அரசுப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் 3200 தொடக்கப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் முதல் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் ஆங்கில மொழியை பயிற்று மொழியாக கொண்ட வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேசுகையில் மக்கள் விரும்பினால் அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கில வழி பயிற்று வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்.

                தமிழ் மொழி ஆர்வலர்கள், பற்றாளர்கள், பல்வேறு தமிழ் அமைப்புகள், கல்வியாளர்கள், மொழியியல் அறிஞர்கள், சில அரசியல் கட்சிகள் என பலரும் இதை எதிர்க்கிறோம். ஆனால் பொது மக்கள் பெரும்பாலும் இதை ஆதரிக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது.

தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலக் வழி கல்வி கொடுப்பது அறிவியல் பூர்வமானதா? அவர்களை முன்னேற்றுமா? இது அவசியமா? என்பதை எல்லாம் விவாதிக்கும்முன் அவர்களில் இருந்தே துவங்குவோம். அரசும், ஆங்கில வழிக் கல்வியை ஆதரிப்பவர்களும் அதற்கு கூறும் காரணங்களை நாம் விரிவாகப் பார்ப்போம்.

பொது மக்களும் சரி, அவர்களுக்காகவே இதை செய்வதாக சொல்லும் அரசும் சரி இதற்கு என்ன என்ன காரணம் சொல்கிறார்கள் என்றால்,

1.  தமிழ் வழிப் பள்ளிகளில் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில அறிவு போதுமான அளவு இல்லை.

2.  அதனால் அவர்கள் உயர் கல்வியில் சரியாக படிக்க முடியவில்லை.

3. வேலை பணியிடங்களிலும் சிறப்பாக செயல் பட முடியவில்லை.

4. அவ்வளவு ஏன் பள்ளியில் மிக நன்றாக படித்து மருத்துவம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த பல மாணவர்கள் ஆங்கிலம் தெரியாத ஒரே காரணத்தால் படிப்பை பாதியிலேயே கைவிடுவதும், தேர்ச்சிபெறாமல் இருப்பதும், சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு செல்வதும் தொடர் நிகழ்வாகியுள்ள இந்த சூழலில் ஆங்கில வழி கல்விமுறை சிறப்பான திட்டம் தானே… என பல்வேறு காரணங்களைக் கூறுகிறார்கள்.

இந்த திட்டத்தை ஆதரிக்கும் அறிவுஜீவிகள், அல்லது அறிவுஜீவிகளாக தன்னை நினைத்துக் கொள்பவர்கள் எல்லாம் ஒருபடி மேலே போய் மொழிப் பற்று காரணமாக இதை எதிர்ப்பவர்கள் அவர்களை அறியாமல் ஏழை மாண‌வர்களின் வளர்ச்சியைத் தடுக்கிறார்கள். அரசு ஏழை மாணவர்கள் மேல் எவ்வளவு அக்கறையுடன், அவர்களும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக ஆங்கில அறிவு பெற்று, அதன் மூலம் அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர்த்த முற்படுவதைத் தடுக்கிறார்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு போதுமான ஆங்கில அறிவு இல்லை, வேலை வாய்ப்பில் பிரச்சனை என இவர்கள் கூறும் காரணம் எல்லாம் முற்றிலும் உண்மையே. ஆனால் இதற்கு தீர்வாக ஆங்கில வழிக் கல்வியை கூறுவது அறியாமையால் அல்லது அயோக்கியதனத்தால். எப்படி என்பதைக் காண்போம்

ஆங்கில வழிக் கல்வியில் படித்தால்தான் ஆங்கிலம் வருமா?

அப்படி எனில், அரசு இத்தனை ஆண்டுகளாக ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாவது வகுப்பு வரை (ஏன் கல்லூரி வரை) ஆங்கில மொழிப் பாடம் வைத்திருப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

இன்றைக்கு ஒரு 3 மாதம் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு (course) போனாலே ஆங்கிலத்தை நன்றாக கற்றுத் தருகிறார்கள். அப்படியிருக்க ஆங்கில அறிவுக்கு ஆங்கில வழிக் கல்விதான் ஒரே வழி என்பது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை.

