கடந்த 2012 அக்டோபர் 30ஆம் நாள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூசையை ஒட்டிப் பரமக்குடி வட்டாரத்திலும், மதுரை அருகிலும் நிகழ்ந்த வன்செயல்களில் மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் கொடுங்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வன்செயல்களால் தென் மாவட்டங்களில் சாதிக் கலவரம் ஏற்படுமோ என்ற அச்சம் தலைதூக்கிற்று.

இந்நிலையில் அக்டோபர் 30 வன்செயல்கள் குறித்து இயன்ற வரை உண்மைகளைக் கண்டறிந்து உலகிற்குச் சொல்லவும், எதிர்காலத்தில் இவை போன்ற வன்செயல்கள் நடைபெற விடாமல் தவிர்ப்பதற்கும் தடுப்பதற்குமான முன்மொழிவுகளைப் பரிந்துரைக்கவும், சமூக வன்முறைக்கு எதிரான உண்மை அறியும் குழுவின் சார்பில் சென்ற நவம்பர் 17, 18 நாட்களில் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம்.

குழுவில் இடம்பெற்றவர்கள்:

1) தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்;

2) கண. குறிஞ்சி, மனித உரிமைச் செயற்பாட்டாளர்;

3) பேராசிரியர் கோச்சடை, மக்கள் கல்வி இயக்கம்;

4) ப.பரிமளா, சேவ் தமிழ்ஸ், சென்னை;

5) ச.நாசர், சேவ் தமிழ்ஸ், சென்னை;

6) உ.அமரன், ஒருங்கிணைப்பாளர், தமிழக மக்கள் வாழ்வியல் இயக்கம், அருப்புக்கோட்டை:

7) அ. பீட்டர், மனித உரிமைச் செயற்பாட்டாளர், நெல்லை;

8) பரமன், கருத்துப் பட்டறை, மதுரை.  

 ***

உண்மை அறியும் குழுவைச் சேர்ந்த நாங்கள் பரமக்குடி-பொன்னையாபுரம், பாம்புவிழுந்தான், வெங்காலூர், சங்கான்கோட்டை, எஸ்.அண்டக்குடி ஆகிய ஊர்களுக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்துப் பேசி, விவரங்கள் சேகரித்ததோடு, மக்கள் கருத்தையும் கேட்டறிந்தோம். மதுரை அருகே அக்டோபர் 30 இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தைப் பார்வையிட்டோம். அந்த வன்செயலில் உயிரிழந்தவர்கள்-காயமுற்றவர்களின் ஊராகிய சிலைமான் புளியங்குளத்துக்குச் சென்று, அவர்களின் பெற்றோரையும் மற்றவர்களையும் சந்தித்து உரையாடினோம். பரமக்குடி நகரக் காவல்துறை ஆய்வாளர், துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்து விளக்கம் கேட்டறிந்தோம்.

பல்வேறு அரசியல் கட்சிப் பொறுப்பாளர்களையும் தொண்டர்களையும் சமுதாய இயக்கம் சார்ந்தவர்களையும் நேரில் சந்தித்து விளக்கமும் கருத்தும் கேட்டறிந்தோம். குறிப்பாக, தியாகி இமானுவேல் பேரவையின் பொதுச் செயலாளர் பூ.சந்திர போஸ், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் ராசு, வழக்கறிஞர் புண்ணியமூர்த்தி, மறத் தமிழர் சேனையின் அமைப்பாளர் பிரபாகரன், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தங்கராசு ஆகியோருடனும், நாம் தமிழர் கட்சி பொன்னையாபுரம் கிளைச் செயலாளருடனும், கண்ணுச்சாமி உள்ளிட்ட சமூக உணர்வாளர்களுடனும் உரையாடினோம். வருவாய்த் துறை அதிகாரிகள் சிலரையும் சந்தித்துப் பேசினோம்.

நாங்கள் ஆய்வு செய்த வன்செயல்கள் குறித்து நிகழ்தகவு அடிப்படையில் கண்டறிந்த உண்மைகளை ஈண்டு முன்வைக்கிறோம்:

1) பாம்புவிழுந்தான்:

2012 அக்டோபர் 30 காலை 10 மணியளவில் மேலப்பெருங்கரை கிராமத்திலிருந்து 12 இளைஞர்கள் மகிந்திரா வேனில் (TN 65 C 8366) பசும்பொன் செல்லக் கிளம்புகின்றனர். இந்த ஊர்தி கமுதக்குடியில் இருக்கும் ஆலைக்குத் தினந்தோறும் ஆட்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்டு வருவதாகும். இதன் உரிமையாளர் மலைராஜ். ஓட்டுனர் சிவகுமார் திருச்சுழி அருகே வேலங்குடியைச் சேர்ந்தவர். அந்த நாளில் இவருடன் கிளீனராகச் சென்றவர் பரமக்குடி வசந்தபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார்.

