ஒரு மாவோயிஸ்டின் பேட்டி

"நாம் எந்த ஆயுதம் ஏந்த வேண்டும் என நம்முடைய எதிரிதான் தீர்மானிக்கிறான்." தோழர் மாவோவின் கூற்று.  'நம்முடைய உண்மையான ஆயுதம் மக்கள்தான்.' என்கிறார் 17 வருடம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த இந்த தோழர். தமிழகத்தை 'சாதி-சாதி எதிர்ப்பு' என இரு கூறாக பிரித்து கொதிப்பை உருவாக்கிய தர்மபுரியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேல் கள அனுபவம் கொண்டவர். 1988-இல் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது, 2002-இல் பொடாவில் கைது. 2012-இல் மீண்டும் குன்றத்தூரில் கைது என அரசின் சிறையிலும், சமூக சிறையிலும் மாறி மாறி பயணித்து மக்கள் பணியாற்றி வரும் அவர் 'தோழர் துரைசிங்கவேல்'.

'அப்பா நக்சலைட்னா என்னப்பா?' சிறு வயதில் தனது தந்தையிடம் கேட்க

உன் நண்பர்கள்ல ஒருத்தன்கிட்டயே நாலு சட்டை இருக்குன்னா அதில் மூணை புடிங்கி மற்ற நண்பர்களுக்கு தருவதுதான் நக்சலிசம்' சாதாரண கடைநிலை ஊழியரான  அப்பா விளக்க, அதில் நக்சலிசம் மேல் ஈர்க்கப்பட்டு மக்கள் யுத்த கட்சியில் இணைந்து மாவோயிஸ்ட் கட்சியின் தலைமை பொறுப்பிற்கு வந்து நீண்ட காலமாக செயல்பட்டவர். பின் அதிலிருந்து பிரிந்து தற்போது 'மக்கள் சனநாயக குடியரசு கட்சி' தொடங்கி அதன் தலைவராக செயல்படும் அவரை சந்தித்தோம்.

தனது அனுபவம், அரசியல், செயல்பாடு, நோக்கம் அனைத்தும் குறித்து அவரின் பிரத்யேக பேட்டி.

நக்சலிசம் மேல் ஈர்ப்பு ஏற்பட என்ன காரணம்? எப்படி நக்சலைட் ஆனீர்கள்?

அப்பா பெரியார் கொள்கையில் ஈடுபாடு உள்ளதால் இயல்பாகவே சமூக உணர்வு இருந்தது. நாங்கள் வசித்த இடம் தொழிலாளர்கள் நிறைந்த சென்னை பகுதி என்பதால் 13 வயதிலேயே அரசியல் ஈடுபாடு வந்தது. நந்தனம் அரசு கலை கல்லூரியில் பி.ஏ வரலாறு படிச்சுகிட்டு இருந்தபோதுதான் 1980-களில் தர்மபுரியை ஒட்டிய கிராமங்களில் காவல்துறை அதிகாரி தேவாரத்தின் அட்டகாசம் தொடங்கியது. இவர் தலைமையில் நிராயுதபாணியான 26 பேர்களை கட்டி, அடித்து சித்ரவதை செய்து படுகொலை செய்தனர். இதில் பலர் அப்பாவி பொதுமக்கள். அப்பொழுது சாதி தீண்டாமை, ரெட்டை டம்ளர் முறை ஒழிப்பு, கூலி உயர்வு போராட்டங்களை தர்மபுரி சுற்றுவட்டாரங்களில் நக்சல்பாரிகள் செய்துவர இதை தடுக்கத்தான் தருமபுரி, வட ஆற்காடு, சேலம் என அனைத்து பகுதிகளிலும் காவல்துறை அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

கண்ணாமணி தோழரை சேலம் அஸ்தம்பட்டி காவல்துறை கெஸ்ட் அவுசில் வைத்து அவர் கண்களை பிடுங்கி மிக மிக கொடூரமான சித்ரவதை செய்து கொன்றனர். அவரின் தாயாரால்கூட உடலை அடையாளம் காட்ட இயலவில்லை என்றால் சித்திரவதையின் கொடுமை எந்தளவு என புரிந்துகொள்ளுங்கள். ஒரு கூட்டம் முடிந்து திரும்பிய தோழர் பாலனை அடித்து சித்ரவதை செய்து, சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்துக் கொன்றனர். அவர் சாம்பலைக்கூடத் தரவில்லை. இந்த கொடூரங்களைக் கண்டு கொதித்துத்தான் 1983-இல் P.W.G எனும் 'மக்கள் யுத்த குழுவில்' இணைந்தேன். அப்போ 20-22 வயது இருக்கும். அப்போது கட்சியில் கொண்டப்பள்ளி சீதாராமைய்யா, கோதண்டராமன் இருவருக்கும் இரண்டு கருத்து இருக்க கோதண்டராமனும், தமிழ்வாணனும் போல்ஸ்விக் கட்சி என உருவாக்கி பிரிந்துவிட்டனர். அந்த நேரத்தில்தான் 1986-இல் தலைமை பொறுப்புக்கு வந்தேன்.

 உங்கள் நக்சல்பாரி செயல்பாடு...

