இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் வேதகாலம் தொடங்கி, கணினி காலம் வரை பெரும்பான்மை மக்கள் மீது மாற்ற முடியாத, அகற்ற முடியாத ஆதிக்க சக்திகளாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களுக்கு, அவர்களின் ஆதிக்கம் நிலைத்து நிற்க, பார்ப்பனர் அல்லாத இனத்துரோகிகள்தான் பெரிதும் பயன்பட்டிருக்கிறார்கள். வரலாறு முழுதும் அதற்கான சான்றுகளைப் பார்க்கலாம். அந்த துரோகத்தின் தொடர்ச்சிதான் இந்த 'நாம் தமிழர்' ஆவணம்.

ambedkar_periyar_30131.05.12 பெரியார் முழக்கம் ஏட்டில் அந்த 'நாம் தமிழர் ஆவண'த்திலிருந்து ஒரு சில முக்கியமான வரிகளை மட்டும் அப்படியே வெளியிட்டு அதற்கு சிறு விளக்கம் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கே அலறித் துடிக்கிறது திடீர்த் தமிழர் கூட்டம். பெரியார் முழக்கத்தில் வந்த ஒரு சில செய்திகளுக்கு பதில் தருகிறோம் என்ற பெயரில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநிலப் பொறுப்பாளர் என்ற பெயரில் மணி.செந்தில் என்பவர் ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். ஆவணம் என்ற அந்தப் புளுகு மூட்டையின் மேலும் சில பக்கங்களையும், வரிகளையும் அவர் வெளியிட்டிருக்கிறார். முகநூல் பக்கங்களில் சில திடீர்த்தமிழர்கள் தம் பங்குக்கு பெரியாரை எப்படியெல்லாம் புகழ்ந்து எழுதியிருக்கிறோம் பாருங்கள் என்று சில பக்கங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் வெளியிட்ட ஒரு சில பக்கங்களிலேயே ஒரு பக்கத்தை அடுத்த பக்கமே மறுக்கும் அளவுக்கு முரண்பட்ட தகவல்களும் அறிவுக்கும் வரலாற்றிற்கும் பொருந்தாத தகவல்களும் நிறைந்திருக்கின்றன. அவை பற்றி தேவைப்பட்டால் பின்னர் விரிவாக விளக்கலாம். முதலில் பெரியார் தி.க.வுக்குப் பதில் தருகிறோம் என்பதுபோல நினைத்து, ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் சொல்லிக் கொண்டிருக்கும் மணி.செந்திலின் விளக்கத்திற்கு வருவோம்.

திராவிடத்தின் தோற்றம் எது என்பதற்கு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்கள். ஆவணத்திலிருந்து...

“கால்நடைகளை ஓட்டிக்கொண்டு கால்நடையாக வந்து குடியேறிய மனுவாளர்கள் (ஆரிய பார்ப்பனர்கள்) நாகரிகச் செழுமை கொழுவிய சிந்துவெளி தமிழகத்தில் கால்வைத்த பின்பு, தமிழரின் மொழியும், பண்பாடும் திரிவும்-சிதைவும் உற்று பல்வேறு மொழிகளும், மொழியினங்களும் ஆயின. அவ்வாறு வந்தேறிகளின் மினுக்கத்தில் மயக்கமுற்ற இரண்டகத் தமிழர்கள் தம் மொழியை மனுவாளர்களின் சமஸ்கிருதக் கலப்பிற்கு இடம் தந்ததால் பிறந்தவையே திராவிட மொழிகள் (தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, மராட்டியம் முதலியன) அதனால் உண்டானவர்கள் திராவிடர்கள். (ப.எண் 9)

