அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற உலக நாடுகள், அவர்களின் எதிரி நாடுகளுக்கெதிராகவும், ஹிட்லர், கடாபி, கலிகுலா, நேதாஜி, ராஜபக்க்ஷே, முஷரப், புஷ் போன்றவர்கள் செய்த தண்டனைக் கொலைகளை விடவும், கசாப் செய்த கொலைகள் ஒன்றும் அதிகமில்லை.

மனிதனால் வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட பூகோளத்தில், எல்லைகளை விரிவாக்கிக் கொள்ள ஆயுதம் ஏந்தினாலும், இன, மொழி, மத, சாதி உணர்வுகளின் அடிப்படையில் ஆயுதம் ஏந்தி உயிர்களை வேட்டையாடினாலும் அதை நியாயம் என்று கூறும் கருத்தாளர்களின் கைகளே பெரும்பான்மையாக ஓங்கியிருக்கிறது.

"மன்னிப்பதற்கும் ஓர் எல்லை உண்டு, அன்பு செலுத்துவதற்கும் ஓர் எல்லை உண்டு." இப்படி பல மாற்றுக் கருத்துக்களை நம் மனதில் விஷ ஊசி வைத்து ஏற்றிவிட்டார்கள்.
எல்லைகள் கடந்து மன்னிப்பதும், அன்பு செலுத்துவதும், தியாக மனப்பான்மை மனதில் ஓங்கி நின்று, மனம் பக்குவமடைவதிலுமே உண்மையான மனிதன் பிறக்கிறான்.

"அதெல்லாம் அந்த காலம் பாஸ். இந்தக் காலத்தில இதெல்லாம் முடியாது. கடவுளே இங்க வந்தாலும் வாழ முடியாது."

அப்புறம் என்ன மயிருக்குடா கடவுளை விழுந்து விழுந்து கும்புடுறீங்க.

நாட்களை எண்ணிக்கொண்டு மனித உருவில் இருக்கும் தீவிரவாதியோ, நடிகனோ, கலைஞனோ, எழுத்தாளனோ அல்லது காமன்மேனோ... அவனுக்கு தீர்ப்பு என்ற பெயரில் நாம் தண்டனை வழங்கலாம். ஆனால் சிக்கிக் கொண்டவனின் கழுத்தையறுத்து நம் பாவங்களை மூடி மறைக்கச் செய்யும் நாடகங்களை அரங்கேற்றுவதும், அதை நம்பிக் கொண்டும், நம்ப வைக்கும் முயற்சிகள் செய்யும் ஒரு கூட்டத்திற்கெதிராக நியாயம் பற்றிப் பேசுவதிலும் எந்தப் பலனும் இல்லை.

இரக்கம், கருணை, தியாகம் இம்மூன்றும் தெய்வீகம் எனப்படுவதாலே தெய்வங்களை வணங்குகிறோம். தெய்வ நம்பிக்கை கொண்டவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை பாராட்டும் நம் மனங்களில், கொடிய சாத்தான்களின் எண்ணங்கள் பிணைக்கப்பட்டு பல காலம் ஆகிவிட்டது.

படிக்கும், பார்க்கும், பழகும் ஒவ்வொருவரிடமும் இருந்தும் ஏதாவது நற்குணங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் "நான்" என்று சொல்லிக்கொள்ளும் முன்னாள் "நான்"-களாக நாம் ஒருவருமில்லை.

எவனுடைய மனமும் பலரிடமிருந்து கற்றுக்கொண்ட, கேட்டறிந்த அபிப்பிராயத்தின் மூலம் கட்டமைக்கப் படுகிறது. அப்படியென்றால் பிறப்பின் முதல் நாள் முதல், எண்ணத்தில் விதைக்கப்பட்ட கடவுளின் நற்குணங்கள் மட்டும் எதுவுமில்லாமற் போனது விசித்திரமாக உள்ளது. பொதுவாகத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம், எல்லா கடவுள்களும் அன்பை போதிக்கிறார் என்று.

பொதுநலன் கருதி ஒரு தீங்கான மனித உயிரை பறிப்பதில் தவறொன்றுமில்லை - இது பரவலான கருத்து.

விவிலியத்தில் இஸ்ரவேல் ஜனங்களைக் காக்கும் நோக்கில் பிதாவானவர் பல ஆயிரம் எகிப்தியர்களைக் கொன்று குவிக்கிறார். அதாவது தன்னை வணங்கும் அல்லது நேசிக்கும் ஒரு கூட்டத்திற்கு நேரும் துன்பங்களைப் போக்கும் பொருட்டு பல ஆயிரம் மனிதர்களை கொன்று குவிக்கிறார் பிதா. இதில் பிதாவானவர் பரிசுத்தமானவர் என்று சித்தரிக்கப் படுகிறார். அப்படி அவர் சித்தரிக்கப்படுவதற்கு சாட்சிகள் தான் பல ஆயிரம் கொலைகள். பல ஆயிரம் கொலைகள் எப்படி ஒருவனை நல்லவனாக்க முடியும்? நல்லவன் என்ற பெயருக்கும் மேல் அவனை வாழ்க்கை முழுவதற்கும் வணங்கவும், பின்தொடரவும் செய்ய முடியும்!!

