1988 ஆம் ஆண்டு பழ.நெடுமாறன் தமிழர் தேசிய இயக்கம் துவங்கிய போது, உடன் இருந்தவர். தமிழ் ஈழம் என குரல் எழுப்பியதற்காக தமிழகத்தில் முதல் முதலாக தேசப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். பாட்டாளி தமிழர் முன்னணி அமைப்பின் தலைவராக இருந்து பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தவர். அக்கட்சியில் துணைப் பொதுச்செயலாளராக, கொள்கை விளக்க அணிச்செயலாளராக இருந்த வியனரசு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாமகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் அளித்த சிறப்பு பேட்டி இது.

நேர்காணல் - ப.கவிதா குமார்

பாமகவில் இருந்து ஏன் விலகினீர்கள்?

viyanarasuபாமகவை தொடங்கிய காலத்தில் இருந்து தஞ்சாவூர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கட்சிப் பணியாற்றி உள்ளேன். திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் அணி சேராமல் தனித்து செயல்படும் என்பதே பாமகவின் கொள்கை கோட்பாடு. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பாமக திராவிட, தேசிய கட்சிகளுடன் கூட்டணி என கொள்கை கோட்பாடுகளை மீறி செயல்பட்டு வருகிறது. இதற்கு காரணம் அன்புமணி, தலைவர் கோ.க.மணியின் தவறான வழிகாட்டுதலாகும். ஆகவே கட்சியில் தொடர விருப்பம் இல்லாமல் மாநில கொள்கை விளக்க அணிச் செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்தும் விலகியுள்ளேன்.

பல்வேறு தருணங்களில் பாமக கூட்டணியோடு தானே போட்டியிட்டது?

திமுக ஆட்சியின் போது கடந்த 2009 ஆம் ஆண்டு பாமக தனி அணியாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன். இதை மருத்துவர் ராமதாஸ் ஏற்றுக் கொண்டார். இதனால் தான் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்ணாகரம் இடைத்தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டது. அதிமுக ஆதரவளிக்க வந்தபோது கூட, அதை உதறித் தள்ளினோம். ஆனால், 2011 ஆம் ஆண்டு மீண்டும் கூட்டணி பல்லவியை அன்புமணி ராமதாசும், கோ.க.மணியும் பாட ஆரம்பித்து விட்டனர்.

பாமக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன தெரியுமா? பாமக தலைமையில் மாற்று அணி. தேர்தல் நேரத்தில் அது சாதி அமைப்புகளுடன் சமூக ஜனநாயகக் கூட்டணி என்று கூறினார்கள். திராவிட, தேசியக் கட்சிகள் இல்லாமல் ஏதோ ஒரு கூட்டணி உருவாகிறதே என்று நினைத்தேன். மார்ச் - 5ம் தேதி பாமக நிர்வாகக்குழுக் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. நான் நிர்வாகப் பொறுப்பில் இல்லாததால் அக்கூட்டத்திற்கு சென்றவர்களிடம் திமுக, அதிமுக, பாஜகவுடன் நாம் கூட்டணி அமைக்கக் கூடாது என்று வலியுறுத்துங்கள் என்று கூறினேன். ஆனால், அன்புமணி பாஜகவுடன் கூட்டணி என்றவுடன், அனைவரும் அதே கருத்தையே வலியுறுத்தி விட்டனர். நமது பொதுக்குழு முடிவுக்கு எதிராக முடிவெடுக்க வேண்டாம் என்று தலைவர் கோ.க.மணியிடம் வலியுறுத்தினேன். அவரும் நிர்வாகக்குழு கூட்டத்திற்குப் பின், கூட்டணி முடிவெடுக்கும் அதிகாரம் அய்யாவிற்கு வழங்கப்படுகிறது என்று கூறினார். ஆனால், எந்த அறிவிப்பும் இல்லாமலே அடுத்த நாள் பாஜகவின் அலுவலகமான கமலாலயத்திற்கு பாமக தலைவர்கள் சென்று விட்டனர்.பாஜகவுடன் கூட்டணி என்பதை என்னால் ஏற்க முடியவில்லை.

இதுகுறித்து மருத்துவர் ராமதாசிடம் சொன்னீர்களா?