மேலப்பெருங்கரையிலிருந்து பசும்பொன் செல்ல வெங்காலூர்--பாம்புவிழுந்தான் வழியன்று. பிறகு ஏன் அந்த வழியாகச் செல்ல வேண்டும்? அந்த இளைஞர்களில் ஒருவரின் உறவுக்காரர் கார்த்தி என்பவர் நெடுங்குளத்தில் இருந்தார் என்றும், அவர் தானும் பசும்பொன் வர விரும்பினார் என்றும், அவரை ஏற்றிக் கொள்வற்காகவே அங்கு சென்றதாகவும் விளக்கம் தருகின்றனர். வண்டியில் கட்டியிருந்த மஞ்சள் கொடியும் அவர்கள் அணிந்திருந்த மஞ்சள் பனியனும் அவர்களைத் தெளிவாக அடையாளம் காட்டக்கூடியவை.

வெங்காலூரில் கம்பு, கற்கள், பிற ஆயுதங்களோடு மக்கள் அந்த வண்டியை வழிமறிக்கின்றனர். ஆனால் அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் வந்தவர்களை வந்த வழியே திரும்பி விடுமாறு கேட்டுக் கொள்கிறார். ஆனால் அவர்கள் மிரண்டு போய் அதிவிரைவாக வண்டியை எடுத்துச் சென்று விடுகின்றனர்.

 கொடியை அகற்றி விட்டு மஞ்சள் பனியனையும் கழற்றி விட்டு இருக்கைகளுக்கு அடியில் பதுங்கிகொண்டு, அண்டக்குடி வழியாக விரைகின்றனர். வெங்காலூரிலிருந்து செல்பேசித் தகவல் பறந்து, வழிநெடுக வேன் மீது கல்வீச்சு நடக்கிறது. இளைஞர்கள் சிலர் இருசக்கர ஊர்திகளில் வேனைத் துரத்தி வரவும் செய்கின்றனர்.

பாம்புவிழுந்தானை நெருங்கும் போது, கண்மாய் அருகில், டீசல் தீர்ந்து போனதாலோ, எஞ்சின் பழுதானதாலோ, சாலைத் தடைகளாலோ வண்டி நின்று விடுகிறது. இளைஞர்கள் வண்டியை விட்டிறங்கி ஓட்டம் பிடிக்கின்றனர். ஓட்டுநர் சிவக்குமார் மட்டும் ஓடவில்லை. அப்பகுதி மக்களுக்கு ஓரளவு அறிமுகமானவர், வெறும் ஓட்டுநர், தன்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று அவர் நம்பியிருக்கக் கூடும். வண்டியைக் காப்பாற்றும் எண்ணமும் இருந்திருக்கலாம். ஆனால் வன்முறைக் கும்பல் அவரைக் கொடூரமாக அடித்துக் கொன்று விடுகிறது. கல், கம்பு, அரிவாள் என்று எல்லா வகை ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடும். பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைக்காததால் இது குறித்து உறுதியாகச் சொல்ல இயலவில்லை. சிவக்குமாரின் உடல் தொலைவில் வற்றிய கண்மாயில் கிடந்துள்ளது.

பிறகு அவர்கள் அந்த வேனை அடித்து நொறுக்கிக் கவிழ்த்துப் போடுகின்றனர். இந்தக் கும்பலிடம் சிக்கி உயிர்பிழைத்த ஒருவர் நரேஷ் (வயது 14). அவரை அண்டக்குடி கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வண்டியில் ஏற்றி அனுப்பி விடுகின்றனர். தாக்குதலில் தப்பிய மற்றொருவர் கிளீனர் முத்துக்குமார். எல்லாம் முற்பகல் 11 மணிக்குள் முடிந்து விடுகிறது.

கொல்லப்பட்ட சிவகுமார் தேவர் வகுப்பைச் சேர்ந்தவர். உயிர்பிழைத்த முத்துக்குமார் வேளார் (குயவர்) வகுப்பைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. வன்செயலில் ஈடுபட்டவர்கள் முழுக்க முழுக்க அல்லது மிகப் பெரும்பாலும் தேவேந்திரர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

2) பொன்னையாபுரம்:

பாம்புவிழுந்தான் செய்தி விரைந்து பரவி பரமக்குடி சுற்றுவட்டாரத்தில் பதற்றம் ஏற்பட்ட நிலையில், ஐந்துமுக்கு தொடங்கி ரயில்வே கேட் வரைக்கும் பொன்னையாபுரத்தில் மக்கள் சாலையின் இருமருங்கிலும் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருக்கின்றனர். காவல்துறை ஊர்திகள் அந்த வழியாக பாம்புவிழுந்தான் நோக்கி விரைகின்றன. அப்போது இருசக்கர வாகனம் ஒன்றில் இருவர் வேகமாக அவ்வழியே வருகின்றனர். அவர்களில் ஒருவர் அல்லது இருவரும் அணிந்திருந்த மஞ்சள் பனியன் அவர்களை இனங்காட்டி விடுகிறது. அவர்களை வழிமறித்துக் கல், கம்பு, பிற ஆயுதங்கள் கொண்டு தாக்குகின்றனர்.