3 மாதப் பயிற்சியில் மிகச் சிறப்பாக செய்ய முடிகிற ஒரு பணியை 12 ஆண்டு பள்ளி படிப்பில் ஆங்கிலப் பாடம் கற்றுக்கொடுத்தும் முடியாமல் போனதற்கு யார் காரணம்?

நாமெல்லாம் பல இடங்களில் பார்த்திருப்போம். வயசானவங்க பல பேர் அதிகம் படிச்சிருக்கமாட்டாங்க… ஆனா அருமையாக ஆங்கிலம் பேசுவாங்க. கேட்டால் அந்த காலத்து SSLC… அந்த காலத்து PUC ன் வாங்க…. அப்படியெனில், அந்த காலத்தில் அரசு தமிழ் வழிப் பள்ளிகளில் SSLC, PUC படிச்சவங்களாலேயே நல்லபடியாக ஆங்கிலம் படிக்க பேச முடிந்திருக்கிறது. இத்தனைக்கும் அப்போதெல்லாம் 6ஆம் வகுப்பிலிருந்துதான் ஆங்கிலப் பாடம் வரும். ஆனால் இப்போது அதைவிட நல்ல பாடத் திட்டம் இருந்தும் ஒண்ணாவதிலிருந்து பட்டப் படிப்பு வரைக்கும் ஆங்கிலம் கற்றுக் கொடுத்தும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவரால் கூட ஆங்கிலம் சரியாக, பேசவோ, எழுதவோ முடியவில்லை. இன்றைக்கும் பல கல்லூரி மாணவர்கள் கல்யாணத்துக்கு விடுப்பு எடுக்க கூட as I am suffering from fever னுதான் எழுகிறார்கள். அது ஏன் ஆங்கிலத்தில் எழுத வேண்டும்? தமிழில் எழுதக் கூடாதா, அதற்காக போராட வேண்டாமா என்பதெல்லாம் வேறு விடயம். 12 ஆண்டு கால பள்ளிக் கல்வி கொடுக்கத் தவறியதுதான் இங்கே முக்கியம். ஏனெனில் இதுதான் இன்று ஆங்கில வழிக் கல்வி என்ற அயோக்கிய அரசியல் செய்ய அரசுக்கு வாய்ப்பளித்துள்ளது. இதுக்கெல்லாம் யார் காரணம்? படிக்காதவனால் முடியவில்லை என்றால் அவனை குற்ற‌ம் சொல்லலாம். முதல் மதிப்பெண் எடுப்பவனாலேயே முடியவில்லை என்றால்…. மருத்துவ, பொறியியல் படிப்புக்கு இடம் கிடைத்த பையன்கள் ஆங்கிலம் தெரியவில்லை என்று தற்கொலை செய்கிறார்கள் என்றால் யார் காரணம்?

3 மாதப் பயிற்சியில் (course) செய்யமுடிவதை 12 ஆண்டுகளாக செய்ய முடியாமைக்கு காரணம் சரியான ஆசிரியர்கள் இல்லாததும் அப்படி இருந்தாலும் சரியாக செயல் படாததும் தான்.

