திருவள்ளுவர் ஆண்டு 2044, பங்குனி ஏப்ரல் 1-15-2013 நாளிட்ட தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் - தமிழ்நாட்டில் புத்த பிக்குகளை தாக்கியது சரியா? தவறா? என்றுள்ள தங்களின் கட்டுரையில் தங்கள் வாதத்திற்கு ராஜராஜசோழனை துணைக்கு அழைத்த தங்கள் கருத்துடன் முரண்படுகிறேன். சிங்கள இன வெறியின் மூலாதார ஊற்றுக்கு புத்த பிக்குகள் முழு முதல் காரணமாக இருப்பதால் அவர்கள் தமிழகம் வந்தபோது எதிர்த்துத் தாக்கினோம் என்று ஒற்றை வரியில் பதில் சொல்வதை விட்டுவிட்டு, இராஜராஜ சோழன் வரலாற்றையும் பெருமிதத்தையும் ஏன் துணைக்கு அழைக்கிறீர்கள்? இதன் முலம் தாங்கள் எத்தகைய தமிழ்த் தேசியத்தை உருவாக்கப் பார்க்கிறீர்கள்?

ராஜராஜன் காலம் பரம்பரை ஆட்சி நிலவிய சர்வாதிகார முடியாட்சி காலம். அக்காலம் தொட்டும் அதற்கு முன்பும், பின்பும் தற்காலத்திலும் தமிழகத்தில் சாதி தமிழர் அல்லது சாதி இந்துக்கள் என்போரால் கொடூரமாக கொல்லப்பட்டும், பாலியல் வன்புணச்சிக்கு உள்ளாக்கப்பட்டும், வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டும், சாதிக் கொடுமையின் எல்லா பரிமாணங்களையும் எதிர்கொள்ளும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் தாங்கள் கூறும் இதே விதியை கையில் எடுக்கத் தொடங்கினால் இன்றைய தமிழகம் தமிழர்கள் வாழும் ஒரு தேசமாக இருக்காது; பிணக்காடாகத் தான் இருக்கும். காவிரி, தாமிரபரணி, வைகை, தென்பெண்ணை, பாலாறுகளில் தண்ணீருக்குப் பதிலாக ரத்த ஆறுதான் ஓடும். தமிழின-தமிழ்த்தேச விடுதலையின்பால் தாங்கள் கொண்டுள்ள அக்கறைக்கும், வெளிப்பாட்டிற்கும் எங்களது நன்றியினையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிற அதே நேரத்தில் தங்கள் கருத்துக்கள் மக்களாட்சி யுகத்தில் தேசிய விடுதலைக்கான வழியில் பயணிப்பதாக இருக்கவேண்டுமே யொழிய மன்னராட்சி கால பெருமிதங்களில் மிதப்பதாக இருக்குமேயானால், அக்காலங்களில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூக‌ ஆதித் தமிழர்கள் மீது, சாதி தமிழர்கள் அல்லது சாதி இந்துக்கள் நடத்திய நர வேட்டைக்கும் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிய துர்பாக்கியம் உங்களுக்கு வந்து சேரும் என்பதை தோழமையுடன் சுட்டிக்காட்ட விழைகிறேன். 

ஒரு தவறை இன்னொரு தவறால் சரிசெய்து விடமுடியாது. அப்பாவித் தமிழர்களை சிங்கள இனவெறியர்கள் தாக்கியதற்காக இங்கு வந்த புத்த பிக்குகளை தாக்கக்கூடாது என்று காந்திய சிந்தனையாளரான திரு.தமிழருவி மணியன் கூற்றுக்கு பதில் சொல்ல வந்த தாங்கள், இலங்கையின் மீதான பொருளாதாரத் தடை கோரும் தமிழக அரசின் தீர்மானம் கூட இலங்கை அப்பாவித் தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் எதிரானது ஆகிவிடாதா என்ற பொருளில் திரு.தமிழருவி மணியனுக்கு பதில் சொல்லியிருக்கிறீர்கள். புத்த பிக்குகள் மட்டுமல்ல, எந்த சமயத்தின் துறவிகளும், அச்சமயம் சார்ந்த இன-ஆளும் வர்க்க நலன்களுக்கே சேவை செய்து வருபவர்கள் தான் என்பதில் எங்களைப் போன்றவர்களுக்கு இருவேறு கருத்து இல்லை. புத்த பிக்குகள் விசயத்தில் தாங்கள் தாக்கியதற்கான தர்க்கத்தை திரு.தமிழருவி மணியனுக்கு பதில் சொல்கிற போக்கில் பொருளாதாரத் தடையைக் கூட அப்பாவி இலங்கைத் தமிழர்களை பாதிக்கும்தானே என்று நாம் மறுக்க முடியும் தானே என்ற பொருளில் பதில் சொல்கிறீர்கள். இத்தகைய தங்களது விளக்கங்கள் மிகவும் அபத்தமானது. ஒரு பாசிச அரசுக்கு எதிரான பொருளாதாரத் தடை அந்நாட்டின் மக்களேயே பாதிக்கும் செயல் ஆகிவிடும் என்பது போல், தாங்கள் சொல்வது எப்படி சரியாகும்? 