அவர்கள் தாக்கப்பட்டுக் கீழே விழுந்தார்களா? அல்லது வேகத் தடையில் மோதிக் கீழே விழுந்த பின் தாக்கப்பட்டர்களா? என்று உறுதியாகச் சொல்ல இயலவில்லை.

தாக்குண்ட இருவரும் உயிர்பிழைப்பதற்காக ஓட, வன்முறைக் கும்பல் விரட்டிச் சென்று தாக்குகிறது. சாலையிலிருந்து 30 அடித் தொலைவில் அவர்களைக் கல்லால் அடித்துக் கொன்று விடுகின்றனர். பெரிய கல்லைத் தூக்கி தலையில் போட்டதாகவும் சொல்லப்படுகிறது. காயங்களின் தன்மையைத் தெரிந்து கொள்ளவும், பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை ஊகித்தறியவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பார்க்க வேண்டும்.

திருப்புவனம் அல்லிநகரத்தைச் சேர்ந்த மலைக்கள்ளன், கீழராங்கியத்தைச் சேர்ந்த வீரமணி ஆகிய இருவரும்தான் பொன்னையாபுரத்தில் கொலையுண்டவர்கள் என்று பிறகுதான் தெரிய வருகிறது.

பொன்னையாபுரத்தில் மலைக்கள்ளன், வீரமணி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தால் ஒரு சாலை விபத்து நிகழ்ந்ததாகவும், அதில் அண்டக்குடியைச் சேர்ந்த நேரு என்பவர் காயமுற்றதாகவும், இதன் தொடர்ச்சியாகவே வன்செயல் நடைபெற்றது என்றும், அப்பகுதி மக்களில் சிலர் கூறினர். இது பற்றி நாங்கள் விரிவாக ஆராய்ந்தோம். எவ்வளவு முயன்றும் அண்டக்குடி நேருவை எங்களால் பார்க்க முடியவில்லை. காவல் துறையினரும் விபத்து ஏதும் நடக்கவில்லை என்றனர்.

நேருவுக்கு விபத்தில் காயம் ஏற்பட்டிருந்தால் அவர் ஏன் காவல் துறையிடமிருந்து ஒளிந்திருக்க வேண்டும்? தலைக் காயத்தோடு அவரைப் பார்த்த மருத்துவரிடம் தொலைபேசியில் பேசினோம். காயத்தின் தன்மை குறித்து அவரால் எதுவும் உறுதியாகக் கூற முடியவில்லை. நேருவுக்குக் காயம் ஏற்பட்டது உண்மை என்றும், ஆனால் அது விபத்தில் ஏற்பட்டதாக இல்லாமல், வன்செயலில் தவறுதலாக ஏற்பட்டதாக இருக்கலாம் என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது.

மலைக்கள்ளனும் வீரமணியும் வேண்டுமென்றே பொன்னையாபுரத்துக்குள் வம்படியாக நுழைந்திருக்க வாய்ப்பில்லை என்பதையும் ஏற்க முடியவில்லை. அவர்கள் வழிதவறியோ அல்லது பசும்பொன்னுக்குச் செல்லும் ஆர்வத்தினாலோ பொன்னையாபுரம் வழியாகச் சென்றிருக்க வேண்டும் என்பதற்குத்தான் கூடுதல் வாய்ப்புள்ளது.

மலைக்கள்ளனும் வீரமணியும் தேவர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.. முத்துராமலிங்கத்தேவர் குருபூசைக்குச் செல்லும் வழியில்தான் அவர்களுக்கு இந்தக் கொடுஞ்சாவு நேரிட்டுள்ளது. அவர்களை அடித்துக் கொன்ற வன்முறைக் கூட்டத்தினர் முழுக்க முழுக்க அல்லது மிகப் பெரும்பாலும் தேவேந்திரர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

3) மதுரை சிந்தாமணி:

மதுரை திருப்புவனம் அருகே சி.புளியங்குளத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அக்டோபர் 30 காலை நான்கு டாட்டா சுமோ வண்டிகளில் புறப்பட்டுப் பசும்பொன் செல்கின்றனர். அவர்களில் பெரும்பாலார் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் வேறு சமுதாயங்களைச் சேர்ந்த சில இளைஞர்களும் அவர்களோடு சேர்ந்து செல்கின்றனர்.