1980-களின் ஆரம்பத்திலேயே 'அமைதிப்படை அரக்கர் படை ' என இந்தியப் படையை அம்பலப்படுத்தி பரப்புரை செய்தோம். 'தனித் தமீழமே தீர்வு' என்ற முழக்கத்தை தமிழகத்திலேயே முதன்முதலில் முன்வைத்தோம். வை.கோ, நெடுமாறன் அவர்கள் கூட அப்பொழுது தனி ஈழத்தை பேசவில்லை. 1986-87-இல் அரசு மாணவர்கள் விடுதி பிரச்சனைக்காக 'மாட்டுத் தொழுவமா? பன்றித் தொழுவமா?' என போராடினோம். எங்கள் போராட்டத்தின் விளைவுதான் ஓரளவாவது சத்தான உணவும், கூடுதல் அலவன்சும் மாணவர்களுக்கு கிடைக்கிறது. அப்பொழுதே (1988)-இல் கூடங்குளத்திற்கு எதிராக பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டோம். 1991 ஜனவரியில் தமிழகம் முழுக்க சைக்கிள் பிரச்சாரம் செய்தோம். 1991 செப்டம்பரில் RYL எனும் முற்போக்கு இளைஞர் அணி கட்டினோம். பாபர் மசூதி இடிப்பை கண்டித்து போராடினோம். மண்டல் கமிசனுக்காக போராடினோம்.

1993-இல் கல்பனா சுமதி எனும் தளி பகுதி (ஓசூர் அருகே) ஆசிரியை காவல்துறையை சேர்ந்தவர்களால் பலவந்தப்படுத்தப்பட அவருக்கு ஆதரவாக களம் இறங்கினோம். கோர்ட்டுக்கே 50 பெண்கள் சென்று வளையல் தந்து செருப்படி போராட்டம் செய்தனர். ஆபாச எதிர்ப்பு இயக்கம் நடத்தினோம். மதுரை தீபா ரூபா தியேட்டரில் ஆபாச படம் போட்ட ரீலை எடுத்து வந்து எரித்து போராட்டம் செய்ய இதை அவ்வழியாக சென்ற ஒரு பேருந்து ஓட்டுனர் பார்த்து அவரும் இறங்கி வந்து எரிய வைத்தார் என்றால் மக்களின் உணர்வுகளை எங்கள் போராட்டங்கள் பிரதிபலித்துள்ளது என்பதை உணர்ந்துகொள்ளலாம். கீரிப்பட்டி (ஆத்தூர் தாலுகா) காலனி மக்களின் போராட்டம், பழங்குடிகளுக்கான போராட்டம், தமிழகத்திலேயே சாதி ஒழிப்பிற்காக சாதி ஒழிப்பு சமத்துவ முன்னணி (1995) கட்டினோம். நத்தம் நாய்க்கன்கொட்டாய் கிராமத்தில் இரட்டை டம்ளர் முறையை ஒழித்தோம்.

ஆனால் நக்சல் செயல்பாடுகளின்  கீழ் இருந்த கிராமங்களில்தானே  தற்போது சாதி தாக்குதல் நடந்துள்ளது. தலித் மக்கள் மீது கொடும் வன்முறை செலுத்தப்பட்டுள்ளது.  நக்சல்பாரி கிராமங்கள் என சொல்லப்படும் இடத்திலேயே சாதிய தாக்குதல் அரங்கேறியது கரும்புள்ளியாக தெரிகிறதே?

சாதி மத வர்க்க ஏற்றத்தாழ்வு ஒழிந்து சமத்துவம் நோக்கிய புரட்சிகர பயணமே நக்சலிசம்.

பாலன் தோழர் காலம்தொட்டு அங்கு இரட்டை டம்ளர் முறை ஒழிப்பு முதல் அனைத்து ஜனநாயக உரிமைசார் வேலைகளும் செய்தோம். நான் உட்பட தோழர்கள் அங்கு அரசியல் பணிபுரிந்தபோது வன்னியர் தலித் மக்கள் இருவரையும் திரட்டியே ரெட்டை டம்ளர் முறையை ஒழித்தோம். அங்குள்ள அனைத்து சாதி  உழைக்கும் மக்களும் கந்து வட்டி கொடுமையால் அவதிப்பட்டனர். குறிப்பாக வன்னியர்கள், அதிக வட்டி அவர்கள் வாழ்வியலை வாட்டி வதக்கியது. நாங்கள் முதலில் இந்த விஷயத்தை கையில் எடுத்தோம். கந்து வட்டிக்கு எதிராக 'எல்லை கடந்தும்' நாங்கள் போராட பல கந்து வட்டி கொடுமையாளர்கள் இந்த தொழிலை விட்டுச் சென்றனர். அதிக வட்டி வாங்கியதற்காக பொதுமக்கள் மன்றத்தில் இவர்கள் மன்னிப்பு கேட்டனர். வாங்கிய  வட்டியை மக்களுக்கே திருப்பி தந்தனர்.

சாதியால் பிளவுபட்டு இருந்தாலும் வாழ்வியல் முறையால் உழைக்கும் மக்கள் என்ற அடிப்படையில் இரு சமூக மக்களும் ஒன்றிணைய முடிந்ததுதான் நக்சலைட்டுகளுக்கு கிடைத்த வெற்றி. தலித்துக்கள் சாதி அடிப்படையிலான வேலைகள் செய்ய மாட்டோம் என குரல் கொடுத்தனர். இதுவும் எம் கட்சிக்கு கிடைத்த வெற்றி. இப்படி பல போராட்டங்களுக்கு பிறகே   குறைந்தபட்ச வெற்றிகூட கிடைத்தது. கிட்டத்தட்ட சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் நக்சலைட் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பழைய பிற்போக்குத்தனங்கள் குறைய தொடங்கின. ஆனால் உளவுத்துறை சூழ்ச்சியாலும், ஊத்தங்கரை சம்பவத்தாலும் தனிமைப்பட்டு போனோம். இந்த இடைவெளியை சாதி ஆதிக்க வெறியர்கள் பயன்படுத்திகொண்டனர். அதே சமயம்  சாதியம் என்பது இந்தியா முழுக்க தமிழகம் முழுக்க 2000 வருடங்களுக்கு மேல் ஊறிப் போன ஒன்று. அதை சில ஆண்டு  போராட்டங்களில் மட்டுமே நிரந்தரமாய் ஒழித்துவிட முடியாது. தொடர் போராட்டங்கள், உற்பத்தி முறையில் ஏற்படும் மாற்றங்கள், அரசியல் அதிகார மாற்றங்கள் மூலமே சாதியம் ஒழிக்கப்படும். அது நீண்ட கால போராட்டம், இதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு நக்சலைட்டாக  தருமபுரி தாக்குதலை எப்படி பார்க்குறீங்க?

