எட்டு சென்னை மாநகராட்சிப் பள்ளிகளை தனியார் மயத்தினை நோக்கி மாநகராட்சி தள்ளி இருக்கிறது.

கங்காபுரம் அரசு நடுநிலைப்பள்ளி (வள்ளுவர் கோட்டம்), சிவராஜபுரம், சேத்பட்டு, சாந்தோம், திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, ஆகிய இடங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள் இவ்வாறு கொண்டுவரப்படுகின்றன. கடந்த வருடத்தினை விட இவ்வாண்டு அதிக எண்ணிக்கையில் 284 அரசு பள்ளிகளில் மாணவர் சேர்ந்தாலும், சில பள்ளிகளில் குறைவாகவே சேர்ந்தார்கள் என்பதற்காக இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது.

govt school 360தனியார்-அரசு செயல்திட்டத்திற்கு மாற்றப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கிறது. இந்த தனியார்-அரசு கூட்டுத்திட்டம் தனியார் மயத்திற்காக கொண்டுவரப்பட்ட செயல்திட்ட முறை.

அரசு நிறுவனங்களை நேரடியாக தனியாருக்கு கொண்டு செல்லமுடியாமல் இருக்கும் கட்டங்களில், படிப்படியாக நிர்வாக வசதி, நிர்வாக சீர்திருத்தம் ஆகியவற்றின் பெயரால் தனியாரும்-அரசும் இணைந்து நடத்துவதாக அறிவிப்பார்கள். பின்னர் அரசு இதில் இருந்து விலகி தனியாருக்கு முழுமையாக வழிவிடும். இதன் பின்னர் இது லாபநோக்கத்தில் மட்டுமே நடத்தப்படும்

இப்படியாக மின் உற்பத்தியும் தனியார்-அரசு கூட்டு நிர்வாகத்திற்கு கொண்டுவந்த பின்னர், 15 ஆண்டுகள் கழித்து இன்று மின் விலை உயர்வு, மின்சாரத் துறை நட்டம், மின் பற்றாக்குறை, அதிக விலை கொடுத்து மின்சாரத்தினை தனியாரிடம் இருந்து வாங்குதல் போன்றவை நிகழ்ந்து இன்னும் 5-10 வருடங்களில் அடித்தட்டு, நடுத்தர வர்க்க மக்களுக்கு மின்சாரம் கிட்டாப் பொருளாக மாறும்.

இதைப் போலவே கல்வித்துறையும் தனியாருக்கு கொடுக்கப்பட்டது. அரசு பள்ளிகளுக்கு கிடைத்திருக்கும் இடவசதி, நகர்புற மையம், மைதானம் ஆகியவை 95% மேலான தனியார் பள்ளிகளுக்கு கிடைக்கவில்லை. கல்வி லாபகரமான தொழிலாக மாறியபின்னர், தனியார் நிறுவனங்களுக்கு நிலத்தினை கையக‌ப்படுத்துவது சாத்தியமாகிவிடவில்லை. ஒரு ஏக்கர் நிலம் மத்திய சென்னையில் வேண்டுமென்றால் பல கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதன் காரணமாக அரசு பள்ளிகள் தனியாரின் நிர்வாகத்திற்கு கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் அதைப் பயன்படுத்தி பெரும் லாபத்தினைப் பெற முடியும். சில காலம் கழித்து அந்த நிலம் முழுமையாக கையகப்படுத்தப்படும் அல்லது குறைந்த விலைக்கு கொடுக்கப்படும். அதன் பின்னர் அதிக கட்டணம் கொடுத்தே சராசரி நடுத்தர மக்கள் அந்தப் பள்ளிகளை பயன்படுத்த இயலும். இதன் காரணமாக ஏழை மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாக மாறும்.

உலக வங்கியின் இத்திட்டம் இப்பொழுது தமிழகத்தில் துவங்க ஆரம்பித்திருக்கிறது.

அரசுப் பள்ளிகளை ஆங்கில வழிக்கல்வியாக மாற்றுவதை எதிர்க்க வேண்டுமென்பதற்கு மிக முக்கிய காரணம், அப்பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கவே. தமிழ்வழி பள்ளிக்கூடம் அழிக்கப்படுவதற்கு பின்னுள்ள அரசியலில் தனியார்மயமும் ஒரு காரணம் என்பதே நமது கவலை.

ஏன் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் ஆங்கிலம் படிக்கக் கூடாதா என்று சில தோழர்கள் கேட்டிருந்தார்கள். கல்வியே கிட்டாத நிலை ஏற்படும் பொழுது ஆங்கிலம் என்ன, தமிழ் என்ன?.. எல்லா உரிமையும் பறிக்கப்படுகிறது. மொழிவழிக்கல்வி எவ்வளவு முக்கியமோ அதே அளவு அனைவருக்குமான இலவசக் கல்வி முக்கியம்; இதனோடு சேர்த்து அறிவுப் பூர்வமான கல்வித் திட்டம்.

சென்னை மாநகராட்சியைப் போல மும்பை மாநகராட்சியும் ஆங்கிலவழிக் கல்வியை கொண்டு வந்தது. பின்னர் இவற்றினை தனியாருக்கு தாரைவார்த்துள்ளது.

தற்பொழுது சென்னை மாநகராட்சி இம்முயற்சியைத் துவக்கி உள்ளது. நீங்கள் எந்த இயக்கமாக இருந்தாலும் இந்த தனியார் மயத்தினை எதிர்க்க ஒன்றுபட‌ வேண்டும். மாநகராட்சியின் செயலை தடுத்து நிறுத்த வேண்டும்.

தனியார்மயத்திற்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகள் சென்னை நகரின் மையத்தில் நிலம் வாங்க இயலாத தன்மை கொண்ட பகுதியில் அமைந்திருக்கிறது. அரசினால் வெற்றிகரமாக நடத்த இயலவில்லை எனில் மக்கள் இயக்கங்களாகிய நாம் இந்த பொறுப்பினை மேற்கொள்ள முன்வருவோம்.

நமக்குள் இருக்கும் முரண்களை ஒதுக்கி வைத்துவிட்டு இந்த தனியார்மய வெறியை தடுக்க முன்வாருங்கள் தோழர்களே.. இது அவசியத் தேவை, அவசரத் தேவை.

- திருமுருகன் காந்தி, மே பதினேழு இயக்கம்

Pin It