பசும்பொன்னிலிருந்து திரும்பி வரும் போது திருச்சுழி வழியாக ஊர்திகள் திருப்பி விடப்பட்டதால் மதுரை சுற்றுச் சாலை (ரிங் ரோடு) வழியாக வருகின்றனர். கடைசியாக வரும் சுமோவில் தேனியைச் சேர்ந்த ஒருவரையும் வழியில் ஏற்றிக் கொள்கின்றனர். அந்த ஒரு சுமோவில் மட்டும் 19 பேர், இடம் போதாமல் சிலர் கூரை மீதும் சிலர் கதவுகளைப் பிடித்துத் தொங்கியபடியும் பயணம் செய்கின்றனர்.

இரவு 8 மணியளவில் சிந்தாமணி சோதனைச் சாவடியில் காவல்துறையினர் வண்டியை நிறுத்தி, மேற்கூரையில் அமர்ந்திருந்தவர்களை இறக்கி வண்டிக்குள் செல்லப் பணிக்கின்றனர். இதற்கு சில மணித்துளிகள் ஆகி விடுவதால், மற்ற மூன்று வண்டிகளும் புறப்பட்டுப் போய் விடுகின்றன. கடைசி வண்டி மட்டும் தனியாகச் செல்ல நேரிடுகிறது. அது வேலம்மாள் மருத்துவமனையைக் கடந்து சிறு தொலைவே சென்றிருக்கும் போது, மஞ்சள் பனியன் அணிந்த இருவர் வண்டியை நிறுத்தக் கைகாட்டுகின்றனர். ஓட்டுநர் வண்டியை நிறுத்திக் கொண்டிருக்கும் போதே இரு பக்கத்திலிருந்தும் சிலர் பாய்ந்து வந்து எரியூட்டிய பெட்ரோல் குண்டுகளை வண்டிக்குள் வீசி விட்டு, சீமைக்கருவேல முட்புதர்களும் தோப்புகளும் அடர்ந்த பகுதிக்குள். ஓடி மறைந்து விடுகின்றனர். தீப்பற்றி மளவென்று வண்டி முழுவதையும் சூழ்ந்து விடுகிறது. உள்ளிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர், அளவுக்கதிகமாக அடைந்திருந்ததால் உடனே வெளியேறவும் முடியவில்லை. சாலையின் இடது ஓரம் நின்ற சுமோ சிறிதுசிறிதாக வலது ஓரம் சென்று விடுகிறது. ஒப்பளவில் குறைவாகவே காயம்பட்ட ஓட்டுநர் கதவுகளைத் திறக்க உதவுகிறார். இறங்கியவர்கள் அங்கிருந்து வண்டி சென்ற திசையிலேயே ஓடுகின்றனர், ஒருவருக்கொருவர் தீயை அணைத்துக் கொண்டும் சட்டையைக் களைந்து கொண்டும் ஓடுகின்றனர். கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் வரை ஓடிப் பின் விழுந்து விடுகின்றனர்.

பெட்ரோல் அடைத்து வீசப்பட்ட போத்தல் உடைந்து ஓர் இளைஞரின் கழுத்தில் குத்தி நின்றுள்ளது. வீசப்பட்டது வெள்ளை பெட்ரோல் என்றும், அதில் அமிலம் கலந்திருந்தது என்றும் உயிரிழந்த சுந்தரபாண்டியின் (வயது 20) தந்தை சேகர் (53) சொல்கிறார். நாங்கள் சென்று பார்த்த நாள் வரை பெட்ரோல் குண்டுவீச்சில் இறந்தவர்கள் 6 பேர்: ஜெயபாண்டி (19), வெற்றிவேல் (18), சுந்தரபாண்டி (20), தேசிங்குராஜா (18), ரஞ்சித்குமார் (20), விஷ்ணுபிரியன் (20).

அதன் பிறகு இந்த அறிக்கையை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் சிவராமன் என்ற ஒருவர் (18) இறந்த செய்தி வந்துள்ளது. ஆக மொத்தம் ஏழு பேர் பெட்ரோல் குண்டுவீச்சில் உயிர்ப்பலி ஆகியுள்ளனர். இந்த எழுவரும் தேவர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஆனால் வண்டியின் ஓட்டுநர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றும், பயணம் செய்த இளைஞர்களில் ஒருவர் நாடார், ஒருவர் பிள்ளை, ஒருவர் தேவேந்திரர் என்றும் சொல்லப்படுகிறது. எல்லோருமே இப்போது காயம்பட்டு மருத்துவமனையில் கிடக்கின்றனர்.

பாம்புவிழுந்தான், பொன்னையாபுரம் வன்செயல்கள் கொடிய கொலைகளே என்றாலும், கும்பல் வன்செயலால் நிகழ்ந்தவையே தவிர யாரும் சதித் திட்டம் போட்டுச் செய்தவை அல்ல. ஆனால் மதுரை சிந்தாமணி பெட்ரோல் குண்டுவீச்சு ஆழமான சதித் திட்டத்தின் அடிப்படையில் நிகழ்ந்துள்ளது. மஞ்சள் பனியன் அணிந்து வந்து வண்டியை நிறுத்தியதும், பசும்பொன்னிலிருந்து வரும் வண்டிகளில் ஒன்றைக் குறிவைத்து பெட்ரோல் குண்டு வீசியதும், அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த இடமும் ஓர் ஆழமான சதித் திட்டத்தைக் காட்டும். சதிகாரர்களின் நோக்கம் என்ன? சாதிக் கலவரத்தைத் தூண்டுவதா? மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதா?

