மக்கள் சொல்கிறார்கள் என்று காதிற்பட்டது

இனவாதத்தின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் அது சிங்களவாதத்தினதும் பௌத்த தர்மத்தினதும் பெயரால் இலகுவாகக் கை கூடக் கூடியது. அதைப் பலமாக நம்பிய இரண்டு செம்மல்கள் இந்நாட்டில் இருக்கிறார்கள். தரப்படுத்தி நோக்குகையில் முதலிடத்தில் சம்பிக்க ரணவக்க இரண்டாமிடத்தில் விமல் வீரவன்ச. இந்த இரண்டு பேருக்கும் பெரிய சரித்திரம் ஏதும் கிடையாது. ஆனால் தரித்திரம்படிந்த நீண்ட இருண்ட பாதை இருக்கிறது சில கதைகளும் இருக்கின்றன.

rajapaksa and rauff-hakeemஇலங்கையில் ஒருவர் இரண்டு முறை மாத்திரமே ஜனாதிபதியாக முடியும் என்ற யாப்பின் விதியை ஜே.ஆர். ஜெயவர்தன வரைந்து சென்றுவிட்டமை இவர்களுக்கு ஜனாதிபதியாகும் ஆசையைத் தூண்டிவிட்டது. 2005ம் ஆண்டு பெரும் போராட்டத்தின் மத்தியில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானார். எக்காரணம் கொண்டும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகி விடக்கூடாது என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடிவாதம் வடக்கு கிழக்கில் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என்ற தடையுத்தரவைப் பிறப்பிக்கத் தூண்டியது. அது வடக்கில் பெருவெற்றியளித்தது.

அண்டன் பால சிங்கம் கூட ரனில் ஒரு நரி ஐயா நரி என்று ஜேர்மனியில் உரையாற்றும் அளவுக்கு அந்த வெறுப்பு வெளிப்படையாகத் தெரிந்தது. 2002ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டார நாயக்காவின் இறுக்கமான பிடிக்குள் இருந்து தம்மை ரட்சிக்க வந்த மீட்பராக ரணிலைக் கொண்ட விடுதலைப் புலிகள், இரண்டு வருடங்களுக்குள் வில்லனாகவே முடிவுகட்டிக் கொண்டதன் விளைவுதான் சின்னஞ் சிறிய வாக்கு வித்தியாசத்தில் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கியது. ரணிலின் ஆயுட்காலக் கனவில் மண்வாரி இரைத்தது. ரணில் இனி எப்போதைக்குமே ஜனாதிபதியாக முடியாது என்பதை நிதர்சனமாக்கியவர் மகிந்தராஜபக்ஷதான்.

2010 ஜனாதிபதித் தேர்தலில் ரணில் ஜனாதிபதி வேட்பாளராகக் கூட நிற்க முடியாதபடி புலிகள் விட்ட சாபம் தொடர்ந்தது. 2009ம் ஆண்டு எல்லா சவால்களையுத் தாண்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தமையானது அவரை அசைக்க முடியாத வீர புருஷராக்கியது. யுத்தவெற்றி சிங்களத்தின் வெற்றியாகவும் பௌத்தத்தின் வெற்றியாகவும் 'மே புதின்கே தேஷய' எனும் பதாதையை தேசமெங்கும் பாதையை மறித்து தூக்கிக் கட்டுமளவுக்கு ஒரு அலையை இலகுவாக விதைத்துவிட்டிருந்தது. இந்த அடிப்படையில்தான் 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகக் கனவு கானும் உத்வேகத்தை சம்பிக்க ரணவக்கவுக்குள்ளும் விமல் வீரவன்சவுக்குள்ளும் துளிர்க்க விட்டிருந்தது.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் ஒரு ஹீரோவையும் ஒரு வில்லனையும் ஒரு ஜோக்கரையும் இரண்டு துனை நடிகர்களையும் அடையாளப் படுத்திக் காட்டியிருந்தது. முறையே அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க, சரத்பொன்சேகா, சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவன்ச. வில்லனும், ஜோக்கரும் இனி ஹீரோவாகிட முடியாது என்பதை அதீத கற்பிதமாகக் கொண்டு துணை நடிகர்கள் இருவரும் ஹீரோவாகும் ஆசையைக் கூர்மைப்படுத்தத் தொடங்கினார்கள்.

