attack on Honda employeesஅரசு என்பது அறநெறிக் கருத்துகளின் செயல் வடிவமோ, அமைதிக்கும் நீதிக்கும் உத்ரவாதம் அளிக்கும் சுதந்திர(!) சமுதாயத்தின் அடையாள முத்திரையோ அல்ல. இணக்கம் காணமுடியாத, ஒத்துப் போக முடியாத, வர்க்கப் பகைமையின் விளைவும் வெளிபாடுமே அரசு! அது, ஆதிக்கம் செலுத்தும் வர்க்கம் பிற வர்க்கங்களை அடக்கி ஒடுக்குவதற்கான பலாத்கார நிறுவனமே! இதுதான் அரசு பற்றிச் சமூக விஞ்ஞானம் தரும் விளக்கம்.

சீருடை அணிந்த ஒரு கொலைகாரக் கூட்டம் பொது அமைதி, சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல் என்கிற பம்மாத்துடன், தன் `எஜமானர்களின்’ விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அப்பாவிகளையும் அடிமைகளையும் வேட்டையாடுவதற்கான ஏற்பாடுதான் அரசு என்பதை ஹரியானாவில் நடந்த கொடூர சம்பவம் தெளிவாக உணர்த்தியது.

புதிய பொருளாதாரம் அன்னிய முதலீடு பொருளாதார வளர்ச்சி வேலை வாய்ப்புகள் என்கிற கவர்ச்சிகரமான பதப் பிரயோகங்களுடன் `பொருளாதார மேதை’ மன்மோகன் சிங் வெளிநாட்டுக் கொள்ளையர்களுக்கு அகலக் கதவு திறந்து விட்டார். புதிய பொருளாதாரக் கொள்கையின் ஒப்பனை கலைந்து, `ஏகாதிபத்திய மிருக வெறி’ எப்படி இருக்கும் என்பதைச் சுதந்திர(!) இந்தியா புரிந்துகொள்ள வைத்தது இந்தப் புதிய `ஜாலியன் வாலாபாக்’ அக்கிரமம்.

`அன்னியரே வெளியேறுங்கள்’ என்பது பழைய பொருளாதாரக் கொள்கை. `அன்னியரே வாருங்கள்’ என்பது புதிய பொருளாதாரக் கொள்கை. "தேச பக்தியை யாரும் தனக்குச் சொல்லித் தரத் தேவையில்லாத" அளவுக்கு தேச பக்தியில் ஊறிய மன்மோகன் சிங் திட்டப்படி ஹரியானாவில் குர்கானில் ஜப்பான் நாட்டின் ஹோண்டா நிறுவனம் தனது தொழிற்சாலையைத் தொடங்கியது.

புதிய பொருளாதாரக் கொள்கை வழங்கும் `சுதந்திரமான’ தொழிற் கொள்கையுடன் அதாவது தன் விருப்பப்படி யாரையும் வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம், தேவையில்லை என்றால் சுட்டுச் கொல்லவும் செய்யலாம் - ஹயர் அண்ட் ஃபயர் - என்கிற கட்டுத்தளையற்ற சுதந்திரத்துடன், சுதந்திர இந்தியா(!)வின் கூலி ஜனங்களை `பழைய முறை’யில் நடத்தியது ஹோண்டா நிறுவனம்.

woman attacking policeதொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வெறும் நாலாயிரம் மட்டுமே! (வெளிநாட்டு நிறுவனங்கள் வங்கிகள் உட்பட இந்தியத் தொழிலாளர்களை இப்படித்தான் குறைந்த கூலிக்கு அடிமைப்படுத்தி, கால நேரம் இல்லாமல் வேலை வாங்குகின்றன.) ஹோண்டா நிறுவனத் தொழிலாளி ஒருவர் ஜப்பான் அதிகாரியிடம் தங்களுக்குள்ள பிரச்சனைகளைச் சொல்லி நியாயம் கேட்டபோது அந்த அதிகாரி தொழிலாளியை அடித்து நொறுக்கினார்.