பெரும்பான்மையான அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பாடத்தை கணிதம், அறிவியல், வரலாறு, பொருளியல் என பிற பாடங்களில் பட்டம் படித்த ஆசிரியர்கள்தான் நடத்துகிறார்கள். அந்த ஆசிரியர்களைப் பொருத்தவரை தங்கள் பள்ளிப் படிப்பை அரசுப் பள்ளியில் படித்தவர்கள். கல்லூரியிலும் தமிழிலேயோ அல்லது அரை குறை ஆங்கிலத்திலோ படித்தவர்கள்தான். அவர்கள் தாங்கள் படித்த அறிவியல், கணக்கு பாடங்களையே சரியாக நடத்தாத இன்றைய சூழலில் தங்களுக்கு முழுமையாகத் தெரியாத ஆங்கிலப் பாடத்தை எப்படி நடத்துவார்கள் என யோசித்துப் பார்த்தாலே தெரியும். அதனால்தான் வெளியே ஒரு தனியார் ஆங்கிலப் பயிற்சி நிலையத்தில் 3 மாதத்தில் மிகச் சரியாக செய்யும் ஒரு வேலையை ஒண்ணாம் வகுப்பு முதல் கல்லூரி வரை ஆங்கிலம் நடத்தியும் செய்யமுடியவில்லை. அப்படியே ஆங்கிலம் பட்டம் பெற்ற ஆசிரியர் இருந்தாலும் அவரும் சரியாக பாடம் நடத்துவதில்லை. இதை ஒழுங்குப்படுத்தினாலே ஆங்கில அறிவுப் பிரச்சனையைத் தீர்க்கலாம்.

இது புரியாமல் மக்கள் இதை ஆதரிப்பது அறியாமையால். ஆனால் சில அறிவு ஜீவிகளுக்கும் அரசுக்கும் இது தெரியாததல்ல. அவர்கள் இதை செய்வது அயோக்கியத்தனமாகும்.

அரசு அடுத்து கூறுவது,

ஆங்கில வழிக் கல்வியாக்குவதால் தனியார் பள்ளிகளில் படிப்பவர்களைப் போன்ற ஆங்கில அறிவு ஏழை மாணவர்களுக்கும் கிடைக்கும்; இதனால் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மேம்படும் என்பது. இது உண்மையா?

இதில் 2 விடயம்,

தனியார் ஆங்கில வழிப் பள்ளியில் படிப்பவர்கள் அனைவருக்கும் ஆங்கில அறிவு முழுமையாக உள்ளதா எனில் இல்லை என்பதே நிதர்சனமாகும். அவர்கள் வெறும் மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்கள்ளாகவே இருக்கிறார்கள் என்பதே உண்மை. அவர்களில் பலர் அதிக மதிப்பெண் எடுத்தாலும் கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் ஆழ்ந்த சிந்தனையும், அறிவும் அற்றவர்களாக உள்ளார்கள் என பல ஆய்வுகள் நிருபித்துள்ளன.

அடுத்து, ஆங்கில பாடத் திட்டம் வந்தால் உடனே அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களும் ஆங்கிலப் புலமை பெற்றுவிடுவார்களா?.

ஆங்கில பாடத் திட்டம் வந்தாலும் பாடம் எடுப்பவர்கள் அதே ஆசிரியர்கள்தான். இந்த ஆங்கில வழி பாடத் திட்டம் மூலம் இனி கணக்கு, அறிவியல், வரலாறு, பொருளியல் பாடங்களை நேற்று தமிழில் எடுத்த ஆசிரியர்கள் இனி ஆங்கிலத்தில் நடத்துவர். ஏற்கனவே சொன்னது போல் தமிழ்வழியில் படித்த இவர்கள், ஆங்கிலப் பாடத்தை எடுத்த நிலைமைதான் இன்றைக்கு ஆங்கில வழிக் கல்வி தேவையை உருவாக்கியுள்ளது. இவர்கள் இனி கணக்கையும் அறிவியலையும் ஆங்கிலத்தில் எடுத்தால், கல்வித் தரம் எப்படியிருக்கும்?

இன்றைக்கு கொஞ்சம் நஞ்சம் மருத்துவ, பொறியியல் படிப்புக்கு செல்லும் கிராமப்புற ஏழை, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறையும்.

ஆசிரியர் சரியாக நடத்தாத போதும் ஏதோ தமிழில் என்பதால் சுயமாகவே படித்து மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்கு அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதால் அந்த வாய்ப்பும் பறிபோகும் நிலை ஏற்படும்.

பல்வேறு மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடும் நிலை அதிகமாகும். மொத்தத்தில், அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் இப்போது இருப்பதை விட கண்டிப்பாக குறையும்.