யுத்தத்தை முடித்து வைத்தமைக்காக மக்கள் அளித்த பரிசு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு சற்று குறைவான பலத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குரித்தாக்கியதாகும். அதனால் அதிகம் திருப்திப்பட்டவர்கள் அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காமையால் இடதுசாரிகளைவிடவும் அதிகம் குஷி கொண்டவர்கள் அந்தத் துணை நடிகர்கள் இருவரும்தான். அதற்குக் காரணம் இருக்கிறது.

இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ 2016ம் ஆண்டோடு முன்னாள் ஜனாதிபதியாகிவிடுவார். அந்த இடைவெளியில் தான் ஜனாதிபதியாகலாம் என்று இருவருமே சமாந்திரமாகக் கனவு கண்ட வேளைதான் ரவுப் ஹகீம் அனைத்திலும் மண்அள்ளிப் போட்டார். ரவுப் ஹகீம் அதைச் செய்வதற்கு முன்னர் ரங்கா மற்றும் பிரபா கனேசன் ஆகிய இரண்டு தமிழர்கள் கனகச்சிதமாக மகிந்தவுக்கான ஆதரவுக் கதவுகளை அப்போதே திறந்து வசதி செய்துவிட்டிருந்தனர். ஹகீம் ஆதரவுக்கரம் நீட்டியிருக்காவிட்டாலும் கூட முஸ்லிம் காங்கிரசில் இருந்த சிலர் அதைச் செய்திருப்பார்கள்.

அரசுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை ஹகீம் எடுத்தவுடன் (அதுவும் திடீரென்றல்ல நீண்ட பல சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர்தான்) வில்லங்கம் புதுவடிவில் உருவானது. ஜே ஆரின் இரும்புப் பூட்டுக்கு புதுச்சாவி போட்டுத் திறந்தார் மஹிந்த. மூன்றாவது முறையாகவும் ஒருவர் ஜனாதிபதியாகலாம் என்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் சட்டமூலமாக்கினார்.

ஒருவர் முன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாகலாம் என்ற தீர்மானத்தை சாடைமாடையாகக் காற்றில் கசியவிட்டபோது அதைப் பலமாக எதிர்க்கும் ஒரு கூட்டணியை இரண்டு துணை நடிகர்களும் பக்குவமாகத் தனிப்பட்ட முறையில் உருவாக்கிப் பலப்படுத்திக் கொண்டிருந்தனர். அதன் பிரதான நோக்கமே எப்படியும் 2016ம் ஆண்டோடு மஹிந்த யுகம் இயல்பாகவே முடிவுக்கு வந்துவிடும் அதன் பின்னர் ஜனாதிபதி ஆசனத்தை தாம் அலங்கரிக்கலாம் அதனால் மஹிந்தவின் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாகும திட்டத்தை முறியுடிக்க பகீரதப் பிரயத்தனம் செய்தனர்.

ஹகீம் ரணிலுக்கு டாட்டா காட்டியவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுதியானது. அதன் பின்னர் இருவரும் எதிர்க்கும் திட்டத்தை அப்படியே குப்பைவாளியில் போட்டுவிட்டனர். அத்துடன் ஜனாதிபதிக்கு நல்ல பிள்ளையாகவும் நடிக்கத் தலைப்பட்டனர். அதன் படிமங்களையும் பகிரங்கக் காட்சிகளையும் முழுநாடும் கண்டுகளித்தது.

