கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அம்மையார் செயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றதும், காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக தகுதித்தேர்வு என்றொரு புதிய தேர்வு முறையை அறிவித்தார். இது இன்னும் ஒரு சில நாட்களில் பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி கிட்டிவிடும் என்றெண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு பேரிடி தரும் செய்தியாக இருந்தது.

 இந்தத் தகுதித் தேர்வு முறைக்கு தற்போது பணியிலிருக்கும் ஆசிரியர் மத்தியிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

 இணைய தளங்களில் சில ‘அதிமேதாவிகள்’ தகுதித் தேர்வை வரவேற்று அங்கலாய்த்திருந்தனர். அரசின் இந்தத் தகுதித்தேர்வு தகுதியான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கவும், மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதற்காகவும் மட்டுமே நடத்தப்படுகிறது என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே அவர்களின் கருத்துருக்கள் வெளியாகி இருந்ததை அறிய முடிந்தது.

 அரசின் இந்தத் தகுதித்தேர்வு அறிவிப்புக்கான அடிப்படைக் காரணத்தை அறிய நம் முந்தைய கால கல்வி வரலாறுகளை அசைபோடுவது அவசியமாகிறது.

school_students_379 வெள்ளை ஏகாதிபத்தியம் இந்தியத் துணைக் கண்டத்தை விட்டு அகன்ற பிறகு, இலவய தாய்மொழி வழிக்கல்வி தருவதற்கு கிராமங்கள் தோறும் அரசுப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. அப்பள்ளிகளைத் தொடங்கியதற்கான அடிப்படை நோக்கம் எல்லாக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி, அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி என்பதாக இருந்தது.

 கேடான சாதியத்தையும், அதனடிப்படையிலான தொழில் பிரிவுகளையும் பாதுகாக்கும் சூழ்ச்சியினைக் கொண்ட, இராசாசி கொண்டு வந்த குருகுலக் கல்வித் திட்டத்தை அப்புறப்படுத்தியும், நிதி நிலையைக் காரணம் காட்டி இராசாசியால் மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகளை மீண்டும் திறக்கவும், மேற்கொண்டு 12,000 புதிய பள்ளிகளைத் தோற்றுவிக்கவுமான சிறப்பான செய்கைகளைச் செய்தது அப்போதைய காமராசர் ஆட்சி. இதன் மூலம் முதல்வர் காமராசர் ஆட்சிக் காலத்தில் செயல்பட்ட பள்ளிகள் எண்ணிக்கை 27 ஆயிரமாக உயர்ந்தது. இதனால் கல்வியறிவு பெற்றோரின் அளவு மளமளவென உயர்ந்து 37 விழுக்காடானது. வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் கல்வியறிவு பெற்றோர் வெறும் 7 விழுக்காட்டினரே. இவ்வாறாக, தமிழகத்தின் கல்வி வளர்ச்சி சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. கல்வித்துறை தமிழக அரசின் வசமிருந்ததால், அனைத்து தரப்பு மாணவர்களும் அரசுப் பள்ளிகளில் சென்று, தாய்மொழியைச் சிறப்பாகக் கற்கக்கூடிய நிலை இருந்தது.

 1976-இல் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அமுல்படுத்தப்பட்டிருந்த காலகட்டத்தில் அனைவருக்கும் சீரான – தரமான கல்வி என்ற பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி, கல்வியாளர்கள், அறிஞர்கள் போன்றோரது கருத்துக் கேட்பு ஏதுமின்றி தமிழக அரசின் வசமிருந்த கல்வித்துறையை பொதுப்பட்டியலுக்கு மாற்றம் செய்து கொண்டது நடுவணரசு. அதற்குப் பிறகு 1980-களில் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் என்ற பெயரில் தனியார்ப் பள்ளிகள் ஆங்காங்கே தலைகாட்டத் தொடங்கின. நம் மக்களிடையே படிந்திருந்த ஆங்கில மோகத்தை இந்த ஆங்கில வழித் தனியார் பள்ளிகள் நன்கு பயன்படுத்திக் கொண்டன. எனவே. ஆங்கில வழிப்பள்ளிகள் புற்றீசல் போலப் பெருகத் தொடங்கியது.