அடுத்து அரசு கூறுவது,

இன்றைக்கு மாணவர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி செல்வதை தடுத்து நிறுத்தும் என்பது. தடுத்து நிறுத்துமா?

அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் குறையும் போது தனியார் பள்ளிகளில் படிப்பவர்களை அரசுப் பள்ளியை நோக்கி இழுக்குமா அல்லது அரசுப் பள்ளியில் படிக்கும் மீதி மாண‌வர்களையும் தனியார் பள்ளியை நோக்கி ஓட வைக்குமா?

ஏழை, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாண‌வர்களின் நலனுக்கு என்ற போர்வையில் கொண்டுவரப்பட்ட இந்த ஆங்கில வழிக் கல்வி மூலம், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஆங்கில வழி கற்பித்தலுக்கு அஞ்சி மீதம் உள்ள மாணவர்களையும் தனியார் பள்ளியை நோக்கி தெரித்து ஓடச்செய்யும் அரசின் உள்நோக்கம் மிக அருமை.

கம்பும் உடையாமல் பாம்பும் சாவாமல் என்பது போல ஒருபுறம் ஆங்கில வழிக் கல்வி என்ற கலர் படம் காட்டி மக்களுக்கு நன்மை செய்வது போல் மக்களிடம் நல்ல பேர் எடுப்பதும், மறு புறம் அதே ஆங்கில வழிக் கல்வி மூலம் அரசுப் பள்ளியில் மீதம் உள்ள மாணவர்களையும் தனியாரை நோக்கி ஓடவைத்து தங்களுக்கு படியளக்கும் கல்விக் கொள்ளையர்களுக்கு சேவகம் செய்வதும் என அரசு ஒரே கல்லில் 2 மாங்காய்களையும் சரியாக அடித்துள்ளது.

சம்ச்சீர் கல்வி வந்தபோது தங்கள் கல்லா பெட்டிக்கு ஆபத்து வந்து விடுமோ என அஞ்சி அதற்கு எதிராக போராடிய கல்வித் தந்தைகள் இதற்கு மௌனம் சாதிப்பதிலிருந்தே நாம் புரிந்து கொள்ள வேண்டாமா?

உண்மையில் அரசு சொல்வதுபோல் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அரசுப் பள்ளியை நோக்கி வருவதாக இருந்தால் இவர்கள்தான் இதை முதலில் எதிர்ப்பார்கள்.

ஒரு புறம் கல்வி கட்டாயச் சட்டம், 100% கல்வி என கூறிக்கொண்டே இந்த ஆங்கில வழிக் கல்வி மூலம் பள்ளியை விட்டே தெரித்து ஓடச்செய்யும் ஜெ.அரசின் உள்நோக்கம் மிக அருமை.

ஆனால் இந்த கல்வி முறையில் ஒரே ஒரு நன்மை தான். இனி எந்த அரசு பள்ளி மாணவரும் கல்லூரியில் ஆங்கிலம் தெரியாததால் தற்கொலை வரை செல்லமாட்டான். கல்லூரி வரை போனால்தானே தற்கொலை எல்லாம்.

உண்மைகள் இப்படி இருக்க, கோத்தாரி கமிஷன் போன்று கல்வி சம்பந்தமாக அரசு அமைத்த பல்வேறு குழுக்களின், தாய்மொழி வழிக் கல்வி, பொதுப் பள்ளி, அருகாமை பள்ளி போன்ற பல பரிந்துரைகளும், கல்வி தனியார் மயம், கல்விக்கொள்ளை என கல்வி சம்பந்தமாக தீர்க்கப்படாமல் உள்ள பல விடயங்கள் அப்படியே கிடப்பில் கிடக்க அவசர அவசரமாக ஆங்கில வழிக் கல்விக்கு அரசு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் என்ன?

முதன்மையாக இரண்டு விடயங்கள்….

