மோடி அரசு மக்களால் மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சி என்பதில் இருந்து மாறி, ஆர்.எஸ்.எஸ்க்காக ஆர்.எஸ்.எஸ்ஸால் நடத்தப்படும் ஆட்சி என ஆகிவிட்டது.

சமீப காலமாக நம் பிரதமரில் தொடங்கி உயர் அமைச்சர்கள் வரை அனைவரும் இந்து பாசிச அமைப்பான ராஷ்டிரிய சுயம்சேவக் சங்க் உடன் பல ரகசிய சந்திப்புக்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

modi yogaஇடையில் நடக்கும் பல மாநாடுகளில் பல இந்து மதத் தலைவர்கள் குறிப்பாக மோகன் பகவத், பிரவின் தொகாடியா போன்றவர்களின் பேச்சில் ஒன்று மட்டும் திரும்பத் திரும்ப கேட்கிறது. அது இந்தியா இந்து நாடாக அறிவிக்கப்பட வேண்டும். மேலும் வன்முறையைத் தூண்டும் படியான - இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துக்கள் போன்றோருக்கு எதிரான பேச்சுக்கள். காவல்துறை என்று ஓர் அமைப்பு இருக்கிறதா என்ற சந்தேகம் அவர்களது பொதுக்கூட்டங்களை கண்டால் ஏற்படுகிறது. அவர்களை எல்லாம் காவல்துறை தேசத்துரோக வழக்கில் கைது செய்யாது. மாறாக ஈழத்தில் இன மானம் காக்க போரிட்ட புலிகளுக்கு ஆதரவாகவோ, அரசின் மதுக்கொள்கையை விமர்சித்தாலோ அல்லது நக்ஸல்பாரி வீர வரலாற்றை எடுத்துச் சொன்னாலோ மட்டும் பாய்ந்து கைது செய்ய வந்துவிடும் முதலாளிகளின் அடிவருடி காவல்துறை.

இதில் ஒரு கேலிக் கூத்தும் மோடி அமைச்சரவையில் நடந்தது. அது புரிந்துணர்வு சந்திப்பு எனும் பெயரில் இந்துத்துவ தீவிரவாதிகளை அமைச்சரவை நடக்கும் இடத்திற்கு அழைத்து வந்து ஆலோசனை கேட்டது மத்திய கலாச்சார அமைச்சகம். ஒரு அமைச்சரே கீதையும், ராமாயணமும் மட்டுமே இந்தியாவின் உயிர்நாடி என்கிறார். ஏன் குரான் இல்லையா? பைபிள் இல்லையா?

இந்தி தான் மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல் மொழி. அதாவது ஆரிய மொழிக் குடும்பங்கள் மட்டும் வளர வேண்டும். இந்துக்கள் பசுவை, மாடுகளை புனிதமாக வணங்குகிறார்கள் என்பதற்காக மாட்டிறைச்சி தடைசெய்யப்பட்டது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில். இது மதவாதம் இல்லையா? இந்து கலாச்சார தீணிப்பு இல்லையா?

இதில் இருந்தே தெரிகிறது மோடி அரசும், ஆர்.எஸ்.எஸ்ஸும் ஒரே பார்வை கொண்டது என. இந்து உயர்சாதி கலாசாரம், இந்தி மொழி, சமஸ்கிருதம், சைவ உணவு, இந்து மத புனித புத்தகங்கள், பெண்கள் வீட்டு வேலை செய்பவர்களாக மட்டும் என அத்தனை வழிகளிலும் இந்துக் கலாச்சாரம் மறைமுகமாக மக்கள் மீது திணிக்கப்படுகிறது. இதை எழுத்தின் மூலம் தட்டிக்கேட்ட எழுத்தாளர் கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரி போன்றோர் படுகொலை செய்யப்பட்னர். அந்த கொலை வழக்குகளும் அதே பாசிச அரசால் கொலை செய்யப்பட்டன. அவர்களுக்கு பெண்கள் நவநாகரீக உடையணிய கூடாது, காதலர் தினத்தின் போது காதல் ஜோடிகள் ஊர் சுற்றக்கூடாது.. கேட்டால் இவை அனைத்தும் இந்து கலாச்சாரத்திற்கு எதிரானதாம். ஏன் புராணங்களில் கண்ணன் இல்லையா? கடவுள்கள் காதல் செய்ததில்லையா? ஏன் கஜிரங்கோ கோவில் சிற்பங்கள் ஆபாசாமாக இல்லையா? கோவிலுக்குள் ஆபாச சிற்பங்கள் இருக்கலாம்.. ஆனால் பெண்கள் நவநாகரீக உடையணிந்து செல்லக்கூடாதா?