சில காலம் முன்பு சின்ன உடைப்பில் அம்பேத்கர், இமானுவேல் சேகரன் சிலைகளின் கழுத்தை அறுத்ததும் இதே போன்ற ஒரு சதிச் செயல்தான். சின்ன உடைப்புக்கும் சிந்தாமணிக்கும் தொடர்பு இருக்குமோ? என்ற கோணத்திலும் புலனாய்வு செய்ய வேண்டும்.

சிந்தாமணி பெட்ரோல் குண்டு வீச்சு ஓர் ஆழமான சதிச் செயல் என்பதாலேயே எங்களால் ஏதும் கண்டறிந்து சொல்ல இயலவில்லை. இந்தக் கொடுஞ்சதியை முழுமையாகத் துப்புத் துலக்கி, சதிகாரர்களைக் கூண்டிலேற்றத் தவறினால், இன்னும் பெரிய அளவில் இன்னும் கொடிய குற்றங்கள் நடைபெறும் ஆபத்து உண்டு என்பதை மட்டும் அழுத்தமாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

காவல் துறை எடுத்துள்ள நடவடிக்கை குறித்து:

                பரமக்குடி-பாம்புவிழுந்தான், பொன்னையாபுரம் தாக்குதல்கள் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றாலும், இதுவரை முக்கியமான உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று இரு தரப்பினருமே குற்றஞ்சாட்டுகின்றனர். கையில் சிக்கிய இளைஞர்கள்-மாணவர்கள் சிலரைப் பிடித்து அவர்களிடம் வாக்குமூலம் பெற்றுப் பொய்வழக்குப் புனைவதில்தான் காவல்துறை குறியாக உள்ளது என்று பரவலான குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. பொன்னையாபுரம் வழக்கில் தியாகி இமானுவேல் பேரவையின் பொதுச் செயலாளர் சந்திரபோசைச் சேர்த்திருப்பது இப்படித்தான் என்கின்றனர். செப்டம்பர் 11 பரமக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அரசுக்கும் காவல்துறைக்கும் சங்கடமளிக்கும் விதத்தில் அவர் முன்னின்று செயல்பட்டதற்குப் பழிவாங்கும் முயற்சியாக இது இருக்கலாம்.

பாம்புவிழுந்தான், பொன்னையாபுரம் இரு பகுதிகளிலுமே காவல் துறையினர் தேடுதல் வேட்டையின் பெயரால் மக்களை சாதி சொல்லித் திட்டுவது, பெண்களை இழிவாகப் பேசுவது, படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை அடித்து இழுத்துப் போவது போன்ற பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டதாகவும், இப்போதும் ஈடுபட்டு வருவதாகவும் பொதுமக்கள் கூறுவதை நம்ப வேண்டியுள்ளது. இந்த வன்செயல்களில் முன்னின்று செயல்பட்ட சில சமூக விரோதிகளைக் காவல் துறைக்குத் தெரியும் என்றும், அவர்களைத் தேடிப் பிடிக்காமல் மக்களிடையே பீதியைப் பரப்பவும், வேண்டாத சிலரைப் பழிவாங்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதாகக் காவல்துறையின் அணுகுமுறை உள்ளது என்றும் அநேகமாக எல்லாத் தரப்பினரும் குறை சொல்லக் கேட்டோம்.

சிந்தாமணித் தாக்குதலைப் பொருத்த வரை, பல வழக்குகளில் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியதற்கு மேல் காவல்துறையின் புலனாய்வில் எவ்வித முன்னேற்றமும் இல்லை எனத் தெரிகிறது. காவல்துறையின் புலனாய்வுத் திறன் மீது பொதுமக்களுக்கு அதிக நம்பிக்கை இல்லை என்பதே உண்மை. தமிழகத்தில் அண்மையில் நடந்த சில பெருங்குற்றங்களில் காவல்துறையால் ஊடுடைத்து முன்னேற முடியாமலிருப்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர். அவ்வப்போது ஆட்சிக்கு வரும் அரசியல் தலைமைகள் காவல்துறையின் நடுவுநிலைமையைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியிருப்பதும் இந்த அவல நிலைமைக்கு ஒரு காரணம்.

தேவர்-தேவேந்திரர் சமுதாயங்களிடையிலான பூசலின் பின்னணியில் கடந்த காலத்தில் நடந்த கொலைகள், பிற குற்றச் செயல்கள் தொடர்பான எந்த வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த வரலாறு சாதியின் பெயரால் கொலையும் கொடுங்குற்றமும் புரிவோருக்கு ஊக்கமளிப்பதாய் உள்ளது.

