தமிழீழ விடுதலையையும், தமிழகத்தின் வாழ்வுரிமையையும் மக்கள் மன்றத்தில் முன்னெடுப்போம்!

தேசிய இனங்களின் மீதான வன்முறையும், அடக்குமுறையும், சுரண்டலும் மிக அதிகமாக ஏவப்பட்டுக் கொண்டிருக்கின்ற காலத்தில் இந்திய பாராளுமன்றத் தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம். இச்சமயத்தில் எவற்றினை மையமாக வைத்து இத்தேர்தலை தமிழ்த் தேசிய மக்கள் எதிர்கொள்ளவேண்டும் என்பதை விவாதிப்பது மாற்று அரசியல் இயக்கங்களின் மிக முக்கியமான மற்றும் அவசியமான அரசியல் கடமையாகிறது.

தேர்தல் காலங்களில், மக்களிடம் எழும் கேள்விகளுக்கு பதிலளிப்பதும், எழுப்பபடாமல் இருக்கும் கேள்விகளை முன்வைப்பதும் அத்தகைய கடமைகளில் ஒன்றாகிறது.

eelam tamils 3392009க்குப் பின்பான தமிழகத்தின் அரசியல் சூழல் பல்வேறு மாற்றங்களை உள்ளடக்கியே எழுந்து வருகிறது. தமிழ்த் தேசிய கேள்விகளும், முன்னெடுப்புகளும், விவாதங்களும் நிரம்பிய களத்தில் நாம் இன்று நிற்கிறோம். இந்திய ஏகாதிபத்தியத்திற்கும், தமிழ்த் தேசிய பட்டாளி மக்களுக்கும் இடையே நிகழும் அரசியல் விவாதம், போலி இந்திய தேசியத்தின் மீதான அவநம்பிக்கை, எதிர்ப்பு அரசியல் என அனைத்தினையும் தொகுத்தும், அதனை விவாதத்திற்கு எழுப்பவும் செய்வோம்.

சுரண்டலை முன்வைக்கும் கொள்கை சார்ந்த நடவடிக்கைகளில் இருந்து தேசிய இனங்களின் மீதான உரிமை மறுப்பு ஆகியவை கடந்த 20 ஆண்டுகளில் துவங்கி இன்று உச்சநிலையை அடைந்திருக்கிறது. உலகமயமாக்கலும், உயர்சாதி, பணக்கார அரசியல் குழுவும் இணைந்து நின்று தேசிய இனங்களை வேட்டையாடும் அரசியலை, மக்களிடம் கொண்டு சேர்ப்பது காலத்தின் கட்டாயமாகப் பார்க்கிறோம்.

இவற்றினைத் தொகுத்து மூன்று பெரும் பிரிவுகளாக காண்கிறோம்.

தமிழீழ விடுதலை

தமிழகத்தின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதல், சுரண்டல், அழித்தல்

தமிழ்த்தேசிய பண்பாட்டின் மீதான வன்முறை

இந்த மூன்று வகைகளை தமிழ்ச் சமூகம் கடந்த காலத்தில் எதிர்கொண்டு எதிர்வினையாற்றி இருக்கிறது. இன்று இத்தகைய அடிப்படை கேள்விகளை முன்வைக்காமல் தேர்தல் களம் கட்டப்பட்டுகிறது. இது பெரும்பான்மையான பிரதிநிதிகளை வைத்திருக்கும் வலிமை வாய்ந்த கட்சிகளால் ஏற்படுத்தப்படுகிறது. இந்த மூன்று பிரச்சனைகளுக்கும் எந்த வித பதிலையும் அளிக்காமலும், கொள்கை ரீதியில் முடிவுகளை மக்கள் சார்ந்து எடுக்காமலும், அரசியல் பிரச்சாரக் களத்தில் விவாதப் பொருளாக மாற்றாமலும் கடந்து செல்ல விரும்புகிறார்கள். இந்திய அளவில் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் இத்தகைய மக்கள் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்காமல் இருக்கும் இவர்கள், மீண்டும் அடுத்த 5 ஆண்டுகளை இவ்வாறே கடந்து செல்ல அனுமதிப்பது தமீழிழ விடுதலைக்கும், தமிழகத்தின் வாழ்வுரிமைக்கும், பண்பாட்டிற்கும் பெருத்த பின்னடைவினை தரும் அரசியலையே உருவாக்கும்.