இவ்வளவுக்கும் இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரும் தமிழ்த் தேசிய இயக்கங்களில் தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியும் ஒன்று. ஆனால் பொருளாதாரத் தடை குறித்த தங்களின் புரிதல்தான் வியப்பாக இருக்கிறது.

ராசபக்சே அரசுக்கு இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் செய்யும் பொருளாதார உதவிகளால் பயனடைவது இலங்கையின் பாமர தமிழ்-சிங்கள மக்கள் அல்ல. சிங்கள ஆளும் வர்க்கமே.  சிங்கள அரசு என்று மட்டுமல்ல, எந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் அந்நிய மூலதனத்தின் ஏற்றுமதி இறக்குமதியிலும் பெருமளவு பயனடைவது அந்தந்த தேசத்தின் குறிப்பிட்ட சிறுவீத ஆளும் வர்க்கப் பிரிவினரே. 

இந்தியா இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கக் கோருவது இலங்கையின் தமிழ்-சிங்கள மக்களின் நலனுக்குப் பாதகமளிக்கும் கோரிக்கை அல்ல. வெளிநாட்டிலிருந்து வரும் பொருளாதார வாய்ப்புக்களை, வ‌சதிகளைக் கொண்டு தன் நாட்டு மக்களின் நலன்களுக்காக பகிர்ந்தளிக்கவும், செலவிடவும் ராசபக்சே சோசலிஸ்டும் அல்ல; சனநாயகவாதியும் அல்ல. 

ஓன்று இலங்கை ஆளும் வர்க்க நலனுக்கும் அவர் கட்டமைத்துள்ள பாசிச இனவெறிக்கும் ராசபக்சே அரசுக்கும் கொடுக்கிற பொருளாதார நெருக்கடியே பொருளாதார தடை கோரிக்கை. ராஜபக்சே அரசின் தயவில் சிங்கள-தமிழ் மக்கள் வாழவில்லை. மாறாக சிங்கள இன வெறியூட்டியும் தமிழர்களை அழித்தும் தான் ராசபக்சே கும்பல் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இரண்டாவது, இந்தியா இலங்கையின் மீது பொருளாதாரத் தடை கோருவது இந்தியாவின் உதவி, புன‌ரமைப்பு என்ற பெயரில் சிங்கள இலங்கை அரசுக்கு வலிமை சேர்த்து வரும்  இந்திய முதலீடுகளையும், முதலீட்டாளர்களையும் திரும்ப பெற்றுக்கொள்வதும் அடங்கும். நிறவெறி தென்னாப்பிரிக்காவிற்கு பொருளாதாரத் தடை விதித்த போதும் தென்னாப்பிரிக்க மக்கள் அழிந்துவிடவில்லை. மாறாக நிறவெறி அரசுதான் வீழ்ந்தது;  சுதந்திர தென்னாப்பிரிக்கா மலர்ந்தது. 

