மார்ச் மாத இறுதியில் நடைபெற்ற அய்.நா. அவையின் 25- ஆவது மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரப்பட்ட மூன்றாவது தீர்மானம் முன் எப்போதையும் விட தீவிரமானதாக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை உலகத் தமிழ்ச் சமூகத்திடையேயும், மனித உரிமை அமைப்புகளிடையேயும் உருவாக்கி விட்டு வழமைபோல இலங்கையை செல்லமாகக் கடிந்து கொள்வதாக இருக்கிறது. மேலும் இந்தியா செய்த திருத்தங்களையும் ஏற்றுக் கொண்டு வடக்கு கிழக்குப் பகுதிகளிலிருந்து படையினர் திரும்பப் பெறப்பட வேண்டும் என்ற தீர்மான வரிகளும் நீக்கப்பட்டுவிட்டன. கடந்த காலங்களில் இந்தியா இலங்கை விடயத்தில் தனக்குத் தேவையான தொனியில் மட்டுமே மிரட்டுவது போல மிரட்டி வந்தது. அதே உத்தியை பின்பற்றி இலங்கையை அமெரிக்கா அடிப்பது போல அடிக்கிறதோ என்ற அய்யத்தை எழுப்புகிறது தீர்மான விவரங்கள்.

rajapakse 356இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டுத் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசே ஒட்டு மொத்தமாக நடத்திய உச்சக்கட்டப் போரின் போது நடந்ததாக அறியப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை மீறல்கள் மீது இலங்கை அரசே விசாரித்து நடவடிக்கை எடுக்கும் குழுவின் அறிக்கை தொடர்பில் அரசு எதுவித அக்கறையோ அல்லது நடவடிக்கையோ எடுக்காதது, இன்னமும் வடக்கு- கிழக்குப் பகுதிகளில் தொடர்ந்து கொண்டுள்ள தமிழர் படுகொலைகள், காணாமல் போதல் மற்றும் துன்புறுத்தல்கள் போன்றவை மட்டுமே அமெரிக்காவின் மட்டுப்படுத்தப்பட்டத் தீர்மானச் சீற்றத்திற்கு காரணமென்று சொல்லப்படுகிறது. மேலும் இலங்கை அரசின் விசாரணைக் குழுவான எல்.எல்.ஆர்.சி நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் மீதான நடவடிக்கைகள் தோல்வி அடையும் பட்சத்தில் இலங்கை அரசு சர்வதேச விசாரணையை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா, பிரிட்டன், அய்.நா. உள்ளிட்டவை எச்சரித்தாலும் ஆணைக் குழுவின் செயற்பாடுகளை ஒருபுறம் அமெரிக்கா தட்டிக் கொடுக்கவும் தவறவில்லை. இந்த இரட்டை நிலைப்பாடு, இராஜபக்சேவிற்கு எரிச்சலைக் கொடுத்தாலும், சீனாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருக்கும் துணிச்சலில் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை ஒரே அடியாக நிராகரிக்கவும் செய்துள்ளதோடு, ‘இலங்கையில் தமிழர் வாழ்வதற்கு, -நடமாடும் உரிமையை அளித்திருப்பதிலிருந்தே எங்கள் மனிதாபிமானம் தெரியவில்லையா!’ என்று எள்ளலாகக் கேட்டு வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டதன் பிறகு அய்.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை வரவிருக்கும் அய்.நா. மனித உரிமைகள் அவையின் கூட்டத் தொடரை முன்னிட்டு இலங்கையை அறிவுறுத்தும் விதமாக காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அய்.நா. அவையின் தலைமைச் செயலக‌த்திற்கு அனுப்பியுள்ள 78 பக்கங்கள் கொண்ட அவ்வறிக்கையானது, இலங்கையை முன் எப்போதும் இல்லாத வகையில் கண்டனம் செய்வதோடு, விரைந்த நடவடிக்கையைக் கோருவாதகவும் இருக்கிறது. இறுதிப் போரின் நிகழ்வுகளை விசாரித்து வரும் நல்லிணக்க ஆணைக் குழுவின் விசாரணை முறைகளை கண்காணிக்க வேண்டும்; பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்கிற பெயரில் அப்பாவித் தமிழர்களைத் துன்புறுத்துவதை தடுக்க அச்சட்டத்தை இலங்கை அரசுத் திரும்பப் பெறவேண்டும்; காணாமல் போனவர்களைப் பற்றியும், தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் மீதான தாக்குதல்கள் பற்றியும் விசாரணை வேண்டும் என்றும், முக்கியமாக இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தவறுமானால் அய்.நா.அவை சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுள்ளார். இவ்வறிக்கைப் பிரதி ஒன்றை இலங்கை அரசுக்கும் அவர் அனுப்பிவைத்தார். ஆயினும் இலங்கை அரசு இது குறித்து எதுவித பதிலுமளிக்காமல் நீண்ட அமைதி காத்துவிட்டு தீர்மானம் கொண்டுவரும் நிலையில் நவிப்பிள்ளையின் அறிக்கையை கண்டனம் செய்தார் இராஜபக்சே. வெறும் 4 நாட்கள் சுற்றுப் பயணம் செய்து சேகரித்த தவறான தகவல்கள் அவை என்றும் அவற்றைக் கொண்டு அடித்தளம் அமைக்க முயற்சிக்கிறார்கள்; அவற்றை ஏற்க முடியாது என்றும் சிலிர்த்துள்ளார் இராஜபக்சே.