கடந்த வருடம் இடிந்தகரையில் தேர்தலைப் பற்றிய மாற்று இயக்கங்கள் எடுக்க வேண்டிய முடிவுகள், கடமைகள் பற்றிய விவாத அரங்கில், மே17 இயக்கம் முன்வைத்த அதே நிலைப்பாடுகளை இன்றும் முன்வைக்க விரும்புகிறோம். அனைத்து இயக்கங்களும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட காத்திருக்கும் மக்கள் விரோத மசோதாக்களை அம்பலபடுத்தவும், தடுத்து நிறுத்தவும், இணைந்து அரசியல் செயல்பாட்டினை முன்வைக்க வேண்டும் என்று அன்று கோரிக்கை முன்வைத்திருந்தோம். இதனடிப்படையில் தேர்தல் கூட்டணியை உருவாக்குவது என்றும், தேர்தல் கட்சிகள் முன்வராமல் போகும் பட்சத்தில் இயக்கங்கள் தோழமை இணைந்து களத்தினை உருவாக்குவது என்கிற கோரிக்கையையும் முன்வைத்தோம். அத்தகைய முயற்சிகள் கைகூடாத நிலையில் தமிழ்ச் சமூகத்தில் இந்த விவாதத்தினை எவ்வாறு முன்னெடுப்பது என்கிற கவலை நிரம்பியே இந்த அறிக்கையை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

வருகின்ற பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட காத்திருக்கும் மக்கள் விரோத மசோதாக்கள் பற்றிய விவரங்களையும், இந்த அரசியல் கட்சிகளிடத்தில் மக்கள் அறியவேண்டிய செயல்பாடுகளையும் முன்னிலைப்படுத்த இக்களத்தினை பயன்படுத்தமுடியும் என்று நம்புகிறோம்.

இச்சமயத்தில் இத்தேர்தலில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய கோரிக்கைகளும், முடிவுகளாகவும், பின்வருவனவற்றினை மிகச்சுருக்கமாக தோழர்களின் கவனத்திற்கு முன்வைக்கிறோம். இதில் விடுபட்டவற்றினை இணைத்து வலிமைப்படுத்த வேண்டுகிறோம்.

சர்வதேச அரசியல் செயல்பாட்டு வலிமை:

தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு மற்றும் இனப்படுகொலைக்கான சர்வதேச சுதந்திரமான விசாரணை இலங்கை நாட்டின் மீதும் (அரசின் மீது மட்டுமல்ல) ஜெர்மன் தீர்ப்பாயத்தின் முடிவின் படி இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்காவின் மீதும் கொண்டு வருவதற்கான அரசியல் முடிவு.

வெளியுறவுக் கொள்கைகளை வடிவமைப்பதில் எல்லையோர மாநிலங்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கப் பட வேண்டும்.

தமிழக மீனவர்கள், தமிழீழ மீனவர்கள், சிங்கள மீனவர்கள் எனும் மீன்பிடிச்சமூகம் பாரம்பரியமாக மீன்பிடித்தலை செய்ததைப் போன்ற பாரம்பரிய மீன்பிடி உரிமைக்கான ஒப்பந்தங்களை வடிவமைப்பது.

கச்சத்தீவு மீட்டெடுப்பு என்பது தமிழகத்தின் வாழ்வுரிமை மீட்பு என்பதாக மட்டுமல்லாமல் அந்த தீவு என்பது கடலுக்கடியில் இருக்கும் வளத்தினையும் கொண்டிருப்பது என்பது தமிழ்த் தேசிய உரிமையாகும். மேலும் கச்சத்தீவு என்பது தமிழீழ நாட்டிற்கும், தமிழகத்திற்கு இடையேயான உறவுகளின் நலன்களின் அடிப்படையிலேயே முடிவு செய்யமுடியும்.

தெற்காசிய பிராந்தியத்தில் வல்லரசுகள், ஏகாதிபத்திய அரசுகள் இந்தியப் பெருங்கடலை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயலும் அரசியல் நகர்வுகளை எதிர்கொள்ளும் திடமும், பார்வையும் கொண்ட தமிழினப் பாதுகாப்புத் தன்மையை கொள்கைத் திட்டங்களில் கொண்டுவர செய்வது.

தமிழகத்தின் வாழ்வுரிமை

உலகமயமாக்கல், உலக வர்த்தக கழகத்தின் ஒப்பந்தங்கள் அடிப்படையிலான இந்திய தேசிய அரசின் மசோதாக்கள் தமிழகத்தின் வாழ்வுரிமைக்கு பெரும் ஆபத்தினை விளைவிக்கின்றன. இதன் சில மசோதாக்களை கணக்கில் எடுப்பது அவசியம். (பின்வருவனவற்றில் விடுபட்டுள்ள பிற மசோதாக்களையும், கொள்கை திட்டங்களையும் இணைக்க உதவுமாறு வேண்டுகிறோம். )

கூடன்குளம், கல்பாக்கம், வடபழஞ்சி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட இருக்கும் அணு உலைப் பூங்காக்கள், அணுக்கழிவு பரிசோதனை உள்ளிட்ட திட்டங்கள் மீதான எதிர்ப்பும், அணு உலை விபத்து நட்ட ஈட்டு மசோதா ஆகியவை பற்றி பாராளுமன்றத்தில் இக்கட்சிகளின் நிலைப்பாடுகளும் அம்பலப்படுத்தப் படவேண்டும்.