துணை நடிகர்கள் இருவரினதும் இந்த நகர்வுகள் குறித்த சில தரவுகள் ஜனாதிபதிக்குக் கிடைக்கப் பெற்றமையால்தான் இரண்டு துணைநடிகர்களுக்கும் கனதியான பொறுப்பை அளித்ததாகவும் மக்கள்தான் வீதிகளில் கதைத்துக் கொண்டார்கள். அத்துடன் ஜனாதிபதி இனவாதம் பேசவுமில்லை மதவாதம் பேசவுமில்லை. அவரின் ஒரே பேச்சு 'ஒரே நாடு ஒரே மக்கள்' . அதே வேளை மதவாதம் பேசும் பொறுப்பை கச்சிதமாகச் செய்தவர் செம்மல் சம்பிக்க ரணவக்க. இனவாதத்தை கனகச்சிதமாகக் பேசியவர் தியாகச் செம்மல் விமல்வீரவன்ச. இந்த இருவரினதும் மதவாத மற்றும் இனவாதப் பேச்சுக்களை ஜனாதிபதி கண்டு கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் வீதிகளில் வெளிப்பட்டது. ஆயினும் ஏன் ஜனாதிபதி இப்படிப்பட்ட இருவருக்கும் முக்கிய அமைச்சுக்கள் அளித்து கௌரவப்படுத்தினார்? என்பதுதான் பலருக்கும் புரியவில்லை. இப்போது கொஞ்சம் புரிந்திருக்கும்.

மூன்றாவது முறையும் மகிந்த ராஜபக்ஷதான் ஜனாதிபதி எனும் தீர்மானம் உறுதியானது. ஆயினும் சம்பிக்கவின் கனவு மட்டும் உள்ளார மெதுமெதுவாகப் பலம் பெறத் தொடங்கியது. அதற்கான ஒரே ஆயுதம் பௌத்த தீவிர மதவாதப் பாதை. அதை மேலும் மேலும் கூர்மைப்படுத்தி உசுப்பேற்றுவதன் மூலம்தான் இலகுவாக வெற்றியடைய முடியும் என்று சம்பிக்க நம்பினார். அவரின் ஆசையினை 2022லாவது நிறைவேற்றிக்கொள்ள வரையப் பெற்ற புது அத்தியாயம்தான்,! பொ து ப ல சே னா என்ற இரண்டாவது கிறீஸ் யக்கா

இடையில் அவருக்கு ஒரு சிறிய ஆசையும் இருந்தது அதுதான் சில வேளை 2016களில் தான் பலம் பெற்றிருந்தால் மஹிந்தவை எதிர்த்துக் களத்தில் குதிப்பது. அதற்கான பௌத்த மதவாத அலையை நாடளாவிய ரீதியில் கிளப்பிவிடும் பணியை பொதுபலசேனா எனும் பூதம் செய்தது. ஐயாயிரம் பிக்குகளை ஒன்று சேர்த்து ஒரு பெரும் மாநாடு நடாத்துவது என்ற தீர்மானம் எட்டப்பட்டது, அதற்கான வேலைகள் முடுக்கிவிடப்பட்ட போதுதான் பௌத்தத்தை அரசியலில் மூலதனமாக்கும் அந்த அத்தியாயத்தின் இயக்குநர் யார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்ட ஜனாதிபதி ஒரு அதிரடி முடிவெடுத்தார்.

பௌத்த மதவாத அலை ஏதோவோர் விதத்தில் தேசத்தில் ஓர் எழுச்சியை உண்டுபன்னும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பொது பல சேனா வீரியம் பெற்று எழத் தொடங்கியது. அந்த எழுச்சி என்ற எலிப் பொறிக்குள் வைக்கப்பட்ட தேங்காய்த் துண்டாக முஸ்லிம் சமுகம் இருந்தது. ஹலால் என்ற முதல் எலியைப் பிடித்துக் காட்டி பௌத்த மதவாதிகளையும் சிங்கள இனவாதிகளையும் கிளர்ச்சி கொள்ளச் செய்து முதல் அத்தியாயத்தை அட்டகாவமாக ஆரம்பித்தது பொதுபல சேனா. அரசு எதிர்பார்க்காத அந்த எழுச்சியைக் கட்டுப்படுத்த ராஜதந்திரம்தான் தேவைப்பட்டது. அதற்காகக் களத்தில் இறக்கப்பட்ட ஹீரோதான் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ.