30 வருட பாரம்பர்யம் கொண்ட பூமி அது. முழுக்க முழுக்க நக்சல்பாரி அமைப்புகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதி தற்போது அம்மக்கள் சாதியாக பிளவுபட்டு சாதி ஆதிக்கவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள்  சென்றது என்பது ஒரு மாவோயிஸ்டாக எங்களுக்கும் வேதனையான பின்னடைவுதான்.

'நக்சலைட்டுகள் எங்க மக்களை பயன்படுத்திக்கொண்டு போய்விட்டார்கள் அதனால்தான் தலித்துகள் தாக்கப்பட்டாங்க' என வி.சி. வன்னியரசு குற்றம் சாட்டுகிறார். ராமதாஸ் பின் அணிதிரண்டுள்ள சில இடைநிலை சாதியவாத அமைப்புகளின்   'அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவையினர்' 'கம்யூனிஸ்ட்டுகளின் கைய-காலை உடைக்கணும், அவர்களால்தான் இங்கு அமைதி குலைகிறது'  என்கின்றனர். இருதரப்பும் உங்களையே குற்றம் சாட்டுகிறதே!

'சாதி வேண்டாம் அது சமூகத்தை அழிக்கும் தீ”

என அணைக்க போராடும் கம்யூனிஸ்ட்டுகளால் அமைதி குலைகிறதோ? இதனால்தான் அமைதி குலைகிறது என்றால் இவர்கள் விரும்பும் அமைதியை குலைக்க தொடர்ந்து போராடியே வருவோம். இந்த மக்களை பயன்படுத்தி மேலே சென்றவர்கள் அவர்கள்தான், நாங்கள் இல்லை. இன்றும் மக்களோடு மக்களாக உள்ளோம். வன்னியரசு போல வசதியாக இல்லை. காங்கிரசிற்கு பிறகு 11 ஆண்டுகள் தொடர்ந்து மத்திய அரசில் அங்கம் வகித்து வந்த கட்சி பா.ம.க.தான். பிழைப்புவாத கட்சியே பா.ம.க. குடும்ப அரசியல் செய்யும் பிராந்திய கொள்ளை கும்பலாக மாறிவிட்டது. இவரின் சமீபத்திய தொடர் தோல்வியால் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க மீண்டும் சாதியை கையில் எடுத்துள்ளார் ராமதாஸ். இதற்கு ஜெயலலிதாவின் துணையும் உண்டு. பா.ஜ.க., காங்கிரஸ் தவிர்த்து அதிக சீட்டில் வெற்றிபெற வேண்டும். அதன் மூலம் மூன்றாவது அணி  அமைந்தால் பிரதமர் ஆகவேண்டும் என்பதே ஜெ-வின் திட்டம்.

காங்கிரஸ் என்றால் மன்மோகன், பா.ஜ.க என்றால் மோடி. மூன்றாவது அணி என்றால் ஜெ  என்பதுதான் அமெரிக்காவின் திட்டம். எனவே பிரதமராக  காவிரி விஷயத்தை கையில் எடுத்து தமிழ் தேசிய முகம் காட்ட முயற்சிக்கிறார்  ஜெ. இதற்கு சீமான் போன்றவர்கள் உதவியாக இருக்கின்றனர். பிரதமர் ஆகும் திட்டத்தில் இந்த புதிய முகத்தை ஜெ அணிந்துகொண்டுள்ளார். இதற்கு துணை நிற்க அதிக சீட் வாங்க ஓட்டுகள் பிரிய வேண்டும் அதற்கு ராமதாசிடம் அணிசேர்ந்த   இடைநிலை சாதிகளின் அமைப்பு உதவியாய் இருக்கும் என கருதியே இதுவரை ராமதாசின் செயற்பாடுகளை வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கிறார் ஜெ. ஜெவின் ஏஜென்டாக இருக்கிறார் ராமதாஸ். அதனால்தான் கருணாநிதியை தாக்கும் இவர் அவரை தாண்டி செல்லவில்லை. பா.ம.க-வி.சி. இரண்டுமே கட்ட பஞ்சாயத்து பார்ட்டிகள் ஆகிவிட்டன. இவர்களால் இரண்டு சமூக உழைக்கும் மக்களுக்கும் விடுதலை இல்லை. நக்சல்பாரி கம்யூனிஸ்ட்டுகளால் மட்டுமே உழைக்கும் மக்களின் விடுதலை உண்டு.

மாவோயிஸ்ட் கட்சியில் இருந்து விலகிய காரணம்?

