ஆகஸ்ட் 15 - இந்த நாள் பிரித்தானியர்களை இந்த மண்ணை விட்டு விரட்டியடிக்கப் போராடிய மாமனிதர்களை நினைவுபடுத்தும் நாள். மக்களின் சுதந்திர வாழ்வுக்காக அறவழியிலும் ஆயுதவழியிலும் போராடித் தம்மை இம்மண்ணுக்குக் கொடையாக்கியவர்களை நெஞ்சில் ஏந்தும் நாள். கொடி ஏற்றுவதும் மிட்டாய் கொடுப்பதும் ஜனகணமன பாடுவதும் மட்டுமே இந்த நாளின் கடமையாகக் கருதுகிறோம். ஆனால், என்ன நோக்கத்திற்காக முன்னோர் போராடினரோ, அந்த நோக்கம் இன்று நிறைவேறியுள்ளதா என்பதைக் காணும் கடமை நமக்குள்ளது.

poormanஅனைவருக்கும் கட்டணமில்லாக் கல்வி, மருத்துவம் எனபது இன்றும் கனவாகவே தொடர்கிறது. அனைவருக்கும் படிப்பிற்கேற்ற வேலை என்பதும் இன்றுவரை நனவாகவில்லை. மக்களை வதைக்கும் ஊழலும் இலஞ்சமும் சமூகத்தில் வாடிக்கையாகி விட்டன. ஆறுகளால் மேனி செழித்திருந்த தமிழ்நாடு இன்று பாலைவனமாகி, அதிலும் மணற்கொள்ளை நடக்கிறது. நம் மண்ணும் நீரும் காற்றும் ஏன் தாய்ப்பாலும் கூட நஞ்சாகிவிட்டன. அரசியல் விடுதலை சமூக விடுதலை இன்றி முழுமை பெறுவதில்லை. இன்றும் சாதியும் தீண்டாமையும் இம்மண்ணில் வன்மத்தோடு தொடரவே செய்கின்றன. நம் தமிழ்மொழி இழிநிலைக்குத் தள்ளப்பட்டு அயல்மொழிகளே நம்மை ஆள்கின்றன. நள்ளிரவில் ஒரு பெண் சுதந்திரமாய் வெளியே நடமாடும் நாளைத்தான் சுதந்திர நாளாக ஏற்பேன் என்றார் காந்தியார். பிஞ்சுப் பெண் குழந்தைகளைக் கூட பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்குவது அன்றாடச் செய்தியாகிவிட்டது. இந்நிலைக்கு எதிராய் எதையும் செய்யாத நமது கையறு நிலையை மறக்கவும், மறைக்கவுமே விடுதலைக் கொண்டாட்டமும் கூத்துமா? என்பதை நாம் எச்சரிக்கையோடு எண்ணிப் பார்க்க வேண்டும்.

பிரித்தானியர்கள் போய் இந்தியர்கள் ஆள்கிறார்கள் எனபது உண்மை. இந்தியர்களால் ஆளப்படும் இன்றைய நம் தமிழ்நாட்டின் நிலை என்ன?

வல்லமை பொருந்திய நமது தமிழ்மொழி வட்டார மொழியென சிறுமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சியில், கல்வியில், வழிபாட்டில், நீதிமன்றத்தில் எங்கும் தமிழ் இல்லை. இந்திதான் ஆட்சி மொழி, ஆங்கிலம் துணை ஆட்சி மொழி என்று சொல்கிற இந்திய அரசமைப்பின் 17 ஆம் பகுதியை எதிர்த்துத்தான் 1965 ஆம் ஆண்டு மொழிப் போராட்டம் நடந்தது. தாய்மொழிக்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் தம் இன்னுயிர் ஈந்தனர். இன்றுவரை அந்தப் பகுதியின் ஒரு சொல்லைக் கூட நம்மால் மாற்ற முடியவில்லை. ஏன், இன்று இந்திய அரசு சமஸ்கிருத வாரம் கடைபிடிக்கச் சொல்கிறது. செத்த மொழிக்குத் தரும் மதிப்பை மக்கள் மொழியான தமிழுக்குத் தர இந்தியம் மறுக்கிறது. இந்தியத் துணைக்கண்டத்தின் அனைத்து மக்கள் மொழிகளுக்கும் சமத்துவம் வேண்டும் என்ற இயல்பான சனநாயகக் கோரிக்கை கூட இங்கே குற்றமாகப் பார்க்கப்படுகிறது.