அடிபட்ட தொழிலாளிக்கென நான்கு தொழிலாளர்கள் பேச வந்தபோது அவர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். அந்த நால்வர் பிரச்னையை எழுப்பியபோது 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அந்தப் பழிவாங்கும் நடவடிக்கையை நிறுத்தக் கோரியபோது மொத்தத் தொழிலாளர்களையும் வீதிக்கு விரட்டியது. ஆறு மாத காலம் வேலையில்லாமல், சாப்பாட்டுக்கே வழியில்லாமல், வயிறும் மனசும் கொதிக்க ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்களின் ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தியது ஹரியானா போலிஸ்!

ஹோண்டா நிறுவனத்துடன் பேரம் பேசி காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு செயல்பட்டார்கள் என்று தெரிந்து கொண்ட தொழிலாளர்கள் போலீசாருடனும் நிர்வாகத்தை எதிர்த்து முழக்கமிட்டபோது நிராயுதபாணிகளாய், பஞ்சைப் பராரிகளாய், தரையில் அமர்ந்திருந்த தொழிலாளர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியது போலீஸ்.

அரசாங்க ரௌடிகள்தான் அடிக்க வேண்டும்; பாதிக்கப்பட்டவர்கள் `ரகுபதி ராகவ ராஜாராம்’ என்று பக்திப் பரவசத்தில் அகிம்சாமூர்த்திகளாய் அத்தனை அடிகளையும் வாங்கிக் கொள்ள வேண்டும் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கையின் சாராம்சம் புரியாத தொழிலாளர்களில் சிலர் போலீசாருடன் மோதினால் அதைத் தவறு என்று சோ போன்ற சுகவாசிகளைத் தவிர புத்தியுள்ள எவனும் நேர்மைத் திறமுள்ள எவனும் சொல்ல மாட்டான்.

இம்மாதிரியான நேரங்களில் தாக்குதலைத் தொடங்குவதற்குப் பயிற்சி அளிக்கப்பட்ட சீருடை ரௌடிகள் என்ன செய்வார்கள்? சில போலீஸ்காரர்கள் தலையிலே கைகளிலே கட்டுப் போட்டுக் கொள்வார்கள். போலீஸ் வாகனம் எதையாவது கொளுத்தி விடுவார்கள். காரணம் கிடைத்துவிட்டது; ஆணை பிறக்கும்; தடிகள் அடிக்கும்; துப்பாக்கிகள் முழங்கும்; ரத்த வெள்ளத்தில் மனித உயிர்கள் அலறித் துடிக்கும். இதுதான் குர்கானில் நடந்தது.

woman attacking policeஅடிபட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மருத்துவமனையில் அள்ளிப் போடப்பட்டார்கள். மருத்துவமனையில் தொழிலாளர்களின் உறவினர்கள் அழுகையும் கண்ணீருமாய் வந்த போது, பாதிக்கப்பட்ட தொழிளார்கள் என்ன நடந்தது என்று சொல்லிவிடக் கூடாது என்று முடிவு செய்த காவல்துறை மருத்துவமனையில் திரண்ட உறவினர்கள் மீதும் பாய்ந்து குதற ஆரம்பித்தார்கள். முதியோர், பெண்கள், குழந்தைகள் என்று எந்த விலக்கும் இல்லாமல் கொன்று குவிப்பது ஒன்றே குறிக்கோள் என்பது மாதிரி போலீஸ்தனத்தைக் காட்டினார்கள்.

போலீசின் காட்டுமிராண்டித் தனத்தை மூடி மறைப்பதற்காக மருத்துவ மனையில் போடப் பட்டிருந்த நூற்றுக் கணக்கான தொழிலாளர் களை யார் கண்ணிலும் படாமல் எங்கோ கொண்டு போய் மறைத்து விட்டார்கள். வெறும் இருபது முப்பது பேர்தான் காயமடைந்தார்கள் என்று நம்ப வைப்பதற்காக நடத்தப்பட்ட அயோக்கியத்தனம் இது.