கட்சி ஆயுத போராட்டத்தை முன் வைத்தது. 1997-இல் உள்ளூர் ஆதிக்க சக்திகளிடம் இருந்து தாக்குதலை முறியடிக்க ஆயுதக் குழு என்ற செயற்பாட்டை முன்வைத்து நடைமுறைப்படுத்தினோம். 2002 வரை ஆயுத அரசியலிலேயே கட்சியில் செயல்பட்டோம். இந்த தருணத்தில்தான் ஊத்தங்கரை சம்பவம் நடந்தது. போலிஸ் மோதலில்  சிவா தோழர் சுட்டு கொல்லப்பட்டார்.(இவர் பேட்டியாளரின் தம்பி) பின் பொடாவில் கைது செய்யப்பட்டோம். ராணுவ குழுக்களை கட்டியமைப்பதன் மூலம் மட்டுமே அதிகாரத்தை கைப்பற்றிவிட முடியும் என்ற நடைமுறை தோல்வி அடைந்தது. அதாவது,   கெரில்லாயிசமாக சுருங்கிப் போய்விட்டது. 30 வருட செயல்பாடு பெரிய வெற்றியை தந்துவிடவில்லை. மக்களைவிட்டு தனிமைப்பட்டுவிட்டோம்.

1995-இல் முந்நாளைய மக்கள் யுத்தக் கட்சியின் அனைத்திந்திய சிறப்பு மாநாடு நடந்தது. அதில் தமிழக பிரதிநிதிகளால்   சில அடிப்படை கோட்பாட்டு சிக்கல் விவாதிக்கப்பட்டது. 2001-இல் 9 வது பேராயத்தில் தீர்த்துக்கணும் என்றனர். அதற்கு முன்பே தமிழக 2000-ஆம் ஆண்டு மாநில மாநாட்டில் மாற்றுக் கருத்தை முன்வைத்தோம். மாவோயிஸ்ட் கட்சி என்பது அரசியல் வழி, ஆயுத சீர்திருத்தவாதம் மற்றும் ராணுவ வழி கெரில்லாயிசமாக உள்ளது. இதை வெளிப்படுத்திய தமிழக, கர்நாடக, பிரதிநிதிகளின் அரசியல் போராட்டம் சிறுபான்மையாக பேராயத்தால் நிராகரிக்கப்பட, சிறையில் இருந்து நடத்தப்பட்ட உட்கட்சி சனநாயகதிற்க்கான போராட்டங்களும் 2006-07-இல் நிராகரிக்கப்பட நாங்கள் வெளியேறினோம். 'மக்களை அணிதிரட்டி அரசியல் போராட்டங்களில் ஒருங்கிணைத்து பேரெழுச்சியை உருவாக்குவதே தற்போதைய தேவை' என மக்கள் சனநாயக குடியரசு கட்சியை உருவாக்கி அரசியல் பணியை தொடங்கியுள்ளோம்.

ஏற்கனவே பல குழுக்கள் பிரிந்திருக்க புதிய கட்சிக்கு அவசியமென்ன? பிரிந்து பிரிந்து செல்வதால் உங்கள் தத்துவ எதிரியை நீங்களே பலம் வாய்ந்தவராக மாற்றுவதாக அமையாதா?

இங்கு கட்சியை தீர்மானிப்பது சூழலும், தத்துவமும்தான். இயல்பாகவே தொடக்க நிலையில் உள்ள ஒரு சமூகத்தில் பல்வேறு குழுக்கள் அமைவது தவிர்க்க இயலாது. தத்துவமும் நடைமுறையும் சரியாக இருந்தால் வளர்ச்சிப் போக்கில் மக்களின் பிரதான கட்சியாக அது அமையும். அந்த நோக்கிலேயே எமது புதிய கட்சியும் பயணிக்கும்.

உங்கள் கட்சி திட்டம்தான் என்ன?

அகில இந்திய அளவில் ஒரே கட்சி என்பது நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று. இந்தியா முழுக்க ஒரே நிலை இல்லை. எனவே எங்களின் பொது திட்டம் என்பது மார்க்சிய-லெனினிய-மாவோவிய தத்துவ வெளிச்சத்தில் தமிழக விடுதலையை முன்னெடுப்பதாகும். இங்கு ஒற்றை முரண்பாடு என சொல்ல முடியா அளவு முரண்பாடுகள் பலவாக பிரிந்து பலமாகி கிடக்கின்றன. இந்திய ஆளும் வர்கங்களுக்கிடையிலான முரண்பாடு, இந்துத்வா பயங்கரவாததிற்க்கும் x  மத சிறுபான்மையினருக்கும், மொழிவழி தேசிய வளர்ச்சிக்கும்  x  இந்திய தேசியத்திற்கும் தேசிய வளர்ச்சிக்கும்  x  சாதியத்திற்கும்  x  தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கும் ஆணாதிக்கத்திற்கும்  x  பெண்களுக்கும் பெருந்தேசிய இனத்திற்கும்  x  மொழிச் சிறுபான்மையினருக்கும் (மாநிலம்) தேசிய வளர்ச்சிக்கும்  x   பிராந்திய ஏற்ற தாழ்விற்கும் (மாநிலம்) பழங்குடியினருக்கும்  x  பழங்குடி அல்லாதோருக்கும் அண்டை தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடு என முக்கிய பெரிய முரண்பாடுகள் நிலவுகின்றன. இவைகளை களைய சோசலிசப் புரட்சிக்கான திட்டத்தை அதிகபட்ச திட்டமாகவும், முதலாளிய கூறுகளை கொண்ட சனநாயக புரட்சியை, அதாவது சோசலிசத்திற்கு முந்தைய கட்டத்திற்கான திட்டத்தை குறைந்தபட்ச திட்டம் என்றும் வரையறுக்கிறோம்.

என்ன வகையான திட்டம்?