நியூட்ரினோ திட்டத்தினையும், அதன்மூலமாக பாதிக்கப்பட இருக்கும் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட வனப்பகுதிகளும் பற்றிய இந்திய தேசிய அரசின் முடிவுகள்,

முல்லைப் பெரியாறு உரிமை, காவிரி ஆற்று உரிமை, பவானி ஆற்று உரிமை, பாலாறு மீதான அணைத்தடுப்பு எதிர்ப்பு, பரம்பிக்குளம்-ஆழியாறு அணையில் இருந்து கேரளா கேட்கும் அதிகப்படியான நீர் பகிர்மானம், தாமிரபரணியில் இருந்தும், பேச்சிப்பாறையில் இருந்தும் கூடன்குளத்திற்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர், தமிழகத்தின் பெரும்பகுதிகளில் (குறிப்பாக வடதமிழகத்தில்-செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை) மூடப்படும் தண்ணீர் ஆதாரங்கள் தொடர்பான அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள்.

தண்ணீரை தனியார்மயப்படுத்தும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுவதற்காக காத்திருக்கிறது. இதன்படி அனைத்து நீர் ஆதாரங்களும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு தண்ணீர் என்பது வணிகப்பொருளாக மாற்றப்படும். இதன்பின்னர் தண்ணீர் பயன்பாடு என்பது சந்தைவிலையிலேயே மக்களுக்கு கிடைக்கும். உலகவர்த்தக கழகம் கடந்த 5 ஆண்டுகளில் இதை நிறைவேற்ற கடும் நெருக்கடியை அளித்தது. இதை நிறைவேற்றக் கோரி உலக வர்த்தக கழகத்தின் முந்தைய தலைவர் பாஸ்கல் லெமி வெளிப்படையாக தில்லிக்கு வந்து நெருக்கடி கொடுத்தார். இதன் அடிப்படையில், வணிகமயமாக்கலுக்கு ஆதரவினை அளித்து பத்திரிக்கைகளும் தொடர் கட்டுரைகளை வெளியிட்டன‌. இச்சமயத்தில் இந்த மசோதா குறித்தான கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிய உருவாக்கப்பட்ட குழுவிற்கு எதிர்ப்புகளை பதிவு செய்ய பல்வேறு கட்சிகளை மே17 இயக்கம் தொடர்பெடுத்து பேசியது. இதனடிப்படையில் சில கட்சிகள் (மதிமுக, பாமக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி) தமது எதிர்ப்புகளை பதிவு செய்தார்கள். (இதில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இசுலாமிய இயக்கங்களிடத்தில் உடனடியாக தொடர்புகள் கிடைக்காத காரணத்தினால் அவர்களால் குறித்த நேரத்தில் எதிர்ப்புகளை பதிவு செய்ய இயலவில்லை) இந்த மசோதா புதிய பாராளுமன்றக் குழுவில் நிறைவேற்றப்படுவதற்காக காத்திருக்கிறது. இதைப் பற்றிய கள்ளமெளனமே பெரும் கட்சிகளிடம் இருந்து தமிழக மக்களுக்குக் கிடைக்கிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியத்தினை சிதைக்கும் மீத்தேன் திட்டம் விவாதத்திற்குட்படுத்தபட வேண்டும். இதைப் பற்றிய கள்ள மெளனம் காத்த திமுகவினரின் பங்களிப்பினை அம்பலப்படுத்த மே17 இயக்கத் தோழர்கள் டி.ஆர் பாலுவின் இணையதளத்தில் இருந்த செய்திக்குறிப்பினை முகநூலில் வெளியிட்டார்கள். இதனை மறுத்து உடனடியாக செய்திக்குறிப்பினை தனது இணையப்பக்கங்களில் இருந்து நீக்கிய டி.ஆர்.பாலுவிற்கு பதிலடிக்கும் படியாக அவரது இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்டு, ஆவணப் படத்திற்காக வைக்கப்பட்டிருந்த தரவுகளில் இருந்து மீத்தேன் திட்டத்தின் மீதான டி.ஆர்.பாலு, திமுகவின் நேரடி பங்களிப்பினை தோழர்கள் வெளியிட்டார்கள். இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்காக பெரும்கட்சிகளிடத்தில் இருக்கும் உள்ளார்ந்த விருப்பத்தினை அம்பலப்படுத்த வேண்டியதாகிறது.

தமிழகத்தில் வர இருக்கும் 40க்கும் மேற்பட்ட அனல்மின்நிலையங்கள், வடதமிழகம்-செய்யூரில் வர இருக்கின்ற பெரும் மின் உற்பத்தி திட்டம் சுற்றுப்புறச்சூழலையும், வாழ்வாதாரத்தினையும் அழிக்க காத்திருக்கிறது. இதற்கான விழிப்புணர்வையும், விவாதத்தினையும் மக்களிடத்தில் எடுத்துச் செல்லவேண்டியுள்ளது.