சிந்துசமவெளியில் மொகன்-ஜோ-தரோ, ஹரப்பா நாகரீகங்களின் காலம் எது என்பதை உலகப் புகழ்பெற்ற அகழ்வாராய்ச்சி நிபுணர் ஏ.டி.புசால்கர் உறுதிப்படுத்தியுள்ளார். அது கி.மு. 2800 -2500 ஆண்டுக்காலம் என்று அங்கு கிடைத்த பொருட்களை வைத்து ஆய்ந்து அறிந்துள்ளார். இதையொட்டி சர்.ஜான் மார்ஷல் என்ற ஆய்வாளர் உறுதிப்படுத்தியுள்ள தகவல் மிக முக்கியமானது. சிந்து சமவெளி நாகரீகச் சின்னங்கள் மறைந்து - நாகரீகங்கள் மறைந்து, சுமார் 1000 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் ஆரியர்களின் ரிக் வேதகாலம் தொடங்குகிறது என்கிறார். ரிக் வேதத்தின் காலம் கி.மு. 1500 என்கிறார். ஆரியர்கள் படையெடுப்பின் போது சிந்துசமவெளி நாகரீகம் அழியாமல் இருந்தது என்றே வைத்துக் கொண்டாலும்கூட ஆரியர்களின் படையெடுப்புக்காலம் கி.மு. 1500 என்பது வரலாற்று உறுதி.

'ஆரியர்கள் வந்த காலத்திலே மொழியும் பண்பாடும் திரிந்து கன்னட, தெலுங்கு, மலையாள மொழிகள் தோன்றின. அவற்றைப் பேசுபவர்கள் திராவிடர்கள் ஆனார்கள்' என்று ஆவணம் கூறுவது உண்மையானால் இந்த மொழிகள் தோன்றிய காலம் என்ன? சிந்து சமவெளிக்காலமான கி.மு.2800 ஆம் ஆண்டுகளா? ரிக் வேதகாலமான கி.மு.1500 ஆம் ஆண்டுகளா? அப்படியானால் அந்த மொழிகள் அவ்வளவு தொன்மை வாய்ந்தவையா? கி.பி. 9 ஆம் நூற்றாண்டில்தான் கன்னட மொழியில் முதல் இலக்கண நூலான கவிராச மார்க்கம் உருவானது. கி.பி. 450க்குப் பிறகு தான் கன்னட எழுத்துக்கள் ஹல்மிதிக் கல்வெட்டுக்களில் இடம்பெற்றன. கி.பி. 575க்குப் பிறகு தான் தெலுங்கு எழுத்துக்கள் கல்வெட்டுக்களில் இடம்பெற்றன. 8 ஆம் நூற்றாண்டில்தான் மலையாளம் தோன்றியது. ஆனால் மெளரியப் பேரரசை அழித்து உருவான பார்ப்பன புஷ்யமித்ரசுங்கனின் ஆட்சியில் சுமதி பார்க்கவா என்ற பார்ப்பனரால் தொகுக்கப்பட்ட மனுஸ்மிருதியிலேயே திராவிடம், திராவிடர் என்ற சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மனுவின் காலம் முதல் நூற்றாண்டு.

கி.பி. 150 இல் தொகுக்கப்பட்ட மனுஸ்மிருதியில் திராவிடர் என்பதற்கு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

துவிஜாதிகளுக்கு தன் ஜாதி ஸ்த்ரீகளிடத்தில் பிறந்த புத்திராளுக்கு விதிப்படி காலத்தில் உபநயன முதலிய ஸம்ஸ்காரம் இல்லாமல்போனால் காயத்திரி யில்லாதவரான விராத்திய ஜாதிகளாய்ச் சொல்லப்படுகிறார்கள். - அத்தியாயம் 10. சுலோகம் 20

விராத்திய க்ஷத்திரியனுக்கு அவ்வித க்ஷத்திரிய ஸ்த்ரீயிடத்தில் சல்லன் பிறக்கிறான். அவனுக்கு அவனுக்கு மல்லன், நிச்சுவிநடன், கரணன், கஸன், திராவிடன் என அந்தந்த தேசத்தில் வெவ்வேறு பெயர்களுண்டு. - அத்தியாயம் 10. சுலோகம் 22

பெளண்டாரம், ஒளண்டாரம், திராவிடம், காம்போசம், யவநம், ஸகம், பாரதம், பால்ஹிகம், நீசம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களையாண்டவர்களனைவரும் மேற்சொன்னபடி சூத்திராளாய் விட்டார்கள். - அத்தியாயம் 10. சுலோகம் 44

