சட்டம் வலியவனை கண்டால் வளைந்து கொடுக்கும்! எளியவனைக் கண்டால் எட்டி உதைக்கும் – அண்ணல் அம்பேத்கர்

தமிழகத்தில் தீண்டாமை இல்லை என்று தமிழக அரசும் காவல்துறையும் எவ்வளவு தான் குட்டிக்கரணம் அடித்துச் சொன்னாலும் நடப்பவை நடந்து கொண்டே தான் இருக்கும் என்பது போல தீண்டாமைக் கொடுமைகள் தினசரி நடந்து கொண்டே தான் உள்ளன‌. சில மாதத்திற்கு முன் திருவண்ணாமலையில் ஒரு பள்ளிக்கூடத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உணவு சமைத்தது தீட்டு என்று மேல் சாதி இந்துகளின் குழந்தைகளை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையானது.

பள்ளிக்கூடம் வரை சாதி பரந்து விரிந்துள்ளது. ஆனால் பாடப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் தீண்டாமைக் கொடுமை குறித்து கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. சாதிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தாலும் இந்தக் கொடுமை தீர்ந்தபாடில்லை. ஆனால் தமிழக சட்டமன்றத்தில் தமிழகத்தில் தீண்டாமை இல்லை என்று முதல்வரே சொல்லும் அளவிற்கு நமது தமிழகத்தின் பெருமையைக் காக்க பெரும் பிரயாசனம் நடத்தவேண்டியது உள்ளது. ஆனால் யதார்த்தம் வேறு என்பதை நாம் அறிவோம். அதற்கு இன்னொரு சான்று கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பரமேஸ்வரன்பாளையம் பகுதியில் உயர் சாதி இந்து அவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு வாகனம் போய் வர இடம் போதவில்லை என்று தலித் மக்கள் மூன்று தலைமுறையாய் இருந்து வந்து, சொத்து வரி(கந்தாயம், மின்சார இணைப்பு) கட்டி அவர்களின் சுவதீனத்தில் உள்ள இடத்திற்கு வந்து, 'இது எங்களுக்குச் சொந்தமான பூமின்னு கோர்ட்ல தீர்ப்பு வந்திருக்கு... உடனே இடத்தைக் காலி பண்ணுங்க' என்று சொல்லி விவேகானந்தன் என்பவர் மிரட்டியுள்ளார்.

"எங்களுக்கு அது சம்பந்தமா எந்தத் தகவலும் கோர்ட்ல இருந்து வரவில்லை" என்று தலித் மக்கள் கூறியுள்ளனர். "உங்களுக்கு சொல்ல வேண்டிய தேவை இல்லை" என்று சொல்லி அங்குள்ள பெண்களை மிரட்டி அருந்ததியர் குடியிருப்பை சாதி இந்துக்கள் இடித்து தரை மட்டம் ஆக்கியுள்ளனர். உடனே இது குறித்து காவல் நிலையத்திற்குத் தகவல் தர போலிஸ் வந்துள்ளது. “யாண்ட எங்க மேலேயே புகார் கொடுப்பீங்களா" என்று காவல் அதிகாரிகள் முன்பே தலித் மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் வேடிக்கை பார்க்கும் காவல்துறை முன்பே நடந்துள்ளது.

jcp 450
சாதி இந்துக்கள் மீது காவல்துறை வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய நேரிடும் என்று தெரிந்து கொண்ட சாதி இந்துக் கும்பல் (சுமார் முந்நூறுக்கும் மேற்பட்டோர்) காவல் நிலையத்தை முற்றுகையிட்டு "எங்கள் ஜேசிபி வண்டியின் மீது அவர்கள் அடித்தார்கள்" (வீட்டை இடிக்கும்போது) என்று ஒரு பொய்ப் புகார் கொடுத்துள்ளது. கூட்டத்திற்குப் பயந்த காவல்துறை தலித் மக்களுக்கு எதிராக முதலாவது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துவிட்டு இரண்டாவது புகாரை உயர் சாதி நபர்கள் மீது பதிந்துள்ளது. இதில் பெரிய கூத்து என்னவென்றால், பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக அருந்ததியர்கள் மீது வழக்கு, வீட்டை இடித்து தரைமட்டம் செய்தவர் மீது சொத்தை சேதப்படுத்திய வழக்கு இல்லை. அதற்கு காவல்துறை சொல்லும் காரணம் தலித் மக்கள் பாத்திரங்களுக்கு எந்த சேதமும் இல்லையாம்.