பாதுகாப்புச் செயலாளர் மதி நுட்பத்துடன் செயல்பட்டார். அதன் விளைவுதான் பொதுபல சேனாவுக்கு உத்வேகமளிக்கும் நம்பத்தகு கருமவீரராக அவர் தென்பட்டார். சம்பிக்க பல்வேறுபட்ட லட்சியங்களுடன் உருவாக்கிய பௌத்த அலையை கோட்டா லாவகமாகச் சுருட்டித் தன் பைக்குள் வைத்துக் கொண்டார். பொதுபல சேனாவுக்குப் பரந்த வெளியைத் திறந்து கொடுத்தார். சுதந்திரச் செயற்பாட்டின் உச்ச ருசியை அவர்கள் ருசித்துப்பார்த்தனர். சம்பிக்கவை விட கோட்டா சூப்பர் என்ற திருப்திகரமான முடிவுக்கு வந்தார்கள் பொதுபல சேனா புத்திஜீவிகள். அதனால் சம்பிக்கவை ஒரேயடியாக ஓரங்கட்டி விட்டார்கள். அத்தோடு ஐயாயிரம் பிக்குகளை ஒன்றிணைத்து நடாத்தப்பட இருந்த மாநாடும் காலவரையறையின்றி பிற்போடப்பட்டது.

பிற சமுகங்களால் கோட்டா பல்வேறுபட்ட சந்தேகக் கனைகளால் துளைத்ததெடுக்கப்பட்டார். பொதுபலசேனாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று கொஞ்சம் சீரியசாக நடிக்கத் துவங்கிய கோட்டாவை புதிரோடும் கவலையோடும் சந்தேகத்தோடும் பரிதாபத்தோடும் ஐயத்தோடும் மக்கள் பார்த்தார்கள். ஆறுதலோடும் சிலர் பார்த்தார்கள் என்பதும் முக்கியமான விடயம்.

அனைத்தையும் சமாளிக்க அந்நியன் ரேன்ஜில் நடிக்க வேண்டிய பொறுப்பை கனகச்சிதமாகத் செய்யத் தொடங்கினார். பொதுபலசேனாவை சந்தேகத்தோடு பார்க்க வேண்டாம் என்று தேசத்து மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். காலியில் அதிதியாகக் கலந்து கொண்டு பொது பல சேனாவின் வாசஸ்தளத்தை திறந்து வைத்து ஒரு குழப்பத்தை உண்டுபண்ணிவிட்டார். அது மர்மங்களோடு நீடித்தது. அதைச் சமாளிக்க ஒரு மத நிகழ்வில் கலந்து கொள்ள விடுக்கப்பட்ட அழைப்பையேதான் ஏற்றுக் கொண்டதாக ஓடக அறிக்கை விட்டார். அதன் மூலம் பொதுபல சேனாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் தான் இல்லையென்பதை நிறுவ முயன்றார். முஸ்லிம் தரப்பை சமாதானப்படுத்த பல்வேறு நியாயப்படுத்தல்களையும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளையும் அவர் செய்து முடித்தார். அவர் கொடுத்த ஆறுதலின் சூட்டை அடுத்த நாளே ஒரு பள்ளிவாசல் மீதான கல்வீச்சு தகர்த்தது.