சுருக்கமாகச் சொல்வதன்றால் மனு விதிக்கும் கட்டளைகளை நிறைவேற்றாதவர்களையும், எதிர்ப்பவர்களையும், அடிமைகளாக்கப்பட்ட சூத்திரர்களையும் திராவிடர்கள் என்று மனு தர்மம் கூறுகிறது. நாம் மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நான் சுட்டிக்காட்ட விரும்புவது மலையாளமும், தெலுங்கும், கன்னடமும் தோன்றியிராத காலத்திலேயே திராவிடம், திராவிடர் என்ற சொற்கள் பார்ப்பன எதிர்ப்புக் கருத்திலேயே பொருள் குறிக்கப்பட்டுள்ளன. எனவே தென்னிந்திய மொழிகளைப் பேசியதால்தான், அந்த மொழிகளால்தான் திராவிடர்கள் உருவானார்கள் என்று நாம் தமிழர் ஆவணம் சொல்வது வரலாற்று மோசடி; கருத்துப் பித்தலாட்டம்; அறிவுக்குருட்டுத்தனம்.

சிந்துச்சமவெளியை இந்துச்சமவெளியாகவும் சரஸ்வதி பள்ளத்தாக்காகவும் மாற்ற முயற்சிக்கும் பார்ப்பன பண்டாரங்களுக்கும் உங்களுக்கும் நன்றாக ஒத்துப்போகிறது என்பதைத்தான் புரிந்து கொள்ளமுடிகிறது. திராவிடர் என்பதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம்தான் உங்கள் ஆவணத்திற்கு அடிப்படை. அதுவே பித்தலாட்டம் என்று ஆகிவிட்டது. இந்த பித்தலாட்டத்தை அடிப்படையாக வைத்து எழுதியிருக்கும் முழு ஆவணம் எந்த எண்ணத்தில் எத்தகைய அறிவில் எழுதப்பட்டிருக்கும் என்பதை படிக்காமலேயே அனைவரும் புரிந்துகொள்வர். அடுத்து மணி.செந்திலின் வரிகள்

10 பொருள்களை தன்னகத்தே கொண்டு விரியும் ஆவணத்தின் முதற் பொருளாய் விரிகிறது தோற்றுவாய். தமிழ்-தமிழர்-தொன்மை, பழந்தமிழ்நாடே இந்தியா, தமிழர் ஆளுகை முடிந்த காலம், மனுநெறியர் வருகையும், திராவிடமும், தமிழர் வீழ்ச்சி என்ற பல்வேறு தலைப்புகளில் தமிழர் வரலாற்றினை துல்லியமாக ஆயும் ஆவணம்

கூர்ந்து கவனியுங்கள். தோற்றுவாய்க்கு அடுத்து வந்துள்ள தலைப்பு. மனுநெறியர் வருகை(!). எப்போதும் பார்ப்பன வரலாற்று ஆசிரியர்கள்தான் இப்படி எழுதுவார்கள், பார்ப்பனர்களால் தான் இப்படி எழுத முடியும். சீமான் சொல்வது போல சுத்தத்தமிழனால் இப்படிப்பட்ட வரிகளை எழுத முடியாது. வரலாற்றுப் புத்தகங்களில் முஸ்லீம்கள் படையெடுப்பு என்று தலைப்பு இருக்கும். ஆரியர்களுக்கு மட்டும் ஆரியர் வருகை என்று இருக்கும். அதுபோல மனுநெறியர் வருகையாம்...இதுபோன்ற வரிகளே உங்கள் ஆவணம் பார்ப்பன நலன்களுக்காக எழுதப்பட்ட ஆவணம் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

கலைச்சொல் என்ற பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளவை தமிழ் இலக்கியங்களிலும், அகராதிகளிலும் இருப்பவற்றை அப்படியே போட்டுள்ளோம். மற்றபடி பார்ப்பனர்களை உயர்த்திக் காட்டவில்லை என்று மணி.செந்தில் கூறுகிறார்.

முதலில் அந்தணர் என்பதற்குப் பொருள் தரும் ஒரு திருக்குறளைச் சொல்லியிருக்கிறார். நாம் அதே திருக்குறளில் வேறொரு குறளைப் பார்ப்போம்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீத்தல் அரிது

இந்தக் குறளில் கூறப்பட்ட அறவாழி அந்தணன் யார்? பரிமேலழகர் அறவாழி அந்தணன் என்பது மகாவிஷ்ணுவைக் குறிக்கும் என்கிறார். பெரும்புலவர் அறிஞர் மயிலை.சீனி. வேங்கடசாமி தரும சக்கரத்தைச் சுழற்றும் மகாவீரர் என்கிறார்.