 கொடிய மனுதர்ம நெறிகளாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் தங்கள் தன்னெழுச்சியின் கரத்தை வலுவாய்ப் பற்றிக் கொண்டு, கல்வி பயின்று, சிலர் அரசுப் பணியிலும் கோலோச்சத் தொடங்கினார்கள். சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், சற்றொப்ப பத்துப் பதினைந்து ஆண்டுகள் வரை அரசுப் பணிக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை இருந்தது.

 1990-2000-களில் அரசுப் பணிகளில், காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களை அரசு மொத்தமாக நிரப்பியதன் மூலம், ஒரே முறையில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்சி முடித்த ஆசிரியர்கள் பணி வாய்ப்பினைப் பெற்றார்கள். எனவே, ஆசிரியர் பயிற்சி முடித்தால் விரைவில் அரசுப் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏழை, எளிய உழைக்கும் மக்கள் தங்கள் குழந்தைகளை ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

 இந்நிலையில் தான், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் சந்துக்குச் சந்து ஆசிரியர் பயிற்சி நிறுவனக் கடைகளை விவரிக்கத் தொடங்கியது. சற்றொப்ப பத்தாண்டுகளுக்கு முன்பு மழைக்காலத்தில் முளைக்கும் காளான்களைப் போல் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் முளைக்கத் தொடங்கின. அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளின் நிர்வாகம் புறக்கணிக்கப்பட்டு அரசுப் பள்ளிகள் தரம் குறைந்தவை என்ற தவறான கருத்து மக்களிடையே உலாவத் தொடங்கியது. எனவே தான், ஏழை, எளிய மக்கள் கூட பல்லாயிரம் ரூபாய் கட்டணத்தைச் செலுத்தி தனியார் பள்ளிக்கு அனுப்புவதையே விரும்பினர். அதன் விளைவு இன்று தமிழ்நாடு முழுவதும் 5255 தனியார்த் தொடக்கப்பள்ளிகளும், 1716 தனியார் நடுநிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.

 தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சுமார் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்த அரசுப் பள்ளிகள் போதுமான மாணவர் வருகை இல்லாத காரணத்தால் மூடுவிழாக் காண வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டது. நேற்று தொடங்கப்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கூட, ஆயிரக்கணக்கில் மாணவர்கள் பயிலும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வந்த அரசுப் பள்ளிகளில் இன்று ஒற்றை எண்ணிக்கையில் மாணவர்கள் வருகை இருப்பது அரசின் திட்டமிட்ட செயலின் விளைவே.

 அரசுப் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை குறையக் குறைய ஆசிரியர் – மாணவர் விகிகத்தின் அடிப்படையிலான ஆசிரியர் காலிப்பணியிடங்கள் வெகுவாகக் குறைந்தன. எடுத்துக்காட்டாக, எட்டு ஆசிரியர்கள் வரை பணிபுரிந்த அரசுப் பள்ளியில் இன்று ஓரிரு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரியக்கூடிய அளவில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்துவிட்டது. அரசுப் பள்ளிகளின் இந்த அவலநிலைக்கு, அரசுப் பள்ளிகளின் மீதான அரசின் அக்கறையின்மையும், பொறுப்பற்ற தன்மையும், தனியார்த்துறைப் பாசமும் தான் அடிப்படைக் காரணமாகும்.

 அரசுப் பள்ளிகள் மட்டுமே மாணவர்களுக்கு கல்வி அறிவைப் புகட்டி வந்த நிலையில், 1980-க்குப் பின் தனியார் பள்ளிகளைத் திறக்க அடுத்தடுத்து அனுமதியளித்தது அரசின் தனியார்மய பாசத்தையே காட்டுகிறது. அரசு நடத்தி வரும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனம் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் போன்ற நிறுவனங்களிலிருந்து மட்டும் ஆசிரியர் பயிற்சி பெற்ற மாணவர்கள் வெளியேறியிருந்தால், ஆசிரியர் பயிற்சி முடித்த அனைவருக்கும் ஓரளவு அரசுப் பணி கிடைத்திருக்கும். ஆனால் இன்று 400 சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், சுமார் 649 சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் ஏழை, எளிய உழைக்கும் மக்களின் பணத்தை பிடுங்கி ஏப்பம் விட்டு வருகின்றனர்.

 மேற்கண்ட தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிடமிருந்து, அரசும், ஆட்சியாளர்களும் கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு கல்வி நிறுவனத்தை நடத்திக் கொள்ள கண்ணசைத்தார்கள். இந்நிறுவனங்களும், கண்டமேனிக்கு மாணவர்களிடமிருந்து தொகையை வாரிக் குவித்து வருகின்றன.

