சிறைச் சாலையில் இருப்போர்க்கு:

 எனது கட்சிக்காரர் ஒருவர் – விடுதலை பெற்ற மனிதனாக சிறைச் சாலையை விட்டு வெளியே காலடி எடுத்து வைப்பதற்காக நான் காத்திருக்கும் கணங்களே என் வாழ்வின் பொன்னான பொழுதுகள்!

 ஆம்! அவர்கள் அனைவருமே ஆண்கள்தான். என்னுடைய முப்பது ஆண்டு கால வழக்குரைஞர் பணியில், சிறையில் இருந்த பெண்கள் எவருமே எனது கட்சிக்காரராக இருந்ததில்லை.

 அடைக்கலம் தேடி தங்கள் நாட்டின் எல்லையைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழையும் பர்மிய மாணவர்கள் நேராகச் சென்று சேர்வதென்னவோ இந்திய சிறைகளில்தான். கிளர்ச்சியாளர்களுக்கெதிரான நடவடிக்கைகளில் இந்திய ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்படும் நாகா கிராமத்தவரும் சிறையில் கிடப்போரில் அடங்குவர். இது தவிர, தீவிரவாதி என குற்றஞ் சாட்டப்பட்ட காஷ்மீரி ஒருவருக்கும்;விமானக் கடத்தல் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும்; எனது சக மனித உரிமை போராளி ஒருவருக்காகவும் நான் தோன்றி வாதாடியுள்ளேன்.

 ஆம்! ஒரு மனிதன் தான் இழந்த விடுதலையை மீண்டும் பெற வேண்டும் என்பது நல்ல விடயம் தான். என் தலையீட்டினால் இவ்வாறு விடுதலை பெற்ற ஆண்கள் ஏராளம். ஆனால் இவர்கள் அனைவருமே தங்களின் சிறிய வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளே தங்களின் மனைவிமாரை சிறை வைத்திருப்பவர்கள்தான். இதற்கு இவர்களின் ஆண் ஆதிக்க மன நிலையே காரணமாகும்!

 சிறையில் இருக்கும் இன்னும் எத்தனையோ பேரை நான் காப்பாற்றி இருக்கமுடியும் எனும் சிந்தனை என்னுள் எழுகிறது. வழக்குரைஞர் வைக்க இயலாமல் இன்னும் ஏராளமானோர் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

 உலகம் முழுதும் வாடிக் கொண்டிருக்கும் தொண்ணூறு இலட்சம் (சிறுவர்கள், பெண்கள், ஆண்கள்) பேரை நினைவு கூர்ந்தால், நான் சாதித்தது ஒன்றுமே அல்ல என்பதை உணர்கிறேன்.

அமைதிக்கான நோபல் விருது:

 பெண்களுக்கெதிரான இசுலாமிய தீவிர வாதத்தை துணிந்து எதிர்க்கும் ஓர் அருமையான குறியீடுதான் வீராங்கனை மலாலா. ஆனால் இவ் வீரச் சிறுமிக்கு தரப்படும் விளம்பர அலை வீச்சு என்பது பெண்கள் உரிமையை தூக்கிப் பிடிப்பதாக இல்லை. மாறாக, ஆப்கன் போரை நியாயப் படுத்தும் கபடம்தான் இதில் தெளிவாகத் தெரிகிறது. பெண்ணியத்துக்கு எதிராக இருக்கும் இசுலாமிய தீவிர வாதத்தை சாக்காக வைத்து, பெண்களின் உரிமைக்காகவே தீவிரவாதிகளை எதிர்த்து தான் போரிடுவதாக உலக அரங்கில் அமெரிக்கா நாடகம் ஆடுகிறது.

 25 வயதான பிராட்லி மானிங் எனும் அமெரிக்க ராணுவ வீரன் ஒருவன் இல்லாவிட்டால், பயங்கர வாதத்துக்கு எதிரான அமெரிக்காவின்- குருதியை உறைய வைக்கும் கொடுஞ் செயல்கள் வெளி வந்திருக்க மாட்டா! இந்த இராணுவ வீரன் தற்போது இருப்பதோ சிறைச் சாலையில்!

 நூறாயிரக்கணக்கான “இரகசிய வகைப்படுத்தப்பட்ட இராணுவ ஆவணங்களை” விக்கி லீக்ஸுக்கு கொடுத்தமைக்காக 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வாடிக் கொண்டிருக்கிறான் இந்த இளைஞன்!