அந்தணர் என்ற சொல் சமண மதத்து அருகனைக் குறிக்கும், மகாவீரரையும் குறிக்கும், இவர்களுக்கு எதிரான விஷ்ணுவையும் குறிக்கும். நீங்கள் காட்டும் திருக்குறளிலேயே மாறுபட்ட பொருளில் அந்தணர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதே. அனைத்துப் பொருள்களையும் போடாமல் ஒரு பொருளை மட்டும் போடுவது எப்படி அறிவு நாணயமுடையதாகும்?

உங்களுக்குத்தான் பார்ப்பனத் தொல்காப்பியனைப் பிடிக்குமே. அவனே சொல்லியிருக்கிறான், அந்தணன் என்றால் காதலர்களுக்கு இடையே தூது செல்பவன். அதாவது புரோக்கர், மீடியேட்டர் என்று தொல்காப்பியம் 1139இல் இருக்கிறது. அந்தத் தொல்காப்பியனை வழிமொழிந்து அந்தணன் என்றால் இடைத்தரகன் என்று பொருள் என கலைச்சொல் விளக்கம் தந்திருக்கலாமே?

அதேபோல பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்தில் அந்தணர் என்பதற்கு ஒரு விளக்கத்தை பாலைக் கெளதமன் என்ற ஒரு பார்ப்பனப் புலவனே பாடியுள்ளான்.

ஓதல், வேட்டல் அவைபிறர்ச்செய்தல்

ஈதல் ஏற்றல் என்றுஆறுபுரிந் தொழுகும்

அறம்புறி அந்தணர் விழிமொழிந்து ஒழுகி

ஞாலம் நின்வழி ஒழுக, 

ஓதுதல், ஓதுவித்தல், வேள்வி செய்தல், பிச்சை எடுத்தல், மன்னனை ஏமாற்றிப் பிடுங்குதல் என்று எத்தனையோ பொருள்களில் அந்தணர்களைப் பாடியுள்ளான்.

இவைகளும் உங்கள் சங்க இலக்கியங்களில்தானே உள்ளன. வேதங்களைக் கொண்டு மக்களைப் பிரித்தவன், வேள்விகள் நடத்தி தமிழ்மன்னர்களைத் தரிசாக்கியவன், இடைத்தரகன், யாகங்களில் உயிர்களைக் கொன்று திண்பவன் என்று அந்தணர் என்ற சொல்லுக்கு எத்தனையோ பொருள்கள் உள்ளனவே. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு ‘ஈவுஇரக்கங்கொண்ட அறநெறியாளன்’ என்று நம் இனத்தின் முதன்மை எதிரியை உயர்த்திக் காட்டுவது ஏன்?

அடுத்து பார்ப்பான் என்றால் ஆய்வாளனாம், இளைஞனாம். 70 வயதைத் தாண்டிய ஜெயேந்திர சங்கராச்சாரி இந்த வயதிலும் சங்கரமடத்தில் நடத்தும் காமவிளையாட்டுக்களை வைத்து எல்லாப் பார்ப்பானையும் எப்போதும் இளைஞன் என்று எப்படிச் சொல்ல முடியும்? இதே பார்ப்பான் என்ற சொல்லுக்கு தொல்காப்பியம் என்னென்ன பொருள்களையெல்லாம் கூறுகிறது என்பதை தோழர் கொளத்தூர் மணி பேசுகிறார் கேளுங்கள்.

காமநிலை உரைத்தலும், தேர்நிலை உரைத்தலும்,

கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும்,

ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும்,

செலவுறு கிளவியும் செலவழுங்கிளவியும்

அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய. 

