இடிந்தகரை...

தமிழக, இந்திய அரசுகளின் அனைத்து வகை அடக்குமுறைகளையும் எதிர்த்து கூடங்குளம் அணு உலையை மூடக்கோரும் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து தாங்கி வரும் இடியாதகரை..

koodankulam_641

ஒருபுறம் அணு உலைக்கு எதிராக போராடிய தோழர்களின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளில் இருந்து நீதிமன்றம் கொடுத்த பிணை உத்தரவு மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த பிறகும், பிணைக்கான தொகையை அரசு அதிகாரிகளிடம் வழங்கிய பிறகும், அரசின் திட்டமிட்ட அடக்குமுறை வடிவத்தின் ஒருபகுதியாக தோழர்கள் முகிலன், சதிசை பிணை கிடைத்து பல நாட்களாகியும் விடுதலை செய்வதற்கு தொடர்ந்து இழுத்தடித்து வருகிறார்கள் அரச இயந்திரத்தின் புள்ளிகள். இன்று மாலை அவர்கள் வெளியில் வருவார்கள் என்று திருச்சியில் உள்ள தோழர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மறுபுறம், இடிந்தகரையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு வெளியில் இருந்து யாரும் கலந்து கொள்ள வரக்கூடாது என்ற ’அடக்குமுறை’ திட்டமாக ’144’ தடையுத்தரவை மேலும் ஒரு மாதம் நீட்டித்தது, இடிந்தகரைக்குள் சென்றால் கைது செய்வோம் என்று மிரட்டல் செய்திகளை சில நாட்களாக அரசு திட்டமிட்டு ஊடகங்களில் பரப்பி வருகிறது. இந்த கட்டுரை எழுதிய பொழுது கிடைத்த தகவல், மாவட்ட நிர்வாகம் இடிந்தகரைக்கு பேருந்து போக்குவரத்தை தடை செய்துள்ளது. இராதாபுரம் பகுதியில் அதிக எண்ணிக்கையில் காவல் துறையினரை குவித்துள்ளனர்.

கூடங்குளம் அணு உலையில் பணிகளை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்ட பின்னர், அணு உலையை சுற்றி உள்ள பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி விட்டது என்ற கருத்தை உருவாக்கி உண்மை நிலைமையை பெரும்பாலான ஊடகங்கள் ஈருட்டடிப்பு செய்து விட்ட நிலையில், கடந்த மார்ச் 2012 கால கட்டத்தில் அரசு எவ்வளவு கொடுரமாக அடக்குமுறைகளை கடைபிடித்ததோ அதே அடக்குமுறைகள் இன்றும் தொடர்கின்றன.

மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், காவல்துறையின் சுற்றிவளைப்புகள் தொடர்வதைப் போலவே இவை எல்லாவற்றையும் அறவழியில் எதிர்த்து கூடங்குளம் மக்கள் முன்னை விட உறுதியுடன் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கடந்த ஆகத்து 2011 தொடங்கிய கூடங்குளம் அணு உலையை மூடக்கோரும் மக்கள் போராட்டம் நாளையுடன் 300 நாட்களை கடக்கிறது. இதையொட்டி போராட்டத்தின் ஒரு கட்டமாக தமிழகத்தின் முன்னனி மக்கள் இயக்கங்கள், அரசியல் அமைப்புகளை ஒன்று திரட்டி ‘அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர்’ நாளை இடிந்தகரையில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள், தமிழக முசுலீம் முன்னேற்றக் கழகம், பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர், தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கலந்து கொள்ள உள்ள இப்பொதுக்கூட்டம் நாளை நடைபெறுகிறது.

இந்த பொதுக்கூட்டம் குறித்த செய்தி கிடைத்தவுடன், ஏற்கனவே அணுமின் நிலையத்தைச் சுற்றி உள்ள கூடங்குளம், விஜயாபதி, கூத்தங்குழி, இடிந்தகரை, பெருமணல், திருவம்பலாபுரம், உதயத்தூர், பரமேசுவரபுரம், இருக்கன்துறை உள்ளிட்ட ஊர்களில் அமலில் இருந்த144 தடை உத்தரவு மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்து நெல்லை மாவட்ட கலெக்டர் இரா.செல்வராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில் இத்தடை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