கெயில் குழாய்த் திட்டம் ஒரு ஆபத்தான முன்மாதிரியினை தமிழகத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட இருக்கும் விவசாயிகள் உள்ளிட்ட குடிமக்களின் வாழ்வாதாரத்தினைப் பற்றி அக்கறை கொள்ளாமல், கவனமாக தவிர்க்கும் பெரும் கட்சிகளின் நிலைப்பாடுகள் விவாதத்திற்குள்ளாக்கப்பட வேண்டும்.

மின்சார உற்பத்தியினை 1990களில் தனியார்மயப்படுத்திய அன்றைய காங்கிரஸ் அரசு, மெளனம் காத்த மற்ற கட்சிகளின் காரணமாகவும், 2000க்குப் பின்பு வந்த மின்சாரச் சட்டத்தின் மூலமாக தமிழகத்தில் பெருமளவில் தனியார் கொள்முதலுக்கு விடப்பட்ட மின் உற்பத்தியின் காரணமாக மின்சார விலையேற்றமும், மின்வாரியத்தின் நட்டமும் ஏற்பட்டது. மின் உற்பத்தி தனியார் நிறுவனங்கள், ஆளும் கட்சியினர் சார்ந்து இருந்த காரணத்தினாலும், அவர்களது சொத்தாகவும் இருந்த காரணத்தினாலும், மக்கள் பணம் சூறையாடப்பட்டது. இதன் காரணமாக செயற்கை மின் தட்டுப்பாடு கடந்த 4-5 வருடங்களில் உருவாக்கப்பட்டு, இன்று அதிக அளவில் வாழ்வாதாரத்தினை அழித்திருக்கிறது. உதாரணமாக நெசவாளிகள், விவசாயிகள், சிறு-குறுதொழில் முனைவோர்கள், சிறுவர்த்தகக் கடைகள், மாணவர்கள் உள்ளிட்டவர்கள் பெரும் பாதிப்படைந்தனர். இதை நிவர்த்தி செய்ய இதுவரை இக்கட்சிகள் முயற்சி எடுக்க மறுக்கின்றன. இந்த நிலையில் தில்லி, மும்பை போன்ற நகரங்களில் இருப்பதைப் போன்று சென்னையிலும் மின்சார விநியோகம் தனியார்மயமாக்கப்படுகின்றது. இதனால் மேற்கூறிய நகரங்களில் இருப்பதைப் போன்று மின்விலையேற்றமும், மின் விநியோக முறைகேடுகளும் அதிக அளவில் நிகழ இருக்கின்றன. இதில் தமிழக மக்களின் சொத்துக்களாக இருக்கும் மின் விநியோக சொத்துக்கள் வட இந்திய மார்வாடிகளிடமும், பெரும் முதலாளிகளிடமும் இலவசமாக கையளிக்கபடுகிறது. இதன்பின்னர், சராசரி ஏழை, நடுத்தரவர்க்க மக்களுக்கு, மின்சாரம் கைக்கெட்டாத நிலைக்கு உருவாக்கப்படும். இந்த நிலையை இதுவரை மக்களிடத்தின் கவனத்தில் இருந்து மறைத்துப் பேசும் கட்சிகளை மக்களிடத்தில் அம்பலப்படுத்துவது அவசியம். இந்த விலையேற்றத்தினை தடுக்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்பாடு செய்திருந்த மக்கள் கருத்துகேட்பு கூட்டத்தில் மே17 இயக்கம், 2012இல் எதிர்ப்பினை பதிவு செய்தது. தொடர்ச்சியான கூட்டங்களை சென்னையிலும் பிறபகுதிகளிலும் வலிமை சார்ந்து செய்தது. சுவரொட்டி, துண்டறிக்கைகள், நேரடி பங்கேற்புகள் மூலமாக செய்தது. இன்று அனைவரும் கைகோர்த்து இதை விவாதப்பொருளாக மாற்றவேண்டும்.

இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அரசியல் சிறைவாசிகள் தொடர்ச்சியாக சிறைப்படுத்தப்பட்டிருப்பது உடனடியாக தடுக்கப்பட வேண்டும். அபுதாகிர், தென்தமிழன் உள்ளிட்ட சிறைவாசிகள் உடனடியாக விடுதலை செய்யப்படுதல் அவசியம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைப்படுத்தப்பட்டிருக்கும் சிறைவாசிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு அவர்கள் இச்சமூகத்தில் அமைதியான வாழ்வினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க மறுக்கும் கட்சிகளை விவாதத்திற்குள்ளாக்க வேண்டும். சிறைவாசிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவது தடுக்கப்படுவதும், அந்த உரிமைகள் நிலைநாட்டப்படுவதும் அவசியம்.