 அமெரிக்க இராணுவ வரலாற்றின் மிகப் பெரிய இராணுவக் கசிவாக இது கருதப்படுகிறது. அமெரிக்க “அப்பாச்சி ஹெலி காப்டர்” வாயிலாக பாக்தாத் நகரத் தெருவில் ஆயுதம் தரிக்காத அப்பாவி மக்களை கொன்றொழிக்கும் காணொளியும் இதில் அடங்கும்.

 அமெரிக்க மக்கள் சிவில் உரிமை ஒன்றியத்தின் இயக்குநர் பென் விஸ்னர்”சிறைக் கைதிகளை சித்ரவதை செய்தவர்களுக்கும், அப்பாவி மக்களை கொன்றவர்களுக்கும் வழங்கப்படுகின்ற தண்டனையைக் காட்டிலும் தகவல்களை பொது மக்களிடம் பகிர்ந்து கொண்ட ஒரு இராணுவ வீரனுக்கு தரப்படுகின்ற தண்டனை கடுமையாக உள்ளது. இது நமது நீதி முறையில் ஏதோ கடுங்கோளாறு உள்ளது என்பதையே காட்டுகிறது” எனக் கூறினார்.

 பிராட்லி மானிங்கிற்கு பாலியல் அடையாளக் கோளாறு இருக்கிறது. இவர், உள்ளுணர்வில் தன்னை ஒரு பெண்ணாகவே கருதுகிறார். எனவே இவள் தான் “செல்சி” என அழைக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறாள். பாலியல் மாற்று மருத்துவம் சிறையில் இவளுக்கு மறுக்கப் படுகிறது.

 செல்சி மானிங்குக்கே நோபல் விருது வழங்கப் பட்டிருக்க வேண்டுமென ஒரு சாரார்;மற்றொரு சாரார் இவளுக்கும், விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கேவுக்கும் சேர்த்து வழங்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் கூறுகின்றனர்.

 ஆப்கானிஸ்தான் போரில் ஈடுபட்டிருக்கின்ற மேற்குலக நாடுகளின் சட்ட விரோத, அறமற்ற படுபாதகச் செயல்களை அம்பலப் படுத்தியவர்கள் தான் அசாங்கேயும் அவரது புதுமை விரும்பி கணினி நண்பர்களும்!

 “அதிரடிப் படை 377” என பெயருடைய அமெரிக்க கொலை வேட்டைக் குழு, தலிபான் தலைவர்களை குறி வைத்து கழுகென சுற்றித் திரிந்த நிகழ்விலிருந்து—ஆப்கான் மலைப் பகுதியில் ஒரு தொலை தூரக் கிராமத்தில் வாழ்ந்த ஷாம் கான் வரையிலான நிகழ்வுகளை, இவர்கள் வெளியிட்ட தகவல்கள் கொண்டிருந்தன. ஷாம் கான் இருந்த கிராமத்தை  சி.அய்.எ. யினுடைய துணை ராணுவக் குழு சுற்றி வளைக்கையில், தப்பிப்பதற்காக தலை தெறிக்க ஒடிக் கொண்டிருந்த அவரை நிற்குமாறு ஆணையிட்டது;இருப்பினும் நிற்காமல் ஒடிய ஷாம் கானை இக் குழு சுட்டுக் கொன்றது;ஆணைக்கு கட்டுப்படாமல் ஓடிய ஷாம் கான் ஒரு செவிடர் என்பதை சி.அய்.எ. அறியவில்லை.

 யாருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதற்காக”தி கார்டியன்” ஏடு ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. அமெரிக்காவும், பிரிட்டனும் உலகம் முழுவதையும் இரகசியமாகக் கண்காணிக்கிறது என்பதற்கான ஆவணங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னொடனுக்கு வாசகர் வாக்குகள் 47 விழுக்காடும், பெண் கல்விக்காக போராடும் மலாலாவுக்கு 36 விழுக்காடும், சக அமெரிக்கரான “முதல் தகவலாளர்” செல்சி மானிங்க்குக்கு 15 விழுக்காடும் கிடைத்தன.

 என்னைப் பொறுத்தவரை, ஜூலியன் அசாங்கே, எட்வர்ட் ஸ்னொடன், செல்சி மானிங் ஆகியோர்தான் உண்மையான மனித உரிமை பாதுகாவலர்கள். இவர்கள் மூவருமே சட்டத்தை மீறியே மனித உரிமைகளை காக்க முடிந்தது. எனவே, மனித உரிமைகளும், சட்டத்தின் ஆட்சியும் ஒரே நேர் கோட்டில் பயணிக்கும் என்பதில்லை.