என்ன பொருள்? ஒருவரின் காம உணர்வை அவன் விரும்பும் பெண்ணிடம் கூறுவது, பிரிந்து சென்ற தலைவன் வந்து கொண்டிருக்கிற தேர் வரும் நிலைகளைச் சொல்வது (அதோ உன் காதலர் வந்து விட்டார், கார் ஹார்ன் சத்தம் கேட்கிறது பார் என்பது போல), மாட்டை வைத்து நல்லது கெட்டது கூறுவது (தலையாட்டி விட்டது, சாணம் போட்டுவிட்டது, சிறுநீர் கழிக்கிறது - இது நல்லது கெட்டது என்று கூறுவது) செலவுறு கிளவி - இப்போது செல்லலாம் - அப்பா வெளியூர் போயிருக்கிறார். அம்மா கோவிலுக்கு போயிருக்கிறார். அவள் தனியாகத்தான் இருக்கிறாள் என்பது போல - செலவழுங்கிளவி - செல்லக் கூடாது என்ற செய்தி கூறுதல் (அவன் அண்ணன் கல்லூரியில் இருந்து விடுமுறையில் வந்திருக்கிறான். இன்று அந்த பக்கம் போய்விடாதே - உதை தான் விழும் என்பது போல...) இவைகள் தானய்யா தொல்காப்பியர் பார்ப்பனருக்குரிய வேலைகள் எனக் கூறுகிறார்.

என்று கடந்த 2010 டிசம்பர் 24 அன்று சென்னை பெரம்பூரில் நடத்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றியுள்ளார்.

சுருக்கமாக பார்ப்பான் என்றால் - நாகரீகமாகச் சொல்ல வேண்டுமென்றால் இடைத்தரகன் என்று தெளிவாக விளக்கியிருக்கலாமே? அதென்ன ஆய்வாளன்? எல்லாவற்றையும் விடக் கூத்து என்னவென்றால் இந்த பிராமணன் என்பதற்கு ஆவணமும் மணி.செந்திலும் கொடுத்துள்ள விளக்கம்.

பிராமணன் - பேரமணன்:

சமண மதத்தினை சாராதவர்களை அமணர்கள் என அழைப்பது வழக்கம். பிராமணன் என்பதற்கு பெரிய அமணன் என்று பொருள்பட பேரமணன் என அழைப்பது பொருள். உடனே பிராமணர்களை புகழ்கிறார்கள் என்ற கச்சேரி.

என்று சொல்லியிருக்கிறார்.

மயிலை.சீனி.வேங்கடசாமியின் “சமணமும் தமிழும்” என்ற நூலிலிருந்து சுருக்கமாக...

சமண மதம் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது. அவை சுவேதாம்பர சமணம், திகம்பர சமணம், ஸ்தானசுவாசி சமணம் என்பவையாகும். இதில் சுவேதாம்பர சமணர்கள் வெள்ளை ஆடையை அணிபவர்கள். திகம்பர சமணர்கள் திசைகளையே ஆடையாகக் கொள்பவர்கள். அதாவது ஆடையின்றி நிர்வாணமாக இருப்பவர்கள். அம்மணமாக இருப்பதால் அம்மணர்கள், அமணர்கள் எனவும் அழைக்கப்பட்டனர்.

சமணமும் தமிழும் நூலைத் தவிர பல சங்க இலக்கியங்களும் அமணர் என்ற சொல்லால் சமணர்களைத்தான் குறிப்பிடுகின்றனவே அன்றி சமணர் அல்லாதவர்களை எந்த நூலும் குறிப்பிடவில்லை.

...வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை...

...நீற்று மேனிய ராயினர் மேலுற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே...

...நீல மேனி அமணர் திறத்துநின்
சீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே...

மேற்கண்ட திருஞானசம்பந்தன் பாடிய தேவாரப்பாடலிலும் அமணர்கள் வேத வேள்வியை நிந்தனை செய்யும் சமணர்கள் என்றுதான் கூறப்பட்டுள்ளது. இப்படித் தெளிவாக அமணர்கள் என்பதற்கு அவர்கள் கூறும் சங்க இலக்கியங்களிலேயே விளக்கம் இருக்கும்போது அவற்றை அப்படியே மாற்றி தவறான பொருளில் விளக்கம் தருவதுதான் பார்ப்பனப் புத்தி; பார்ப்பனரை உயர்த்திக்காட்டும் அறிவுநாணயமற்ற இனத்துரோகச்செயல்கள். இவற்றைத் தான் பெரியார் தி.க சுட்டிக்காட்டிக் கண்டிக்கிறது.

நாம் தமிழரின் பித்தலாட்ட அரசியல் பிழைப்புக்கு புரட்சியாளர் அம்பேத்கரையெல்லாம் சாட்சிக்கு அழைப்பதுதான் வேதனையாக இருக்கிறது.

