பண்டைய சமுதாயத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் அறிய இலக்கியங்கள் துணை புரிகின்றன. அச்சமுதாய மக்கள் காலம் காலமாக் கடைபிடித்து வரும் பழக்க வழக்கங்கள், பண்பாட்டுப் பதிவுகளை இன்றைய காலச் சூழலில் நோக்கும் போது வியப்பு மேலிடுகிறது. சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்கள் இல்லற நெறி, விருந்தோம்பல் பண்பு,பிறர் நலனில் காட்டும் அக்கறை ஆகியவற்றை; சிறப்பாக எடுத்துரைக்கின்றன.

ஐந்தினை ஐம்பதில் அன்புநெறி

சங்க இலக்கியங்களில் இல்லறச் செந்நெறிகள் பலவும் பரந்து கிடக்கின்றன. கணவனும் மனைவியும் மனமொத்து தன்னலமின்றி ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை காட்டி, விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்பதை பல பாடல்கள் நமக்கு உணர்த்துகிறன.

மாறன் பொறையனார் ஐந்தினை ஐம்பதில் கணவன் மனைவி எவ்வாறு விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்று நயம்பட உரைக்கிறார். இதனை

சுனைவாய்ச்சிறுநீரை எய்தாது என்று எண்ணிப்
பினைமான் இனிது உண்ண வேண்டிக் கலைமாதன்
கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர்
உள்ளம் படர்ந்தநெறி - (ஐ.ஐம்பது-38)

எனும் பாடல் மூலம் அறியலாம்.

பாலை நிலத்தில் ஓடிக்களைத்து தாகம் தீர்க்க நீர்வேண்டி ஆண்மானும் பெண்மானும் வருகின்றன. சுனையில் ஒருமான் அருந்துவதற்க்கு மட்டுமே சிறிது நீர் உள்ளது. ஒன்றை விட்டு மற்றொன்று நீரை அருந்தவில்லை. இந்நிலையில் பெண்மான் நீர் அருந்தட்டும் என்ற உயரிய நோக்கோடு ஆண்மான் தான் நீரைப்பருகுவது போல் பாவனை செய்தது. அதே போல் பெண்மானும் நீரைப் பருகாமல் ஆண் மான் அருந்தட்டும் என்று நீர் அருந்துவது போல் பாவனை செய்தது. தங்கள் அன்பினை இரு மான்களும் வெளிப்படுத்திய விதத்ததை நமக்கு உணர்த்துகிறது.

இதன்மூலம் இல்லற வாழ்வில் கணவன் மனைவி எவ்வாறு வாழவேண்டும் என்று ஆறறிவு மனிதனுக்கு அஃறிணை உயிர்கள் மூலம் அறிவுரை வழங்கப்படுகிறது.

முதுமையிலும் மனைவியை அன்பு பாராட்டல்

காதல் என்பது உடற்காமம் அன்று அதனையும் கடந்து மனதளவில் உயர்ந்து நிற்பதாகும.; மனைவியின் உடல் அழகு நீங்கி நரையோடு முதுமை வந்தபோதும் கணவன் அவளைப்போற்றுவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்பதை,

  ‘பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்த
  நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
  நீத்த லோம்புமதி பூக்கே ழூர’ (நற்றிணை)

நற்றிணைப்பாடலால் அறியலாம். 

கணவனின் இல்லமே பெரிதென உவத்தல்     

மனைவி தன் பிறந்த வீட்டில் செல்வச்செழிப்புடன் வாழ்ந்த போதும் தனக்கு மாலை சூட்டிய கணவனின் வீடு வறுமையுடையதாக இருப்பினும் தன் தாய் வீட்டை எண்ணாது தன் கணவனின் வீட்டையே பெரிதெனக்கொள்வதாக ஐங்குறுநூற்றுப் பாடல் அழகுறக்கூறுகிறது.

‘அன்னாய் வாழி வேண் டன்னை நம் படப்பை
  தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
  உவலைக் கூவற் கீழ
  மானுண் டெஞ்சிய கலிழி நீரே” (ஐங்குறுநூறு 203)

கணவன் வீட்டுத் தோட்டத்தில் தழைகள் வீழ்ந்து அழுகிய நிலையில் சிறிதாக நீர் நிலை உள்ளது அதிலுள்ள நீரை மான்கள் குடித்துவிட்ட நிலையில் எஞ்சிய நீரை அவள் அருந்துகிறாள். அது தன் தாயின் வீட்டில் தான் உண்ட தேன் கலந்த பாலைவிட இனிமை உடையதாக எண்ணி மகிழ்வதை பாடல் சுட்டுகிறது.