அக்டோபர் 30 முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி நாளில் தென் மாவட்டங்களில் பதற்றமும் வன்செயல்களும் ஏற்பட வாய்ப்பிருப்பது தெரிந்தும் காவல்துறை மெத்தனமாக இருந்து விட்டதால்தான் பரமக்குடி-மதுரை வன்செயல்கள் நிகழ்ந்து விட்டன என்பது அனைத்துத் தரப்பினரின் கருத்தாகவும் உள்ளது.

வெங்காலூர்-பாம்புவிழுந்தான் பாதையில் சென்ற வேனைத் தடுத்த கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக வருவாய்த் துறை மேலதிகாரிகளுக்குத் தகவல் தந்து, காவல்துறையையும் வரவழைத்து விட்டார். வந்து சேர்ந்த காவல் துறை அதிகாரி உடனே வேனைத் துரத்திச் சென்றிருந்தால் பாம்புவிழுந்தான் படுகொலையைத் தவிர்த்திருக்க முடியும்.

பாம்புவிழுந்தான் செய்தி வந்தவுடனே காவல்துறையினர் பதற்றமாகிக் கண்காணிப்பைத் தளர்த்தாமல் இருந்திருந்தால், பொன்னையாபுரத்துக்குள் அந்த இருசக்கர ஊர்தி நுழைந்திருக்காது, அந்த இரட்டைக் கொலையும் நிகழ்ந்திருக்காது. எந்நிலையிலும் நிதானமிழக்காமல் உறுதியாகச் செயல்பட்டு அமைதிகாக்கும் பொறுப்பு காவல்துறைக்கு உண்டு.

மதுரை-சிந்தாமணி அருகே சென்ற ஆண்டு இதே நாளில் ஒரு பெட்ரோல் குண்டுவீச்சு நடந்திருந்தும் இவ்வாண்டு காவல்துறை உரிய முன்னெச்சரிக்கையுடன் செயல்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

மக்கள் கருத்து:

                நாங்கள் சந்தித்த பல்வேறு தரப்பினரும் பொதுமக்களும் நல்லெண்ணத்தின் பாற்பட்டுத் தெரிவித்த கருத்துகள் சிலவற்றை –- எங்களுக்கு அவற்றோடு உடன்பாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் – ஈண்டு பதிவு செய்ய விழைகிறோம்:

                ஆண்டுதோறும் முத்துராமலிங்கத் தேவர், இமானுவேல் சேகரன் ஆகியோரின் அக்டோபர் 30, செப்டம்பர் 11 நினைவுநாட்களில் பதற்றமும் வன்செயல்களும் ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை சீர்கெட்டு உயிரிழப்புகள் வரை நிகழ்வதைக் கருத்தில் கொண்டு இந்த விழாக்களைத் தடை செய்துவிட வேண்டும் என்ற கருத்தைப் பலர், முக்கியமாகப் பெண்களும் வணிகர்களும் முன்வைத்தனர்.

இரு விழாக்களையுமே ஓரிடத்தில் சாதிக்கூட்டம் சேர்க்கும் நிகழ்ச்சியாக இல்லாமல் ஆங்காங்கு உள்ளூரளவில் நடத்தலாம் என்ற கருத்தைச் சிலர் முன்வைத்தனர்.                 

முடிவுகளும் பரிந்துரைகளும்:

                1) சென்ற அக்டோபர் 30ஆம் நாள் பரமக்குடி வட்டாரத்திலும் மதுரை அருகிலும் வன்செயல்கள் நிகழ்ந்து 10 உயிர்கள் பலியானதற்குக் காவல்துறையின் மெத்தனமே முதன்மைக் காரணம் எனக் கருதுகிறோம். இதுகுறித்து விரிவாக, ஆனால் விரைவாக விசாரணை நடத்தி, கடமை தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2) பரமக்குடி பாம்புவிழுந்தான் – பொன்னையாபுரம் வன்செயல்கள் கும்பல் வன்முறையால் (mob violence) நேரிட்ட படுகொலைகளே என்ற முடிவுக்கு வருகிறோம். பாதிக்கப்பட்ட வேனும், இருசக்கர வாகனமும் தடை செய்யப்பட்ட வழியில் சென்றது தவறுதான் என்றாலும், அதற்காக அவ்வூர்திகளில் சென்றவர்களை அடித்துக் கொல்வதை ஏற்பதற்கில்லை. இந்தக் கொலைகளுக்குப் பின்னால் ஒரு சதித் திட்டம் உள்ளது என்ற கருத்தையும் ஒப்புக்கொள்ள இயலவில்லை. இந்தக் கொலைகளைச் செய்த உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து தேடிப்பிடித்துச் சட்டத்தின்முன் நிறுத்தக் காவல்துறை விரைந்து செயல்பட வேண்டும். இதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். நடந்து விட்ட வன்செயல்களைச் சாக்கிட்டு மக்களைத் துன்புறுத்துவதையும் பழைய கணக்குகளைத் தீர்க்கப் பொய் வழக்குப் போட முயல்வதையும் காவல்துறை உடனடியாகக் கைவிட வேண்டும்.