சோஷலிச கூறுகளை அதிகமாகவும் சில முதலாளித்துவ சனநாயகக் கூறுகளையும் கொண்ட புதிய சனநாயக  தமிழ் தேசிய புரட்சியின் கட்டமாக முன்வைக்கிறோம். தமிழ்நாடானது இந்திய பிராந்திய பெரு முதலாளிகள், மூலதன சாதி நிலக்கிழார்கள், ஏகாதிபத்தியங்கள் மற்றும் அதிகார வர்க்க முதலுடமையின் சுரண்டல் காடாக உள்ளது. இதையொட்டியே தமிழ் தேசியப் புரட்சியின் பொது திட்டமாக இரு பகுதிகளைக் கொண்டதாக கூறுகிறோம்

1 தமிழ் தேசிய பொதுத்திட்டம்

2 கூட்டக (பெடரல்) பொது திட்டம்

கூட்டக பொது திட்டம் என்பது இந்தியாவில் உள்ள இதர தேசிய இனங்கள் மற்றும் பழங்குடிகளுடன் இனைந்து, இந்திய ஒன்றிய அரசை வீழ்த்தி, தமிழ் தேசிய விடுதலையை உறுதிபடுத்துவதாகும்.

தமிழ் தேசியப் புரட்சியின் இலக்குகளாக

1. இந்திய பிராந்திய பெரு முதலாளி வர்க்கம்

2. ஏகாதிபத்தியங்கள்

3. மூலதன-சாதி-நிலக்கிழார்கள்

4. அதிகார வர்க்க முதலாளிகள் என வரையறுக்கிறோம்

இந்த இலக்குகளை தூக்கி எறிய தொழிலாளர்கள், விவசாயிகள், குறு, சிறு நடுத்தர விவசாயிகள், குத்தகை விவசாயிகள், தலித்துகள்,மத சிறுபான்மையினர் மீனவர்கள் பழங்குடிகளை இணைத்து பாட்டாளி வர்க்க தலைமையிலான மேற்கண்ட புரட்சிகர வர்க்கங்களும், புரட்சிகர சிறப்பு பிரிவினருமே தமிழ் தேசிய விடுதலையின் புரட்சிகர மக்கள் முன்னணியாவர். இந்த நோக்கில் எங்கள் இலக்கை அடைய பல்வேறு தளங்களிலும் பணிபுரிந்து வருகிறோம். .

மாவோயிஸ்ட் கட்சியில் இருந்து எந்த வகையில் வேறுபடுகிறீர்கள்? மற்ற புரட்சிகர குழுக்களிலிருந்து குறிப்பாக மா.அ.க. (S .O .C ) எந்தளவில் வேறுபடுகிறீர்?

இந்திய பிராந்திய பெருமுதலாளி வர்க்கம் 1990-க்குப் பிறகு தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கலில் ஏகாதிபத்தியங்களுடன் போட்டி போடுவது மட்டுமல்லாமல், தங்களது மூலதனத்தை விரிவுபடுத்தவும் செய்துள்ளனர். கடந்த இருபது ஆண்டுகளில் தெற்காசிய பிராந்தியத்தில் அரசியல் அதிகாரத்தை மட்டுமல்லாமல் பொருளாதார ஆதிக்கத்தையும் அடித்தளமாக்கி தெற்காசிய பிராந்திய ஏகாதிபத்தியமாக தன்னை வளப்படுத்திக் கொண்டுள்ளது.

தெற்காசியா மட்டுமல்லாமல் இதர கண்டங்களிலும் தனது மூலதனத்தை விரிவுபடுத்தியுள்ளனர். உலகின் முதன்மையான 2000 கம்பனிகளில் 56 இந்திய கம்பனிகளாகும். டாட்டா, பிர்லா போன்றவர்களின் மொத்த வருவாயில்  50% க்கும் மேல் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வருகிறது. இன்று உலக அளவில் ஏகாதிபத்தியங்களின் பங்காளிகளாக  மாறியுள்ளனர். இந்நிலையில் இன்னும் தரகு முதலாளி என சொல்லிக்கொண்டு இருப்பது வேடிக்கையானது. அவ்வரசியல் வழி தோழர்கள் பணிபுரிவது போகாத ஊருக்கு வழி சொல்வது போலதான்.

மாவோயிஸ்ட் கட்சியானது பகுதி, சீர்திருத்த பொருளாதார போராட்டங்கள் மூலம் ஆயுத குழு வடிவத்தில் அதிகாரத்தை கைப்பற்றலாம் என செயல்படுகிறது. இது தொடர் தோல்வியையே தந்தது.

மக்கள்திரள் போராட்டங்களின்போது தொடக்கத்தில் வெற்றியை தந்தாலும், ஆயுத குழு வடிவத்தில் இணைக்கும்போது தோல்வி  அடைகின்றனர். அனைத்து மாநிலங்களிலும் இதே நிலைதான்.

எஸ்.ஒ.சி போன்றவர்கள் மக்கள் சிக்கலில் தலையிடாமல் அரசியலில் முன்னேறிய சக்திகளின் அரசியல்ரீதியாக சிக்கல்களை முன்வைத்து அணிதிரட்டல் செய்து வருகின்றனர். 30 வருடமாக இதே நிலை, குறுங்குழுவாததன்மை உள்ளது. இப்படி  ரெண்டும் ரெண்டு கோடியில் உள்ளனர்.

இதற்கு மாற்றாக மக்கள் அணிதிரட்டல் அரசியல் போராட்டங்களை ஒருங்கிணைத்தல் பணியை செய்கிறோம். இதற்கு மக்கள் திரள் போராட்ட வடிவங்களை கட்டனும்.