ஏற்கனவே நவிப்பிள்ளை இலங்கை செல்வதற்கு முன்பும், பின்புமான பல அறிக்கைகளை முன்வைத்தே அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவை இரஜபக்சே அரசுக்கு நெருக்குதல் தந்து வந்தன. இந்நிலையில் நவிப்பிள்ளையின் இந்த தீவிரமான அறிக்கையின் பேரில் அமெரிக்கா, தனது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் மேலும் கூடுதலான அழுத்தத்தை செலுத்தக்கூடும் என்பதை உணர்ந்தே இலங்கை அரசு, பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும், சிறுபான்மைத் தமிழருக்குமிடையே நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமானால் மேலதிகமான கால அவகாசம்(!) தேவையென அமெரிக்காவிடம்  அலட்சியமாக பதிலளித்துள்ளது

இதனையடுத்து மார்ச் திங்கள் 4 ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெற்ற அய்.நா. அவையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் தமிழருக்கெதிராக கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த போரில் இலங்கை அரசால் மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து ஒர் சர்வதேச‌ விசாரணை தேவை என்று அமெரிக்கா, இங்கிலாந்து, மாசிடோனியா, மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகள் வரைவுத் தீர்மானம் கொண்டு வந்தன. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வட மாகாண முதல்வருக்கு அதிக அதிகாரமளிக்கும் 13 ஆவது சட்டத்திருத்ததை வலுப்படுத்த வேண்டும் என்றும் அத்தீர்மானம் வலியுறுத்தியது. எனினும் இத் தீர்மானம் இலங்கையில் நடந்தது ஒர் இனப் படுகொலைதான் என்பதை எங்கும் ஒத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. மாறாக, அமெரிக்காவின் இத்தீர்மானம் இலங்கையில் நடந்தது ‘மத வழியிலான ஒரு காழ்ப்புணர்வுப் போர்’ என்றே குறிப்பிடுகிறது. இலங்கை வரலாற்றில், மன்னராட்சிக் காலத்திற்கும், காலனிய ஆட்சிக் காலத்திற்கும் மட்டுமே பொருந்தக் கூடிய இந்த வாதத்தினை தற்போதய இனவழிப்புப் போரில் வைத்து மறைக்க நினைப்பது என்பது அமெரிக்காவின் அரசியல் உள்நோக்கத்தையே காட்டுவதாக இருக்கிறது. மனித உரிமைத் தீர்மானத்தின் வழி சிங்களவர்களின் சீன ஆர்வங்களை முடக்கவும், இனப் படுகொலையில் ஆவேசப்பட்டுள்ள தமிழர்களை அமைதிப்படுத்தவும் இரண்டு காய்களை வீழ்த்த நினைக்கிறது அமெரிக்கா.

தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் இறுதி நாள்வரை வழக்கம் போல மவுனம் சாதித்த இந்தியா கடைசியில்தான் தனது முடிவை அறிவித்தது. அதாவது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது தனது கைகளை பின்புறம் கட்டிக் கொண்டது அது. முன்னதாக, மியான்மரில் நடைபெற்ற ‘பிம்பெக்ஸ்’ மாநாட்டில் இராஜபக்சேவை சந்தித்த பிரதமர் மன்மோகன்சிங், அமெரிக்கத் தீர்மானத்தின் மீது எத்தகைய முடிவு எடுக்கப்படும் என்ற எந்த உறுதி மொழியும் வழங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இராஜபக்சேவை சந்தித்தது சிங்கள ஆதரவு நிலை என்றால், தீர்மான முடிவு தமிழர் ஆதரவு(!) நிலை என்றும் புரிந்து கொள்ளலாம்.

உலகெங்கும் இன்று இலங்கைப் போர் குறித்த பார்வை தனக்கு எதிராகத் திரும்பியுள்ளதை உணர்ந்துள்ள இராஜபக்சே, அமெரிக்கா தற்போது கொண்டு வந்துள்ள மூன்றாவது தீர்மானம் தன்னிச்சையாக சர்வதேச விசாரணைக்கு எடுத்துச் செல்லக்கூடும் என்பதை அறிந்துள்ளார். அண்மையில் இத்தாலியின் பிரேமன் நகரில் கூடிய மக்கள் தீர்ப்பாயத்தின் இரண்டாவது அமர்வானது, இலங்கை அரசு மனித உரிமை மீறலில் ஈடுபட்டதோடு அது போர்க் குற்றமும் செய்துள்ளது; எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்ச் சிறுபான்மையினரை 1958 தொடங்கி தற்போது வரை மிகச்சரியாகத் திட்டமிட்டு இனப்படுகொலை செய்து வந்துள்ளது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டித் தீர்மானம் இயற்றியுள்ளது. இதன் முதலாவது அமர்வானது ஈராயிரத்துப் பத்தில் அயர்லாந்தின் டப்ளின் நகரில் தமிழருக்கெதிரான உக்கிரப் போரின் முடிவில் நடைபெற்றது. அப்போது அது, இலங்கைப் போரின் போது பெருமளவு போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடைபெற்றதாக தீர்மானம் கொண்டுவந்தமை அன்றைக்கு பரவலாக உலகின் கவனத்தைப் பெற்றிருந்தது. தற்போது குற்றம் சாட்டும் இத்தாலியின் தீர்மானம் மிகக் கடுமையானதாகும். ஏனெனில் இத்தீர்மானமானது. இன்றைக்கு இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்குலகு நாடுகளை இலங்கைப் போருக்கு உதவியதாக, வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறது. தமிழரின் கூட்டிணைவு, சிந்தனை ஆகியவற்றை திட்டமிட்ட வகையில் இலங்கை அரசு சிதைத்துள்ளமை, பாலியல் வல்லுறவு, கட்டாயக் கருத்தடை ஆகியவற்றை போருத்தியில் ஒன்றாக இலங்கையரசு கடைபிடித்தமை, அய்.நா. அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து போன்றவற்றின் கள்ள உதவி. இவையே இலங்கை அரசு இனக் கொலையைத் தீவிரப்படுத்தக் காரணம் என்று மனிதமற்ற உலகின் மனசாட்சியாக நின்று இந்தத் தீர்ப்புரை பேசுகிறது. அரசியலுக்கு ஏற்ப மாறும் நாடுகளைப் போல அல்லாது மெய்யாகவே படைப்பாளிகளையும், நீதிமான்களையும் கொண்ட இவைபோன்ற தீர்ப்பாயங்களே உலகெங்கிலும் உள்ள இனப்படுகொலைகளுக்கு உள்ளாகும் மக்களுக்கு வாழ்தலின் மீதான நீதியின் மேலான நம்பிக்கை வளர்ப்பதாக இருக்கும் அதே சமயம் இராஜபக்சேக்களின் நிம்மதியைக் கெடுப்பதாகவும் இருக்கின்றன.