3) மதுரை-சிந்தாமணி பெட்ரோல் குண்டுவீச்சு ஓர் ஆழ்ந்த சதித் திட்டத்தின் அடிப்படையில் நிகழ்ந்துள்ளது எனத் தெளிவாகத் தெரிவதாலும், சதித் திட்டம் தீட்டியவர்களும் நிறைவேற்றியவர்களும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பி விட்டால் இன்னும் பெரிய கொடுங்குற்றங்களில் அவர்கள் ஈடுபடத் தோதாகி விடும் என்று அஞ்சக் காரணமுண்டு என்பதாலும், இதனைத் துப்புத் துலக்கவும் உண்மைகளை முழுமையாகக் கண்டறியவும் இந்த வழக்கை இந்திய நடுவண் புலனாய்வுத் துறையிடம் (CBI) ஒப்படைக்குமாறு வலியுறுத்துகிறோம்.

4) முத்துராமலிங்கத் தேவர், இமானுவேல் சேகரன் தொடர்பான இரு விழாக்களையும் தடை செய்ய வேண்டும் என்ற கருத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. இப்படிச் செய்வது புதிய சிக்கல்களையே தோற்றுவிக்கும், எந்த விழாவைத் தடை செய்வதும் சனநாயக உரிமைகளை மறுப்பதாகி விடும். சனநாயக மறுப்பு எந்தச் சிக்கலையும் தீர்க்கப் பயன்படாது.

5) தேவர்-தேவேந்திரர் முரண்பாட்டை அறிந்தோ அறியாமலோ முற்றச்செய்து மோதலாக்குவதில் அரசு இயந்திரத்துக்கும் ஒரு பங்குண்டு. விழாவுக்குச் செல்லும் வழித்தடத்தை ஒழுங்குபடுத்துவதன் பெயரால் குறிப்பிட்ட ஊரைக் குறிப்பிட்ட வகுப்பார்க்குத் தடை செய்யப்பட பகுதியாக அறிவிப்பது அந்த வகுப்பாரிடம் ‘இது நம்ம ஏரியா’ என்ற எண்ணத்தை வளர்ப்பதோடு, மற்ற வகுப்பாரிடையே ‘அந்த ஏரியாவுக்குள் போனால் என்னவாம்’ என்ற எண்ணத்தையும் வளர்க்கிறது. ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே இனம் என்ற நினைப்பை அகற்றி ‘எங்க ஏரியா, உங்க ஏரியா’ என்ற பிரிவினை-பிளவுச் சிந்தனையை ஆட்சியாளர்களே வளர்த்து விடுகின்றனர். எவரும் எந்த நாளிலும் எந்த ஊருக்கும் நியாயமான எந்த வழித் தடத்திலும் செல்வதற்கு அரசே உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

6) பெரும்பான்மை மக்கள் சாதிப் பற்றுள்ளவர்களாகவே இருந்தாலும் வன்செயல்களை விரும்புவதோ ஆதரிப்பதோ இல்லை. இப்போதைக்கு இவர்கள் ஊமைகளாக இருப்பது போல் தெரியும். இம்மக்களை அணிதிரட்டி விழிப்புணர்வு பெறச் செய்தால் சமூக நல்லிணக்கத்துக்கு அரணாகத் திகழ்வார்கள். இந்தத் திசையில் செயல்பட அரசுக்கும் நிர்வாகத்துக்கும் அரசியல் மனவுறுதி தேவை. அரசியல் கட்சிகளும் சமுதாய இயக்கங்களும் கூட இதற்கு உதவ முடியும். முதலாவதாக, செப்டம்பர் 11 அல்லது அக்டோபர் 30 நெருங்கும் போது மட்டும் ‘சமாதானக் கூட்டம்’ கூட்டுவது என்றில்லாமல், அவ்வப்போது உரையாடல் நடத்தி சிறு உரசல்களைக் கூட களையவும், பொதுச் சிக்கல்களில் கூட்டு முடிவுகள் எடுக்கவும் செய்ய வேண்டும்.

7) எந்த ஊரிலும் தேவர்கள், தேவேந்திரர்கள் எனும் இரு வகுப்பார் மட்டுமில்லை. மற்ற வகுப்பாரும் கூடக்குறைய இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களும் சமூகப் பதற்றத்தாலும் வன்செயல்களாலும் பாதிக்கப்படத்தான் செய்கிறார்கள். சமூக நல்லிணக்க முயற்சிகளில் அவர்களையும் ஈடுபடுத்துவது நல்ல பலன் தரும். சாதிச் சிந்தனைக்கு அப்பாற்பட்ட முற்போக்காளர்கள் எல்லா வகுப்புகளிலும் இருக்கிறார்கள். இவர்களையும் நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபடுத்தலாம். நடப்பது சாதிச் சண்டை, நமக்கென்ன என்ற மனநிலையிலிருந்து இந்த முற்போக்காளர்களும் விடுபட்டு உண்மை நீதியின் பக்கம் நின்று குரல் கொடுக்கத் துணிய வேண்டும்.