வீட்டையே இடித்து தரைமட்டம் ஆக்கியபின்பு எப்படி அந்தப் பிரிவில் வழக்கு போடாமல் இருக்க முடியும்? காரணம் இரண்டு தரப்பு மீதும் செசன்ஸ் வழக்கு போட்டால் பின்னாளில் சமரசம் செய்து கொள்வதற்கான சூழலை உருவாக்கும் வேலையே காவல் துறை செய்துள்ளது. இது குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தருவதற்குப் பதிலாக அவர்களைத் தப்பிக்க வைக்க வழி ஏற்படுத்தித் தரும் கயமைத்தனம். அதே போல பாதிக்கபட்டவனின் புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் சாதி இந்துக்கள் கொடுத்த புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. பின்னிட்டு சமுக இயக்கங்கள் தலையிட்டு பொது சொத்துக்கள் சேதப்படுத்திய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் தொண்டாமுத்தூர் பகுதியில் மட்டும் தீண்டாமைக் கொடுமை என்பது பல வடிவங்களில் அப்பகுதி முழுக்க நடந்துள்ளது.

தொண்டாமுத்தூர் ஆலந்துறை கள்ளிப்பாளையம் பகுதியில் 25 ஆண்டுகாலமாக பெண்கள் இரவுவரை காத்திருந்து கழிப்பிடம் போகும் அவலம் இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்த பொதுக்கழிப்பிடம் கேட்டு 25 ஆண்டுகள் போராடி பெற்றனர். அதுவும் அரசால் கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடம் உயர் சாதிகாரர்களின் தெருவில் கட்டப்பட்டதினால் தாழ்த்தப்பட்ட மக்கள் அதனை பயன்படுத்த அனுமதி இல்லை. அதனை உயர்சாதிகாரர்களும் பயன்படுத்துவில்லை. காரணம் அவர்கள் வீட்டில் சொந்த கழிப்பிடம் உள்ளது. இவர்களையும் பயன்படுத்த விடவில்லை. மீண்டும் மனு போட்டு போராட்டம் நடத்தி புதுக் கழிப்பிடம் அரசு கட்டி பயன்படுத்தினார்கள். மற்றொரு சம்பவம் தென்னமனலூர் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் பகுதிக்கு அரசு பேருந்து போகக் கூடாது என்று உயர் சாதி இந்துக்கள் பிரச்சனை செய்து பேருந்து போவதை நிறுத்தினார்கள்.

"அந்தப் பகுதிக்கு போய்த் திரும்பும்போது அருந்ததியர் மக்கள் உட்கார்ந்துகொண்டு வருகிறார்கள், நாங்கள் நின்று கொண்டு போகிறோம்" என்பதே அவர்களின் குற்றச்சாட்டு. அப்பேருந்து நிற்க, அருந்ததிய மக்கள் மீண்டும் பேருந்து கேட்க, இரட்டை டம்ளர் போல் அரசே செய்து கொடுத்த இரட்டைப் பேருந்து விடப்பட்டது.

இன்னொரு பெரிய அவலம் பூலுவபட்டியில் அரசின் பேரூராட்சி மண்டபம் தாழ்த்தப்பட்ட மக்கள் கேட்கிறார்கள் என்று ஆதிக்க சாதியினர் இழுத்துமூடி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்றுவரை திறக்கப்படவில்லை. இது தான் தொண்டாமுத்தூரின் நிலை.

இத்தனை கொடுமை நிலவும் அப்பகுதியில் பலமுறை வன்கொடுமை வழக்கு பதிவு செய்தும் இதுவரை ஒருவரை கூட கைது செய்யப்பட‌வில்லை. காரணம் கைது செய்தால் உயர் சாதிக்காரர்கள் காவல் நிலையத்தை முற்றுகை இடுவார்கள் என்று பயந்து காவல் துறையும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. இத்தனை அவலம் குறித்து அரசின் கவனத்திற்கு பலமுறை சொல்லியும் நடவடிக்கை இல்லை. தற்போது நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவை மக்கள் எடுத்து உள்ளனர். இனியாவது அரசு ஏதேனும் செய்யுமா என்பதே நம் முன் நிற்கும் கேள்வி.

- அ.கரீம். கோவை. (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)