலிகளே தலைவர்களாகவும் உள்ளனர்.

வாச்சாத்தி வன்முறையின்போது, பழங்குடியினரின் நீதிக்கான உரிமைப் போராட்டத்தில் தலைமைப் பாத்திரம் வகித்து நன்மதிப்பைப் பெற்ற த.நா.மலைவாழ் மக்கள் சங்கம் குறுகிய அரசியல் சந்தர்ப்பவாதத்திற்காக, போலிகளிடம் கிடைக்கும் ஆதாயங்களுக்காக மதிப்பை இழந்து சரிந்து கொண்டிருக்கிறது. நீதியும், நியாயமும், விலை போவது சனநாயகத்திற்கு மாபெரும் தலைகுனிவாகும். உண்மையை நிலைநிறுத்த தலித் மற்றும் பழங்குடி அமைப்புகள் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர். உறுதியாக அவர்கள் வெற்றி பெறுவார்கள். 

- சந்திரமோகன்