இந்திய அரசின் உலகமயம், தாராளமயம், தனியார்மய, ஊழல்மயக் கொள்கைகள்தான் நம்மை ஆண்டுகொண்டுள்ளன. இதன் அடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்கள் நம் மண்ணை ஒட்டச் சுரண்டுகின்றன. சிறுபான்மைக் கூட்டம் ஒன்றின் ஆடம்பர வாழ்வுக்கான ஷாப்பிங் மால்களுக்காக நிலத்தடி நீர் ஆழ் குழாய்கள் மூலம் இரக்கமின்றி உறிஞ்சப்படுகிறது. தண்ணீரைக் காசு கொடுத்து வாங்க முடியாத மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கூட கிடைப்பதில்லை. பூச்சிக் கொல்லிகளும் ரசாயன உரங்களும் விளை நிலங்களை விழல் நிலங்களாக்கி உள்ளன. மிச்சமுள்ள நிலங்களில் விளையும் காய்கறிகள், பழங்கள் அனைத்தும் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடியவை. இதை உண்ணும் தாயின் குழந்தை குடிக்கும் தாய்ப்பாலும் நஞ்சு என்பது எவ்வளவு பெரிய கொடுமை! இந்த நிறுவனங்களைத்தான் தொழில் வளர்ச்சி எனும் பெயரில் நம் ஆட்சியாளர்கள் கைப்பிடித்து அழைத்து வருகின்றனர்.

அறிவு தரும் கல்வியும் நோய் தீர்க்கும் மருத்துவமும் கடைச் சரக்காகிப் போனதற்கு இக்கொள்கைகளே அடிப்படை. கல்வியைக் காசு கொடுத்துப் பெறும் இவர்கள் பெற்ற பட்டத்தைக் கொண்டு மக்களிடம் காசு பறிப்பதிலேயே கவனமாய் உள்ளனர். தம் கடமைகளைச் செய்ய இலஞ்சம் கேட்பதும் விரைவாகக் காரியங்கள் சாதிக்கும் அவசரத்தில் இலஞ்சம் கொடுப்பதும் குற்றமாய்த் தெரிவதில்லை. இவர்கள் சமூகத்திலிருந்து தம்மை துண்டித்துக்கொண்டு தனித் தீவுகளாய் வாழ்கின்றனர். அடுத்த மனிதன் கண்ணீரும் இரத்தமும் இவர்களை அசைத்தும் பார்ப்பதில்லை. தங்கள் அன்றாட வாழ்வின் நடைமுறைகள் சிறிது மாறும்போது ஏற்படும் கவலை கூட தமிழீழ மக்கள், பாலஸ்தீன மக்கள், குழந்தைகள் கொல்லப்படுகிற போது ஏற்படுவதில்லை. அநீதியான நுகர்வு வெறி கொண்ட சமூகத்தின் விளைச்சல் இப்படித்தான் இருக்கும்!