1.ஆங்கில வழிக் கல்வி மூலம் அரசுப் பள்ளிகளின் தரம் குறையச் செய்து தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்களை ஓடச் செய்வதன் மூலம் அரசுப் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கையை மேலும் குறைத்து, அதன் மூலம் ஆசிரியர் எண்ணிக்கையை குறைத்து கடைசியில் தங்கள் எஜமானர்களாகிய ஏகாதிபத்தியங்கள், அதற்கு ஏவல் செய்யும் உலக வங்கி ஆகியவற்றின் பரிந்துரைப்படி கல்வியை முழுமையாக தனியாருக்கு தாரை வார்ப்பது என்பதற்காகவும்,

2.பல்வேறு மொழி பேசும் பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கும், ஒற்றை மொழி, ஒற்றைப் பண்பாடு, ஒரே தேசம் என உருவாக்கத் துடிக்கும் இந்திய பேரரசின் கொள்கையை நிறைவேற்றுவதற்காகவும்தான்.

ஏற்கனவே இந்திய பேரரசு இந்தியை திணிக்க இருமுறை முயன்றபோது தமிழ்நாடு மிக வலிமையாக இந்தி எதிர்ப்பு மொழிபோர் (மொழிப்போர் I - 1937, மொழிப்போர் II - 1964) நடத்தி இந்தியைத் தடுத்தது. ஆனால் அந்த இரண்டு முறையும் நாம் அடைந்தது முழுமையான வெற்றியல்ல.

எப்படியெனில் இந்திய அரசின் இந்தி திணிப்பு 2 கூறுகளைக் கொண்டது. 1. இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய மொழிகளை அழிப்பது. 2. இந்தியை ஒற்றை மொழியாக்குவது (அதன் மூலம் சமஸ்கிருதத்தை இந்திக்கு பதிலீடு செய்வது இறுதி லட்சியம்)

தமிழ்நாட்டின் 1965 இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போரின் மூலம் ஆங்கிலம் இந்திய துணை கண்டத்தின் துணை ஆட்சி மொழியாக நீட்டிக்கப்பட்டது. இதில் இரண்டாவது கூறான இந்தியை எதிர்ப்பதில் வெற்றி பெற்றோம். ஆனால் அதன் அடி நாதமான மற்ற மொழிகளை அழிப்பது என்பதில் தோற்றோம். இந்தி செய்ய வேண்டிய வேலையை இன்று ஆங்கிலம் செய்கிறது. இதற்கு முக்கிய காரணம் அப்போதைய திமுகவின் தவறான மொழிக் கொள்கையே ஆகும். அவர்கள் அப்போது தூக்கிப் பிடித்தது இரு மொழிக் கொள்கை. அவர்களின் முழக்கம் hindi never, English ever என்பதாகும். அதன் விளைவே இன்றைய ஆங்கில ஆதிக்கம். அந்த இரு மொழிக் கொள்கையை ஒரு மொழிக் கொள்கையாக அதையும் ஆங்கில மொழிக்கொள்கையாக கொண்டு அனைத்தும் ஆங்கிலமயமாக்க (Tamil Never English Ever ஆக்க) இன்றைய ஜெ.அரசு துடிக்கிறது. காரணம், கல்வி கொள்ளை அடிக்கும் கல்வித்தந்தைகளின் கல்லாப்பெட்டியின் நலனுக்காகவும், அன்று ஆங்கிலேயர்களுக்கு ஏவல் பணி தேவையை ஈடு செய்ய கொண்டு வரப்பட்ட மெக்காலே கல்விமுறையின் தொடர்ச்சியாக இன்று பன்னாட்டு நிறுவனங்களில் பணி செய்யத் தேவையான நவீன கூலிகளை உருவாக்கவும் கொண்டுவரப் பட்டதுதானே தவிர, இதில் மக்கள் நலன் சிறிதும் இல்லை.

தெளிவாக சொல்ல வேண்டுமானால் கல்வி வளர்ச்சிக்கு தாய்மொழி வழிக் கல்வியே ஒரே தீர்வு ஆகும்.

