‘பெரியாரின் வாழ்க்கை வரலாறு’ ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தியை திராவிட இயக்க ஆய்வாளரும் திரு. மா.பொ.சி அவர்களுடனும் முன்னாள் துணை வேந்தரும் கல்வி இயக்குநருமாகிய திரு. நெ.து. சுந்தரவடிவேலு அவர்களுடனும் இணைந்து பணியாற்றியவரும் கடந்த 15 ஆண்டுகளாக ‘இளந்தமிழன்’ என்ற இதழை நடத்தி வருபவருமான அய்யா தி.வ.மெய்கண்டார் அவர்கள் என்னிடம் கூறினார்கள். அதாவது, ‘1979 ஆம் ஆண்டு பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர் அரசு திரு. நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுத பணித்தது. திரு. நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் சுமார் 1000 பக்கங்களில் மூன்று தொகுதிகளாக எழுதி தமிழக அரசிடம் கொடுத்து விட்டார். இப்போது அந்த வரலாறு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை’ என்று என்னிடம் கூறினார்கள். நான் (கவி) அதிர்ந்து போனேன்.

பின்னர் இச்செய்தியை ‘நந்தன்’ அலுவலகத்தில் திரு. சுப.வீரபாண்டியன் அவர்களிடத்தில் கூறினேன். ‘சங்கொலி’ பத்திரிகையின் அப்போதைய பொறுப்பாசிரியர் க. திருநாவுக்கரசு, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோருடன் எடுத்துரைத்தேன். திருச்சி நீதிமன்ற வளாகத்தில் ஒரு நாள் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் திரு. கொளத்தூர் மணி அவர்களைச் சந்தித்து இந்த விவரங்களை அளித்தேன். இடையில் புதுச்சேரியில் எனது நண்பர் கோகுல் காந்தி அவர்கள் எழுதிய ‘கருப்புமலர்களின் நெருப்புப் பயணம்’ என்ற நூல் வெளியிட்டு நிகழ்ச்சியில் அய்யா தி.வ.மெய்கண்டார் அவர்கள் கலந்து கொண்டு பேசிய போது, இந்த பெரியார் வரலாற்று நூலைப்பற்றி குறிப்பிட்டார்கள். விடுதலை இராசேந்திரன் அவர்களும் புதுவை சுகுமாரன் அவர்களும் உடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். நான் தி.வ. மெய்கண்டாரின் பேச்சை எனது இதழான ‘பெரியார் பார்வை’-இல் அச்சிட்டு வழங்கினேன். திராவிட பேரவை பொதுச்செயலாளர் திரு. நந்திவர்மன் அவர்களும் இது குறித்து புதுவை அரசுக்கு மனு அனுப்பினார்.

பின்பு இது தொடர்பாக மேலும் விபரங்கள் கிடைக்கப்பெற்றேன். பெரியார் நூற்றாண்டு விழாவை மாவட்டம் தோறும் அரசு கொண்டாடிய போது திருவாரூர் மாவட்ட விழா தொடர்பாக 16.9.1979 ‘தமிழரசு’ இதழில் நன்னன் அவர்கள் ‘பெரியார் வரலாறு’ குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். திரு. நெ.து. சுந்தரவடிவேலு அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘நினைவு அலைகள்’ முன்னுரையிலும் இது குறித்த ஒரு பதிவைக் கண்டேன். இவை அனைத்தையும் சேர்த்து ஒரு மனு தயாரித்து ‘தமிழ்ச் சான்றோர் பேரவை’ நிறுவனர் அய்யா ஆனாரூனா அவர்களிடம் நானும் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு. செந்தில் அவர்களும் அளித்தோம்.

மறு நாள் 25.8.2004 அன்று திருவாரூருக்கு நடைபயணம் வந்த திரு. வைகோ அவர்களிடம் இந்த மனுவை எனது முன்னிலையில் ஆனாரூனா அவர்கள் அளித்தார்கள். இம்மனுவை அங்கேயே படித்த வைகோ அவர்கள் வியப்படைந்தார்கள். இத்தோடு இந்நிகழ்வு முடிவடைந்துவிட்டது என்று நினைத்தேன்.

