“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது. அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்திக் குற்றங்கள் புரிந்தால் அவர்களை அறம் தண்டிக்கும் என்பது இதன் பொருளாகும்.

jayalalithaஎத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எவ்வளவு சமூகச் சீரழிவுகள் மிகுந்தாலும் அறத்தின் வலிமை வெல்லும் என்பதற்கு அடையாளமாகத் தமிழக முதல்வர் செயலலிதா மீதான ஊழல் வழக்கில் அவருக்குத் தண்டனை கிடைத்துள்ளது.

தமிழக அரசியலில் இருபெரும் ஊழல் சிகரங்களாகக் கலைஞர் கருணாநிதியும் செல்வி செயலலிதாவும் விளங்குகிறார்கள். முன்னவரின் குடும்பத்தினர் மீது தில்லியில் பெரிய ஊழல் வழக்கொன்று நடந்து கொண்டுள்ளது. பின்னவரும் அவரது குடும்பம் அல்லாத குடும்ப உறுப்பினர்களான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் பெங்களூர்ச் சிறையில் உள்ளார்கள்.

1991 – 96 ஆண்டுகளில் செயலலிதா முதல்வராக இருந்தபோது, அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சதியாலோசனை நடத்தி, தங்களின் வருமானத்திற்குப் பொருத்தமில்லாத வகையில் 66.64 கோடி ரூபாய்க்கு சொத்துகள் வாங்கினார்கள் என்பதுதான் அவர்கள் மீதான வழக்கு.

இவ்வழக்கை அதன் சட்டவழிப் போக்கில் நடத்தவிடாமல் தடுப்பதற்கு சட்டத்தைக் குறுக்கு வழியில் பயன்படுத்தி முட்டுக் கட்டைகளைப் போட்டுக்கொண்டே வந்தார் செயலலிதா. பாமரன் பக்கிரிசாமி அவ்வாறு குறுக்கு வழிகளில் ஈடுபட்டிருந்தால் நீதித்துறை – தொடக்கத்திலேயே அம்முயற்சிகளைக் கிள்ளி எறிந்து எப்போதோ தீர்ப்பு வழங்கியிருக்கும். ஆனால் அதிகாரவலு, ஆள்வலுமிக்கத் தலைவர் என்பதால் செயலலிதாவின் எல்லா முட்டுக் கட்டைகளுக்கும், நீதியின் பயணம் நிறுத்தப்பட்டு, நிறுத்தப்பட்டு, பதினெட்டு ஆண்டுகள் இவ்வழக்கு நடத்தப்பட்டது. இறுதியில் அறம் வென்றது.

செயலலிதாவுக்கு நான்காண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், நூறுகோடி ரூபாய் தண்டத் தொகையும், மற்ற மூவர்க்கும் தலா நான்காண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா பத்துக் கோடி ரூபாய் தண்டத் தொகையும் விதித்து 27.09.2014 மாலை பெங்களூர் பரப்பன அக்ரகார சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா தீர்ப்பளித்தார். ஊழல் வழக்கில் நான்காண்டுகள் தண்டனை பெற்றுள்ளதால், இனிப் பத்தாண்டுகளுக்கு செயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது.

வளைக்கப்பட முடியாத நீதிபதி என்று ஏற்கெனவே பெயர் பெற்றுள்ள நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா பாராட்டிற்குரியவர்.

தீர்ப்பு நாளில் தீர்ப்பிற்கு முன்னும் பின்னும் அ.இ.அ.தி.மு.க.வினர் நடந்து கொண்டமுறை பொறுப்பற்றது; அருவருக்கத்தக்கது.

அ.இ.அ.தி.மு.க.வானது ஆட்சிக்குப் புதிய கட்சியன்று. எம்.ஜி.ஆர். காலத்தில் மூன்று முறை தமிழக ஆட்சியில் இருந்தது. இப்போது செயலலிதா காலத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியில் உள்ளது. எனவே அக்கட்சி இந்த நெருக்கடியில் முதிர்ச்சியோடு செயல்பட்டிருக்க வேண்டும். அனைத்து அமைச்சர்களும், கட்சியின் அனைத்துப் பொறுப்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு கட்சிக்காரர்களை அழைத்துக் கொண்டு பெங்களூர் நீதிமன்றத்தை நோக்கிச் சென்றுவிட்டனர். அங்கு நீதிமன்றத்திற்குள் நுழைவதற்காகக் கர்நாடகக் காவல்துறையினரோடு தள்ளுமுள்ளில் ஈடுபட்டுத் தடியடியை வரவழைத்துக் கொண்டனர்.

ஓசூரில் கர்நாடக எல்லையில் கும்பல் கூட்டி நெருக்கடியை உண்டாக்கினர்.

தீர்ப்பிற்குப் பிறகு, அ.இ.அ.தி.மு.க.வினர் வன்முறைக் கும்பலாக மாறித் தமிழகமெங்கும் வணிக நிறுவனங்களைத் தாக்கினர். அரசுப் பேருந்துகளைத் தாக்கினர்; எரித்தனர். இந்த வன்முறைகளைக் காவல்துறையினர் வேடிக்கை பார்த்தனர். சில இடங்களில் காவல் துறையினரே கடைகளை மூடச் சொன்னார்கள்.