இந்த ஆங்கில வழிக் கல்வி என்பது…. நம்மீது தொடுக்கப்பட்டுள்ள மொழிப் போர்:

 மூன்றாம் கட்ட மொழிப்போர் துவங்க வேண்டிய தருண‌ம் இது. இதில் நம்முடைய அரசியல் இந்தியையோ, ஆங்கிலத்தையோ அல்லது தாய் மொழி தவிர்த்து அரசால் திணிக்கப்படும் எந்த ஒரு மொழியையும் முழுமையாக மறுப்பதுடன் எதிர்ப்பதுடன் முடிந்து போக முடியாது. ஆரம்பக் கல்வி முதல் வேலை வாய்ப்பு வரை அனைத்தும் முழுமையாக தாய் மொழியிலேயே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதுதான் பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடமாக விளங்கும் இந்த நாட்டில், மூத்த தேசிய இனமாக கருதப்படும் தமிழர்களாகிய நமக்கு, நம் தாய் மொழியைக் காக்க நான்காம் கட்ட மொழிப்போர் உருவாவதைத் தவிர்க்க பயன்படும்.

இப்படி கல்வி முதல் வேலை வரை அனைத்தும் தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என கூறும்போது இயல்பாகவே நமக்கு சில கேள்விகள் எழும்.

கல்வி முழுவதும் எனும்போது மருத்துவம், பொறியியல், கணிணி என அனைத்தும் தாய் மொழியில் இருப்பது சாத்தியமா? இதற்கெல்லாம் ஆங்கிலம் தேவையே இல்லையா?

கண்டிப்பாக. அனைத்தும் தாய் மொழியில் இருப்பதும், படிப்பதும் சாத்தியமானதாகும் என்பதோடு அதுவே அதில் அந்தப் பாடங்களில் முழுமையான அறிவு பெறுவதற்கு சரியான அறிவியல் பூர்வமான வழியாகும்.

வளர்ந்த நாடுகள் அனைத்திலும் அனைத்து கல்வியும் முழுமையாக தாய் மொழியில் தான் கற்றுத் தரப்படுகிறது. பெரும்பான்மையான உலக நாடுகளில் இதே நிலைதான். ஜப்பானில் அனைத்தும் ஜப்பானிய மொழியிலும், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, சீனா, இஸ்ரேல்….. என பெரும்பான்மையான நாடுகளில் அனைத்துக் கல்வியும் தாய் மொழியில் தான் கற்று தரப்படுகிறது. தாய் மொழியில் படித்த கியூப மருத்துவர்கள்தான் உலகின் மிகச் சிறந்த மருத்துவர்களாக இருப்பதுடன் உலகின் எந்த பகுதியில் மருத்துவ உதவி தேவைப்பட்டாலும் முதலாக உதவிக்கு நிற்கிறார்கள்.

அப்படியானால் தமிழ் நாட்டில் தமிழிலேயே அனைத்தையும் கற்றுத் தரலாமா? அது சரியானதா?

கண்டிப்பாக செய்யலாம். செய்ய வேண்டும். அதுதான் சரியானது. தாய் மொழியில் படிப்பதுதான் அறிவியல் பூர்வமானது. அனைவரும் சிந்திப்பது அவரவர் தாய் மொழியில்தான். அதே தாய் மொழியில் கற்பதுதான் நம் சிந்தனையை, கற்பனை வளத்தை வளர்க்கும் என்பதோடு அதுதான் முழுமயாக புரிந்து கொள்ள உதவும். இது ஏதோ தமிழ் மொழி மீதான பற்றின் காரணமாக கூறுவதாக பார்க்கக்கூடாது. இது மொழிப் பிரச்சனை மட்டுமல்ல. இது கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சனை. சரியான கல்வி என்பது தாய் மொழியில் தான் இருக்க வேண்டும். இது உலகில் பல்வேறு ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் கல்வி சம்பந்தமாக அமைக்கப்பட்ட கோத்தாரி கமிஷன் போன்ற பல்வேறு குழுக்களின் பரிந்துரைகளும் இதுதான். உலகின் அனைத்து மொழியியல் அறிஞர்களும் வலியுறுத்துவது இதைத்தான்.