இலங்கை பற்றிய சலசலப்பு கிளம்பும் போதெல்லாம் இங்கிலாந்து சேனல் தொலைக்காட்சி தனது பங்கிற்கு இலங்கை போர்க் குற்ற சாட்சியங்கள் அடங்கிய புதிய புதிய ஒலி-ஒளிகாட்சிகளை வெளியிடத் தவறுவதில்லை இம்முறையும் பல பதைபதைக்க வைக்கும் படுகொலைகள் நிரம்பிய போர்க்குற்ற காட்சிகளை சாட்சியங்களாக உலகின் முன் வைத்துள்ளது. இராஜபக்சே அரசு இக்காட்சிகளை வழமையாக இவை ஒட்டு வேலை என்று சொல்லக்கூடும். பொதுநலவாய மாநாட்டின் போது அடித்து நொறுக்கப்பட்ட கெலம் மெக்ரோவின் ஒளிப்படக் கருவிகள் ஆயுதங்களாக மாறும் தருணங்களை இராஜபக்சே சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

இதனிடையே புலம் பெயர் தமிழர்களும், புலிகளும் அய்.நா.வுடன் சேர்ந்து கொண்டு தீர்மானம் கொண்டுவருவதாக இலங்கை அரசு குற்றம் சாட்டியிருக்கிறது. ‘நாட்டில் எங்களோடு நேரடியாக மோதி வெற்றி பெற இயலாதவர்கள் சக்தி வாய்ந்த நாடுகள் மற்றும் அய்.நா.வைக் கொண்டு மாற்று வழியில் எங்களை வீழ்த்த நினைக்கிறார்கள் இதற்கெல்லாம் அஞ்சப் போவதில்லை. கியூபா, இஸ்ரேல் ஆகியவையும் அய்.நா. நடவடிக்கைகளை எதிர்கொள்கின்றன. இது ஒரு பொதுவான அம்சமாகும்‘ என்று  தமது நடுங்கும் கரங்களை ‘ஜிப்பா’வுக்குள் நுழைத்துக் கொண்டு உள்நாட்டு காட்சி வானொலிக்கு உளறலோடும், உதறலோடும் பேட்டி அளித்தவாறிருக்கிறார் இராஜபக்சே. போரின் போது காணாமல் போனோர் பற்றி தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் தொடங்கி அய்.நா. தீர்மானம் வரையிலும் வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது மன்னார் திருக்கேதீசுவரம் பள்ளிக்குடா பகுதியில் புதைக்கப்பட்டிருந்த 47-க்கும் மேலதிகமான மனிதர்களின் கூடுகள் உயிர்த்தெழுந்துள்ளமை இராஜபக்சேவை பீதியடைய வைத்துள்ளன. இந்த எழும்புக்கூட்டு மனிதர்கள் ஒரு காலத்தில் இரத்தமும் சதையுமாகக் கொல்லப்பட்டவர்கள். குடும்பம் குடும்பமாக கொன்று புதைப்பது இனப்படுகொலை பூமியில் புதிது அல்ல என்றாலும், இவை எப்போது எந்தப் போரின் போது நிகழ்ந்தவை என்ற கேள்வி மட்டுமே புதியதாக இருக்கிறது.