27.09.2014 மாலையிலிருந்து இரவு 8.00 மணிவரை தமிழ்நாட்டில் அரசு நிர்வாகம் என்பது இல்லாமல் போனது. ஆளுநர், தலைமைச் செயலாளர், தலைமைக் காவல் இயக்குநர், உள்துறைச் செயலாளர் ஆகிய நால்வரும் எங்கே போனார்கள்? என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

திலீபன் நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் தனியார் இடத்தில் அமைதியாக உண்ணாநிலை மேற்கொண்ட இருபது பேரைக் கைது செய்வதற்கு 26.09.2014 அன்று நூற்றுக்கணக்கான காவல்துறையினரை ஏவி கோயம்பேடு பகுதியைப் பதற்றப் பகுதியாக மாற்றியவர்கள் இதே காவல்துறையினர்தாம்! ஆனால் தமிழகமெங்கும் ஆளுங்கட்சியினர் வன்முறைக் கும்பலாய் மாறி அட்டூழியங்கள் புரிந்தபோது, இதே காவல்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்த்தனர்.

அ.இ.அ.தி.மு.க.வினரின் வன்முறை வெறியாட்டம் கண்டனத்திற்குரியது. அதற்கு மறைமுக ஒப்புதல் அளித்த அதிகாரிகளும் கண்டனத்திற்குரியவர்கள்.

முதல்வர் செயலலிதா அரசியல் முதிர்ச்சியோடு நடந்து கொள்ளாததே இவற்றிற்கெல்லாம் மூல காரணம். தீர்ப்பு நாளில் நீதிமன்றம் செல்லும் முன், செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் எதையும் செயலலிதா செய்ததாகத் தெரியவில்லை. நாட்டு நிர்வாகத்தை மக்கள் அவரிடம் ஒப்படைத்துள்ளார்கள். தீர்ப்பில் விடுதலை ஆகலாம் அல்லது தண்டிக்கப்படலாம். இரண்டையும் எதிர்பார்ப்பது இயல்பு. ஒருவேளை சிறைக்கு அனுப்பப்பட்டால், தமிழக நிர்வாகத்தைக் கவனிக்க ஓர் அமைச்சரிடம் பொறுப்பை ஒப்படைத்து, அவருக்கும், அதிகாரிகளுக்கும் நல்ல அறிவுரைகளை வழங்கி, சட்டம் ஒழுங்கைக் கவனித்துக் கொள்ள வழிகாட்டியிருக்க வேண்டும். ஆளுங்கட்சியானது இச்சிக்கலில் எதிர்கட்சி போல் போராட்டம் எதிலும் ஈடுபடக் கூடாது என்றும், நீதித்துறையின் வழியே மேல்முறையீடு செய்து நிவாரணம் பெறுவோம் என்றும், அமைதிகாக்க வேண்டும் என்றும் அவர் அறிவுரை வழங்கியிருந்தால் மக்கள் அவரைப் பாராட்டியிருப்பார்கள். அவர் மீது அனுதாபம் ஏற்பட்டிருக்கும்.

ஆனால், அவ்வாறு பக்குவமாக நடந்து கொள்ளாமல், வேண்டியதைப் பெறுவதற்காக மிகை விசுவாசம் காட்டும் உதிரிக்கும்பலின் உற்சாகத்தைக் கிளப்பிவிட்டதுபோல் முதல்வர் செயலலிதாவின் அணுகுமுறை உள்ளது.

தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான அ.இ.அ.தி.மு.க.விற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே தி.மு.க. ஈழச்சிக்கலில் இனத்துரோகம் செய்ததாலும், குடும்ப அதிகாரப் போட்டியாலும் வீழ்ந்து கிடக்கிறது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு பா.ச.க. வளர்ந்து விடலாம் என்று கனவு காண்கிறது.

மோடி குசராத் முதல்வராக இருந்தபோது 2002 இல் பா.ச.க.வினர் அப்பாவி முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் கொன்று நரவேட்டையாடிய கொடூரம் உலகம் அறிந்த ஒன்று. அக்கட்சியினர் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் நடத்திய ஊழல்கள் நாடறியும். பா.ச.க.வின் ஆரிய ஆதிக்கத் தத்துவமான இந்துத்துவா, அதன் வர்ணசாதி ஆதரவு ஆகியவை நரேந்திர மோடி தலைமை அமைச்சரான பிறகு தீவிரப்பட்டுள்ளதையும் நாடறியும். தமிழ்நாட்டு அரசியலில் மாற்று ஆற்றலாக வளர பா.ச.க.விற்கு எந்தத் தகுதியும் இல்லை.

பொதுவாகத் தமிழின உளவியல், வடநாட்டுத் தலைமைக் கட்சிகளை ஏற்பதில்லை. அதனால்தான் இங்கு அனைத்திந்தியக் கட்சிகள் மாற்று அரசியல் ஆற்றல்களாக வளர முடியவில்லை. எனவே பா.ச.க.விற்குத் தமிழ்நாட்டில் புதிய வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை.

தி.மு.க. வீழ்ந்து விட்டது; அ.இ.அ.தி.மு.க.விற்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழின உணர்வுள்ள அரசியல் கட்சிகள் தற்சார்புள்ள, அறவொழுக்கம் உள்ள, இலட்சிய நோக்கமுள்ள மாற்று அரசியலை வளர்க்க முன்வர வேண்டும். தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க.வுடன் மாற்றி மாற்றி கூட்டணி சேரும் சந்தர்ப்பவாதத்தைக் கைவிட வேண்டும். பா.ச.க., காங்கிரசு, சி.பி.எம். போன்ற வடநாட்டுச் சார்பு, ஆரியச் சார்புக் கட்சிகளோடு கூட்டணி சேரும் இனத் துரோக அரசியலையும் கைவிட வேண்டும்.

தமிழ்த் தேசிய இயக்கங்கள் தற்சார்புள்ள மாற்று மக்கள் இயக்கமாக வளரத் திட்டங்கள் வகுத்துச் செயல்பட வேண்டும்.

- பெ.மணியரசன், தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

Pin It