 ஒரு புறத்திலே, ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வியியல் கல்வி பட்டம் முடித்த மாணவர்கள் இலட்சக்கணக்கில் வெளியேறிக் கொண்டிருக்க, மறுபுறத்திலே அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்தது. இதனால் அரசுப் பள்ளிகளில் உள்ள காலி ஆசிரியர்ப் பணியிடங்கள் மிகவும் சொற்பமாகவே இருந்து வருகிறது.

 ஆசிரியர் பயிற்சி முடித்து இலட்சக்கணக்கான இளைஞர்கள் அரசுப் பணிக்காக காத்துக் கிடக்கும் நிலையில், புதிதாக முளைக்கும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு வழங்கும் அங்கீகாரத்தை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு அங்கீகாரத்தை நிறுத்திக் கொள்வதன் மூலம் அரசும், ஆட்சியாளர்களும் தங்களுக்குக் கிடைக்கும் கோடிக்கணக்கான தொகையை இழக்க வேண்டி வரும் என்பதற்காக, புதிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு மேலும், மேலும் அங்கீகாரத்தை வழங்கிய வண்ணமே உள்ளது.

 தமிழகத்தை ஆளும் அரசாங்கங்கள் புதிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் அங்கீகாரத்தை நிறுத்திக் கொள்ளவோ, சரியான அடிப்படை வசதிகளற்ற நிறுவனங்களின் அங்கீகாரத்தை இரத்து செய்யவோ தயாராக இருக்காது. ஏனெனினல், இந்த நிறுவனங்களின் முதலாளிகள் சாதிச்சங்க தலைவர்களாக, தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி செய்யும் வங்கிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், சாதிக் கட்சித் தலைவர்களின் கல்வி நிறுவனங்களைப் பகைத்துக் கொண்டால் அந்த சாதியினரின் வாக்குகள் சரிந்து போய்விடும் என்ற அச்சமும் அரசாங்கத்தின் கைகளை இறுகக் கட்டிப்போட்டிருக்கிறது.

 இவ்வாறான, தனியார் பெருமுதலாளிகள் மீதான அரசியல் அடிமைத்தனத்தால் கல்வியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களின் எண்ணிக்கை 12 இலட்சத்தைக் தாண்டிற்று. ஆனால் அரசுப் பள்ளிகளிலிருக்கும் காலிப்பணியிடங்கள் மிகச் சொற்பமே. மேலும், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் அரசுப் பணி வேண்டி வேலை வாய்ப்பு அலுவலகக் கதவுகள் பெயர்ந்துவிழும் அளவிற்கு அழுத்தித் தட்டத் தொடங்கினார்கள். இவ்வாறான மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், தங்களுக்கே ஆபத்து வந்துவிடும். படித்து முடித்த இளைஞர்கள் போராட்டக் களத்தில் குதித்து வருவார்கள் என்றுணர்ந்த அரசின் வஞ்சகத் திட்டம் தான் ஆசிரியர் தகுதித்தேர்வு என்ற மோடிசத் தேர்வு.

 நடுவணரசால் 2009 - இல் பிறப்பிக்கப்பட்டு இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகக் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், இது அடிப்படையில் தனியார் பள்ளிகளின் நலனை மேம்படுத்துவற்காக கொண்டு வரப்பெற்றதாகவே எண்ணத் தோன்றுகிறது. எல்லாக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்து சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தில் சொல்லப்பட்டாலும் பல ஆண்டுகள் கடந்தும் கூட அரசு இன்னும் அந்த இலக்கை அடைய முடியாமல் பழைய பஞ்சாங்கத்தையே பாடிக் கொண்டிருக்கிறது.

 இலவயக் கல்விச் சட்டம் - 2009, தனியார் பள்ளிகள் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடத்தை வழங்கிட வேண்டும் என்று சொல்கிறது. இந்த புள்ளியின் ஆழத்தைக் கூர்ந்து நோக்கினால், இது அரசு பள்ளிகளின் பயின்றுவரும் ஏழை எளிய மக்களின் குழந்தைகளையும் படிப்படியாக தனியார் பள்ளிகளில் சேர்க்கும் ஒரு தந்திர யுக்தியே. இதற்கு அரசின் சமீபத்திய நிலைப்பாடுகளே நமக்கு சான்று பகர்கின்றன.

