தோழர் கோவன் கைது - கருத்துரிமையின் மீதான கொடுந்தாக்குதல்; வன்மையான கண்டனத்துக்குரியது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிந்தாலும் தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் செயலலிதா ஆதரவாளர்கள் கோவன் கைதை நியாயப்படுத்தி வருகிறார்கள்.

kovan 2"ஊத்திக்கொடுத்த உத்தமி" என்று ஒரு முதலமைச்சரைப் பற்றி பாடலாமா? அதுவும் ஒரு பெண் என்றும் பாராமல் இப்படி பாடுவது ஆபாசம் இல்லையா? என்கிறார்கள். இதன் வீச்சு எத்தகையதாக உள்ளது என்றால் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கோவன் கைது குறித்த விவாதத்தில் தி.மு.க. சார்பில் பங்கேற்று, கைதைக் கண்டித்துப் பேசிய மனுஷ்யபுத்திரன் கூட இந்த வரிகளை நான் ஏற்கவில்லை என்றார். கோவன் பாடலின் கருத்தை ஏற்றுக்கொண்ட அவர் 'இந்த வரிகள் மரியாதைக் குறைவானவை' என்றார்.

அடுத்து "ஊரில் இனி கிடையாது டாஸ்மாக்கு, அடிச்சு தூக்கு" என்று பாடுவதன் மூலம் வன்முறையைத் தூண்டுகிறார் என்கிறார்கள்.

மேலோட்டமாகப் பார்த்தால் இந்த வாதங்கள் நியாயமானவையாகத் தோன்றினாலும் உள்ளடக்கத்தில் இவை பித்தலாட்டமானவை. தமிழகத்தில் அரசே சாராயக்கடைகளை நடத்துகிறது. தமிழக மக்களுக்கு சொல்லொண்ணா துயரங்களை இழைக்கும் இந்த சாராயக்கடைகளை அரசே நடத்துகிறது என்பதன் குறியீடாகத்தான் "ஊத்திக் கொடுத்த உத்தமி" என்ற வரி இருக்கின்றதேயன்றி அவை நேரடியாக செயலலிதாவை இழிவுபடுத்துவதாக எடுத்துக் கொள்ள முடியாது.

இப்போதைய தமிழக முதலமைச்சர் ஒரு பெண் என்பதால் கோவன் இப்படி பாடி இருக்கிறார். இதுவே கருணாநிதி முதல்வராக இருந்திருப்பாரேயானால் "ஊத்திக் கொடுத்த உத்தமரு கோபாலபுரத்தில் உல்லாசம்" என்று பாடியிருப்பார். [அதனாலதான் பின்னால உதவும்னு மனுஷ்யபுத்திரன் முன்கூட்டியே துண்டு போட்டு வைக்கிறாரோ]. ஆகவே மக்களுக்குத் தீங்கிழைக்கும் அரசு சாராய வணிகத்தை செய்பவர் கண்டிக்கப்படுகிறார். இதில் ஆண், பெண் பேதத்திற்கு இடமில்லை.

நாடகம், கதை, பாடல், கேலிப்படம் போன்ற கலைவடிவங்களில் பரப்புரை மேற்கொள்ளும்போது குறியீடுகள் மூலமாகத்தான் கருத்துக்கள் மக்கள் முன் எடுத்து வைக்கப்படுகின்றன. அவற்றை நேரடியான பொருளில் எடுத்துக் கொள்வது முதிர்ச்சியற்ற தன்மையாகும். இன்னின்ன சொற்களைக் கொண்டுதான் பாடல் வரைய வேண்டும், இன்னின்ன வகையில்தான் கதை, நாடகப் பாத்திரங்களும், கருத்துப்படங்களும் இருக்க வேண்டும் என கலைஞர்களுக்கு யாரும் ஆணையிட முடியாது. ஆணையிட்டால் அது சனநாயகமாகாது.

அடுத்து "அடிச்சு தூக்கு" என பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க கோரலாமா என்ற கேள்வியையும் பார்த்துவிடுவோம். முதலில் பொதுச்சொத்து என்றால் என்ன? மக்களுக்கு நன்மை விளைவிக்கும் அரசின் சொத்துக்களை பொதுச்சொத்துக்கள் எனலாம். அரசு பேருந்துகள், வரிவருவாய் ஈட்டித்தரும் பணி நடைபெறும் அலுவலகக் கட்டிடங்கள, அணைக்கட்டுகள் போன்றவை பொதுச்சொத்துக்கள் என்று சொன்னால் அதில் பொருள் உண்டு. தமிழகப் பெண்களின் தாலி அறுக்கும் சாராயக் கடைகளை பொதுச்சொத்து என சொல்லலாமா, அப்படி சொல்வது எவ்வளவு அவமானகரமானது!

அமைதி வழியில் சாராயக் கடைகளை மூடக்கோரி போராடிய சசி பெருமாளின் குரலுக்கு அரசு அளித்த மதிப்பையும், அழிவிடைதாங்கியில் போராடிய மக்கள் சாராயக் கடையை அடித்து நொறுக்கி அந்த ஊரில் சாராய வணிகத்தை இல்லாதொழித்ததையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களிடருந்து கற்றுக்கொண்டுதான் கலைஞர்கள் படைப்புகளை உருவாக்குகிறார்கள். அப்படித்தான் "அடிச்சு தூக்கு" பாடலில் வருகிறது.

ஆகவே கோவனின் பாடலில் குற்றம் காண்பதை விடுத்து சாராயக்கடைகள் என்ற தீமையை களையக் கோரி மக்கள் போராடுகிறார்களே, அதனை செவியேற்று அரசே சாராயக் கடைகளை மூடட்டும். அப்புறம் "அடிச்சு தூக்க" வேண்டிய அவசியம் மக்களுக்கு இருக்காது. முதலில் அரசு அதை செய்யட்டும். அதற்கு முன்பு தோழர் கோவனை விடுதலை செய்யட்டும்.

- திப்பு