தென்காசிக்கு வந்த தலைவர் ராமதாசிடம் 15 பக்க அறிக்கையைத் தந்தேன். பாமக பொதுக்குழு முடிவை மீறாதீர்கள் என்று பல கடிதங்களை அவருக்கு அனுப்பினேன். இதற்குப் பரிசு, பாமகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவி என்னிடமிருந்து பறிக்கப்பட்டது தான். தொலைபேசியில் அழைத்து இதுகுறித்து கூறியவர்கள், கொள்கை விளக்க அணியில் செயல்படுங்கள் என்றார்கள். கடந்த மூன்று நாட்களுக்கு முன் நடைபெற்ற பொதுக்குழு, செயற்குழுவிற்கு எனக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட‌வில்லை. நான் அக்கூட்டத்தில் கலந்து கொண்டால், பாமகவின் தவறான போக்கு குறித்து பேசுவேன் என்பதால் என்னை அவர்கள் தவிர்த்தார்கள். ஆகவே, பாமகவில் உள்ள அனைத்துப் பதவிகளையும் ராஜினாமா செய்து விட்டேன்.

பாஜக அணியை எப்படி பார்க்கிறீர்கள்?

மதவாத பாஜகவுடன் தமிழகத்தில் கரம் கோர்த்துள்ளவர்கள் யார்? கல்விக் கொள்ளையர்கள். தனியார் கல்வியே கூடாது எனக்கூறும் பாமக, அக்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது எந்த வகையில் நியாயம்? பாஜகவுடன் முன்பு கூட்டணி சேர்ந்ததற்காக, பெண்ணாகரம் இடைத்தேர்தலில் ஒவ்வொரு மசூதியாக ஏறி, இனி அந்தத் தவறை செய்யமாட்டோம் என்று கூறிய அன்புமணி ராமதாசும், கோ.க.மணியும் இப்போது எப்படி பாஜக அணியில் சேர்ந்தார்கள்? சிறுபான்மை மக்களுக்கு அவர்கள் கொடுத்த வாக்குறுதியை மீறியுள்ளனர்.

ஈழம் குறித்து பேசக்கூடிய பாமக, இலங்கை அதிபர் ராஜபட்சே, மோடிக்கு அழைப்பு விடுத்ததை கண்டித்து உங்கள் கூட்டணியில் நாங்கள் இல்லை எனச் சொல்லக் கூட முடியவில்லை. காரணம், அன்புமணி எப்படியும் மத்திய அமைச்சராக விட மாட்டாரா என்ற கனவு தான். பாமகவின் எதிர்காலம் என்பது சூனியமாகத் தான் போகப் போகிறது.

பாமகவின் புது கூட்டணி முயற்சி?

எது கூட்டணி? மதிமுக, தமிழர் தேசிய இயக்கம், இன்னும் கட்சியே துவங்காத ஜி.கே.வாசன், அதிமுகவில் இருந்து விலகினால் சேர்ப்பேன் எனச் சொல்லும் கண்ணப்பன், புதிய தமிழகம் ஆகியோருக்கு அழைப்பு விடுத்த ராமதாஸ்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஏன் அழைப்பு விடவில்லை? பாமகவின் புதுக் கூட்டணி பகல் கனவு தான்.

அன்புமணியை முதல்வராக்க வேண்டும் என்று பாமகவில் வலியுறுத்தப்படுகிறதே?

அன்புமணி முதல்வராக 100ல் 1 விழுக்காடு கூட தகுதியில்லை. குறைந்தபட்ச போராட்ட உணர்வு கூட இல்லாதவர். பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் வைத்திருந்தாலும், அன்புமணிக்கு பணக்கார சிந்தனை தான். தர்மபுரியில் அவர் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் திவ்யாவின் தந்தை நாகராஜனின் தற்கொலை தான். வன்னிய சாதிவெறியும், மதவெறியும் சேர்ந்து தான் தர்மபுரியில் அன்புமணியை வெற்றி பெறச் செய்துள்ளது. அவர் வெற்றி பெற்று என்ன பிரயோஜனம்? தர்மபுரியில் வரிசையாக குழந்தைகள் சாகின்றன. இந்தச் செய்தி கிடைத்தவுடன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் உடனடியாக அங்கு போக வேண்டாமா? இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சராக 5 ஆண்டுகள் இருந்த ஒரு மருத்துவர், பத்திரிகைகள் சாவுகளைச் சுட்டிக்காட்டிய பிறகே அறிக்கை விடுகிறார். தர்மபுரி குழந்தைகள் சாவுக்கு தமிழக அரசின் அலட்சியம் என அனைத்துக்கட்சிகளும் சுட்டிக்காட்டிய போது கூட, தமிழக அரசை தாஜா செய்வது போலவே அன்புமணி அறிக்கை தருகிறார். தமிழக முதல்வராக அல்ல, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக கூட அன்புமணிக்குத் தகுதியில்லை.

Pin It