இசுலாமியர் உரிமை தொடர்பான சச்சார் கமிட்டி பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்படவேண்டும்.

செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்கள் மற்றும் தொடர்ச்சியாக திருச்சி சிறையிலும் இது நீட்டிக்கப்படுவது ஆகியவை மூடப்படுவதற்காக தொடர்போராட்டங்களை மேற்கொள்ளப்பட்ட போதிலும், இதுவரை இதன் மீது எந்தவித நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை. தமிழீழ விடுதலைக்காக வெளியுறவுக்கொள்கை மாற்றத்தினை கொண்டுவருவதாகப் பேசும் அதிமுக அரசு தனது அதிகாரத்தின் கீழ்வரும் சிறப்பு முகாமின் கொடுமைகளைக்கூட தடுக்க முன்வராதது அதன் இரட்டைத்தன்மையை அம்பலப்படுத்துகிறது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் மரண வழக்கில் பொய்க்குற்றம் சாட்டப்பட்ட எழுவரையும் விடுதலை செய்வதும், மரணதண்டனையை ஒழிப்பதற்கான விவாதத்தினையும் ஏற்படுத்த தேர்தல் களம் வலியுறுத்த வேண்டும்.

பெண்களின் உரிமைகள் தொடர்பான வர்மா கமிசனின் அனைத்து பரிந்துரைகளையும் சட்டமாக்குவதற்கும், பெண்களை போகப் பொருட்களாக சித்தரிக்கும் நிகழ்வுகளை தடுத்து நிறுத்துவதற்கும் வலியுறுத்துவோம்.

சமூக நீதியினை மறுக்கும் நோக்கில் இடஒதுக்கீட்டினைப் புறம் தள்ளும் முடிவினை எதிர்த்தும், சமூக நீதியினை நிலைநாட்டவும் தொடர்ந்து எடுத்துரைப்போம்.

சாதிமறுப்புத் திருமணம் புரிந்த தம்பதியரில் ஒருவருக்கு அரசு உடனடியாக வேலை வழங்கவும், இணையரின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவும் வேண்டும். சாதிமறுப்புத் திருமணம் புரிந்த இணையர்க்கும், அதை செய்து வைப்போருக்கும் உரிய பாதுகாப்பு அளித்தல். அவர்களை அச்சுறுத்தும் சாதி, மத வெறியர்களைத் தண்டிக்க கடுமையான சட்டம் இயற்றக் கோருதல்.

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாகவும், இந்தியாவின் ஆட்சி மொழியாகவும் மாற்ற வேண்டும்.

மருத்துவத் துறை தனியார்மயப்படுவதை தடுக்கப்படவேண்டும். செவிலியர் பிரச்சனைகளில் தீர்வு காண வேண்டும்.

ஊகவர்த்தகத்தினை தடுத்து நிறுத்துவதன் மூலமாக அடிப்படை உணவுப் பொருட்கள் விலையேற்றத்தினை தடுக்க வேண்டும்.

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, அந்நியப் பொருட்கள் இறக்குமதி, உலக வர்த்தக மையத்தில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல் ஆகியவை விவாதப் பொருளாகவும், முடிவாகவும் மாற்றப்பட வேண்டும். இவை வலியுறுத்தல் செய்யப்பட வேண்டும்.

தமிழ்ப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விமுறையும், கல்வி தனியார்மயப்படுத்தும் திட்டமும் முடக்கப்படவேண்டும். தமிழ்வழி அரசுப் பள்ளிகள், சிறப்பான கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட வேண்டும்.

கடலோர மணல் கொள்ளை, ஆற்றுமணல் கொள்ளை ஆகியவை தடுக்கப்படுதல் சட்டமாக்கப்பட வேண்டும்.

கடற்கரை மேலாண்மை ஒழுங்கு சட்டம், விதைச்சட்டம், மரபணுமாற்று முயற்சிகள்-வணிகமயாக்கப்படுதல், காடு பாதுகாப்புச் சட்டம் ஆகியவை மீனவர்கள், விவசாயிகள், மலைவாழ்மக்கள்-பழங்குடிகள் ஆகியோரின் வாழ்வாதாரத்தினை அழிக்கின்றன. இவற்றினை தடுத்து நிறுத்துதல் பற்றிய நிலைப்பாடுகள் கேள்வியாக்கப்பட வேண்டும்.