எனவே இந்திய அரசு இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று கோரும் தமிழ் உணர்வாளர்கள் கோரிக்கையும் சட்ட மன்றத் தீர்மானமும் தமிழ் ஈழ கோரிக்கைக்கு ஆதரவான தமிழ்நாட்டின் சனநாயக கோரிக்கையாகும். சாராம்சத்தில் அது இலங்கைக்கு எதிரானது என்பதை விட, இந்திய அரசுக்கு எதிரானது என்பது தான் முதன்மையானது. நாம் என்ன கோரினாலும் இந்திய அரசு பணியாது, பரிசீலனை செய்யாது என்பது வேறு விசயம். நமது மக்களின் கோபமும், உணர்ச்சிகளும் சிங்கள அரசுக்கு எதிரானதாக மட்டுமல்லாது இந்திய அரசுக்கும் எதிரான திசைவழியை சுட்டிக்காட்டும் கோரிக்கையாகும். எனவே திரு.தமிழருவி மணியன் அவர்களுக்கு பதில் சொல்லத் துடிக்கும் ஆர்வத்தில் தடம் புரளும் தங்கள் பதில்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்.

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் தன் இனத்தைத் தாக்கிய சிங்களவர்களை திருப்பி தாக்கவில்லை என்பது சிறப்புக்குறியது என்று நீங்கள் திரு.தமிழருவி மணியனுக்கு பதில் சொல்கிறீர்கள். பிரபாகரனுக்கு இருந்த பெருந்தன்மை தங்களுக்கும் இருக்க வேண்டும் என்று திரு.தமிழருவி மணியன் அவர்கள் எதிர்பார்த்தது அவரது அறம் சார்ந்த மனச்சான்றையே வெளிப்படுத்துகிறது. நான் பிரபாகரன் அல்ல என்று சொல்லிக் கொள்வது உங்களது உரிமை என்பதில் உடன்படுகிறேன். 

 தோழர் கவுதம் சன்னா தமிழ்தேசியம் குறித்து என்ன எழுதினார் என்பதை நான் படிக்கவில்லை. ஒருவேளை அவரது எழுத்துக்களில் உங்களுக்கு முரண்பாடு இருக்குமானால் கருத்து ரீதியாக நீங்கள் அதை சந்திக்க வேண்டுமே தவிர தலித்தியத்தையே எள்ளல் தொனியில் விமர்சித்து இருப்பது வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது. தலித் பக்தர்கள் என்ற எள்ளல் விமர்சனம் தங்கள் மீதான மரியாதையைக் குறைத்து மதிப்பிடவே செய்யும். தோழர் பெ.ம அவர்களே தலித்தியம் என்பதை தேசிய இன எதிர் இந்திய ஒருமைப்பாட்டின் ஆளும் வர்க்க சித்தாந்தம் என்ற ஒற்றைப் பரிமாணத்தில் மட்டுமே தாங்கள் பரிசீலிப்பது மிகவும் ஒருசார்புத் தன்மையுடையதாகும். தலித்தியம் பல்வேறு பரிமானங்களை கொண்டது. அது குறித்து விரிவாக விவாதிக்க இது பொருத்தமான இடமும் அன்று. தலித்தியம் ஒரு சித்தாந்தமே இல்லை என்றும், தலித்தியம் இந்திய ஒருமைப்பாட்டுக்கு சேவை செய்கிறது என்றும் குற்றம் சாட்டும் தாங்கள்-தங்களைப் போன்ற தமிழ்த் தேசியர்கள் பலரும் இந்திய தேசியத்திற்கு சேவை செய்வதை எங்களைப் போன்றவர்களாலும் பட்டியலிட முடியும்.  தொடக்க காலத்தில் தமிழ்த் தேசியம் பேசிய திராவிடர் கழகம், தி.மு.க., சி.ப.ஆதித்தனார் அவர்களின் நாம் தமிழர் இயக்கம், மா.பொ.சி. அவர்களின் தமிழரசுக் கழகம், ஈ,வி.கே.சம்பத் அவர்களின் தமிழ்த் தேசியக் கட்சி ஆகியவையும் இந்திய தேசியத்தில் கரைந்த வரலாற்றுக்கும் தலித்தியம்தான் காரணமா? 