தேர்தலரசியலை புறக்கணிக்கும் அமைப்புகள் கூட தேர்தலரசியலால் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஆட்சியாளர்களிடம் தான் கோரிக்கை வைக்க வேண்டியிருக்கிறது என்பதான உண்மை நிலையை உணர்ந்த பின்னர்தான் அண்ணல் அம்பேத்காரின் “எல்லா துயரப் பூட்டுகளுக்கும் ஒரே சாவி- அது ஆட்சி அதிகாரம் தான்” என்கிற பொன்மொழிக்கான அர்த்தம் புரிந்தது.

அம்பேத்கர் “எல்லா துயரப் பூட்டுகளுக்கும் ஒரே சாவி- அது ஆட்சி அதிகாரம் தான்” என்று மொட்டையாகத் தனியாகச் சொல்லவில்லை. அதன் தொடர்ச்சியை சேர்த்து ஏன் சொல்லவில்லை. அதன் அடுத்த வரிகள் என்ன தெரியுமா?

“ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்படும் வகுப்பினருக்கு இன்றைய தேவை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ அரசாங்கமே. இடஒதுக்கீட்டின் மூலமாகவே இந்தப் பிரதிநிதித்துவ அரசாங்கத்தை அடைய முடியும்.”

என்பவைதான் அடுத்த வரிகள். அதைப் பதிவு செய்யாததற்குக் காரணம் நாம் தமிழர்கள் இடஒதுக்கீட்டையும் எதிர்த்து எழுதியிருக்கிறார்கள். ஆவணத்திலிருந்து:

“சாதிவாரி ஒதுக்கீட்டினால், தமிழ்ச் சாதிகளுக்கிடையே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முரண்பாடுகள் முற்றி வருகின்றன.”

அம்பேத்கர் வலியுறுத்தும் சாதிவாரிப் பிரதிநிதித்துவத்தை நாம் தமிழர்கள் எதிர்க்கிறார்கள். அதோடு மட்டுமல்ல. அம்பேத்கரைப் பற்றி இவர்கள் குறிப்பிடும் அந்த வரிகள் இடம் பெற்றுள்ள கட்டுரை எப்படி முடிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

“அரசியல் புரட்சி என்பது சமுதாயப்புரட்சி, சமயப் புரட்சிகளுக்குப் பின்னரே நடைபெறுகிறது என்பதே வரலாறு.”

- தோழர் ஏ.பி. வள்ளிநாயகம் தொகுத்த “அம்பேத்கரின் அறைகூவல்” என்ற நூல்

“எல்லா துயரப் பூட்டுகளுக்கும் ஒரே சாவி- அது ஆட்சி அதிகாரம் தான்” என்ற அம்பேத்கரின் வரிகள் சமுதாய, சமயப் புரட்சிகள்தான் முதற்பணிகள் என்று கூறித்தான் முடிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் குடிஅரசுத் தலைவராகவே வந்துவிட்டார். ஆனால் உள்ளூரில் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் தலைவர் நாற்காலியில் உட்காரக் கூட முடியாத நிலைதான் இருக்கிறது. எல்லா கிராமங்களும் சேரியாக, குடியானத் தெருவாக - ஊராகப் பிரிந்துதான் இருக்கிறது. எனவேதான் சொல்கிறோம் மக்கள் புரட்சி, சமுதாயப் புரட்சி நடக்காமல் வெறும் அரசியல் புரட்சி நடக்காது.

எனவே நீங்கள் அதிகாரத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக பெரியாரையும் அம்பேத்கரையும் சங்கத்தமிழ் இலக்கியங்களையும் உங்கள் வசதிக்கு மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம். நாம் தமிழர் சார்பாக மிக முக்கியமான சவாலாக மணி.செந்தில் விடுத்திருப்பது என்னவெனில்,

இந்த நாட்டில் பதியப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆவணங்களில் பெரியார் திக உள்ளிட்ட எந்த கட்சியின் ஆவணம் நாங்கள் இந்திய இறைமையாண்மைக்கு எதிராக இருக்கிறோம் என வெளிப்படையாக அறிவித்து இருக்கிறது? துணிவிருந்தால் சொல்லுங்கள். பிறகு எதிரே நில்லுங்கள். ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருக்கிறார் என 5 முறை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை நினைவிற் கொள்க. இந்திய தேசியத்திற்கு சீமான் பகை சக்தியா, நட்பு சக்தியா என்பதற்கு அவர் பேசும் ஒவ்வொரு கூட்டமும் சாட்சி.