நிலம் கையப்படுத்தும் மசோதாவினை தடுத்து பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியப் பெருநிறுவனங்கள் நிலத்தினை அபகரிப்பதை தடுக்கும் வகையில் மாநிலம்தோறும் காசுமீரத்தினைப் போல 370 விதிமுறைப்படி நிலத்தினைப் பாதுகாக்கும் சட்டத்தினை கொண்டு வர வேண்டும்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் இயங்கி வரும் பன்னாட்டு மற்றும் இந்திய தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம் அமைத்தல் உள்ளிட்ட‌ தொழிலாளர் நல அடிப்படை உரிமைகள் மறுக்கப் படுகின்றன, வளர்ச்சி பற்றிப் பேசும் கட்சிகள் இது குறித்து இது வரை பேசியதில்லை

தடையில்லா மின்சாரம், வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெறும் நிறுவனங்கள் ஊழல், மோசடிகள் உள்ளிட்டவற்றில் ஈடுபடும் போது அவற்றை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டியதன் அவசியத்தை எந்த கட்சியும் பேசவில்லை. சமீபத்திய உதாரணம் நோக்கியா நிறுவனத்தின் வரி மோசடியும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை பறிபோகும் சூழ்நிலை உருவாகி இருப்பதும்.

ரேசன்கடைகளை அடுத்து வரும் 4 வருடங்களுக்குள் முடக்குவதும் அல்லது வணிக நோக்குடன் நடத்தப்படவேண்டுமென்கிற மாற்றத்தினையும் உலக வர்த்தகக் கழகம் முன்வைத்துள்ளது. இதன்மூலம் அடித்தட்டு மக்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும் உணவு ஆதாரப்பொருட்கள் அம்மக்களுக்கு சென்று சேராமல் தடுக்கப்படுகிறது. இதனை இதுவரை எந்த ஒரு பெரிய கட்சியும் தனது வலிமைமூலம் முடக்க மறுக்கிறது, விவாதிக்கவும் மறுக்கிறது.

விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு தாராளமயமாக்கப்பட்டிருக்கிறது. இந்த மசோதாக் கொள்கை விவசாயிகளின் விளைபொருட்கள் சந்தைகளில் வணிகப்படுத்தப்பட முடியாமல் போவதற்கு ஏற்ப செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் அந்நிய இறக்குமதி காரணமாகவும், மானியம் அளிக்கப்பட்டிருக்கும் விவசாய அடிப்படைப்பொருட்கள் ஒவ்வொன்றாக நிறுத்தபடுவதன் மூலமாகவும், விவசாயிகள் மீது கடுமையான போரினை இக்கட்சிகள் தொடுத்திருக்கின்றன. இதனை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது அரசியல் கட்சிகளின் நிலையை அம்பலப்படுத்தும். இது இன்றைய தேவையாகும்.

மேற்கூறிய அனைத்திற்கும் காரணமாக இருக்கும் தனியார்மயம், உலகவர்த்தக மையத்தில் ஒப்பந்தம், இந்து மதவெறி பயங்கரவாதம், சாதியம் ஆகியவற்றினை எதிர்ப்பது மையமான அரசியல் நடவடிக்கையாகிறது. இந்தியாவினை உலகவர்த்தக மைய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற்றவேண்டும். (மேற்கூறியவை முழுமையான பட்டியலாக இருக்க இயலாது. ஏனெனில் பல்வேறு சமூக-அரசியல் மசோதாக்கள் நிறைவேற்றப்படக் காத்திருக்கின்றன. அனைத்தினையும் குறைந்த கால அளவில் தொகுக்க இயலவில்லை, மேலும் தமிழகம் சார்ந்த பிரதான பிரச்சனைகளை மையப்படுத்தி இருக்கிறோம். இதில் விடுபட்டவற்றினையும் இணைக்க உதவுமாறு வேண்டுகோள் வைக்கிறோம்)

இதனடிப்படையில் காங்கிரஸ், பாஜக ஆகியவை முற்றும் முழுதுமாக தமிழகத்தின் அரசியல் களத்தில் இருந்து நீக்கப்படவேண்டும். இவைகள் குறைந்தபட்ச வாக்குகளைக் கூட பெற இயலாத நிலையை உருவாக்குதல் அவசியம். மேற்கூறிய வாழ்வுரிமை தளத்தில், மக்கள் விரோத நிலைப்பாடுகளை எடுத்து செயல்படும் கட்சிகள்-வேட்பாளர்களை வீழ்த்துவது அரசியல் செயல்பாடாகிறது. இங்கு எந்த ஒரு அரசியல் கூட்டணியும் பிறவற்றிற்கு மாற்றாக வரையறை செய்ய இயலாத நிலையில் இருக்கும் பொழுது இப்பிரச்சனைகளை மக்களிடத்தில் விவாதப் பொருளாக்குவது அவசியம் என நினைக்கிறோம். இந்த நிலைப்பாடுகளுக்கு இக்கட்சிகள் பதிலளிப்பது என்கிற நெருக்கடியை ஏற்படுத்துவது முக்கியமாகும்.

