அம்மாவை இழந்த தமிழக மக்கள் இரண்டு நாட்களாக உண்ணாமல், உறங்காமல், பல் விள‌க்காமல், ஏன் காலைக்கடனைக்கூட கழிக்காமல் தேற்றுவார் யாருமின்றி கண்ணீர் விட்டு கதறிக் கதறி அழுவது நம்மை மீளாத் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. அம்மாவை இழந்து (தற்காலிகமாக) வாடும் அவரது குடும்பத்திற்கும் (மன்னிக்கவும் அவருக்கு குடும்பம் இல்லை என்பதை நாம் மறந்து விட்டோம்) அவரது தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

jayalalitha and OPS

கடையடைப்பு , பேருந்து எரிப்பு , கருணாநிதி மற்றும் அன்பழகனின் கொடும்பாவி எரிப்பு என அதிமுகவின் குண்டர்படை செய்துவரும் சமூக சேவைகள் நம்மை யோசிக்க வைக்கின்றது. தன்னைப் பெற்ற அம்மா எவ்வளவு கீழ்த்தரமனவளாக இருந்தாலும் அவளை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மகனைப்போல அதிமுகவினர் ‘அம்மாவை’ ஏற்றுக் கொண்டுள்ளனர். அம்மா சட்டசபையில் குசு விட்டால் கூட அதை மேசை தட்டி வரவேற்கும் நம் அமைச்சர் பெருமக்களுக்கும் அவர்களது தொண்டர் படைகளுக்குமான வித்தியாசம் பெரிதாக ஒன்றுமில்லை.

ஜெயா குற்றவாளி என தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் அமைச்சர்கள் கண்ணீர் விட்டு அழுததாகக் கேள்விப்பட்டோம். அந்த கண்ணீருக்குப் பின்னால் இருக்கும் மகிழ்ச்சி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தன்னை பல ஆண்டுகள் அடிமையாக வைத்திருந்த தன்னுடைய எசமானனின் மரணத்தைப் பார்த்து வரும் மகிழ்ச்சி கண்ணீர் அது.

ஜெயாவுக்கு நான்காண்டுகள் சிறை, 100கோடி ரூபாய் அபராதம், மற்ற கூட்டுக்களவாணிகளான சசிகலா,சுதாகரன், இளவரசி போன்றோருக்கு நான்காண்டுகள் சிறை, 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும் மறுபுறம் இந்திய நீதி மன்றங்களின் இயலாமையை நினைத்து வெட்கப்பட வைக்கின்றது.

தன்மீது போடப்பட்ட ஒரு குற்ற வழக்கை தன்னுடைய சாதிய பலத்தாலும் பண பலத்தாலும் அதிகார பலத்தாலும் பதினெட்டு ஆண்டுகள் இழுத்தடிக்க முடியுமென்றால் இந்த ஜனநாயகத்தைப் போலி ஜனநாயகம் என்று சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

இந்த பதினெட்டு ஆண்டுகளில் ஜெயா அடித்த கொட்டங்கள் ஒன்றா, இரண்டா? மதமாற்ற தடைச்சட்டம், கிடா வெட்டு தடைச்சட்டம், சாலைப்பணியாளர்கள் கூண்டோடு நீக்கம், மக்கள் நலப்பணியாளர்கள் கூண்டோடு நீக்கம், சமச்சீர் கல்வியை ஒழித்துக்கட்ட சதி என இந்தப் பட்டியல் மீக நீளமானது.

தமிழ்நாட்டு மக்களை குடிக்கவைத்து குடிக்கவைத்து குடி நோயாளி ஆக்கி பல ஏழைப்பெண்களின் தாலி அறுத்தவருக்குப் பெயர் அம்மாவாம்? என்ன வகையான முரண்பாடு இது! நாட்டை பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகளுக்கு கூட்டிக் கொடுப்பவனுக்குப் பெயர் லெனின் என்று இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கின்றது.

இந்தத் தீர்ப்பானது அதிமுக குண்டர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் வெகுஜன மக்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை என்பதை நாம் கண்கூடாகவே பார்க்கிறோம். இதற்குக் காரணம் கடந்த பல தேர்தல்களில் மக்களுக்கு ஓட்டுக்குப் பணம் கொடுத்து ஊழல்மயப் படுத்தப்பட்டிருப்பதே ஆகும்.

ஒரு வேளை நபர் ஒன்றுக்கு 500, 1000 என்று கொடுக்கப்பட்டிருந்தால் இந்நேரம் தமிழ் நாடே தெருவுக்கு வந்து அம்மா அம்மா என்று அரற்றியிருக்கும். அம்மாவின் கைது என்பது ஒரு சங்கர் பட ரிலீசைப்போல பரபரப்பை ஏற்படுத்தி பின்பு ஒன்றுமில்லாமல் டம்மியாகப் போய்விட்டது.

ஜெயாவை ஜாமீனில் எடுப்பதற்காக அவரது வழக்கறிஞர் பி.குமார் தலைமையில் 30க்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற, உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் பட்டாளம் பாடுபட்டுக் கொண்டுக்கின்றது. போதாகுறைக்கு ராம்ஜெத்மலானி வேறு அம்மாவுக்கு ஏற்பட்ட துயரத்தை நினைத்து நினைத்து கொதித்துப் போயிருக்கின்றார். இது போன்ற நீதி நெறிதவறாத வழக்கறிஞர்கள் இருக்கும் வரை அம்மாவை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது.

ஜெயா தமிழ்நாட்டையும், தமிழ்மொழியையும் எவ்வளவுதான் இழிவு செய்தாலும், தமிழ்நாட்டை பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக்காடாக மாற்றினாலும், பேருந்துக்கட்டணம், மின்சாரக்கட்டணம், பால் விலைகளை உயர்த்தி வாழ்வாதாரத்தை சூறையடினாலும், தொழில்வளர்ச்சியில் தமிழ்நாட்டை இந்தியாவின் கடைசி மாநிலமாக மாற்றி லட்சக்கணக்கான இளைஞர்களை வேலைவாய்ப்பற்று நடுத்தெருவில் நிறுத்தினாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் எப்போதும் அம்மாதான். ஏனெனில் அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி.

Pin It