காவிரியும் முல்லைப் பெரியாறும் பாலாறும் அண்டை மாநிலங்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. நடுவர் மன்றம், உச்ச நீதி மன்றம் என எதன் உத்தரவுகளுக்கும் கர்நாடகமும் கேரளமும் பணிவதில்லை. இதை இந்திய அரசு தட்டிக் கேட்பதில்லை. காவிரி தொடர்பில் நடுவர் மன்றம் தீர்ப்பளித்து, அது அரசிதழில் வெளியிடப்பட்டும் விட்டன. அதைச் செயல்படுத்த உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆணை இட்ட போதும், அதை அமைக்க முடியாது என மத்திய அமைச்சரே அறிவிக்கிறார். உரிமை நீர் பெற கையேந்தும் நிலையில் இருக்கிறோம். வெள்ளையர்கள் ஆண்டபோது இருந்த ஆற்று நீர் உரிமைகள் இந்தியர்கள் ஆளத் தொடங்கிய பிறகு இல்லாமல் போய்விட்டது.

இரட்டைக் குவளை முறை, இரட்டைச் சுடுகாடு என தீண்டாமைக் கொடுமைகள் தீர்ந்தபாடில்லை. சாதிய வன்கொடுமைகளால் உயிர்ப்பலிகள் தொடர்கின்றன. தர்மபுரியில் இயல்பாய் மலர்ந்த காதலால் இல்லறம் ஏற்று வாழ்ந்த இளவரசன் - திவ்யாவை சாதி பிரித்துவிட்டது. நீதிமன்றங்களும் கட்டப்பஞ்சாயத்து நடத்தி இந்த சாதிவெறியின் கொட்டத்துக்கு வெற்றி தேடித்தந்தன. சாதியம் இறுதியில் இளவரசன் உயிரைக் காவுகொண்டது.

இவற்றை மாற்றுவதற்கு தமிழக அரசுக்கு இறையாண்மை இல்லை. புதிய சமூக நீதித் தமிழ்த் தேசம் படைப்பதற்குரிய சட்டமியற்றும் அதிகாரம் தமிழகச் சட்டப் பேரவைக்கு இல்லை. ஏனெனில் தமிழக அரசு எனபது அரசே அன்று. இந்திய அரசின் கொள்கைளைத்தான் தமிழக அரசு வால் பிடித்தாக வேண்டும். இந்திய அரசமைப்பு நமக்கான அரசமைப்பு அன்று. அது மார்வாரி குசராத்தி சேட்டுகள், பார்ப்பனர்கள், பணக்காரர்கள் ஆகியோருக்கான அரசமைப்பாகவே உள்ளது. இந்திய அரசு நமது இயற்கை வளங்களை கேள்விகேட்பாரின்றி கொள்ளையிடுகிறது. இந்திய அரசமைப்பைக் கொண்டு தமிழ்நாடு என்ற ஒன்றையே இல்லாமல் செய்ய முடியும். மொத்தத்தில் தமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமில்லை. அதனால்தான் ஆகஸ்ட் 15 - வெள்ளைக்காரர்களுக்கு பதிலாகத் தில்லிக் கொள்ளைக்காரர்களிடம் நம்மை கை மாற்றித் தருகிற நாள் என்றார் பெரியார். இது தமிழர்களுக்கு துக்க நாள் என்றும் அறிவித்தார்.

சமூகநீதி உணர்வு, பாட்டாளி வர்க்க உணர்வு, சனநாயக உணர்வு, சுற்றுச் சுழலியல் உணர்வு, சர்வதேசிய உணர்வு ஆகியவை கொண்ட மக்கள் திரளின் அரசு அமைப்போம். இந்திய ஆதிக்கத்திற்கு எதிராகச் சமூகநீதியை அடிப்படையாய்க் கொண்ட புதிய தமிழ்த்தேசம் படைப்போம். இதனால் உருவாகும் புதிய மனிதர்கள் அளவற்ற மானிடப் பற்றுக் கொண்டவர்களை, நுகர்வு வெறிப் பண்பாட்டை வெறுத்து ஒதுக்கியவர்களாய், அநீதி கண்டு பொங்குபவர்களாய் இருப்பார்கள். சமூகநீதித் தமிழ்த் தேசம் படைக்க எம்மோடு இணைந்து பணியாற்ற தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உங்களை அன்புரிமையுடன் அழைக்கிறது.

- வே.பாரதி

Pin It