அப்படியானால் ஆங்கிலம்தான் அறிவியல் மொழி என்று கூறுகிறார்களே?

சுத்தப் பொய். தனியார் பள்ளிகளின் வியாபார வேட்டைக்காக கூறப்பட்ட பொய். உலகின் பெரும்பான்மையான அறிவியல் கண்டுபிடிப்புக்கள் பிற மொழி அறிஞர்கள் கண்டுபிடித்ததுதாம். அவர்களில் பெரும்பாலோர்க்கு ஆங்கிலமே தெரியாது. அவர்கள் அனைவரும் தங்கள் தாய் மொழியில் படித்தவர்கள்தான். அது மட்டும் அல்ல ஆங்கிலம் என்பது ஒரு மொழி. அதைத் தெரிந்திருப்பது மொழி அறிவு (ஆங்கில அறிவு) மட்டும்தான். அதுவே அறிவாகிவிடாது. அமெரிக்காவில் பிச்சை எடுப்பவன் கூட ஆங்கிலத்தில் பேசுகிறான். அவனுக்கு அறிவியல் அறிவு இருப்பதாக அமெரிக்க நிறுவனங்கள் ஏன் வேலை கொடுப்பதில்லை? ஆங்கிலம் தெரிந்தால்தான் அறிவாளி என்பதெல்லாம் 300 ஆண்டுகால ஆங்கிலேயர் ஆட்சியால் வந்த வினை. அவன் நம்மை ஆண்டதால் அவனை அறிவாளியாகப் பார்த்தோம். அவன் வசதிக்காக ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு வேலை கொடுக்க, அவர்களையும் அறிவாளியாக பார்த்தோம். அதன் தொடர்ச்சியைத்தான் இன்றும் பார்கிறோம். இதில் கொடுமை என்னவென்றால் இன்றைக்கு அரைகுறை ஆங்கிலம் தெரிந்தவர்கள் கூட தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்ள, ஆங்கிலம் தெரியாத அடித்தட்டு மக்களிடம் ஆங்கிலத்தில் பேசி புளகாங்கிதம் அடைகிறார்கள்.

வேலை என்றதும் நினைவுக்கு வருகிறது. இன்றைய உலக மய சூழலில் ஆங்கிலம் தெரியாமல் எப்படி நல்லவேலைக்கு போவது? அதுவும் இன்றைக்கு உச்சத்தில் இருக்கும் கணிணி துறைக்கு குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆங்கிலம் இல்லாமல் எப்படி?

வளர்ந்த நாடுகள் அனைத்திலும் அனைத்து வேலை வாய்ப்புகளும் தாய்மொழியில்தான் உள்ளது, கணிணி துறை உட்பட. ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளின் கணிணி துறையில் கூட தாய் மொழியில்தான் வேலை செய்கிறார்கள். உடன் பணி செய்பவர்களிடம் தாய் மொழியில்தான் பேசுகிறார்கள். ஜெர்மனி, ஸ்வீடன் என அனைத்து வளர்ந்த நாடுகளிலும் பல வளரும் நாடுகளிலும் இதே நிலைதான். ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் பணி செய்பவர் பிரான்ஸ் மொழியில் பணி செய்கிறார். உடன் பணி செய்பவரிடம் பிரான்ஸ் மொழியில் பேசுகிறார். அதே பன்னாட்டு நிறுவன ஜப்பானிய கிளையில் அனைத்தும் ஜப்பானிய மொழியில் நடக்கிறது. அங்கெல்லாம் தவிர்க முடியாத தேவைகளுக்கு மட்டுமே ஆங்கிலம். ஆனால் அதே பன்னாட்டு நிறுவன தமிழ்நாட்டுக் கிளையில் கணிணியில் ஆங்கிலத்தில்தான் பணி செய்கிறார்கள், உடன் பணிபுரிபவர்களிடம் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். அனைத்தும் ஆங்கிலமே.

