இஸ்லாமியர்களின் உணர்ச்சிகளை மதிக்கிறேன். ஆனால் என் ஐயம் என்னவென்றால், இன்றைக்கும் என் இஸ்லாமிய தோழர்களை பகடைக்காயாய் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான். ஒரு மதம் இன்னொரு மதத்திற்கு தீர்வு இல்லை. மதம் சாராத ஒருவரால்தான் எல்லா மதங்களையும் சமமாக பாவிக்க முடியும். இது பெரியார் சொன்னது. இன்று இந்த மதம் சாராத நடுநிலைவாதிகள் இஸ்லாமியர்களின் கருத்தை ஏற்கவில்லை. அதன் காரணம் அவர்களால் மட்டுமே இப்பிரச்சனையை உண்மையாக இதன் வேரிலிருந்து பார்க்க முடியும். உங்களுக்கு அது மறைக்கப்பட்டு நுனிப்புல் மட்டுமே காட்டப்படுகிறது.

ஒரு தனி மனிதனின் கருத்து சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். அந்த கருத்தை ஆதரிக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம். இது கருத்து சுதந்திரம். ஒரு கருத்து வெளியானதும் அதை விமர்சிப்பதும் சுதந்திரமே. ஏற்றத்தாழ்வில்லாமல் யார் வேண்டுமானலும் கருத்திடலாம், விமர்சிக்கலாம். இதுவே ஜனநாயகம். சரி இந்த ஜனநாயகப் போக்கு விஸ்வரூபம் தொடர்பான நிகழ்வில் கடைபிடிக்கப்படுகிறதா? இல்லை. ஒரு சாரார் பார்த்ததை ஒரு பொதுவான கருத்தாக என் இஸ்லாமிய தோழர்கள் ஏற்கிறார்கள். இது எப்படி நியாயம்? கமல் தன்னை முற்போக்காளனாக காட்டிக் கொள்வதால் அவர் நியாயமாகத்தான் படம் எடுத்திருப்பார் என்று சொல்ல நான் தயார் இல்லை. அவர் ஒரு முற்போக்காளனாகவும் நடிக்க முடியும்.

சரி ஏன் படத்தை திரையிட வேண்டும்? இது ஒரு படம் அல்ல.. இது ஒரு கருத்து அல்லது திட்டமிட்டு திணிக்க நினைக்கும் கருத்து. இதை திரையிடாமல் ஆக்கிவிடுவதால் இதை தடுத்து விடமுடியுமா? இத்திரைப்படத்திற்கான தடை இந்த கருத்துக்கான தடை. ஒரு கருத்தை தடை செய்வது அல்லது வெளியிடக்கூடாது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. சரி இதனால் கமல்ஹாசனுக்கு வெறும் பொருள் இழப்பே. ஆனால் என் இஸ்லாமிய தோழர்களுக்கு இதுவே எதிகாலத்தில் உரிமை இழப்பை ஏற்படுத்தும்.

என் இஸ்லாமிய தோழர்களுக்காக, இன்னும் எத்தனையோ அடிப்படை தேவைகளுக்காக நாம் இங்கு போராட வேண்டியுள்ளது. அதற்காக அரசுக்கு எதிராகவும், சிறுபான்மையினருக்கு (இந்த வார்த்தை எனக்கு ஏற்புடையதல்ல. ஆனால் அப்படி நம்மை நம்ப வைத்து இஸ்லாமியர்களை கண்ணெதிரே ஒடுக்குகிறார்கள்) ஆதரவாகவும் கணக்கிலடங்கா கருத்துக்கள் வெளியிட வேண்டியுள்ளது. அன்றும் இதே மாதிரியான தடையை இந்த அரசு அமைப்புகள் - இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்த நிகழ்வை காரணம் காட்டி - எந்த சிக்கலும் இன்றி அரங்கேற்றுவார்கள்.

மதம் சாராத நடுநிலைவாதிகளை தயவுகூர்ந்து கவனியுங்கள். அவர்கள் மதக் கருத்துக்களை ஆதரிப்பவர்கள் இல்லை என்பதாலேயே அவர்களை ஒதுக்கி விடாதீர்கள். அவர்கள் உங்களோடு இணைந்து உங்களுக்காகவும் போராடுபவர்கள். அவர்களுக்கு செவிகொடுங்கள்....

Pin It