பொது மன்னிப்பு அகிலம் (Amnesty International):

தங்களின் உயிர் காக்கப் பட்டமைக்காக பலர் பொது மன்னிப்பு அகிலத்துக்கு கடன் பட்டவர்கள்; நானும் அதில் ஒருவர்; இம்பாலில் நான் தங்கியிருந்த அறையை இந்திய ராணுவம் சோதனையிட்ட போது, பொது மன்னிப்பு அகிலத்திலிருந்து ஒரு தொலை பேசி அழைப்பு வந்திருக்காவிடில், நான் கற்பனை கூட செய்ய விரும்பாத எந்தவொரு தீங்கு வேண்டுமானாலும் எனக்கு நேர்ந்திருக்கலாம்!

 ஆனால் இந்த பொது மன்னிப்பு அகிலம் கையாளும் பெரும் பகுதி மனித உரிமைப் பிரச்சனைகள் எதுவும் இதை இது வரை எந்தவொரு சிக்கலுக்குள்ளும் தள்ளியதில்லை. இதில் இது மிக கவனமாகவே இருக்கிறது.

இதனுடைய முன்னாள் இயக்குநர்களில் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்னரே கூறியதாவது: “இருக்கின்ற சமூக – அரசியல் முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாதவைகளை மட்டுமே நாம் அடிப்படை மனித உரிமைகளாக வரையறுத்துள்ளோம்” இவர் இதை நன்-நோக்குடையதாக காட்டிக் கொள்ளும் ‘தற்பெருமை திமிர்’ என அழைத்தார்.

 உலக மனித உரிமை சட்டங்கள் போர்களை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய போதும், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் போரினால் நடக்கும் அளவற்ற மனித உரிமைகள் மீறல்கள் குறித்து பொது மன்னிப்பு அகிலமும், மக்கள் கண்காணிப்பகமும் வாய் திறப்பதில்லை.

 2003-ஆம் ஆண்டு அமெரிக்கா ஈராக்கை தாக்கிய போது, பொது மன்னிப்பு அகிலமும், மக்கள் கண்காணிப்பகமும் “சண்டையாளர்களே போர் விதிகளை மதித்து பின்பற்றுங்கள் (தாக்குவோர், தாக்கப்படுவோர் என வேறுபாடின்றி)” என்று பொத்தாம் பொதுவாக வேண்டுகோள் விடுத்தன. ஆனால் இவற்றுள் எதுவும், அமெரிக்காவின் சட்ட விரோதமான இப் போரைக் குறித்து மூச்சு விடவில்லை. “ஒரு நாடு தாக்க முனைகிற போதே அதை முளையிலே தடுக்காமல் விடுவதால், பேரளவில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன;ஜெனிவாமாநாட்டு விதிகளும் கண்மூடித்தனமாக மிதித்து நசுக்கப்படுகின்றன;கற்பழிப்போர் ஆணுறை அணிந்து கொள்ள வேண்டும் என்று சொல்வோரைப் போன்றே, இவ்விரு அமைப்புகளும் செயல் படுகின்றன” என்று மனித உரிமை செயல்பாட்டு வல்லுநர் ஒருவர் கூறினார்.

 நோம் சோம்ஸ்கி, எட்வர்ட்-எஸ்-ஹெர்மன், ஜீன் பிரிக் மாண்ட் மற்றும் டயான ஜான்ஸ்டோன் ஆகிய மேற்கத்திய அறிஞர்களிடமிருந்து, மனித உரிமைகள் அரசியல் குறித்து நல்ல ஆழமான விமர்சனங்கள் வந்திருக்கின்றன. மனித உரிமை அமைப்புகளின் செயல்பாட்டு நேர்மை குறித்து, இந்திய மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஏன் கேள்வி எழுப்புவதில்லை என்பது எனக்கு வியப்பை அளிக்கிறது! இடதுசாரிகள் கூட, பொது மன்னிப்பு அகிலமும், மக்கள் கண்காணிப்பகமும் தங்களை மனித உரிமை பாதுகாவலர்கள் என அழைப்பதை பெருமையாகக் கருதுகின்றனர்;இவை வழங்கும் புகழாரங்களையும், விருதுகளையும் உளமார ஏற்கின்றனர்.

 இப் பின்புலத்தில், பொது மன்னிப்பு அகிலத்துக்கு நோபல் விருது வழங்கப்பட்டதன் காரணம் நமக்கு நன்கு புரிகிறது. ஆளுவோர்க்கு ஏற்புடையதாக இருக்கும் அளவுக்கு மட்டும் தன் அறச் சீற்றத்தை வெளிப்படுத்துவதில் இது கவனமாக இருக்கிறது.