இராஜபக்சே அரசு, இவை நீண்ட காலமாக புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதி; எனவே அவர்ளை எதிரியாக்கிக் கொண்ட தமிழர்களை படுகொலை செய்து புதைக்கப்பட்டதாக இருக்கலாம் அல்லது சந்திரிகா நடத்திய ஆபரேசன் ரிவிரசாவில் கொல்லப்பட்டவர்களின் கூடாக இருக்கலாம் என்று சந்திரிகாவின் அரசியல் எல்லைக்குள் அவற்றை வீச‌ச் செய்கிறது. மன்னார் ஆயர் ராயபுயோசேப்புவோ இவை சிங்கள பெருந்திரள் படையெப்பின்போது சரணடைந்தவர்களின் மீதங்கள் என்கிறார். பலரும் இவை, அண்மைப் போரின்போதான படையினரிடம் சரணடைந்த 5,000 புலிப்படையினரின் எலும்பு உடலங்கள் என்கின்றனர். அய்.நா. ஏற்கனவே நாற்பதினாயிரம் பேர் காணாமல் போயுள்ளதாகக் குற்றம்சாட்டியிருந்தது. போர் முடிந்தும் வடக்கு-கிழக்கில் மனிதர்களை காணாமலடித்தல் தொடர்ந்து கொண்டுள்ளது. இதில் அரசின் பங்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை இவை குறித்த விசாரணைகளுக்கு அரசின் மழுப்பலான பதில்கள் எலும்புக் கூடுகளில் தமது சொந்தங்களைத் தேடி, அயர்ந்து போயுள்ள உறவுகளை ஆவேசப்பட வைத்துள்ளன. அவர்களது முறைப்பாடுகள் இங்கிலாந்து பிரதமர் கேமரூனிடம் தொடங்கி சர்வதேசம் முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

இதற்கிடையே முல்லைத் தீவு மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரின் எலும்புக்கூடுகள் மண்ணில் முளைவிட்டுள்ளன. இவை பெரும் போரின் போது இலங்கை அரசு கைப்பற்றிய பகுதியைச் சேர்ந்தவை என்று கூறப்படுகிறது. கூட்டம் கூட்டமாக கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள், பெரும்புதைக் குழிகளுக்குள் வீசப்பட்டு சீனாவிடமிருந்து வாங்கிய எலும்புருக்கும் பொடிகளைத் தூவி, மண்ணோடு மண்ணாகக் கரைக்கப்பட்டனர். போர்க் குற்றத்தின் சாட்சியாக இவை வரக்கூடும் என்ற அச்சம் இராஜபக்சேவை கிலி கொள்ள வைத்துள்ளது. மனிதப் புதைகுழிகளின் சாட்சியாக மேலெழும்பியிருக்கும் தமிழ் எலும்புக்கூடுகள் பற்றி ஒரு சர்வதேச விசாரணை தேவை என்பதை வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சர் விக்னேசுவரனும் வலியுறுத்தியுள்ளார்.

அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத் தொடர் தொடங்கியபோது, இலங்கை அரசும் தனது நல்லிணக்கக் குழுவின் ஆலோசனையின் பேரில் அவசர அவசரமாக‌ காணாமல் போனோரை உறுதி செய்யும் விதமாக காணாமல் போனோர் சான்றிதழ் வழங்க முடிவு செய்துள்ளது. இது 1990 முதல் 2009 வரையிலான காலப்பகுதியை சேர்ந்தவர்களுக்கானதாகும். சென்ற இரு திங்கள் வரையில் இத்தொகையினர் 6,000 பேர் என அறிக்கைகள் கூறுகின்றன. இதில் 4,000 பேர் அரசுப்படையினர் என இலங்கை அரசு சொல்கிறது. தரப்படும் சான்றிதழானது, இறப்புச் சான்றிதழின் சலுகைகளை ஒத்ததாக இருக்கும் என்றும் காணாமல் போனோரை இறந்தவர்களாக கருத உறவினர்கள் ஒப்பாததால் அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்திருந்தாலும் 2009 ஆம் ஆண்டின் பெரும் போரில் காணாமல் போனதாக அறியப்படும் 40,000 பேரின் நிலை பற்றி மட்டும் அமைதி காக்கப்படுகிறது. எனவேதான் சர்வதேச விசாரணையை அய்.நா. மனித உரிமை ஆணையமும், தமிழ்ச் சமூகமும், உலகெங்கிலுமுள்ள மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து கோருகின்றனர். அவர்கள் மட்டுமல்ல அவ்வப்போது இனக் கொலை பூமியின் மேலெழுந்து வரும் எலும்புக் கூடுகளின் இரத்தக் கவிச்சி அகலாத சாட்சியங்களும் இராஜபக்சேவின் தூக்கத்தை நிரந்தரமாகக் கெடுப்பதாக மாறிக் கொண்டுள்ளது.

- இரா.மோகன்ராஜன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It