ஒரு மனிதன் வேலை செய்தாக வேண்டும் என்பது எவ்வளவு கட்டாயமோ, அதே போல் ஓய்வு எடுதக்துக் கொள்ள வேண்டும் என்பதும் முக்கியமாகும். ஓய்வே இல்லாமல் வேலை செய்தால், செயல் திறன் குறைந்து, மொத்த வேலையின் அளவு குறைந்து போகும் என்பது உளவியல் அறிஞர்கள் ஆராய்ந்து கண்ட முடிவாகும். ஆகவே ஒரு நாளைக்கு எட்டு / ஆறு மணி நேரமும், வாரத்திற்கு ஐந்து / ஆறு நாட்களும் வேலை நேரம் என்று விதி ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், இவ் அறிவியல் முடிவுகளைக் கணக்கில் கொள்ளாமல் இந்திய அரசின் சுகாதார அமைச்சர் திரு.ஹர்ஷ் வர்தன் "விடுமறை நாட்களில் மருத்துவர்கள் கிராமப் புறங்களிலும், தொலை தூரப் பகுதிகளிலும் வேலை பார்க்க வேண்டும்" என்று கூறி இருக்கிறார்.

govt hospitalபுது தில்லியில் 31.8.2014 அன்று இதய நோய் மற்றும் மயக்க நிலை (Cardiac and Anaesthesiology) மருத்துவர்களின் 5ஆம் ஆண்டு கருத்தரங்கு நடந்தது. அதில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் இவ்வாறு கூறி உள்ளார். விடுமுறை நாட்களில் மருத்துவர்கள் வேலை செய்வதன் மூலம் நாட்டில் மருத்துவர்களின் பற்றாக்குறைப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்றும் அவர் கூறினார். இதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் அம்மருத்துவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் விருந்தினர் மாளிகைகளில் இடம் அளித்து உபசரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மருத்துவர்களின் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும் என்றால், அவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஒன்றே சரியான வழியாகும். அதற்கு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையையும், மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். அதைச் செயல்படுத்தத் தேவைப்படும் இடைக்காலத்தை அவசரநிலைக் காலமாகக் கருதி, இப்போது உள்ள மருத்துவர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டால் அதற்குப் பொருள் உண்டு. ஆனால் அதற்கான திட்டம் எதுவும் இல்லாமல், மருத்துவர்கள் விடுமுறைக் காலங்களில் வேலை செய்யக் கோருவது அவர்களுடைய ஒட்டு மொத்த செயல் திறனைக் குறைப்பதற்கான வழியே ஆகும். அது மட்டும் அல்ல; அவர்களுடைய உடல் நலனைக் கெடுப்பதற்கான யோசனையும் ஆகும். ஆகவே இவ் யோசனை மிகவும் விபரீதமானது ஆகும்.

அப்படிப்பட்ட விபரீதமான யோசனை ஏன் தேன்றுகிறது? மருத்துவர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்பதும், அதனால் சிகிச்சை முறையில் குறைபாடு உள்ளது என்பதும் கண் கூடான உண்மை. இதனால் மக்கள் மன நிறைவு இன்றி உள்ளார்கள் என்பதும் கண் கூடான உண்மை. இதைக் கவனிக்காமல் இருந்தால் அரசின் மீது வெறுப்பு வளரலாம். ஆகவே ஆளுங்கட்சியினர் இதைத் தவிர்க்க முயல்வது இயல்பே.

ஆனால் பிரச்சினையை உண்மையாகத் தீர்க்க முயன்றால், மருத்துவக் கல்லூரிகளின் / மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு நிறைய மூலதனம் வேண்டும். ஆனால் இத்துறையில் மூலதனத்தை இலபகரமாக ஈடுபடுத்தும் சூழ்நிலை இப்போது இல்லை. ஆகவே அதை ஒரு முதலாளித்துவ அரசு செய்ய முடியாது.

ஆனால் உண்மையான வேலை எதுவும் செய்யாமல் சொல்லடுக்குகளை வீசினால், அவற்றைக் கேட்டு மயங்கிக் கிடக்க நம் மக்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள். பிறகென்ன? சொல்லடுக்குகளை அள்ளி வீசிக் கொண்டே இருக்க வேண்டியது தானே?

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 14.9.2014 இதழில் வெளி வந்துள்ளது)

Pin It