equality justice

ஆரியர்கள் / பார்ப்பனர்கள் நாவலந்தீவு என்று அழைக்கப்பட்ட இந்திய நிலப்பரப்புப் பகுதியில் நுழைந்து, தங்களை வலுவுடன் நிலைப்பபடுத்திய பின், இம்மண்ணின் மக்கள் ஆட்சி அதிகாரக் கல்வி பெறக் கூடாது என்று தடை விதித்தனர். இம்மண்ணின் மக்கள், உழைப்பு தொடர்பான அனைத்து அறிவியல்களையும் கற்றுத் தேர்ந்து, மக்கள் வாழ்வதற்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து, சமூகத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொண்டு இருந்தனர்.

பார்ப்பனர்கள் ஆட்சி அதிகாரக் கல்வியில் கருத்தியல் பகுதியைத் தாங்கள் மட்டுமே வைத்துக் கொண்டனர். கீழ்ப்படிந்து ஆட்சி அதிகாரத்தைச் செயல்படுத்தும் பகுதிகளை மன்னர்களுக்கும், வணிகர்களுக்கும் அளித்தனர். ஆங்கிலேயர்கள் இங்கு வந்து, தங்கள் நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளும் வரை இந்நிலை தங்கு தடை இன்றித் தொடர்ந்து கொண்டே இருந்தது.

கிருத்தவ மதம் தோன்றிய பின், அம்மதத்தைப் பரப்புவதற்காக அம்மதத்தவர்கள் உலகம் எங்கும் சென்றனர். கூடவே நோயால் வாடும் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும், கல்லாத மக்களுக்குக் கல்வியை அளிப்பதற்கும் இன்னொரு பிரிவினரும் சென்றனர். அவர்கள் இந்திய நிலப் பரப்பில் கல்வி மறுக்கப்பட்ட மக்களிடயே பணியாற்ற மிகுந்த சிரமப்பட்டனர். ஒவ்வொரு வருண மக்களுக்கும் வெவ்வேறு விதமான கல்வி அளிக்கப்படும் முறையை மாற்றி, அனைத்து வகுப்பு மக்களுக்கும் பொதுவான கல்வியை அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். அவ்வாறு அவர்கள் செய்ய முயன்ற போது, இங்கு உள்ள சனாதனவாதிகள் அதை எதிர்த்தனர். மதத்தைப் பரப்பும் போது காட்டாத எதிர்ப்பு, அனைவருக்கும் ஒரே விதமான கல்வி என்ற போது சனாதனவாதிகளிடையே பீறிட்டுக் கிளம்பியது. ஆங்கிலேய அரசிடம் 'மத உரிமையில் தலையிட மாட்டோம்' என்ற விக்டோரியா மகாரணியாரின் சாசனத்தைக் கிருத்தவ சேவை நிறுவனங்கள் (Christian Missionaries) மீறுவதாகப் புகார் செய்தனர்.

ஆனால் மகாத்மா சோதிராவ் ஃபுலே போன்றோர் ஆங்கிலேயர்களிடம் அனைவருக்கும் பொதுவான கல்வியை அளிப்பது மத உரிமையில் தலையிடுவதாக ஆகாது என்று விளக்கிக் கூறினர். இருபுறமும் கேட்டு ஆராய்ந்த ஆங்கிலேய அரசு அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான கல்வியை அளிக்கும் முறைக்குத் தடை போட முடியாது என்று தெளிவாக அறிவித்து விட்டனர்.

இதைக் கண்டு கொதித்து எழுந்த பாலகங்காதர திலகர் 1917ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் நாளன்று அவைருக்கும் பொதுவான கல்வி அளிக்கப்படுகிறது என்பதற்காக, சூத்திரர்களும் பஞ்சமர்களும் அங்கு போய்க் கல்வி கற்கக் கூடாது என்று ஒரு பொதுக் கூட்டத்தில் மிரட்டினார்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுச் சென்ற பின், சென்னை மாகாண முதலமைச்சராக வந்த இராஜகோபாலாச்சாரியார் குலக் கல்வி முறையைக் கொண்டு வந்து 'ஆட்சி அதிகாரக் கல்வி பார்பப்னர்களுக்கு மட்டுமே' என்று நிலைநிறுத்த முயன்றார்.

இன்று பா.ஜ.க. இந்திய அரசைக் கைப்பற்றிய பிறகு ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் கல்விக்கு எதிரான குரல் தலை தூக்க ஆரம்பத்து உள்ளது. தேசிய இந்து இயக்கம் (National Hindu Movement) என்ற ஒரு அமைப்பு 19.4.2015 அன்று கோவாவில் ஒரு கூட்டத்தை நடத்தியது. அதில் இந்து மதத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கிருத்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது என்று, அன்று பாலகங்காதர திலகர் மிரட்டியது போலவே இப்பொழுதும் மிரட்டி உள்ளனர்.

சரி! இவர்கள் இவர்கள் கூறுவது போல இந்துக்கள் கிருத்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் சேர்க்காமல் இருக்கட்டும். வேறு எங்கு சேர்ப்பது? அனைவரும் கற்பதற்குப் போதுமான எண்ணிக்கையில் பள்ளிகள் உள்ளனவா? இருக்கும் பள்ளிகளும் ஒரே தரத்தில் உள்ளனவா? இல்லையே?

அப்படி என்றால் இவர்கள் சொல்ல வருவது தான் என்ன? சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் ஆட்சி அதிகாரக் கல்வியைக் கற்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கக் கூடாது. பார்ப்பனர் அல்லாதோர் இயக்கங்கள் தோற்றுவித்து இருக்கும் விழிப்புணர்வால், கல்வி கற்க வேண்டும் என்ற உணர்வைப் பெற்ற ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் தரம் குறைந்த முறையில் கல்வியை அளிக்கும் பள்ளிகளில் படிக்கட்டும்; உயர் தரத்தில் கல்வி அளிக்கும் பள்ளிகளில் பார்ப்பனர்கள் படிக்கட்டும். இது தானே அவர்கள் சொல்ல வருவது?

இதற்கு எதிராக நாம் ஒரு கோரிக்கையை வைக்கலாம் அல்லவா?

எந்த ஒரு பள்ளி ஆனாலும் அதில் மாணவர்களைச் சேர்க்கும் போது, உயர்சாதிக் கும்பலினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், மத சிறுபான்மையினர் ஆகியோரை அவரவர் மக்கள் தொகையின் விகிதத்தில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும்.

பள்ளிக் கூடங்கள் போதுமான அளவிற்கு இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடம் கிடைக்காமல் போனால், பார்ப்பனர்களுக்கும் அதே விகிதத்தில் இடம் கிடைக்காமல் போக வேண்டும். பள்ளிக் கூடங்கள் ஒரே தரத்தில் இல்லாமல் போனால் உயர் தரப் பள்ளிகளில் ஒரு வகுப்பாரும் மற்ற பள்ளிகளில் வேறு வகுப்பாரும் படிக்கும் படி ஆகாமல், அதனால் ஏற்படும் பிரச்சினை அனைத்து வகுப்பாரையும் ஒரே சீராகப் பாதிக்க வேண்டும். பார்ப்பனர்கள் தனியாகத் தப்பிச் செல்ல வழி கிடைக்கக் கூடாது.

பார்ப்பனர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமையைச் சிறிதும் குறையாமல் அளிக்கும் இந்த விகிதாச்சாரப் பங்கீட்டு முறையை ஒப்புக் கொள்ளும் படி இந்து அமைப்பினரை நாம் கேட்டுக் கொள்வோமா?

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.4..2015 இதழில் வெளி வந்துள்ளது)