சரியாக ஒரு வருடம் கழித்து பெரியார் திடலில் 2.12.2005 நடந்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட திரு.வைகோ அவர்கள், திரு. நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் எழுதிய பெரியார் வரலாற்று நூலைப் பற்றி விவரமாகப் பேசியிருக்கிறார். அந்நூல் வெளிவர தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.

நினைவு அலைகள்’ மூன்றாம் தொகுதி- ‘நெ.து.சு’ அவர்கள் முன்னுரையில் எழுதியுள்ளவையிலிருந்து....

முதல்வர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் பெரியார் வரலாற்றைச் சிறுவர்களுக்கு வண்ணப்படங்கள் வாயிலாகவும் பெரியவர்களுக்கு எழுத்தில் ஆயிரம் பக்கங்களிலும் உருவாக்கித் தருமாறு என்னைப் பணித்தார். அப்பெரும் பணிகளுக்குத் துணையாக, டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் தக்கார் குழு ஒன்றையும் நியமித்தார். பெரியார் வரலாறு - வண்ணப்படங்கள் என்ற நூலை முடித்துக் கொடுத்து நான்காண்டுகள் ஓடிவிட்டன. பெரியாரின் முழு வரலாற்றில் முதல் இருபகுதிகளை நான் அறுநூறு பக்கங்களில் கொடுத்து சில ஆண்டுகள் கழிந்து விட்டன. முதல் பாகத்தை எழுத்தெண்ணிப் படித்த நாவலர் ஈன்ற ஒப்புதலுக்குப் பின், அப்பகுதியை அச்சகம் ஒன்றிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகக் கேள்வி.(12.10.1988).

‘நினைவு அலைகள்’ நூலின் மூன்றாம் தொகுதியின் 905-906 ஆம் பக்கத்தில் எழுதியுள்ளவையிலிருந்து...

பெரியார் நூற்றாண்டு விழா வந்தது. அதைச் சிறப்பாக ஈடுஇணையற்ற முறையில் கொண்டாட ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் அரசு பெரியார் நூற்றாண்டு விழா எடுத்தது. அவ்விழா ஒவ்வொன்றிலும் எனக்கும் பங்கு கொடுத்து முதலமைச்சர் எம்.ஜி.ஆர் என்னைப் பெருமைப்படுத்தினார். பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவை யயாட்டி, மாவட்டத் தலைநகரங்களில் பெரியார் நினைவுத் தூண் நிறுவப்பட்டது. அதற்கான விழாக்களிலும் எனக்கு இடம் கொடுத்துச் சிறப்பித்தது தமிழக அரசு.

பெரியார் நூற்றாண்டு விழாவினையயாட்டி பெரியாரின் வாழ்க்கை வரலாற்றினை சிறுவர்களுக்கேற்ற வண்ணப்படங்கள் வாயிலாக வெளியிடுவது என்றும் பெரியோர்களுக்காக ஏறத்தாழ ஆயிரம் பக்கங்களில் வெளியிடுவது என்றும் பெரியாரின் புரட்சி மொழிகள் என்ற நூலினைத் தொகுப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. அதற்கு ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் தலைவர் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் ஆவார். அக்குழுவின் துணைத்தலைவராக அரசு என்னை நியமித்தது. வண்ணப்பட நூலையும் முழு வரலாற்றையும் தொகுக்கும் பொறுப்பினை என்னிடம் ஒப்படைத்தது. வண்ணப் படநூலையும் வரலாற்றில் முதல் பாகத்தையும் 300 பக்கங்களுக்கு மேலும் எழுதி முடித்துக் கொடுத்தேன். தம்முடைய பல அலுவல்களுக் கிடையிலும் நாவலர் நேரத்தை ஒதுக்கி வைத்து நான் தொகுத்த நூல்களிரண்டையும் வரி வரியாகப் படித்துப் பார்த்து வெளியிட ஒப்புதல் அளித்தார். பெரியார் வரலாற்றின் இரண்டாவது பகுதியையும் முடித்துக் கொடுத்திருக்கிறேன்