2009இல் ஈழவிடுதலைக் கோரிக்கையை அரசியல் விவாதமாக்க முடியாது என்று பேசிய பெரும் கட்சிகளின் நிலையை உடைத்து, இன்று ஈழவிடுதலையை மையமாக வைத்தே தேர்தல் அரசியலை எதிர்கொள்ளும் நிலை பெரும் கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையை மறுத்து தமிழ்ச் சமூகத்தில் எதேச்சதிகார போக்குடன் பேசும் பாஜக கட்சியின் தலைமையையும், அக்கட்சியின் வேட்பாளர்களையும் வீழ்த்துவது காலத்தின் கட்டாயம்.

தமிழகத்தில் இருக்கும் மூன்று பெரிய அணிகளும் உள்ளளவில் பாஜக கூட்டணியாகவே செயல்படுகின்றன. நேரடியான கூட்டணி மூலம் தமது வாக்குவங்கி பலத்தினை அதிகரிப்பதுவும், கிடைக்கக்கூடிய வெற்றியை தமது கூட்டணிக்காக பயன்படுத்திக் கொள்வதுவும் இதன் திட்டமாகிறது. இதைவிட மோசமான பின்னணி அரசியலாக திமுக, அதிமுக அணிகளில், பெரும் எண்ணிக்கையைப் பெறும் கட்சியுடன் தேர்தலுக்குப் பின்பான கூட்டணியை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் செயல்பட்டு தமது பார்ப்பனிய செயலுக்தியை காட்டுகிறது. இதன்மூலம் பெரும் பலனை அனுபவிக்கத் திட்டமிடுதலை எதிர்கொள்ளும் நெருக்கடி நம்மிடத்தே இருக்கிறது. மதவாதமாக நேரடியாகவும், மதவாதம் அற்றதாக திமுகவின் ஊடாக மறைமுகமாகவும், விமர்சனமற்று காங்கிரஸ் எதிர்ப்பு என்கிற நிலையின் ஊடாக அதிமுகவின் வழியாகவும் பாஜக செயல்படுவதை நாம் காண்கிறோம்.

எந்தக் கட்சியை முதல் எதிரியாக அறிவிப்பதும், அதன் தோல்வியை உறுதி செய்வது என்பதுவும் அந்ததந்தத் தொகுதி சார்ந்ததும், அப்பகுதியின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனை சார்ந்தும் அமைகிறது. அடிப்படையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் தோல்வியை உறுதி செய்வது முதன்மைக் கடமையாகவும் ஏனைய கட்சிகளின் நிலைப்பாடுகள் அடிப்படையில் அம்பலப்படுத்தல், தனிமைப்படுத்தல் என்பதையும் முன்வைத்து செயல் திட்டத்தினை நீங்கள் உங்கள் பகுதி சார்ந்த தோழர்களுடனும், தோழமைஇயக்கங்களுடனும் இணைந்து முன்வைத்து செயலாற்ற இயலும். உதாரணமாக,

தஞ்சாவூரில் பாஜக முதன்மை எதிரியாக வீழ்த்தப்பட வேண்டிய அதே நேரத்தில் மீத்தேன் எரிவாயு திட்டத்தினைக் கொண்டு வந்த திரு.டி.ஆர்.பாலு அவர்களைத் தோற்கடிக்க வேண்டியது நமது அரசியல் கடமை. இது வலிமையான தாக்கத்தினை அரசியல் கட்சிகளிடத்தில் ஏற்படுத்தும்.

திரு.பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் தோற்கடிக்கப்படுவது அக்கட்சி முன்வைத்துள்ள தமிழீழ விரோத, தமிழர் விரோத அரசியலுக்கு விடப்படும் எச்சரிக்கையாக உணரப்படும்.

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் போராடிய மக்களை காவல்துறையைக் கொண்டு கடுமையாகத் தாக்கி ஒடுக்கிய அதிமுகவினை தோற்கடிக்க, முல்லைப் பெரியாறுக்காக தீக்குளித்து தியாகம் செய்த ஜெயப்பிரகாசு என்கிற தோழரையும் நினைவில் ஏந்தி போராடுவது அக்கட்சிக்கு ஒரு முக்கிய எதிர்வினையாகும்.

புதுச்சேரியில் திரு.நாராயணசாமி அவர்கள் தோற்கடிக்கப்படுவது மிகமிக அவசியம். தொடர்ச்சியாக தமிழர் எதிர்ப்பு அரசியல் நிலைப்பாட்டினை எவ்விதத் தயக்கமுமின்றி முன்வைக்கும் இவரைப் போன்ற அரசியல்வாதிகள் தோற்கடிக்கப்படுவது கட்டாயமாகும்.

ராமநாதபுரத்தில் பாஜக தோற்கடிக்கப்படுவதுவும், மீனவர்கள் கொலை செய்யப்பட்டபோது பாராளுமன்றத்தில் அமைதி காத்த திமுக தோற்கடிக்கப்படுவதும், பரமகுடி துப்பாக்கிச் சூட்டிற்காக அதிமுக தோற்கடிக்கப்படுவதும் பல செய்திகளை இந்தக் கட்சிகளுக்கு கொண்டு சேர்க்கும்.