இசுலாம், பெண்ணுரிமைகள் மற்றும் மனித உரிமைகள்:

 பெண்ணுரிமைகளுக்கும் மனித உரிமை கருத்தாடல்களுக்குமிடையே முரண் பட்ட போக்கு நிலவுகிறது என்பதை ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர் என்ற முறையில் என் வாழ்க்கை முழுக்க கண்டுள்ளேன்.

இம் முரண்பட்ட போக்கு பற்றி நான் போதுமான அளவுக்கு பேசியும், எழுதியும் வந்துள்ளேன். ஆனால் இவ் விவாதம் கடும் சிக்கல் நிறைந்ததாக தற்போது மாறியுள்ளது.

 பாகிஸ்தான் வம்சா வழி பிரித்தானியரான மோஸெம் பெக்(இவர் குவாண்டநமொ பே சிறையில் இருந்து விடுதலையானவர்) என்பவர் “கூண்டில் அடைக்கப்பட்ட கைதிகள்” எனும் அமைப்பை உருவாக்கியவர். இந்த அமைப்புக்கும், பொது மன்னிப்பு அகிலத்துக்குமான நெருக்கமான உறவைக் கண்டித்து, பொது மன்னிப்பு அகிலத்தின் “பாலினப் பிரிவுக்கு தலைவியாக இருந்த கீதா சாகல் அப் பதவியிலிருந்து விலகினார். இதைத் தொடர்ந்து, மனித உரிமை கருத்தாடல்களுக்கும், பெண்ணுரிமைகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் குறித்த விவாதம் கவனத்தை ஈர்க்கும் நடு மையத்துக்கு வந்துள்ளது.

 கீதா சாகலுக்கு உலகம் முழுவதும் சக்தி வாய்ந்த நண்பர்கள் இருக்கிறார்கள். எனவே, இவர்கள் கீதா சாகல் வெளியேறுவதற்கான சூழலை உருவாக்கிய பொது மன்னிப்பு அகிலத்தைக் கண்டித்து உலகளாவிய பரப்புரையைச் செய்தனர். இவருடைய புகழ் பெற்ற ஆதரவாளர்களுள் ஒருவர் சல்மான் ருஷ்டி.

 பல பெண்ணியவாதிகள் கீதா சாகலை விமர்சனம் செய்தனர். பெண்ணியக் கல்வியாளர்கள் சொன்னது:”கீதா சாகலும் அவரது நண்பர்களும் அவர்களது விமர்சனங்களில் பயன்படுத்திய மொழியும், தர்க்கமும்’இசுலாமியர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் பொதுப் புத்தி கருத்தாடல்களுக்கு நெருக்கமாக இருக்கிறது. வேற்று நாடுகளின் ஆதரவால் நிகழ்த்தப்படும் வன்முறையால் பாதிக்கப்படும் இசுலாமிய ஆண், பெண் இரு பாலரையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்”.

 ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆக்கிரமிப்பை கண்டிக்க மறுத்த பொது மன்னிப்பு அகிலத்தை, மேற்படி, ஆணித்தரமாக கருத்தை வெளிப்படுத்துபவர்கள் விமர்சனம் செய்வதில்லை;அல் கொய்தாவுக்கு நிதி உதவி செய்யும் மேற்கு நாடுகளைக் குறித்தும் இவர்கள் வாய் திறப்பதில்லை; இத்தகையப் போக்கு எனக்கு வியப்பபை அளிக்கிறது!

அரசியல் இஸ்லாம் X மேற்கு நாடுகள்

 “அடுத்தடுத்து வரும் அமெரிக்க ஆட்சியாளர்களுக்கும், அல் கொய்தாவுக்கும் இடையிலான வளர்ந்து வரும் உறவை அம்பலப்படுத்தலே, போருக்கு எதிரான மற்றும் மற்றும் மனித உரிமை இயக்கத்தை சீரான பாதையில் கொண்டு செல்லும்” என பேராசிரியர் மைக்கேல் சோஸ்டவ்ஸ்கி வாதிடுகிறார். சோவியத்-ஆப்கன் போரில் தலையிடுவதற்காக சி.அய்.எ. வால் உருவாக்கப்பட்டதுதான் அல் கொய்தா. இதை நிரூபிக்கும் ஆவணங்கள் நிறைய இருக்கின்றன. இவற்றை மைய ஊடகங்கள் வேண்டுமென்றே கண்டு கொள்வதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். யூ. எஸ். காங்கிரஸுனுடைய அதிகாரபூர்வமான ஆவணங்களும் இதில் அடங்கும்;யூ. எ. ஸ். உளவு நிறுவனங்கள் சொன்னது;”நாங்கள் ஒசமா பின் லேடனை ஆதரித்தோம். ஆனால், அமெரிக்க-சோவியத் பனிப் போரின் முடிவைத் தொடர்ந்து, ஒசமா எங்களுக்கு எதிராகத் திரும்பினார்”.