1947க்குப் பிந்திய 'சுதந்திர' இந்தியாவில் தலித்திய அரசியல் இயக்கம் சிற்சில வேலைகளில் ஆளும் வர்க்கத்திற்கு துணை போயுள்ளதை நான் கூட மறுக்கவில்லை.  இது, தலித் அல்லாதவர்கள் மட்டும் தான் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு துணை நிற்க முடியுமா?  நம்மால் முடியாதா? என்ற எதிர்நிலை உளவியலின் வரலாற்று உந்துதலாகக் கூட நிகழ்ந்திருக்கலாம். அதனால் தலித்துகள் பெற்ற சில பயன்களையும் நாங்கள் மறுத்துவிடவில்லை. ஆனால் இந்திய வரலாறு நெடுகிலும் தலித்தியம் காலம் காலமாக ஆரியத்தை, இந்துத்துவாவை எதிர்கொண்ட அளவிற்கு வேறு எந்த சித்தாந்தமும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராடிய வரலாறு இருந்தால் தயவு செய்து பட்டியலிடுங்கள்.  சாதிய, சதுர் வர்ண இந்தியாவை சமத்துவ இந்தியாவாக மாற்றுவதற்கான போராட்டத்தில் இன்றளவும் தலித்துகள் கொடுத்த விலை வேறு எவரையும் விட மிக அதிகம். 

அன்மையில் பரமக்குடியில் 7 பேர் அரசு படைகளால் கொல்லப்பட்டும், தருமபுரியில் அரசு படையின் கண்காணிப்பில் 300 தலித்துகளின் வீடுகள் தமிழ்ச் சாதிகளால்  தீ வைத்து எரிக்கப்பட்டும்கூட - அத்துனை கொடுமைகளையும் ஒரு பக்கம் ஒதுக்கி  வைத்துவிட்டுதான் (தலித்) தமிழ்ச் சமுகத்திலுள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்களும், பிற சமூகங்களைச் சேர்ந்த தமிழின மாணவர்களோடு ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக பொது வாக்கெடுப்பு கோரி களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

(தலித்) தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள், ‍இளைஞ‌ர்கள் சாதி மறுப்பை சுயசாதி அபிமானத்தை எளிதில் கைவிட்டுவிட்டு வீதிக்கு வரும் போராட்டங்கள் இங்கே ஏராளம் உண்டு. ஆனால் சாதி தமிழ்ச் சமூக மாணவர்கள்‍, இளைஞ‌ர்கள் சுயசாதிப் பற்றை இழந்து இன்று போலவே இன உணர்வுவோடு என்றைக்கும் இருப்பார்களா?  அதற்கு யாரேனும் உத்திரவாதம் கொடுக்க முடியுமா?  இன்றைக்கு தமிழ் உணர்வு பீறிட்டு எழும் சாதி தமிழ், சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது 25 அல்லது 30 வயதில் தங்களின் மனைவியை, கணவனை எந்த சாதியில் தேடுவார்கள் என்பதிலிருந்தே இவர்களின் தமிழ் இன உணர்வு அம்பலத்திற்கு வந்துவிடாதா?  தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் 12 வயது பாலகன் பாலச்சந்திரன் சிங்கள இன வெறியன் ராஜபட்சேவால் கொல்லப்பட்ட கொடூரம் நடந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியதற்குப் பின் தமிழகம் போர்க்கோலம் கொண்டது. மாணவர்கள், இளைஞ‌ர்கள் வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.

1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு தற்போது எழுந்துள்ள மாணவர் போராட்டம் தமிழ் தேசிய விடுதலைப் போருக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் உந்து சக்தியாகவும் இருக்கிறது என்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். அதே வேளையில் இத்தனை லட்சம் மாணவர்களும் பரமக்குடியில் 6 தலித்துகள் கொல்லப்பட்ட போதும் தருமபுரியில் 300 தலித்துகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்ப‌ட்ட போதும் அமைதியாக தத்தமது படிப்பை தொடர்ந்தவர்கள்தானே. தலித்துகள் மீதான அடக்குமுறை, தமிழ்த் தேசிய விடுதலைக்கு, தமிழின உணர்வுக்குக் கேடானது என்கிற பார்வையை தமிழின மாணவர்களை காண மறுக்கச் செய்தது எது? ஒரு சேனல் 4 தொலைக்காட்சி போல தமிழகத்தின் கிராமங்களில் வாரம் ஒரு தலித் பாலச்சந்திரன்களை படுகொலை செய்யும் தமிழ்ச் சாதி, இந்து வெறியர்களின் செயல்களைத் தொகுத்து ஒளிபரப்பினால்தான் தமிழ் மாணவர்கள் எழுவார்களா? தலித்துகள் ஊடக அரசியலின் போதாமையை நிறைவு செய்ய வேண்டுமோ? அல்லது தலித்துகள் படுகொலையும் சிறைப்படலும் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளும் தலித்துகளின் பாடுகளே அன்றி அது தமிழ்ச்சமுகத்தின் பாடுகள் அல்ல என்று தமிழின மாணவர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்களா? இந்த வேதனையின் ரணம் தமிழ்த் தேசிய அரசியலில் தன்னை இணைத்துக் கொண்டுள்ள தலித் சமுகத்தினருக்கு ஏற்படுவதை தங்களைப் போன்றவர்கள் அறிவீர்களா?

பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதியையோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர் திருமாவளவனையோ, புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமியையோ அளவுகோலாக வைத்துக் கொண்டு தலித்தியத்தை ஆளும் வர்க்க சித்தாந்தத்திற்கு துணை செய்யும் கருத்தியலாக எடை போடாதீர்கள்.  இவர்களையெல்லாம் தாண்டியது தலித்தியம்.  தோழர் பெ.ம. போன்றவர்கள் தலித்தியத்தை எள்ளல் செய்வதை விட சென்னி நத்தம் கோபாலகிருஷ்ணன், காந்தலவாடி பிரியா, விருத்தாசலம் கண்ணகி முருகேசன் இப்படி எத்தனை எத்தனையோ கொலைகளை, கொடுமைகளை நிகழ்த்திய சாதி இந்துக்களுக்கு அல்லது சாதித் தமிழர்களுக்கு எதிரான போராட்டத்தில் தோழர் பெ.ம. அவர்கள் களத்தில் இறங்கிப் போராடுவதன் மூலம் தான் எதார்த்த உண்மைகளை புரிந்து கொள்ள முடியும்.

ஈழத்தில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பாலச்சந்திரன்கள் கொல்லப்பட எந்த இந்திய இந்துத்துவ பார்ப்பனியம் துணை நின்றதோ, அதே இந்துத்துவ பார்ப்பனியம்தான் இந்திய-தமிழகச் சேரிகள்தோறும் பாலச்சந்திரன்கள் படுகொலைகளுக்கு காரணமாக இருக்கின்றது. இந்த கண்ணோட்டத்தில் அணுகுவீர்களேயானால் தமிழ்த் தேசியமும் தலித்தியமும் நெருக்கமான நட்பு சக்திகளேயன்றி பகை சக்திகளல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்பதைச் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். 

இந்துத்துவாவையும் சாதி தமிழரின் அடக்குமுறைகளையும் சாடி, சாதித் தமிழர்கள் சுமந்துள்ள சாதி அழுக்குகளையும் சாடி, இயக்கம் எடுப்பீர்களேயானால் தமிழ்த் தேசியமும், தலித்தியமும் - ஆரிய, வருணாசிரம, இந்துத்துவ, இந்திய ஒருமைப்பாட்டிற்கும் எதிரான சமஅளவிலான கோட்பாடுகளேயன்றி பகை முரணான கோட்பாடு அல்ல என்பது எளிதில் விளங்கும்.

தவறு எங்கே ஏற்படுகிறது என்றால், இந்திய தேசிய இனங்களில் உள்ள தலித் அல்லாத பெரும்பான்மைச் சாதியினர் தங்கள் மீது பார்ப்பனிய‌ இந்தியா ஏவும் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராக மட்டும் போராட முன்வந்துவிட்டு, தாங்கள் சுமந்துள்ள, தங்களைச் சூழ்ந்துள்ள சாதியப் பெருமிதங்களுக்கு எதிராக கொஞ்சங்கூட வெட்கப்படாமல் உயர்சாதி உணர்வு கொண்ட உளவியல் அடிமைகளாக வலம் வருகிற வரலாற்றுப் பிழைதான் இங்கு தொடர்ந்து நடந்து வருகிறது,

பார்ப்பனியம், தலித்துக்களை சாதி ரீதியாக மட்டும் ஒடுக்குவதில்லை. தான் சார்ந்திருக்கிற தங்களின் தேசிய இனத்தின் மீதான ஒடுக்குமுறைக்கும் பார்ப்பனியமே காரணம் என்பதை தலித்துகள் உணர வேண்டும்.