இதற்கு தலித் மக்கள் சனநாயக முன்னணி

பழங்குடி மக்கள் சனநாயக முன்னணி

மக்கள் சனநாயக பெண்கள் முன்னணி

உட்பட்ட அணிகளை கட்டி செயல்பாடுகளை தொடங்கியுள்ளோம். மக்கள் அரசியல் பேரெழுச்சி மட்டுமே ஆயுதப் போராட்டத்தை தீர்மானிக்கும். இப்போதைய நிலையில் இதற்கு மக்கள் தயாரில்லை. மக்கள் பல்வேறு மாயைகளில் சிக்குண்டு இருக்கிறார்கள். அவர்களை மீட்டெடுக்க வேண்டிய வேலைகள் இருக்கு.

சீமான் போன்றோர் முன்வைக்கும் தமிழ் தேசியத்திற்கும் உங்கள் தமிழ் தேசியத்திற்கும் என்ன வித்தியாசம்?

தற்போது பார்ப்பனியம் ரெண்டு வகைப்படுகிறது

வடக்கிலிருந்து வந்த பார்ப்பனியம்

வெள்ளாளிய  பார்ப்பனியம் என.

இந்து, இந்தியா, இந்தி எனும் நவீன பார்ப்பனியம்,

பார்ப்பன எதிர்ப்பு, ஆதிக்க சாதி சக்திகளின் தமிழ் தேசியம் எனும் வெள்ளாளிய தமிழ் தேசியம் என ரெட்டை தலை  நாகமா இருக்கு.

இந்த வெள்ளாளிய தமிழ் தேசியமான நவீன பார்ப்பனியத்தைத்தான் சீமான் போன்றோர் முன் வைக்கின்றனர். இவர்கள் பொதுதன்மையில் எதிர்ப்பது போல் பாவனை காட்டுவர். உண்மையான நெருக்கடி வரும்போது முகமூடி கிழிகிறது. இதற்கு உதாரணம் தர்மபுரி தலித் மக்கள் மீதான தாக்குதல் சம்பவம். இவர்கள் சிறுபான்மை மொழி பேசும் மக்களுக்கு எதிராக தாக்குதல் தொடுக்கின்றனர். மொழிவழி சிறுபான்மையினத்தவர்களை எதிரியாக காட்டி அரசியலை வளர்த்தெடுக்க முயற்சிக்கின்றனர். இது நவீன ராஜபக்சேயிசம்  ஆகும். இவர்கள் தமிழ் தேசிய ராஜபக்சேக்கள். தமிழகத்தை சேர்ந்த ஆளும் வர்கங்களின் தமிழ் தேசியம் இவ்வகைப்பட்டதுதான். சீமான், நெடுமாறன், பெ.மணியரசன் இவ்வகைப்பட்ட தமிழ் தேசியத்தைதான் முன்வைக்கின்றனர். நாங்கள் முன்வைப்பது உழைக்கும் மக்களுக்கான தமிழ் தேசியம். இங்கு அனைவரும் சாதியாகத்தான் பிறக்கிறார்கள். சிந்தனையில்தான் தமிழராக வளர்கின்றனர். சாதியை ஒழிக்க உழைக்கும் மக்களுக்கான தமிழன் எனும் சிந்தனையை வளர்த்தெடுக்க வேண்டும்

டில்லியில் பேருந்து பயணத்திலேயே ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி, பின் படுகொலையான சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பெண்கள் மீதான வன்கொடுமைகள் பற்றிய உங்கள் கட்சியின் பார்வை? அதை களைய வழி?

பாலியல் கொடுமையால் படுகொலையான டில்லி பெண்ணின் சம்பவம் பிற்போக்குத்தனம் மேலோங்கி உள்ளதையே காட்டுகிறது. தாராளமயமாக்களுக்கு பிறகு, மலிவு விலை உழைப்பின் காரணமாகவும் பெருமளவு உற்பத்தியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். தமிழகத்திலேயே சுமார் 30% உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். எனவே அவர்கள் வீட்டை தாண்டி சமூக வெளியில் பங்கேற்பதை தவிர்க்க, தடுக்க முடியாது. இந்த வகையில்தான் வெளி வரும்  பெண்கள் மீதான  வன்முறை மிகையாகவும், தொடர்ந்தும் வெடித்துக்கொண்டே உள்ளது. இதற்கு மாற்று வழியாக பிற்போக்குவாதிகள் பெண்களை மீண்டும் வீட்டுக்குள்ளேயே அடைக்கும் செயலை தூண்டி வருகின்றனர். பர்தா போட்டுக்கொள்ளவேண்டும், வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது, ஆடை வரைமுறை என பிற்போக்கு கலாசாரத்தை முன்வைக்கின்றனர்.

மாறுகின்ற சமூகத்தில் காதல் கூட மாற்றம் தருகிறது. அதை இவர்களால் ஏற்றுகொள்ள இயலவில்லை, சுதந்திரமாக ஆண்களோடு பங்குபெறுவதை பெரும்பாலான ஆண்கள் விரும்புவதில்லை. ஆணாதிக்கம் விரும்புவதில்லை. அதனால்தான் 9 மணிக்கு மேலே ஒரு ஆணோடு போவதா? என்கின்றனர், சகிக்க முடியவில்லை அவர்களால். மதவாதிகள், சாதியவாதிகள் தான் பெண்கள் வெளி வருவதை எதிர்க்கின்றனர். பெண்களை அடக்கி வீட்டுக்குள்ளே அடைத்து வைத்துக்கொள்ளுவதன் மூலமும், அவர்களை தங்கள் கட்டுக்குள் வைத்துகொள்ள விரும்புவதும், அதற்காக வேலை செய்வதும் சொத்துடைமையை காப்பாற்றிக்கொள்ளவும் அதைத் தக்கவைத்துகொள்ளவும்தான். பெண்ணிய விடுதலைக்காக போராடுவது என்பதும் சொத்துடமை முறையை முறிக்கும் பாதையை விரிவாக்கும் வழியே. கட்டாயம் இவைகளுக்கு எதிராக நாம் போராட வேண்டும். ஆண் -பெண் சமம் என்பதை குடும்பங்களில் இருந்தே கொண்டு வர வேண்டும். கருத்தியல் தளங்களில் முற்போக்கு விசயங்களை வளர்த்தெடுக்க வேண்டும்.