'நாங்கள் அரசியலுக்குப் போய்விட்டோம். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா..' என்று நாம் தமிழர்கள் சொல்லிவிட்டால் நிச்சயமாக அவர்களைப் பாராட்டலாம். அதைவிட்டு விட்டு அறியாமையில் பேசிக் கொண்டிருப்பது ஏன் என்று புரியவில்லை. முதலில் பெரியார் தி.க ஒரு அரசியல் கட்சி அல்ல. அதைக் கூடவா ஒரு மாநிலப் பொறுப்பாளருக்கு விளங்க வைக்கனும்?

பெரியார் தி.க அரசியல் கட்சி இல்லை என்பதால் அதை எவனிடமும் பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அதனால் எவனுக்கும் அடிமைச்சாசனம் எழுதித்தர வேண்டிய அவலமும் இல்லை. மற்ற அரசியல் கட்சிகளைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. இந்திய இறையாண்மைக்கு எதிராக நீங்கள் முழங்க வேண்டாம். அப்படி எல்லாம் உங்களை யாரும் நம்பவில்லை. தேவையே இல்லாமல் உங்கள் தோழர்களை இந்திய அரசுக்கு ஏன் அடிமை ஆக்கினீர்கள் என்றுதான் கேட்கிறோம். இந்திய இறையாண்மைக்குக் கட்டுப்படுவேன் என்று உறுதிமொழி எடுக்க மிரட்டியது யார்? யாரும் மிரட்டவில்லை என்றால் நீங்களாகவே வலிந்து அதைச் சொன்னது ஏன்?

'ஆவணத்தில் இந்திய இறையாண்மையைக் கேள்வி கேட்டவன் யார்? எதிரே நில்லுங்கள்' என்கிறார். “நமது குறிக்கோள்” என்ற தனது ஆவணத்தில் பதிவு செய்தவர் பெரியார். இதோ பெரியாரின் அந்த ஆவணத்திலிருந்து...

1. திராவிட நாடு (சென்னை மாகாணம்) சமுதாயம், பொருளாதாரம், தொழில்துறை, வியாபாரம் ஆகியவற்றில் பூரண சுதந்திரமும், ஆதிக்கமும் பெற வேண்டும்.

2. திராவிட நாடும் திராவிட நாட்டு மக்களும் திராவிட நாட்டவரல்லாத அந்நியர்களின் எந்தவிதமான சுரண்டல்களிலிருந்தும், ஆதிக்கத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டுக் காப்பாற்றப்படவேண்டும்.

இப்படித் தொடங்குகிறது பெரியாரின் ஆவணம். தொடர்ச்சியாக...

மேற்கண்ட இலட்சியங்களை ஒப்புக்கொண்டு, அவை நிறைவேறுவதற்காகத் திராவிடநாடு இந்திய (மத்திய) அரசாங்க ஆதிக்கத்திலிருந்து விலகித் தனிச் சுதந்திரத் திராவிட நாடாக ஆகவேண்டியது மிகவும் முக்கியமானது என்கின்ற திராவிட நாட்டுப் பிரிவினைத் தத்துவத்தை ஏற்றுக் கழக விதிமுறைகளுக்கு இணங்கிக் கையொப்பமிட்ட 18 வயது கடந்த ஆண், பெண் எவரும் திராவிடர் கழகத்தில் அங்கத்தினராக உரிமையுண்டு.

மிக முக்கிய அறிவிப்பு ஒன்றும் இந்த ஆவணத்தில் உண்டு. அது தான் திராவிடர் விடுதலைப்படை.

திராவிடரின் விடுதலைக்காகப் போரிடவும், சகலவித நடவடிக்கைக்கும் தயாராக இருக்கவும் இசையும் ஒரு மாகாண திராவிடர் விடுதலைப் படை (Dravidian Freedom Force) அமைக்க வேண்டும். அதற்கு ஊர்தோறும் கிளைப்படைகள் அமைக்க வேண்டும்.