 9/11 க்குப் பின்னர், ஊடகங்களின் திட்டமிட்ட பொய் பரப்புரையால் உண்மைகள் மூழ்கடிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், எப்படி ஒரு மாயப் பகைவன் ஜோடனையால் நம்பர் 1எதிரியாக உருமாற்றப்பட்டான் என்பதை தெளிவாக்கும் வரலாற்றுச் சான்றுகளும் அழிக்கப்பட்டன.

 அச்சத்தை ஏற்படுத்தும் அரசியல்:

 கூர் நகங்களுடைய”அறிவியல் கற்பனை” இயந்திரப் பறவைகள் போல் உளவு நிறுவனங்கள், உலக வானின் அனைத்து இடங்களிலும் வலம் வருகின்றன. கைது மற்றும் விசாரணை நடத்துவதன் மூலம் உளவு நிறுவனங்கள் ‘குற்ற நீதி முறையின்’ ஓர் உறுப்பாகவே மாறி விட்டன. தீவிர வாதத்துக்கு எதிரான போர், உள்நாட்டுப் பாதுகாப்பு, அமெரிக்காவிலுள்ள 10, 000, இடங்களில் உளவு வேலை செய்தல் என பல்வேறு நடவடிக்கைகளில் 1271 அரசு நிறுவனங்களும், 1931 தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. வாஷிங்டனில வாழும் மொத்த மக்களைப் போல் ஒன்றரை மடங்கான சுமார் 8, 54, 000/ மக்கள் “உயர் பாதுகாப்பு சோதனைக்குட்படுத்தப்பட்டு” தேறியவர்கள்.

 பனிப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் உலக மனித உரிமை பிரகடனம் வரையப்பட்டது;பதற்றத்தை தணிப்பதை விட போரைத் தொடர்ந்து நடத்தவே இது அதிக அளவில் பயன் படுத்தப்பட்டிருக்கிறது; தீவிர வாதத்தின் மீதான போர் எனும் போர்வையில், உலக மனித உரிமையின் தரம் தாழ்த்தப்பட்டிருக்கிறது; இதனால், சித்ரவதையும், ஒருதலைப்பட்ச சிறைப்படுத்தலும் மற்றும் நீதி-மீறிய மரண தண்டனை நிறைவேற்றல்களும் அரசு ஆணைகள் வாயிலாக எளிதாக நடக்கின்றன.

 இப்படி எவ்வளவோ குறைகள் இருந்தாலும், தீவிர வாதத்தின் மீதான போர் மீறல்களுக்கு அறை கூவல் விடுக்கும் ஆயுதமாகவே உலக மனித உரிமை பிரகடனம் திகழ்கிறது. மனித உரிமை பிரகடனமும் மற்றும் இன்ன பிற மனித உரிமை சட்டங்களும் இல்லையெனில், எந்த ஒரு கைதியும் “குவான்டநமொ சிறையிலிருந்து வெளி வந்திருக்க முடியாது. அதே போல் எந்தவொரு விசாரணைக் கைதியும், உச்ச நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். அச்சத்தை உருவாக்கும் அரசியலை எதிர் கொள்வதற்கான கருத்துக்களை, மனித உரிமை கருத்தாடல்கள் நமக்கு வழங்குகின்றன.

தலைப்பு: ஓர் மனித உரிமை-வழக்குரைஞரின் நினைவலைகள்
துணைத் தலைப்பு: “அமெரிக்க கழுகின் கொலை வேட்டை”

(பிரபல மனித உரிமை செயற்பாட்டாளரும், வழக்குரைஞருமான நந்திதா ஹக்ஸர் “மெயின் ஸ்ட்ரீம்” ஆங்கில் வார இதழில் எழுதிய கட்டுரை,

தமிழில்: து.சேகர் அண்ணாத்துரை, வழக்குரைஞர், செயலர், கோவை மாவட்ட பி.யூ.சி.எல். 

Pin It