நாடெங்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சங்க பரிவாரங்களுக்கு உள்ள சுதந்திரம் ஒரு தனிமனிதனுக்கு கிடையாது. அரசு பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தலையிடாமல் வீட்டின் சமையலறையிலும், பள்ளியிலும் மூக்கை நுழைப்பது எவ்வளவு பெரிய கேவலம்.

மாற்றம் மாற்றம் எனச் சொல்லி ஆட்சியை கைப்பற்றியவர் இன்று மக்களுக்கு வழங்கி வருவதோ ஏமாற்றம் தான். இந்தியாவின் அயல்உறவுக் கொள்கையும் மோசம் போனது இந்த பாசிசக் கும்பலால். நேபாளம் இந்து நாடாக அறிவிக்கப்படவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அங்கு நடக்கும் மாதேசிகளின் போராட்டத்தை சாதகமாகப் பயன்படுத்தி இந்திய எல்லையை மூடி, நேபாளத்திற்கு இந்தியாவில் இருந்து போகும் அத்தனை அத்தியாவசியப் பொருட்களை தடுத்து நிறுத்தி மக்களையும், அரசையும் துன்புறுத்தி ஒரு மறைமுக ஆக்கிரமிப்பை நடத்தி வருவது எத்தனை பேருக்குத் தெரியும்?

நேபாளம் இன்று வேறுவழியின்றி சீனாவிடம் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்தது. அவர்கள் சீனாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது. மெல்ல மெல்ல இந்தியாவுடன் அதிக எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் தேசம் சீனா பக்கம் சாய்ந்துவருகிறது.

இந்தியா தெற்காசியாவின் ரவுடியாக மாறிவருகிறது. இலங்கைத் தேர்தலில் ராஜபக்சேவுக்கு எதிராக அத்தனை வேலைகளை இந்திய உளவு அமைப்பான ரா செய்ததாக தேர்தல் தோல்விக்குப் பின் ராஜபக்சே கூறியதாக செய்திகள் வருகின்றன. மேலும் பாக்கிஸ்தானின் பலூச்சிஸ்தான் பகுதியில் இந்தியாவின் ரா ஆதரவில் கிளர்ச்சி நடைபெறுவதாக பாக்கிஸ்தான் சரமாரியாக குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்தியா அமைதியில் உதித்த தேசம். காந்தி தேசம். இந்துத்துவம் என்ற பெயரில் நாட்டையும், அண்டை நாடுகளையும் கட்டுப்படுத்த நினைப்பதில் எந்த நியாயமும் கிடையாது. ஏற்கனவே உலகில் அமெரிக்கா என்றொரு தேசம் இதே மனப்பாங்கை அண்டை நாடுகளிடம் கொண்டதன் விளைவு உலகமெங்கும் நட்பு நாடுகளை சம்பாதித்ததைவிட பகைவர்களை சம்பாதித்தது தான் அதிகம். ஏன் மோடி அவர்களே அந்த நிலை நமக்கும் வேண்டுமா? ஏற்கனவே உங்கள் பயங்கர இந்துத்துவ ஆட்சியால் உலகின் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் நமக்கு எதிராகத் திரும்பி விட்டன.

பாசிச இந்தியா வேண்டாம்... எங்களுக்கு ஜனநாயக இந்தியா வேண்டும். தெற்காசிய போலிஸ் வேண்டாம். தெற்காசியாவின் தோழனாக இருங்கள் போதும்.

- நேதாஜிதாசன்