இதைப் போலவே இந்திய தேசிய இனங்களில் உள்ள தலித் அல்லாத பெரும்பான்மைச் சாதியினர் தமது தேசிய இனத்தின் ஒடுக்குமுறைக்கு காரணமாயிருக்கிற அதே பார்ப்பனியம்தான், தங்களை நீச சாதியினராகவும் சூத்திர சாதியினராகவும் நடத்துவதோடு, தன் சொந்த தேசிய இனத்தின் சொந்த சகோதரர்களான தலித்துகளை தாங்கள் அடக்கி ஒடுக்கும் இழி நிலைக்கும் காரணம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தனது இனத்தின் விடியலுக்கான போரில் எதிரிகளிடம் பிடிபட்டால் தன்னையே மாய்த்துக்கொள்ளும் சையனைடு குப்பிகளை தன் கழுத்தில் சுமந்தார்கள் புலிகள். ஆனால் தன் இனத்தின் சக சமூகத்தையே அழிக்கும் சாதி எனும் கொடிய நஞ்சை எந்நேரமும் தன் நெஞ்சில் சுமப்பவர்கள்தான் தமிழ்நாட்டின் சாதித்தமிழர்கள். தமிழ்த் தேசியம் பேசும் பலரும் இதில் அடக்கம்தான். இந்திய விடுதலைப் போரில் காந்தி, சுபாஸ் சந்திரபோஸ் பற்றியெல்லாம் ஒப்பிட்டுப் பேசிக் கொள்ளும் தோழர் பெ.ம. அவர்களே தயவு செய்து அவ்வளவு பெரிய வரலாற்றோடெல்லாம் தமிழ்த் தேசிய போராளிகளை ஒப்பிட்டுக் கொள்ள உங்களுக்கு கூச்சமே இல்லையா? காந்தி, இந்திய விடுதலைப் போராட்டத்தை பிர்லாக்களின் மாளிகையிலிருந்து தொடங்கினார். நேதாஜி சந்திரபோஸ் அதே போராட்டத்தை ஜெர்மன் நாசிகளுடன் இணைந்து நடத்த முற்பட்டார். நீங்கள் இந்துத்துவ நிலபிரபுத்துவ மதிப்பீடுகளைக் கைவிடாத சாதித்தமிழரை அணிசேர்த்து தமிழ்த் தேசிய விடுதலைப் போரை தொடங்கிட முனைகிறீர்கள். அதனால்தானோ என்னவோ காந்தியும் நேதாஜியும் உங்கள் பதில்களில் இழையோடுகிறார்கள்.

தலித்துகளைப் பொருத்தவரை சாதி ஒழிந்தபின் தமிழ்த் தேசியம் எதன்பதல்ல; சமரசமற்ற சாதி ஒழிப்புப் போராட்டத்தின் ஊடாகவே தமிழ்த் தேசியம் என்பதே எங்க‌ளின் நிலைப்பாடு. நகரங்களை மையப்படுத்தி அரசியல் செய்பவர்களுக்கு சாதியின் கொடூரங்கள் தெரிவதற்கு நியாயமில்லை. ஆனாலும் கூட நகரங்களில் வசிக்கும் தலித் அரசு ஊழியர்கள், அலுவலர்கள், தொழிலாளர்களிடம் சாதியால் தாங்கள் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறோம் என்பதற்கு ஒவ்வொருவரிடமும் பல தகவல்கள் குவிந்து கிடக்கிறது. ஆயினும் கூட நகரங்கள் உலகமய பொருளாதார வல்லாதிக்க சக்திகளின் நுகர்வு வெறி சந்தைப் பொருளாதாரத்தின் பங்காளிகளாக மாறிவிட்ட சூழலில் கிராமங்களை நோக்கித் திரும்பிப் பாருங்கள். அப்போது தெரியும், தமிழ்த் தேசியத்தின் சாதி நெடி; தலித்துகளின் வலி என்னவென்று... வர்க்கப் பகுப்பாய்வு இல்லாத எந்தப் போராட்டமும் ஆளும் வர்க்க நலனுக்கே சேவை செய்யும். ஆளும் வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில் சந்திப்போம். வெல்க தமிழ்த் தேசியம்.

- அரங்க குணசேகரன், தமிழக மக்கள் புரட்சிக் கழகம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It