இது இப்படியிருக்கும் போது பொதுபலசேனா இன்னுமொரு அதிரடி அத்தியாயத்தை ஆரம்பித்தது, தமக்கு நெருங்கிய நம்பிக்கையாளர்களைக் கொண்டு மகாசேன இயக்கத்தை உருவாக்கியது, மகாசேன என்பது கிறீஸ் மனிதன் மாதிரி முகரியில்லாத ஒரு பேய், அது எப்போது எங்கே எப்படி வெளிப்படும் என்பதை அனுமானிக்க முடியாது. அதன் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை ஆரம்பித்தது, பர்மாவுக்கான விஜயத்தை ஞான சாரர் மேற்கொண்டு அசின் விராதுவைச் சந்தித்தார். அடுத்த இலக்குபற்றி விபரித்தார், இனவாதத்தையும் மத வாதத்தையும் எப்படி முழுவீச்சீல் பயன்படுத்துவது என்பது பற்றி அவருடைய அனுபவங்களைக் கேட்டறிந்து கொண்டார். அசின் விராதுவுக்கு இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டு பிக்குகள் மாநாட்டில் உரையாற்றுமாறும் அழைப்பு விடுத்தார். அசின் விராது அதை ஏற்றுக் கொண்டார். பௌத்த தீவிர வாதத்தின் இளவரசனாக அவரை தீவிர பௌத்த மதப் பற்றாளர்கள் கருதுவதை யாரும் மறுக்க முடியாது.

ஞான சாரர் இலங்கை மீண்டு 969 என்ற மியன்மாரின் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாக வைகுண்டமேறி விளக்கமளித்தார். ரோஹிங்யாவில் முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டதை அவர் சரி கண்டார். அந்த வெறித்தனத்தை நியாயப்படுத்தினார். அசின் விராது நமக்கும் ஹீரோ என்பதைக் கட்டமைக்கும் பணியில் தொடர்ந்தும் ஈடுபட்டார். அசின் விராது தேரரை உலகின் பயங்கரவாத முகமாக டைம்ஸ் சஞ்சிகை பகிரங்கமாகச் சித்தரித்து அட்டைப்படத்தில் அவரின் படத்தையும் பிரசுரித்தது. 2002களில் குஜராத் இனக்கலவரம் நடந்து முடிந்த கையோடு நரேந்திர மோடிக்கு பல நாடுகள் கதவடைத்தது போல பயங்கரவாத நடவடிக்கையின் உரைவிடம் என்ற அடிப்படையில் அசின் விராதுவுக்கும் பல நாடுகள் கதவடைத்துவிட்ட நிலையில் 2014 செப்தம்பர் 27 இலங்கை அவரை வரேவற்று அதியுயர் பாதுகாப்பளித்துக் கௌரவப்படுத்தியது.

அதே நேரம் பிற்போடப்பட்டிருந்த பொதுபல சேனாவின் ஐயாயிரம் பிக்குகளை ஒன்றினைத்து மாநாடு நடாத்தும் நோக்கம் மிகப் பிரமாண்டமாக வெற்றிகரமாக நிறைவேறியது. பலத்த பாதுகாப்புடன் கொழும்பு சுகததாச அரங்கில் அது நடைபெறும் போது ஜனாதிபதி நாட்டில் இருக்கவில்லை. அது நல்லதொரு ராஜதந்திரம், முக்கியமான நிகழ்வுகள் நாட்டில் இடம்பெறும்போது தலைவர் நாட்டில் இருப்பதில்லை அவை நடந்து முடிந்த பின்னர்தான் அவர் நாட்டுக்கு வருவார். 2009 மே யுத்தம் முடியும் தறுவாயிலும் அவர் நாட்டில் இல்லை அளுத்கம கலவரத்தின் போதும் அவர் நாட்டில் இல்லை விராது தேரர் வருகை தந்த போதும் அவர் இல்லை. எதிர்காலத்திலும் பல நிகழ்வுகளின் போது அவர் இருக்கமாட்டார்.