ஒருவேளை பிதாவானவர் அவர்களுக்கு விரோதமானவர்களைக் கொல்லாமல் விட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? எகிப்தியர், இஸ்ரவேலர்களைக் கொன்றிருப்பார்கள். ஆனால் பிதாவை வழிபட ஒருவனும் இருந்திருக்க மாட்டான் உலகில்.

இந்த எண்ணமொன்றே பிதாவின் எண்ணத்தில் தோன்றியிருக்கலாம். அதன் பலனே எதிரிகளை(எகிப்தியர்களை)க் கொன்று அதை சாட்சியாக வைத்துக் கொண்டே தன்னை பரிசுத்தன் என்று காட்டிக் கொள்ளுதல்.

இதே கதைகள் தான் குரானிலும் வேறு மாதிரியாக அல்லா செய்தது போலிருக்கும்.

கீதையில் கடவுள்கள் பல அவதாரங்களை மேற்கொண்டு இறுதியில் யாரையும் மன்னித்ததாகத் தெரியவில்லை. ஒரு தண்டனைக் கொலை அல்லது தண்டனைக் கொலைக்கான நீண்ட பயணம்; அந்தப் பயணத்தின் வழியே பல கொலைகள்; இறுதியில் அந்த அவதாரத்தின் நோக்கமான இறுதிக் கொலை. அடுத்து மீண்டுமொரு அவதாரம். ஆனால் ஓவ்வொரு கொலையிலும் கடவுள் என்பவன் மேலும் மேலும் தூய உள்ளம் கொண்டவன் என்று நிரூபிக்கப்படுகிறான்.

இப்படி முன்மாதிரியாக விளங்கும் கடவுள்களின் ஒரு பகுதி எண்ணங்களும், செயல்களும் நம் உணர்வில் கலந்திருப்பதாலே இன்று செய்யப்படும் தண்டனைக் கொலைகளுக்கு நாம் பகிரங்கமாக ஆதரவு தருகிறோம்.

கடவுள்களை விட்டுத் தள்ளுங்கள். ஒரு காந்தியோ, தெரசாவோ, போப்போ, திண்டுக்கல் சின்னாளப்பட்டி கௌசல்யா தேவி அம்மையாரோ அல்லது கருணை, இரக்கம், தியாகம் மனதில் ஓங்கியிருக்கும் எவரேனும் தண்டனை என்ற பெயரில், உயிர் பறித்தலை நியாயம் என்று வாதாடினால் என்னிடமும் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதென்று என் கருத்தை மறு பரிசீலனை செய்து கொள்வேன். அவனவன் வீரத்திற்கு ஏற்றபடி வில்லை வளைத்துக் கொண்டிருக்கிறோம்.

இதே விவிலியமும், கீதையும், குரானும் இந்த தண்டனைக் கொலைகளைத் தாண்டி நமக்கு கற்றுக் கொடுப்பது ஏராளம். தியாகம் என்ற சொல் பேச்சு வழக்கிலும், கருணையும், இரக்கமும் அந்த அளவிற்கும் கூட இல்லாமல் மரித்துப் போனதென்பது, நாளை நாம் செய்யும் பாவத்தினிமித்தம் நம்மை அம்மண‌மாக தோலுரித்துக் காட்டும் போதும், நம்மை ஒருவனும் மன்னிக்காத போதும் புரியப் பட்டுவிடும்.

இந்த தண்டைனக் கொலைகள் அனைத்தும் "நான், என் இனம், என் மதம்" என்ற உணர்வு ரீதியில் பார்க்கப்படுமானால் கூட்டுப் புழுவின் அளவிற்கே நம் சிந்தனை வலுபெற்று இருக்கும். அப்படி "நான், என் இனம், என் மதம்" என்று சொல்லிக்கொள்ளும் கூட்டத்தில் சில நூறாயிரம் மனிதர்கள், நம்மைப் போன்றே கூட்டுப் புழுவின் அளவில் சிந்திக்கும்போது நம்மை விட வலுவானவர்களால் சிதைக்கப் பட்டுவிடுவோம். நாம் பற்று கொண்ட தலைவர்கள் கொன்று குவிப்பதை நியாயப்படுத்தும் நமக்கு, எதிரிகளின் கண்களைப் பொருத்திப் பார்த்தால் நாமும் அதே அளவிலான தவறை செய்து கொண்டிருப்பது புரியும்.

ஒரு உயிரால் மற்றொரு உயிரை பறிப்பதென்பது உலகில் எங்கு நடந்தாலும், அதற்கு எத்தனை பெரிய காரணங்கள் கற்பித்தாலும் நிச்சயமாக கண்டிக்கத்தக்க ஒன்றுதான்.

என்னால் நடப்பதொன்றையும் தடுக்க முடியாது. இதைத் தவிர்த்துக் கொண்டு வேறொன்றில் தீவிரமான பணி செய்வது போல நடிக்கவும் முடியாது. இயலாமையின் அக்கினிக்குள் என்னை மூழ்கடித்துக் கொண்டிருக்கும்போது நேற்று இறந்தவனையும், நாளைய தண்டனைக் கொலைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பவனையும் ஒரு சில நிமிடங்கள் நினைத்தழுவதைத் தவிர வேறெதுவும் செய்வதறியாது கடந்து போகிறேன்.

Pin It