பேராசிரியர் சிதம்பரநாதன் செட்டியார் தலைமையிலான அறிஞர்கள் குழு உருவாக்கிய ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியத்தின்  முதலாவது தொகுப்பை சென்னைப் பல்கலைக்கழகம், 1963 ஆம் ஆண்டு  வெளியிட்டது. 1964 இல் இரண்டாவது தொகுப்பும், 1965 இல் மூன்றாவது தொகுப்பும் வெளியாகின. மூன்றையும் சேர்த்து ஒரே தொகுப்பாக, 1965 இலேயே வெளியிட்டார்கள்.

அதன் படிகள் விற்றுத் தீர்ந்தபின்பு, 1977,1981,1988,1992 ஆகிய ஆண்டுகளில் மறுபதிப்புகளை வெளியிட்டார்கள்.

இந்தச் சொற்களஞ்சியம் உருவாக்கப்பட்டு, 50 ஆண்டுகள் கடந்து விட்டன.

இன்றுவரையிலும், அதில் ஒரு புதிய தமிழ்ச்சொல்லைக் கூட அவர்கள் சேர்க்கவில்லை.

கடைசியாக 1992 ஆம் ஆண்டு ஒரு பதிப்பை அச்சிட்டபோது, எத்தனை ஆயிரம் புத்தகங்களை அச்சிட்டார்கள் என்று தெரியவில்லை. இருபது ஆண்டுகளாக அதைத்தான் விற்றுக் கொண்டு இருந்தார்கள்.

2008, 2009 இல் நான் வாங்கிய புதிய புத்தகத்தைக் கூடக் கையில் பிடிக்க முடியவில்லை. தாள் உதிருகின்ற நிலையில் இருந்தது.

92க்குப் பின்னர், 18 ஆண்டுகள் கழித்து,  2010ல் தான் அடுத்த பதிப்பை அச்சிட்டு உள்ளார்கள். அதுவும்,  25,000 படிகள் அச்சிட்டு உள்ளார்கள்.

மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், 92 ஆம் ஆண்டு தட்டச்சு செய்த பக்கங்களை,  அப்படியே நகல் எடுத்து, இப்போது அச்சிட்டு இருக்கிறார்கள். எழுத்து உருவை மாற்றவில்லை; எந்தவிதமான திருத்தங்களும் இல்லை.

கணினி என்ற புதிய துறை வந்து, அது தொடர்பாக எத்தனையோ ஆயிரம் புதிய சொற்கள் தமிழில் புழங்குகின்றன. அவை எதுவுமே, சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் இல்லை.

தமிழில் ஆயிரக்கணக்கான புதிய எழுத்து உருக்கள் வந்து விட்டன. எளிதாகப் படிக்கக்கூடிய வகையில், எழுத்து உருக்களை அளவில் சற்றுப் பெரிதாக அச்சிட்டு இருக்கலாம். அதையும் செய்யவில்லை.

மணவை முஸ்தபா தனது சொந்த முயற்சியில், கணினி களஞ்சியப் பேரகராதியை உருவாக்கி வெளியிட்டார். ஆனால், அந்தப் பணிக்காகவே இயங்குகிறது சென்னைப் பல்கலைக்கழகம், என்ன செய்து இருக்கின்றது? எதற்காகச் சம்பளம் வாங்குகிறார்கள்?

இந்தப் பதிப்புக்கு, துணைவேந்தர் திருவாசகம் முன்னுரை எழுதி, அதை மட்டும் சேர்த்து அச்சிட்டு, அதுவும் 25,000 படிகள் அச்சிட்டுவெளியிட்டு இருக்கின்றார்.

புதிதாக எதையுமே செய்யாமல், ஐம்பது ஆண்டுகள் கடந்த ஒரு புத்தகத்துக்கு முன்னுரை எழுதுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கின்றது?

இவர்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையா?

-அருணகிரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)