இதுபோல பல்வேறு தொகுதிகளில் அங்குள்ள களநிலமைகளைச் சார்ந்தும், தோழமை அமைப்புகளின் கொள்கைகள் சார்ந்தும் செயல்திட்டங்களை வடிவமைத்து தேர்தலை எதிர்கொள்ள இயலும். தமிழர் நலனை முன்னிருத்தும் கூட்டணி இல்லாத சூழலில் தேர்தலை இடைமறித்து, மக்கள் வாழ்வாதாரப் பிரச்சனைகளை முன்னுக்கு கொண்டுவருவது ஓர் அரசியல் செயல்பாடாகவே பார்க்கிறோம். தேர்தலில் நம்பிக்கைகள் இல்லாத பொழுதிலும், இந்தப் பெரும் அரசியல் விழாவில் மக்கள் பங்கேற்கும் சூழலில், அரசியல் விழிப்புணர்ச்சிக்காக தேர்தல் சூழலைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிற தோழமைகள் இப்பணியில் கைகோர்க்க அழைக்கிறோம்.

தோற்றாலும் கூட பேரம்பேச ஏதுவாக குறைந்த பட்ச அளவிலேனும் வாக்குவங்கியை உருவாக்க முனையும் காங்கிரஸ், பாஜக கட்சிகள் தமது வைப்புத் தொகையினை இழக்கச் செய்யுமளவும், பிற இந்திய தேசியக் கட்சிகள் வலிமைபெறாமல் செய்யவும் பணியாற்றுவது அவசியம் என நம்புகிறோம்.

இந்த சூழலில் தமது பகுதி சார்ந்தும், சூழல் சார்ந்தும், கொள்கை சார்ந்தும், வாழ்வுரிமைப் பிரச்சனைகளை விவாதப்பொருளாக்க இத்தேர்தலை நாம் பயன்படுத்துவோம். தமிழீழ விடுதலையும், தமிழகத்தின் வாழ்வுரிமையும் இத்தேர்தலின் விவாதப் பொருட்கள், இதன் அடிப்படையிலேயே தமிழகம் இத்தேர்தலை சந்திக்கிறது என்கிற நிலையை உருவாக்க முயலுவோம் என்கிற கருத்தினை உங்களிடத்தில் முன்வைக்கிறோம். தவறவிடப்பட்ட மேலதிக விவரங்களையும் இதனுடன் இணைத்து இந்த செயல்திட்டத்தினை வலிமைப்படுத்த வேண்டுகிறோம்.

ஈழவிடுதலையை மறுக்கும் கொள்கையினை எதிர்த்தும், இனப்படுகொலைக் கட்சி காங்கிரஸினை திரும்பி எழாதவாறு முற்றும்முழுதாக துடைத்தெறியவும், மதப்பயங்கரவாதத்திற்கு எதிராகவும், இந்திய தேசிய அரசியலை மையப்படுத்தலை எதிர்த்தும், இந்திய அதிகார மையப்படுத்தலை எதிர்த்தும், உலகமயம்-தனியார்மய மசோதாக்களை எதிர்த்தும் மே 17 இயக்கம் களம் காணவிரும்புகிறது. இந்த மசோதாக்கள் பற்றிய புரிதல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க இந்தத் தேர்தலைப் பயன்படுத்துவோம். மக்கள் பிரச்சனைகளுக்கு கொள்கைகளை வகுக்கும் பெரும் கட்சிகள் பதில் சொல்லட்டும். இதில் கைகோர்க்க தோழமைகளை அழைக்கிறோம்.

இங்கு குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு பிரச்னை சார்ந்தும் தனிக் கட்டுரைகளை வெளியிடுகின்றோம். மேற்சொன்ன கோரிக்கைகளில் விடுபட்ட தகவல்களையும் சேர்த்துக்கொண்டு, உங்கள் பகுதிகளில் இருக்கும் சமூக மாற்றத்தை விரும்பும் தோழர்களோடும், இயக்கங்களோடும் இணைந்து, நீங்கள் ஒவ்வொருவரும் இந்தக் களத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, மக்கள் விரோதக் கட்சிகளை, வேட்பாளர்களை வீழ்த்த களம் காண அழைக்கின்றோம். ஒவ்வொரு களத்தையும், மக்கள் விரோத நகர்வுகளை அம்பலப்படுத்தவும், மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் பயன்படுத்துவோம்.

நாம் வெல்வோம்.

- மே பதினேழு இயக்கம்.

குறிப்பு : இக்கட்டுரையில் விடுபட்டுள்ளதாக இருக்கும் கருத்துக்களை இணைத்து, செழுமைப்படுத்தி அனைவருக்கும் பொதுவான கருத்தியலாக மாற்றி உங்களது இயக்கப் பெயரிலோ, கூட்டமைப்பு பெயரிலோ பயன்படுத்த வேண்டுகிறோம்.