 அரசு தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் இறுதி வகுப்பில், பள்ளியளவில் முதல் மூன்றிடத்தைப் பெறும் மாணவர்களை, அரசே தங்கள் சொந்த செலவில் ‘நல்ல’ தனியார்ப் பள்ளிகளில் சேர்த்து தனது தனியார் விசுவாசத்தைக் காட்டிக் வருகிறது. அரசின் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பவர்களும், அரசுப் பணியிலிருப்பவர்களும், குறிப்பாக, அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கூட தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலையை அரசு ஓர் அரசாணையின் மூலம் மாற்ற இயலும். அதன் வாயிலாக தனியார் பள்ளிக்குச் செல்லும் கணிசமான மாணவர்களை அரசுப் பள்ளித் திருப்ப இயலும். ஆனால் அரசு அதை விரும்பாது. இவ்வாறான அரசின் தனியார் மீதான பாசத்தைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

 அரசு அறிவித்த இந்தத் தகுதித்தேர்வு அரசே முன்னின்று தகுதியற்ற மாணவர்களை உருவாக்கும் உள்நோக்கத்தைக் கொண்டது. தற்போது பணியிலிருக்கும் ஆசிரியர்களின் தகுதியைக் கொச்சைப்படுத்தும் தன்மையுடையது. அதன்படி, கடந்த சூன் மாதம் நடந்த முதல் தகுதித் தேர்வில், முறையாக ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து, கல்வி கடன் பெறுவதற்காக, வங்கிப் படிக்கட்டுகளில் அலையாய் அலைந்து படித்து முடித்த 90 விழுக்காடு மாணவர்களையும், அக்டோபரில் நடந்த 2-வது தகுதித்தேர்வில் 97.01 விழுக்காடு மாணவர்களையும் அரசு தகுதியற்றவர்களாக்கியுள்ளது. இதன் மூலம் இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று நெருக்கடியிலிருந்து தன்னை விடுவிடுத்துக் கொண்டுள்ளது.

 கடந்த தகுதித் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினத் தன்மையே இதற்குச் சான்று. நிறைய மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் கூட கேள்வித் தாளைப் பார்த்துவிட்டு திக்குமுக்காடிப் போனதை நாம் அனைவரும் அறிவோம்.

 தனியார் கள்ளச் சாராய பண முதலைகள் நடத்தி வந்த மதுபானக் கடைகளை பொன் முட்டையிடும் வாத்தாக எண்ணி, ஒரே அறிவிப்பின் மூலம் தானே ஏற்று நடத்தத் திட்டம் திட்டி நடைமுறைப் படுத்திய அரசு, மாணவர்களின் சிறந்ததொரு எதிர்காலத்திற்காக தரமான கல்வியை வழங்க தனியார் வசமுள்ள பள்ளிகளை ஏற்று நடத்த எண்ணாதது ஏன்?

 இளைஞர்களின் மதியை மயக்கி உயிரைக் குடிக்கும் மதுபானக் கடைகளை நடத்தத் தகுதியுள்ள அரசுக்கு மாணவர்களுக்கு அறிவுச் செல்வத்தை வழங்கும் கல்வி நிறுவனங்களை நடத்தத் தகுதியில்லையா என்ற கேள்ளி எல்லோருடைய மனத்திலும் இயல்பாக தோன்றுகிறது. இந்தக் கேள்விக்கு அரசின் நடத்தைகளும் சட்டதிட்டங்களும் இல்லை என்றே பதிலிருப்பதாக நாம் உணர முடிகிறது.

 தனியார் பெருமுதலாளிகளின் சில்லரைகளுக்காக வாலை ஆட்டும் இந்த அரசு, அவர்களின் நலனுக்காக எதை வேண்டுமானலும் செய்யும். மாணவர்களின் எதிர்காலத்தை அவர்களிடம் அடகு வைக்கவும் செய்யும். மாணவர்களின் கடந்த கால போராட்ட வரலாறுகள் சிறந்த முன்னுதாரணங்கள். எனவே, மாணவர்கள் தனியார் மயத்திற்கு எதிராகவும், அதன் ஊதுகுழலாய் விளங்கும் அரசுக்கெதிராகவும் விழிப்புற்றெழ வேண்டும்.

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்.

- தங்க.செங்கதிர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It