செல்வக்குடியில் பிறந்த பெண் தான் புகுந்த இடத்தில் காணும் வறுமையைப் போக்கிட வேண்டி தன் தாய் வீட்டை நாடிச் செல்வது இல்லை என்னும் சீரிய பண்பைக்கூறுகிறது. பின்வரும் அடிகள் நற்றிணை குறிப்பிடுகிறது.

'கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தாதை கொழுஞ்சோறு உள்ளாள’ (பாடல் 110)

வறுமையிலும் செம்மை

ஓர் ஆடையைக் கிழித்து இருவரும் உடுத்திக்கொள்ளும் வறுமை வந்தபோதும் கணவன் மனைவி இருவரும் அன்பினால் ஒன்றி வாழ்வதே இல்லற மாண்பாகக் கலித்தொகை குறிப்பிடுகிறது.

  ‘ஒரே ஒகை தம்முள் தழீஇ. ஒரோ ஒகை
  ஒன்றன் கூறாடை உடுப்பவரே யாயினும்
  ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை” (கலித்தொகை)

விருந்தோம்பலைப் போற்றும் பண்பு

  ‘மருந்தேயாயினும் விருந்தோடு உண்” என்று கொன்றை வேந்தர் குறிப்பிடுவது போல சங்க காலம் முதல் இன்று வரை இல்லறத்தில் விருந்தோம்பல் செய்வதை பெரிதும் போற்றப்பட்டு வருகிறது. எனவேதான் வள்ளுவர் விருந்தோம்பலுக்கென தனியே அதிகாரம் வகுத்து அப்பண்பை இவ்வுலகிற்கு சிறப்பாக எடுத்து இயம்புகிறார்.

  வீட்டிற்கு வந்த விருந்தினரை முகம் மலர வரவேற்று நன்கு உபசரித்து விருந்தோம்பி அவரை மகிழ்வுடன் அனுப்பிவிட்டு இனி யாரேனும் விருந்தினர்கள் வரமாட்டார்களா எனத் தன் வீட்டு வாயிலில் காத்திருப்பவன் விண்ணலகில் நல்ல விருந்தினராக மதிக்கப்படுவார்கள் என்கிறார்.

  ‘செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
  நல்விருந்து வானத்தவர்க்கு” – (குறள் 85)

என்ற குறள் மூலம் அறியலாம்.

நற்றிணை காட்டும் விருந்தோம்பல்

  நள்ளிரவில் தம் இல்லம்நாடி விருந்தினர் வந்தாலும் முகம் கோணாமல் பேணும் பெண்ணை நற்றிணை நயம்பட உரைக்கிறது.

  ‘அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும்
  முல்லை சான்ற கற்பின் மெல்லியல்” - நற்றிணை

  மேலும் கணவனும் மனைவியும் ஊடல் கொண்டிருக்கும் வேளையில் விருந்தினர் வரும்போது விருந்தினர்கள் முன்னிலையில் தங்களின் ஊடலைக் காட்டக்கூடாது என்று கருதி தங்கள் ஊடல் தணித்து அவர்களை விருந்தோம்பிப்பேணும் கடமையில் ஈடுபடுவர் என்பதை நற்றிணைப் பாடல் விருந்தோம்பல் சிறப்பை கூறுகிறது.

இல்லாளின் கடமை

சுற்றத்தாரிடம் சினம் கொள்ளாதிருத்தல் கணவன் வருவாய்க்கேற்பச் செலவு செய்தல், உறவினரை அன்புடன் பாதுகாத்தல், விருந்தினரைப் பேணல், தெய்வ வழிபாடு போன்ற பண்புகளை இல்லறப் பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என சங்கப் பாடல்கள் உணர்த்துகிறது.

‘வருவாய்க்குத்தக்க வழக்கறிந்து சுற்றம்
வெகுவாமை வீழ் விருந்தோம்பி - திருவாக்கும்
தெய்வத்தை எஞ்ஞான்றும் தெற்ற வழிபாடு
செய்வதே பெண்டிர் சிறப்பு'

  சங்க கால இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்கள் மூலம் கணவன் மனைவி எவ்வாறு ஒருவர் மீது ஒருவர் அன்போடு ஒழுகுவேண்டும் என்றும் விருந்தோம்பலை எவ்வாறு பேண வேண்டும் என்றும், தான்மட்டும் வாழாமல் இச்சமுதாயமும் பயனுறும்படி வாழவேண்டும் என்றும் எடுத்தியம்புகிறது.

- சி.திருவேங்கடம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It