பிறகு தமிழ்நாட்டில் ஏன் ஆங்கிலத்தை பிடித்து இப்படி தொங்குகிறார்கள்?

இதுதான் தமிழினத் தலைவர்களும், தமிழின தலைவிகளும் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்த தொண்டு. செம்மொழி பாடல் எழுதுவர். வள்ளுவனுக்கும் தமிழ்த் தாய்க்கும் கோடிக்கணக்கில் செலவழித்து சிலை வைப்பர். தமிழுக்கு உலை வைப்பர்.

உலகின் மூத்த மொழி… உயர் தானி செம் மொழி… என்றெல்லாம் பெருமை பேசுவர். அதே தமிழ் நாட்டில்தான் ஆங்கிலம் படித்தால்தான் வேலை வாய்ப்பு என்ற நிலைக்கு நம்மைத் தள்ளி வேடிக்கை பார்ப்பர். இந்த அரசுகள் தான் இன்று ஆங்கிலத்தை பயிற்று மொழி ஆக்கி அதுதான் தேவை என்ற சூழலுக்கு மக்களை தள்ளி தமிழ் மொழியின் தேவையை அருகச் செய்து, மாணவர்களுக்கு அது ஒரு தேவையற்ற பாட சுமையாகி அழிக்கும் சூழலுக்கு கொண்டுவந்து நிறுத்தத் திட்டமிட்டுள்ளன.

தமிழ்த் தாய்க்கு சிலை வைப்பதை விட… ஜப்பான், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி… என ஆங்கிலத்தைப் புறக்கணித்து தன் தாய் மொழிக் கல்வியால் தாய் மொழியிலேயே வேலை வாய்ப்புகளை கணிணி வரை உருவாக்கி… வளர்ச்சியடைந்த உதாரணங்களைப்போல எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலைமையை தமிழ்நாட்டில் உருவாக்க மக்களை அணி திரட்டுவோம்.

1.அனைத்து மக்களுக்கும் பள்ளிக் கல்வி முதல் பல்கலை கழகம் வரை அனைத்து கல்வியையும் தாய்மொழி வழி பெற உறுதி செய்ய வேண்டும்…

2.தமிழ் நாட்டில் அனைத்து அரசு (தமிழக, மத்திய), நீதி மன்றங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தமிழை அலுவல் மொழியாக்கவும் ஆவண செய்ய வேண்டும்.

3. தமிழ் நாட்டு மக்கள் தமிழ் நாட்டுக்கு வெளியே இந்திய அரசுடன் அனைத்து தொடர்புகளும் தமிழிலேயே இருக்க வேண்டும். அனைத்து மொழி பேசும் மக்களும் தம் தாய் மொழியிலேயே இந்திய அரசுடனான தொடர்பு கொள்ளும் உரிமையை உறுதிசெய்ய வேண்டும்.

தமிழே தெரியாத பிரதமர் நம்மை ஆளும்போது தமிழ் மட்டுமே தெரிந்த ஒருவர் ஏன் ஆளக்கூடாது? உச்ச நீதி மன்றத்தில் தமிழே தெரியாத நீதிபதி என்னை விசாரிக்கும்போது. தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் ஏன் தமிழிலேயே தங்கள் மனுக்களை தாக்கல் செய்யக்கூடாது? போன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழும்புமாறு பரப்புரை செய்ய வேண்டும். தீர்வுகள் எட்டப்படவேண்டும்.

அனைவருக்கும் அனைத்தும் தாய்மொழி வழியிலேயே கிடைக்க ஆவண செய்யப்போகும் மூன்றாம் கட்ட மொழிப் போர் வெல்லட்டும்.

- வெ.பி.வினோத்குமார், தேசிய பொதுக்குழு உறிப்பினர், தமிழ்நாடு மக்கள் கட்சி. 9994262666. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.