இன்றையகால நகரத்து இளைஞர்கள் இணையதள இளைஞர்களாக காட்சி அளிக்கின்றனர். கிராமம் வரையும்கூட இப்போக்கு நீண்டுகொண்டுள்ளது. முகநூல், வலைப்பூ எனும் இவர்கள் செயல்பாடுகள் பற்றி?

சமூக மாற்றம் என்பது இன்றைக்கு பெரு  முதலாளிகள் தங்கள் தேவைக்காக மேலிருந்து திணிக்கப்பட்டுள்ளதாக உள்ளது இன்றைய நவீனங்கள் எல்லாமே ஆளும் வர்க்கத்தின் நலன்களையே முதன்மையாக்கி உள்ளது. அவர்களுக்கு சாதகமான ஒன்றாகவே உள்ளது. இது மட்டுமே மாற்றம் தந்துவிடாது. இதை சுலபமாக ஆளும் வர்க்கம் தன் கட்டுக்குள் கொண்டு வந்துவிடும். அவைதான் சமீபத்தில் இணையத்தள செயல்பாடுகளை முடக்கும் சட்ட முயற்சியும், ஒரு சில கைதுகளும். ஆனால் இன்றைய நடுத்தர வர்க்க  இளைய சமூகம்  அனைத்து மாற்றங்களையும் முகநூலிலோ, இணையதளத்தின் வழியாகவோ கொண்டு வந்துவிட முடியும் என்ற ஒரு மாயையில் உள்ளது. இணையத்தளம், முகநூல் போன்றவைகள் தகவல் பரிமாற்றம், அறிமுகம் செய்ய உதவும். முழுமையான விடுதலையை மக்களை நேரில் சந்தித்தும் அணிதிரட்டியும் ஆளும் வர்கத்திற்கு எதிராக கள போராட்டத்தின் வழியாக மட்டுமே முன்நோக்கி செலுத்த முடியும்.

ஒருமுறை கைதானால்கூட குண்டர் சட்டம் என்ற தமிழக அரசின் எண்ணம் பற்றி சிறை அனுபவம் உள்ள நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

இன்றைய உலகமயம், பயங்கரவாத சட்டங்களை விரும்புகிறது. கடும் பயங்கரவாத சட்டங்கள் போடணும் என ஐ.நா வில் முடிவெடுக்கப்பட்டது. உலக வர்த்தக கழகத்தில் முடிவாகியே அமெரிக்காவின் பேட்ரியாட் சட்டம் கூட உருவானது. இன்றைய உலகமயத்தின் தாரக மந்திரம் என்பது இராணுவமயம், போலிஸ்மயம்தான். தமிழகத்தில் இன்று நடப்பதும் முயற்சிப்பதும் போலிஸ்மயம்தான். சமச்சீர் கல்வி, மின்வெட்டு, கூடங்குளம், முல்லை பெரியாறு, காவிரி என ஜெ-வின் ஆட்சி தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இவற்றில் இருந்து மக்களை திசை திருப்ப நக்சலைட் பீதியை அடிக்கடி கிளப்பிவருகிறது. இதன் மூலம் மக்களை அச்சமூட்டி தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துகொள்ளும் அரச பயங்கரவாதம் இது. இந்த அடிப்படையில்தான் ஒரு முறை போராடினால்கூட அவர் மேல் குண்டர் சட்டம் பாய்ச்சலாம் என்பதான கடும் சட்டங்கள். இது ஜனநாயக, புரட்சிகர சக்திகளுக்கு விடப்பட்ட சவால்தான். எள்ளளவும் அரசுக்கு எதிராக மக்கள் திரும்பிவிடக் கூடாது என்ற பயம் இந்த கொடும் சட்டங்களை கொண்டு வருகிறது. சட்டங்களால் மக்களின் உணர்ச்சியை ஒரு கட்டுக்குள் வைத்துருக்கலாம் ஆனால் அடக்கிவிடமுடியாது. .

தமிழக சிறைகளின் இன்றைய நிலை?

எந்த ஆட்சி வந்தாலும் அங்கு உளவுத்துறையின் ஆட்சிதான் நடந்து வருகிறது. அமைப்பின் சாதாரணமான நிர்வாக குழு கூட்டம் ஒன்றை அண்மையில் குன்றத்தூரில் தெரிந்தவர் பள்ளியில் நடத்தினோம், ஒலிபெருக்கிகூட பயன்படுத்தவில்லை. எதற்காக அனுமதி வாங்க வேண்டும்? ஆனால் எங்களை கைது செய்தனர். டி.ஜி .பி ராமானுஜம் உளவுத்துறையிலேயே இருந்து அனுபவம் பெற்றவர். அந்த அனுபவத்தை ஜனநாயக அமைப்புகளுக்கு எதிராக பயன்படுத்தி மக்களை அச்சமூட்டும் வேலையை செவ்வனே செய்து வருகிறார். இது நீண்டநாள் நிலைக்காது. மேலும் இன்று சிறையும்  உளவுப் பிரிவின் கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது. அரசியல் கைதிகள் உள்ள அறையை அடிக்கடி சோதனை என்ற பெயரில் உளவு பார்ப்பது. நாங்கள் சிறையின் உள்ளே இருந்த சமயம் பார்த்து பேரறிவாளன் அறையைக்கூட சோதனை என்ற பெயரில் அனுமதி பெற்று வாங்கிய புத்தங்களைக்கூட அடிக்கடி கலைத்துப் போட்டனர். என்ன என்ன புத்தங்கங்கள் படிக்கிறார்கள் என ஏற்கனவே சோதனை செய்த நூல்களையும்கூட சோதனை என்ற பெயரில் கலைத்து அவர்களை உளவியல் ரீதியாக சிதைக்க முயற்சித்தனர். மறுபக்கம் உயர் பாதுகாப்பு தொகுதி என சிறைக்குள் சிறை உள்ளது. இவைகள் எல்லாமே உளவு பிரிவின் கைங்கர்யம்.

