ஜெர்மனியில் யூதர்களை வதைப்பதற்காக வதைமுகாம்கள் எவ்வாறு ஹிட்லரால் நடத்தப்பட்டதோ, ஈழத்தில் சிங்களர்கள் எவ்வாறு வதை முகாம்களை நடத்தி வருகிறார்களோ அதற்கு சற்றும் குறையாத வகையில் தமிழகத்தில் இரண்டு வதைமுகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி ஆகிய இரண்டு இடங்களில் இப்படியான இரண்டு சிறப்பு(வதை) முகாம்கள் செயல்பட்டு வருகிறது. நீதித்துறையின் எந்த கண்காணிப்பிலும் வராத இந்த சிறப்பு(வதை)முகாம்களில் அடைக்கப்படுவதற்கு அவன் எந்த குற்ற செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களோ, புகார்களோ அல்லது குற்றங்கள் நிருபிக்கப்பட்டிருப்பதோ எதுவுமே தேவையில்லை. அவன் ஈழ தமிழனாக பிறந்த ஒரே ஒரு தகுதி இருந்தால் போதும் . இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத தமிழகத்தில் மட்டுமே இருக்கும் கியூ பிரிவு போலீசார் ஒருவனை கைது செய்தால் அவனை நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவன் மீது எந்த குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படவேண்டிய அவசியம் இல்லை. அவனை எந்த நீதித்துறையின் கண்காணிப்பிலும் இல்லாத இந்த வதைமுகாம்களில் அடைத்துவிடலாம். இவர்களை அடைக்க வெளிநாட்டினர் சட்டம் என்ற சட்டப்பிரிவை காரணமாக காட்டினால் போதுமானது.

சிறைவாசிகளுக்கு இருக்கும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத இந்த வதை முகாம்களில் அடைக்கப்பட்டவர்களுக்கு எந்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டோம் எப்பொழுது விடுவிக்கப்படுவோம் என்ற அடிப்படை தகவல்கள் கூட தெரிவிக்கப்படுவதில்லை, இதில் முக்கியமான விடயம் இவர்களின் தண்டனை காலத்தை எந்த நீதிமன்றங்களும் முடிவு செய்வதில்லை என்பது தான். இப்படி சட்டத்திற்கு புறம்பாக அடைக்கப்பட்டவர்கள் தங்களின் மேல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக்கோரியும், வழக்கை விரைவாக விசாரிக்க கோரியும், நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தங்களை தடுத்து வைத்திருப்பதை எதிர்த்தும் உண்ணாவிரதம் இருப்பது தொடர்கதையாகி வருகிறது.
 
ஆனால் இந்த முறை பூந்தமல்லி சிறப்பு முகாமில் சந்திரகுமார் என்பவர் உண்ணாவிரதம் இருக்கும் காரணமே வேறு.
 
பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை தேவைகளுக்காக அரசாங்கத்தால் ஒரு நாளைக்கு 70 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது, இந்த ரூபாயில் தான் இவர்களின் அனைத்து தேவைகளையும் இவர்கள் கவனித்துக்கொள்ளவேண்டும். இந்த தொகையில் பாதி இவர்களுக்கு பொருட்கள் வாங்கி தரும் தலையாரிக்கே செலவாகிவிடும் என்பதே உண்மை. இதனால் இந்த தொகை தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லையென்று இந்த தொகையை உயர்த்தி தரவேண்டும் அல்லது அரசாங்கமே தங்களின் தேவையை பூர்த்தி செய்யவேண்டும் என்று பூந்தமல்லி சிறப்பு முகாம் வாசிகள் கடந்த 9 மாதங்களாக இந்த தொகையை வாங்க மறுத்து புறக்கணித்து வந்தனர். அவர்களுக்கான அடிப்படை தேவைகளை அவர்களை பார்க்க வரும் உறவினர்கள் மூலம் பூர்த்தி செய்து வந்தனர். ஆனால் கடந்த 20 நாட்களாக அவர்களை பார்க்க வரும் எந்த உறவினர்களையும் கியூ பிரிவினர் அனுமதிப்பதில்லை. இனி 10 நாட்களுக்கு முன் அனுமதி வாங்கினால் மட்டுமே பார்க்க அனுமதிக்க முடியும் என்று அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வந்தனர். இதனால் சிறப்பு முகாமில் இருப்பவர்கள் கடந்த இருபது நாட்களாக வெளியிலிருந்து எந்த உணவு பொருட்களும் கிடைக்காமல் தனிமைபடுத்தப்பட்டனர்.

உறவினர்கள் சந்திப்பதற்கு வெளிநாட்டினர் சட்டபிரிவில் எந்த இடத்திலும் இல்லாத இந்த கெடுபிடிகளை எதிர்த்து 27/03/2013 முதல் சந்திரகுமார் என்பவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். சந்திரகுமாரை பார்க்க வந்த அவர் மனைவிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவரும் சிறப்பு முகாம் வாசலிலேயே உண்ணாவிரதத்தை தொடர்ந்துவந்தார். இந்நிலையில் 28/03/2013 மாலை சந்திரகுமாரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். ஒருவனை சிறையைவிட கொடுமையான இடத்தில் தனிமைபடுத்தி அவனின் அடிப்படை தேவையான உணவை கூட தராமலும், அவனாகவே அவனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதை கூட அனுமதிக்காத நாடு தன்னைத்தானே காந்திய நாடு என்று சொல்லிக் கொள்வது மிகப்பெரிய முரண்பாடாகும்.
 
தமிழக சொந்தங்களே ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதிகேட்டு நாம் களத்திலிறங்கி போராடிவரும் அதே நேரத்தில் நம் கண்ணெதிரே துன்பப்படும் இந்த சொந்தங்களுக்காகவும் நாம் போராட வேண்டும். உலகின் எந்த மூளையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் நாம் தொடர்ந்து போராடி நமக்கான உரிமையை வென்றெடுக்க வேண்டும்.