ஹரியானா முழுவதும் அழுகையும் துடிப்பும், ஆவேச எழுச்சியுமாய்ப் பற்றி எரிந்தபோது பூபிந்தர் சிங் ஹூடாவின் அரசு தூங்கிக் கொண்டிருந்ததுதான் கேவலமான நிகழ்ச்சி. குர்ஹான் வெறியாட்டம் நாடாளுமன்றத்திலும் கொதிப்பேற்றியது. ஹரியானா காவல் துறையும் ஹூடாவின் அரசையும் கடுமையாக விமர்சனம் செய்த கட்சிகள், இந்தக் கொடுமைக்கு மூலகாரணமாய் வெளிநாட்டு கொள்ளையர்கள், இந்தியத் தொழிற் சங்கங்களுக்கோ, சட்ட திட்டகளுக்கோ கட்டுப்படத் தேவையில்லை பூரண சுதந்திரத்துடன் எங்கள் தொழிலாளர்களைச் சுரண்டலாம், வதைக்கலாம் என்று தனிச் சலுகைகள் வழங்கிய புதிய பொருளாதார மேதையை விமர்சனத்துக்கே கொண்டுவரவில்லை என்பது ஆச்சரியமே!

இந்தக் கோரத் தாண்டவத்தின் மத்தியில் பெண்கள் துணிந்து நின்றார்கள்.

பெண் என்றால் அடிபடவும் மிதிபடவும் `சாந்தம்’ எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை உணர்த்துவதற்கும் கடவுளால் படைக்கப்பட்ட அழகிய அடிமை என்கிற சனாதனச் சிந்தனைகளை உடைத்தெறிந்துவிட்டு, மானுடம் காக்க நீதியின் தலை நிமிரப் போருக்கும் தயார் என்பது போல் பெண்கள் அஞ்சா நெஞ்சத்துடன் செயல்பட்டுப் பெண்மைக்குப் பெருமை சேர்த்தார்கள். பெண் கொதித்தெழுந்தால், குற்றம் செய்தவன் கொற்றவனேயானாலும் தண்டனை பெறுவான் என்பதை உலகுக்கு உணர்த்திய அறம் காத்த தேவி கண்ணகியின் வாரிசுகள் அற்றுப் போய்விடவில்லை என்பதைக் குர்கான் அராஜகத்தின் போதும் காண முடிந்தது. ஓங்கிய தடியுடன் ஓடிவந்த போலீஸ்காரர்களுக்கு அஞ்சாமல் "நெருங்கினால் நாயே தொலைத்து விடுவேன் உன்னை" என்று எரியும் விழிகளால் எச்சரித்த மூதாட்டியரைப் பார்த்து மிரண்டு போனது காவல்துறை. வீரவதி என்ற பெண் படுகாயமடைந்த தன் சகோதரனைப் பார்க்க வந்தார். ஆனால், "அவர் இருந்தார், இப்போது இல்லை" என்று பதில் கிடைத்ததால் அதிர்ச்சியும் ஆவேசமும் கொண்டார்.

மருத்துவமனைக்கு வந்த ஆட்சியர் (கலெக்டர்) சுதீரின் சட்டையைப் பிடித்து நிறுத்தி, "என் சகோதரன் குஷிராவைத் காணவில்லை, எங்கே அவன்? என்ன செய்தீர்கள்?" என்று உலுக்கினார். வீரவதியை அப்புறப்படுத்துவதற்காக அவரைக் கையைப் பிடித்து இழுத்த போலீஸ்காரனின் தடியைப் பிடுங்கினார். "காளி"யைக் கண்ட மிரட்சியில் காக்கிச் சட்டைகள் ஓடத் தொடங்கின. "ஆயுதங்கள் அனைத்தும் காகிதப் புலிகள். மக்களே மகத்தான சக்தி"என்பதைப் பெண்கள் புரிய வைத்தார்கள்.

மறுநாள் `குர்கான்’ அராஜகத்தைக் கண்டித்து டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் காவல்துறை காட்டுமிராண்டித் தனமாகவே நடந்தது. தடியடி நடத்தினார்கள், தண்ணீரைப் பீய்ச்சியடித்தார்கள்; கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வெடித்தார்கள். அப்போதும் கூடப் பெண்கள் அஞ்சாமல் ஓடாமல் ஏந்திய கொடியைக் கீழே விழாமல் உயர்த்திப் பிடித்தவாறு போக்கிரிகளுக்கு எதிராக உரத்த குரல் எழுப்பினார்கள்.

கண்ணகி பரம்பரையே வாழி நீ என்று தூய இதயங்களெல்லாம் வாழ்த்தின.

(தமிழ்ச் சான்றோர் பேரவை செய்திமடல் - ஆகஸ்ட் இதழிலிருந்து)