காவேரி, கூடங்குளம், மின்வெட்டு என தமிழகம் தத்தளிக்கிறது. அரசியல்ரீதியாக இந்த இன்னல்களுக்கு தீர்வென்ன? உங்கள் கட்சியின் பார்வை என்ன?

காவிரி பிரச்சினையை முன்பே தீர்த்து இருக்க வேண்டும். தமிழக அரசு நாடகம் நடத்துகிறது. மைய அரசுக்கு நெருக்கடி உருவாக்குவதில்லை, தீவிரதன்மைக்கு கொண்டுபோவதில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு தருவதே உடனடி தேவையாகும், நிரந்த தீர்வுக்கு ஹெல்சிங்கி (Helsinki Treaty) ஒப்பந்தப்படி, அதாவது சர்வதேச ஒப்பந்தப்படி இரு மாநில விவசாயிகள், பொறியாளர்கள் கொண்ட கமிட்டி மூலம் விகிதாச்சார அடிப்படையில் நதிநீரை பங்கிட்டு கொள்ளவேண்டும், இது நிரந்தரமானதும் இல்லை. எங்கு விவசாயம் அதிகம் உள்ளதோ அந்த விகிதாச்சாரப்படி பிரித்துகொள்ளும்போது பிரச்சனை இல்லை.

கூடங்குளம் அணுமின் நிலையத்தைப் பொறுத்தவரை நாங்கள் அப்பொழுதே, 1991-இல் தமிழகம் முழுக்க சைக்கிள் பேரணி சென்று எதிர்த்து பிரச்சாரம் செய்துள்ளோம். அது வளர்ச்சியின் அடையாளமல்ல கைவிடப்பட்ட தொழில்நுட்பம். மின் பிரச்சனைக்கு சூரிய மின்சாரம் போன்ற மாற்று வழியை முன் வைக்கலாம், அந்த சூரிய தகடுகளை இலவசமாய் அரசு மக்களுக்கு தரலாம். மின்வெட்டை பொறுத்தவரை பன்னாட்டு முதலாளிகளுக்கு இலவசமாகவும், குறைந்த விலையிலும் தாராளமாக வழங்கப்படும் தடையில்லா மின்சாரமே மக்கள் தலையில் மின்வெ(வே)ட்டாக வந்து விழுகிறது. அதை தடுத்தாலே மின்வெட்டு பிரச்சனையை பெருமளவு  தீர்த்துவிடலாம்.

தேர்தல் பாதையில் பயணிக்க திட்டமா? அங்குள்ள சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகளை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

அன்றைய சூழல், தயார் நிலை, கட்சியின் பலம் இதையொட்டியே யுக்திகள் வகுக்கப்படும், ஆனால் அனைத்துவகை வடிவங்களும் பயன்படுத்தப்படும். 1905 இல் லெனின் தேர்தலை முழுமையாக புறக்கணித்தார். அதே 1906-இல் 'பங்கேற்று இருக்கலாம்' என்றார். 1907 இல் 'கட்டாயம் பங்கு பெறணும்' என்றார்.

எனவே தேர்தலில் பங்கேற்பது என்பது சூழலை ஒட்டியே. தேர்தலில் பங்கெடுப்பது என்றால் அதிலேயே கரைந்து போய்விடுவோம் என்று அர்த்தமல்ல. .

சி.பி.ஐ, சி.பி.எம். ஆகிய இரண்டும் தேர்தலை மட்டுமே பாதையாக கொண்டுள்ளன.

மாவோயிஸ்ட் கட்சியானது தேர்தல் புறக்கணிப்பில், ஆயுத அரசியலில் மட்டுமே பயணிக்கிறது. எங்களைப் பொருத்தவரை இரண்டுமே ஒரே படகில் சவாரி செய்பவர்களாகத்தான் பார்க்கிறோம். அதாவது, தேர்தல் பங்கேற்புவாதம், புறக்கணிப்புவாதம் இரண்டுமே தேர்தல் வடிவத்தை மூல உத்தி பாதையாக உயர்த்துவது கோட்பாட்டு அடிப்படையில் தவறாகும்.

உங்கள் குறிக்கோள்தான் என்ன?

தெற்காசிய மண்டலத்தில் பலமான ஒருங்கிணைந்த கூட்டரசை அமைப்பதும், ஏகாதிபத்தியத்தை உலகிலிருந்து ஒழித்துக்கட்ட உதவுவதும், உலகம் முழுவதும் சோஷலிச ஒருங்கிணைப்பை உருவாக்குவதும் பொதுவுடைமை சமூகத்திற்கு மாறிச்செல்வதும் என்ற உயர்ந்த குறிக்கோளை எங்கள்  மக்கள் சனநாயக குடியரசு கட்சி கொண்டிருக்கிறது. இதற்கு "ஓட்டும் வேட்டும் ஆயுதமல்ல, மக்களே ஆயுதம்." எனும்  பாதையில் இலக்கை நோக்கி பயணிக்கிறோம்.

பேட்டி தொகுப்பு: சிலம்பு.