சென்னை, பூந்தமல்லி அகதி முகாமில் செந்தூரன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும். அவரை கடந்த வருடம் ஜுன் மாதம் 18ம் தேதி உரிய ஆவணம் இல்லாமல் வந்ததாக செங்கல்பட்டு முகாமில் அடைத்தனர். பின்னர் கேரள அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கு 2 மாதம் சிறையில் இருந்தார். அவர் மீது அவுஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்றதாக அங்கு வழக்கு போடப்பட்டது. ஆனால் அங்குள்ள நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

ஆனால் தமிழக போலிஸார் செந்தூரனை கேரள போலிஸார் உதவியுடன் கைது செய்து செங்கல்பட்டு முகாமில் அடைத்தனர். அங்கு அவர் தன்னை விடுதலை செய்யக்கோரி சாகும் வரைஉண்ணாவிரதம் தொடங்கினார்.

தமிழகத்தில் உள்ள பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு அகதி முகாம்கள் சிற்ப்பு முகாம்கள் என் அழைக்கப்படுகின்றன. பழைய போராளிகள், குற்ற வழக்குகளில் இருந்து விடுதலையடைந்தவர்கள் மற்றும் சிறப்பு கண்காணிப்புக்கு உட்படுத்தப்படவேண்டியவர்கள் என ஈழ அகதியினர் இங்கு அடைக்கப்படுகின்றனர். அகதி முகாம் என பெயரலவில் அழைக்கப்பட்டாலும் இது ஒரு கிளைச்சிறை போன்றது. இந்த முகாமில் உள்ளவர்கள் சிறைவாசத்தினை எதிர்கொள்கிறனர்.

அகதியாக பிற நாடுகளுக்கு உயிர் பிழைக்க வேண்டி தஞ்சம் புகுந்தவர்கள், தஞ்சம் புகுந்த நாட்டில் மனிதத் தன்மை மற்றும் மனித உரிமையுடன் நடத்தப்பட வேண்டியவர்கள். இந்திய நாட்டில் அகதிகளுக்கென தனியாக சட்டம் இல்லை. ஆனாலும் இந்திய அரசு சர்வதேச மனித உரிமை சாசனத்தில் கையொப்பமிட்டுள்ள்து. நமது உச்ச நீதிமன்றத்தின், உயர் நீதி மன்றத்தின் பல்வேறு தீர்ப்புக்கள் அகதிகளுக்கான மனித உரிமை மற்றும் தனிமனித சுதந்திரத்தினை உறுதி செய்துள்ளன. மேலும் உள் நாட்டில் தனிச் சட்டம் இல்லாத போது சர்வதேச சட்டத்தினை ஒரு நாடு கடைப்பிடிக்க வேண்டியது நெறியாகும். இதன்படி அகதிகளுக்கான சட்டங்களின் வழிகாட்டுதல்களை நமது அரசு கடைபிடிக்கவேண்டும்.

எந்த குற்றத்திலும் ஈடுபடாதவர்கள் அல்லது குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டவர்களை முகாமில் (சிறையில்) கைதிகளைப்போல நடத்துவது நீதி முறைக்கு எதிரானது. அது நம் நாடு கையுப்பமிட்டுள்ள ஐ.நா. சபையின் 1969 ஆண்டின் தஞ்சம் புகுவோர் சாசனத்திற்கும், 1966 ஆண்டின் சிவில் மற்றும் அரசியல் உரிமை மாநாட்டு வரைவுக்கும் எதிரானது. ஒருவர் கண்காணிக்கப்படவேண்டியது அவசியம் என அரசு கருதுமாயின் அம் மனிதரின் தனிமனித சுதந்திரம் பாதிப்படையாத வகையில் மட்டுமே கண்காணிக்க முடியும்; சிறைபடுத்தி அல்ல. நமது நாட்டில் அகதிகளுக்கான தனி சட்டமில்லாததால் அரசு நிர்வாகிகளின் இரக்கத்தில் அகதிகளின் வாழ்க்கை தீர்மானிக்கப்படுவது அவலம் மட்டுமல்ல அது மனித உரிமை மீறலாகும். தொடர்ந்து அகதிகள் மீது மனித உரிமை மீறல் நிகழ்வதின் நிதர்சனமாக செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்கள் உள்ளன.

இலங்கையில் நிகழ்ந்த பேரழிவு, அதன் பின்பு தமிழர்களின் மீது நிகழ்ந்த கொடூரம், அரசியல் உரிமை மறுக்கப்பட்ட நிலை, ஈழத்தில் ஆயுதப்போராட்டம் இல்லாத சூழல் என ஒட்டுமொத்த நிலையினை கணக்கில் கொண்டு தமிழகத்தில் உள்ள இரண்டு அகதி மக்கள் சிறப்பு முகாம்களை உடனே மூட வேண்டும். அதில் அடைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்ட்டு அவர்கள் விரும்பும் பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்கவேண்டும். அகதிகளின் மனித உரிமை மதிக்கப்படவேண்டும் என அரசினை மக்கள் சிவில் உரிமை கழகம் வேண்டுகின்றது.

- ச.பாலமுருகன், பொது செயலர் , PUCL