”அணுமின் நிலையத்துக்கு எதிரான கருத்து உடையவர்களும், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவுக்கு உதவி செய்தும் அவர்களை தூண்டி விடுவதுமான அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் மற்றும் நபர்களும், இன்று (7.6.2012) மாலை 6 மணி முதல் 6.7.2012 மாலை 6 மணி வரை, ராதாபுரம் தாலுகா கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றி 7 கிலோ மீட்டர் பகுதிக்குள் நுழைய தடை விதித்து சட்டப்பிரிவு 144 (1)-ன் கீழ் இந்த தடை ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது” 

மக்களின் அடிப்படை உரிமையான கருத்துரிமையை குழிதோண்டி புதைக்கும் விதமாக “அணுமின் நிலையத்துக்கு எதிரான கருத்து உடையவர்களும்” கூட இடிந்தகரை பகுதியில் நுழைய அரசு தடை விதிக்கிறது. இனி வாழ்வுரிமையை பறிக்கும் எந்த ஒரு மக்கள் போராட்டத்திற்கும் ஆதரவாக ‘சிந்திக்வோ’ ‘கருத்தைக் கொண்டிருக்கவோ’ கூடாது என்று அரசு மக்களை பழக்கப்படுத்துகிறது. இந்த முறையானது சர்வாதிகாரத்தின் கொடுமைகளையும் கடந்து மக்களின் ‘சிந்தனையையும், கருத்தையும்’ அவர்களிடம் அழித்துவிட்டு அவர்களை நுகர்வு பொருளாதார சந்தைக்கு தேவையான வெறும் உயிருள்ள பிண்டமாக மாற்றிவிட அரசு முயல்கிறது. 

நாளைய பொதுக்கூட்டத்திற்கு சுற்றிஉள்ள பகுதியிலிருந்தோ, தமிழகத்தின் மற்ற பகுதியிலிருந்தோ யாரும் கலந்துகொள்ளக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்த ’மிரட்டலான’ தடை குறித்த உத்தரவை அரசு திட்டமிட்டு ஊடகங்களில் பரப்புகிறது. மேலும் மக்களின் பொதுப் போக்குவரத்தை தடுப்பதற்கு இன்று பேருந்து போக்குவரத்தை நிறுத்தியுள்ளது. இத்தகைய அச்சுறுத்தலுக்கு அஞ்சாது மக்களும், இயக்கத் தோழர்களும் அதிக அளவில் கலந்து கொண்டு இப்பொதுக்கூட்டத்தை வெற்றிபெற செய்வது, அரசின் அடக்குமுறை நாடகங்கள் மக்கள் போராட்டத்தின் முன் எடுபடாது என்பதை ‘செவிட்டில் அறைந்தார்’ போல் மீண்டும் ஒருமுறை இடித்துரைக்கும்.

கூடங்குளம் அணு உலை பணிகள் தொடங்கிய பிறகு அரசு திட்டமிட்ட ‘மின் பற்றாக்குறை’ தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே வேலையில் புதுப்பிக்கதக்க மின் உற்பத்தியை பெருக்கி குறைந்த விலையில் மின்சாரத்தை கொடுப்பதை தவிர்த்து ’முதலாளிய’ நிலையில் இருந்து இருக்கின்ற மின்சாரத்தை அதிக விலைக்கு விற்கும் நோக்குடனும், பெருமுதலாளிகளுக்கு மானியத்தில் மின்சாரம் கொடுத்து ஏற்பட்ட கடனை அடைக்கவும் மின் கட்டணத்தை உயர்த்தி பொது மக்களிடமிருந்தும், சிறு, குறு தொழில் முனைவோரிடமிருந்தும் அரசு பணம் பறிக்கும் போரை தொடர்ந்துள்ளது.

அரசின் திட்டமிட்ட அடக்குமுறை தொடரும் இந்த சூழலில், மின் கட்டணத்தை குறைக்கவும், பெரும் முதலாளிகளுக்கு மின்சாரத்தை அள்ளிக் கொடுப்பதை போல வேளாண்மை, சிறு, குறு தொழில் முனைவோருக்கு தடையில்லா மின்சாரம் கொடுக்கவும், அணு ஆபத்தில்லா தமிழகத்தை உறுவாக்கவும் தமிழக அரசின் மின் உற்பத்தி கொள்கையில் அணு மின் உற்பத்தியை தவிர்த்து நீண்டகால மின் உற்பத்திக்கு தேவையான புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி முறைகளுக்கு முதன்மைதுவம் கொடுக்க கூடங்குளம் மக்களுடன் சேர்ந்து தமிழக மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.