அன்பார்ந்த தமிழர்களே தமிழ்த் தேச மக்களே!

போர் நிறுத்தம் கோரி முத்துக்குமார் உள்ளிட்ட 19 தமிழர்கள் தன்னுடலைத் தீக்குத் தந்து மாண்டார்கள். தமிழர் உள்ளமெல்லாம் கொதித்தது. தமிழகம் போராட்டக் களமானது. தமிழகச் சட்டமன்றம் தீர்மானம் இயற்றியது. போர் நிறுத்தம் ஒன்றே தமிழகத்தின் குரலாய் ஒலித்தது. போர் நிறுத்தப்பட்டதா? நிறுத்தப்படவில்லை. ஏன்? இனப்படுகொலைக்கு இந்தியா துணையாக இருக்கக்கூடாது எனக் கோரினோம். கேட்டதா இந்தியா? இலங்கையாடு கூட்டுச் சேர்ந்து தமிழர்களைக் கொலை புரிந்தது. ஏன்? போருக்குப்பிறகு, இனப்படுகொலைக்கு நீதி கேட்டோம். சுதந்திரமான பன்னாட்டு விசாரணை கோரினோம். முள்வேலி முகாம். சிறை, தமிழகத்தின் சிறப்பு முகாம்களில் இருக்கும் தமிழர்களை விடுவிக்கக் கோரினோம். தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு குடியுரிமை கோரினோம். நம்முடைய குரலுக்கு செவி சாய்த்தவர்கள் யார்? கோரிக்கையை ஏற்றவர் யார்? நடைபெற்ற அநீதிக்கு நேரடியாக ஐ.நா. மன்றத்திலும் பன்னாட்டு அரசுகளிடமும் முறையிடக்கூட வக்கற்ற நம் நிலைக்குக் காரணமென்ன?

எல்லா கேள்விகளுக்கும் ஒரே விடை, தமிழருக்கெனறு ஓர் அரசு இல்லை. குறைந்தபட்சம் அதிகாரம்கூட இல்லை என்பதே இதற்குக் காரணம். நீதியை மட்டுமே கொண்ட அதிகாரமற்ற நம்மால் யாருக்கும் ஆதரவாகவும் இருக்க முடியாது. எதிராகவும் இருக்கமுடியாது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் கூறியதுபோல் இந்த உலகம் நீதியின்பாற்பட்டு இயங்கவில்லை. தன்னலம், அதிகாரத்தின்பாற்பட்டே இயங்குகிறது.

அதிகாரம் மிக்க இந்த உலகில் நம் சட்டமன்றத்தின் நிலை என்ன? தமிழீழ விடுதலை, கச்சத்தீவு மீட்பு, தமிழக மீனவர் படுகொலை ஆகியவை குறித்து தமிழகத்தின் உச்சபட்ச அமைப்பான தமிழக சட்டமன்றம் பல்வேறு தீர்மானங்களை இயற்றியுள்ளது. இந்தத் தீர்மானங்கள் ஏன் நடைமுறைக்குச் செல்லவில்லை?

தமிழக சட்டமன்றம் தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மையுள்ள அவையாக இருந்தாலும் அவற்றுக்கு இறையாண்மையுள்ள அதிகாரம் இல்லை என்பதால்தான் தீர்மானிக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்த இயலாதநிலையில் உள்ளது. இந்திய மேலாதிக்கத்தின்கீழ் ஒரு நகர்மன்றமாகவே உள்ளது. பார்ப்பன - பனியா நலன்களைப் பாதுகாக்கக்கூடிய ஆரியப் பார்ப்பன இனச்சார்பு, தேசிய இனங்களை ஒடுக்கும் ஒற்றையாட்சி வல்லாதிக்கம், இத்துணைக் கண்ட மேலாதிக்கம் ஆகிய மூன்று கூறுகளே இந்தியாவின் உள்ளுறவு, வெளியுறவுக் கொள்கையாக உள்ளன. இத்தகைய இந்தியா நம் நிலையை ஏற்குமா? நம் குரலுக்குச் செவிசாய்க்குமா? இத்தன்மையை ஒழிக்காமல் தமிழர் குறித்த இந்தியாவின் நிலைமட்டும் மாறும் என்றால் அது மீண்டும் ஓர் அமைதிப்படையாகத்தான் இருக்கும்.

தமிழர், தமிழ்நாடு குறித்த இந்தியாவின் வெளியுறவு, உள்ளுறவுக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைத் தமிழக சட்டமன்றத்திடம் ஒப்டைக்கக் கோருவது, சிங்களப் படையிடமிருந்து தமிழகக் கடல் உரிமையையும் பாதுகாக்கத் தமிழக கடல்பரப்பைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தமிழகக் கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்கக் கோருவோம். மேலும், கச்சத்தீவை இலங்கையிடமிருந்து திரும்பப் பெறுவது, தமிழ்நிலத்தின் மீது தமிழக அரசு முழு உரிமை பெறுவது, அதேபோல் தமிழகத்தில் குடியேறி இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கும் அதிகாரத்தைத் தமிழக அரசு பெறுவது, அதேபோல் தமிழகத்தில் இருந்து இந்திய அரசு எடுத்து செல்லும் வளம் மற்றும் வருவாய்க்கான வரவு, செலவுக் கணக்கைத் தமிழக சட்டமன்றத்திடம் ஒப்படைக்கக் கோருவது.

நாம் உடனடியாகக் கோரும் இவ்வதிகாரங்கள் இந்தியாவில் ஒடுக்கப்பட்டுள்ள எல்லா இனங்களுக்கும் உரியதாகும். அத்துடன் இந்திய அரசமைப்பில் நாம் நீடிக்கும்வரை, இந்திய அரசில் ஒவ்வொரு இனத்திற்கும் ஒரே மதிப்பு என்ற அடிப்படையில் இனச் சம ஒதுக்கீடு கோருவோம். ஆரியப் பார்ப்பன இனச் சார்பு, ஒற்றையாட்சி வல்லாதிக்கம், இத்துணைக் கண்ட மேலாதிக்கம் இந்தியாவின் இத்தன்மைகளை உடைத்தெறியும் இக்கோரிக்கைகளை முன்வைத்து போராடுவதன் ஊடாக தமிழ்த்தேசத்தை அதிகாரப்படுத்துவோம், தமிழ்த்தேசிய விடுதலையை முன்நகர்த்துவோம், தமிழீழ விடுதலைக்குத் துணை நிற்போம். இதுவே நமது தமிழீழ ஆதரவு, தமிழகச் செயல் திட்டமாகட்டும்.

அரசியலை ஆணையில் வைப்போம்!
அமைப்பாய் அணிதிரள்வோம்!
தமிழர்-வாழ்வை-வளத்தை-வரலாற்றை மீட்டெடுப்போம்!

- தமிழர் குடியரசு முன்னணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It