இவ்வாறு 1945 ஆம் ஆண்டு மே 29 ஆம் நாள் திருச்சியில் அறிவிக்கிறார். அதன் பிறகு 1948 மே 9 ஆம் நாள் தூத்துக்குடியிலும் மேற்கண்டவற்றையே தீர்மானமாக அறிவிக்கிறார். தொடர்ந்து சாகும்வரை திராவிட நாடு (சென்னை மாகாணம்) விடுதலை, தமிழ்நாடு விடுதலை என மக்களைத் தயாரித்துக் கொண்டும் போராடிக்கொண்டும் இருந்தார் பெரியார்.

நாம் தமிழர்களே, வரலாற்றைப் படியுங்கள். இலக்கியங்களைப் படியுங்கள். பார்ப்பனர் அல்லாத, பார்ப்பன அடிமைகள் அல்லாதவர்களிடம் படியுங்கள். ஏதாவது குப்பைகளைப் படித்துவிட்டு வெத்துச் சவடால் அடிக்காதீர்கள். 'ஆவணத்தில் இந்திய இறையாண்மையை எதிர்த்தவர்கள் எதிரே நில்லுங்கள்' என்கிறார் மணிசெந்தில். பெரியாரின் அந்தக் கருத்துக்கள் தான் பெரியார் தி.க.வுக்கு ஆவணம். எதிரே நிற்கிறோம். பதில் சொல்லுங்கள். தமிழ்நாட்டில் எண்ணற்ற தமிழ்தேசியக்குழுக்கள் உள்ளன. அவர்கள் எல்லோருமே இந்திய இறையாண்மைக்கு எதிராக எதையும் செய்யாவிட்டாலும் ஆவணம் போட்டு வைத்திருக்கிறார்கள். த.தே.பொ.க, த.தே.வி.இ, த.ஒ.வி.இ இன்னும் எத்தனையோ இயக்கங்கள் உள்ளன எதிரே. பதிலைச் சொல்லுங்கள். திராவிடம் தடுக்கிறது என ஓடி ஒளிய வேண்டாம்.

சீமான் 5 முறை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாராம். அதனால் இந்தியாவுக்கு எதிரானவராம். அத்தனை முறையும் ஏன் விடுதலை செய்தார்கள்? இந்திய இறையாண்மைக்கு அவரால் எந்தப் பாதிப்பையும் உண்டு பண்ண முடியாது என்பதால் தானே விடுதலை செய்தார்கள்? அவரால் இந்திய இறையாண்மைக்குப் பாதிப்பு எனில் நிச்சயம் அவர் இன்றுவரை சிறையில்தானே இருந்திருக்க முடியும்? சீமான் இந்திய தேசியத்திற்கு எதிரானவரா? ஆதரவானவரா? என்பதற்கு அவர் பேசும் கூட்டங்களே சாட்சி என முடிக்கிறார் மணிசெந்தில். அப்புறம் எதற்கு ஆவணம்? உங்களை விட விரிவாக, ஆழமாக, அதிகமாக பெரியார் தி.க கூட்டங்களில் தனித்தமிழ்நாடு முழங்கப்படுகிறதே?

இத்தனை தமிழ்த் தேசியக் குழுக்கள் ஆவணத்தில் இந்தியாவை எதிர்க்கும் போது, 'ஈழத்தை நான் தான் வாங்கித் தரப்போகிறேன்' என வெத்து வேட்டு வெடித்துக் கொண்டிருக்கும் நீங்கள் ஏன் எதிர்க்க முடியவில்லை? எங்கே கோளாறு? அரசியலுக்குப் போனால் அப்படிச் சொல்லமுடியாது; புரிகிறது. அதைச் சொல்லக்கூட முடியாத அரசியலில் உங்களுக்கு என்ன வேலை? இந்தியாவை எதிர்க்கிறோம் என்று சொல்லக்கூட இயலாத அரசியலில் இறங்கி, நின்று, வென்று நீங்கள் ஈழத்தை வாங்கித்தரப் போகிறீர்களா? தி.மு.க, அதி.மு.க.வுக்குப் போட்டியாக சம்பாதிக்க முடியும். பதவிச்சுகங்களை அனுபவிக்க முடியும் அவ்வளவுதானே? அதைத்தான் உங்கள் ஆவணம் உறுதிப்படுத்துகிறது.

- அதிஅசுரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)