8) அவ்வப்போது அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த மக்களைத் திரட்டி அமைதிப் பேரணி நடத்துவதற்கு அரசு நிர்வாகமும் அரசியல்-சமூக இயக்கங்களும் முன்முயற்சி எடுக்கலாம்.

9) சமுதாய இயக்கங்களாகவோ அரசியல் கட்சிகளாகவோ வலம் வரும் சாதி அமைப்புகளைத் தடை செய்யத் தேவையில்லை. சமூகவழியில் ஒடுக்குண்ட மக்களின் முன்னேற்றத்துக்கு இத்தகைய அமைப்புகள் தேவைப்படுவதையும் மறுக்க இயலாது. ஆனால் அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் தங்கள் உறுப்பினர்கள் சாதிச் சங்கங்களில் உறுப்பு வகிப்பதைத் தாங்களாகவே தடை செய்தல் நலம்.

10) தென்மாவட்டங்களின் சாதியத்துக்கு அதன் சமூகப் பொருளியல் வளர்ச்சியின்மை ஒரு பின்னணியாக அமைந்திருப்பதைப் பலரும் பல முறை எடுத்துக்காட்டி ஆயிற்று. கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று எல்லா வகையிலும் இப்பகுதி மக்கள், குறிப்பாக தேவேந்திரர்களும் தேவர்களும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இவர்களை விடவும் பிற்பட்ட நிலையில் வேறு சில வகுப்பார் இருப்பதை மறுப்பதாகப் பொருளில்லை. ஆனால் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்காக ஓரணியில் நின்று போராட வேண்டியவர்கள் நினைவில் வாழும் தங்கள் தலைவர்களின் நினைவைச் சொல்லி முட்டி மோதிக்கொண்டிருப்பது வேதனைக்குரியது.

11) உழைக்கும் மக்கள் முகங்கொடுக்க வேண்டிய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கு உருப்படியாக ஒன்றுஞ்செய்யாமல், தலைவர்களுக்குப் பிறந்த நாள் - நினைவுநாள் விழாவெடுப்பது, நினைவுச் சின்னம், மணி மண்டபம் நிறுவுவது, சிலை வைப்பது, மாலை போடுவது, நிறுவனங்களுக்குப் பெயர் வைப்பது என்று ஆளும் வர்க்க அரசியல் கட்சிகள் நடத்தும் ஒப்பனைப் பூச்சுக் கவர்ச்சி அரசியலில் தமிழர்கள் மயங்கி விடக்கூடாது. ஆண்ட பரம்பரைப் பேச்செல்லாம் ஆளை மயக்கவும், அடுத்தவரைச் சண்டைக்கு இழுக்கவுமே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சமூக நீதிக்கான போராட்டத்தில் காட்ட வேண்டிய வீரம் சாதிச் சண்டையில் விரயமாகிறது.

12) முல்லைப் பெரியாற்று அணையுரிமை என்பது தென்மாவட்டங்களில் அனைத்து மக்களுக்குமான கோரிக்கை என்பது சாதிக் கூச்சலில் மறைந்து போகிறது. இழந்ததை மீட்கவும் இருப்பதைக் காக்கவும் ஒன்றுபட்ட போராட்டம் தேவை. இந்த வகையில் கூடங்குளம் ஓர் ஒளிவிளக்கம்.

13) உழைக்கும் தமிழர்களான தேவர்-தேவேந்திரர் இருசாராரும் அரசு இயந்திரத்தின், குறிப்பாகக் காவல்துறையின் அடக்குமுறைக்குத் தொடர்ந்து ஆளாகின்றனர். இந்திய அரசின் பொருளியல், அரசியல், பண்பாட்டு ஒடுக்குமுறை இருசாராருக்கும் பொதுவானது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தமிழர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டங்கள் வேற்றுமையைக் குறைத்து ஒற்றுமைக்கு உரமிடும். .

இறுதியாக, சமூக நல்லிணக்கத்தையும் தாண்டி உண்மையான, நீடித்த, நிலையான மக்கள் ஒற்றுமை என்பது ஒன்றுபட்ட உரிமைப் போராட்டங்களின் ஊடாகத்தான் மலரும். தேசிய இன ஓர்மை சுடர சுடரத்தான் சாதி இன ஓர்மை மங்கி மறையும்.

- தியாகு, அமைப்பாளர், சமூக வன்முறைக்கு எதிரான உண்மை அறியும் குழு

044-2361 0603, 98651 07107.