விராது தேரரின் வருகைக்குப் பின்னர் ஞானசாரர் அடக்கி வாசிக்கப் பழகிக் கொண்டார். அது ஒரு பெரும் பாய்சலுக்கான பதுங்கல், முழுவீச்சோடு மீண்டும் எழ எடுத்துக் கொள்ளும் அவகாசம், மொத்தத்தில் பாரிய திட்டமிடலுக்கும் தயார்படுத்தலுக்குமான ஓய்வு. அளுத்கம கலவரத்தன்று அபசரணாய் பேசிய அவர் ராஜபக்ஷேகளுக்கு மூளை இல்லை என்ற தொனியில் கருத்துரைத்தார் நாங்கள் நினைத்தால் நடப்பதே வேறு என்று எச்சரிக்கைவிடுத்தார். எவனாவது மடையன் நீதி அமைச்சை ஒரு முஸ்லிமிடம் கொடுப்பானா? என்று பகிரங்கமாகக் கேள்வி எழுப்பினார். தாங்கள் ராஜபக்ஷேக்களுக்கும் அஞ்சுபவர்களல்ல என்ற விடயத்தை மக்களுக்குள் விதைக்க முயன்றார். அவரது நாக்கு கொஞ்ச நேரம் கடிவாளத்தை இழந்துவிட்டது. அது தாறுமாறாக அங்குமிங்கும் அகப்பட்டதையெல்லாம் இடித்துக்கொண்டு ஓடி ஒரு இடத்தில் மூச்சு வாங்கும் போது கணக்குப் பிழைத்துப் போய் இருந்தது. இப்போது மஹிந்தவைவிடச் சிறந்த ஜனாதிபதி வேறு யாருமில்லை என்று அந்தர் பல்டி அடிக்குமளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.

எல்லாம் இப்படியிருக்க குய்மோ முய்யோ என்று கூப்பாடு போட்ட முல்லாக்கள் எல்லோரும் வாய் பொத்தி மௌனிகளானதோடு விராதுவின் வருகை கூட எவ்விதக் கண்டனக் குரல்களுமின்றி பெருவெற்றியளித்த நிகழ்வாக மாறிப் போனது அதன் உள்ளார்ந்து புதைந்திருக்கும் அச்சம் பௌத்த பயங்கரவாதச் சிந்தனைக்கு முதலீடாகி விடக்கூடாது என்பது மக்களின் பிரார்த்தனை. மொத்தத்தில் விராது இங்கு வரப் போகின்றார் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை, பக்கா பிளேன் சர்ப்பிரைஸ் அது குறித்த பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் வாய்திறக்கவில்லை.

இது இப்படியே இருக்கும் போது 7வது ஜனாதிபதித் தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டது. சுதந்திரக்கட்சியின் ஒரு பெருந்தூண் சரிந்து எதிரணியில் விழுந்தது. அதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இனி இந்த நாடகத்தில் நடிக்க முடியாது என்று ஏற்கனவே ஒதுங்கிவிட்ட மற்றுமொரு இனவாதக்கட்சியான ஜாதிக ஹெல உறுமய புதிய அத்தியாயத்தைத் துவக்கியுள்ளது. மதில் மேல் பூனையாக இன்னும் பலரும் உட்கார்ந்து கொண்டிருக்கையில் கிறீஸ் யக்கா வாயடைத்துப் போய் அமைதி காக்கிறது. அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டு விட்டோமோ என்ற சிந்தனையில் மூழ்கியிருப்பதாக சம்புத்தத்வ ஜயந்தி மாவத்தைப் பக்கமிருந்து கிடைக்கும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

மஹிந்தவா? மைத்திரியா? என்ற கேள்விக்கு 2015 ஜனவரி 09 காலையில் பதில் கிடைக்கும். அதுவரைக்கும் இரண்டாவது கிறீஸ் பேய் மரத்திலேயே இருக்குமா அல்லது திடீரென்று பாயுமா?

இனியுள்ள காலங்களில் சில விடயங்களைக் மக்கள் புரிந்து கொள்வார்கள்.

இனியும் வீதியில் மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை இலங்கையின் அனைத்துப் புலனாய்வுப் பிரிவினர்களும்தான் அவதானிக்க வேண்டும்.

மக்கள் வீதியில் கதைப்பது எனது காதிற் பட்டால் நிச்சயம் அடுத்த கட்டுரை எழுதலாம்.