“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பெவ்வா

 செய்தொழில் வேற்றுமை யான்”

 என்ற வள்ளுவப் பெருந்தகையின் குறட்பாவையும்,

 சாதி இரண்டொழிய வேறில்லை

 சாற்றுங்கால் நீதி வழுவ நெறிமுறையில்

 இட்டார் பெரியோர் இடாதோர் இழி குலத்தோர்

 பட்டாங்கில் உள்ளபடி”

                என்ற ஒளவை மூதாட்டியின் செய்யுளையும் வாய்நிறையச் சொல்லிக் கொடுத்து மாணவர்களின் அறியாமை இருளை நீக்கி, பகுத்தறிவுச் சிந்தனையை போதிக்க வேண்டிய பேராசிரியர்கள் சிலர், இன்று சாதியவாதிகளாக நடந்து கொள்ளும் போக்கு, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலக் கல்வியை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

                இன்று விஞ்ஞானம் வளர்ந்து, அறிவியல் தொழில்நுட்பச் சாதனங்கள் ஒவ்வொரு மாந்தனின் கைகளிலும் தவழ்ந்து, உலகை உள்ளங்கைக்குள் சுருக்கிய இந்த நவீன யுகத்திலும் கூட, சாதியம் அவ்வப்போது தலையெடுத்து மனிதத்தை மரணிக்கச் செய்து கொண்டுதானிக்கிறது.

                கடந்த 2012 – மார்ச்3 அன்று எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்வு இந்தியத் துணைக்கண்டம் முழுக்க உள்ள மனிதநேயப் பற்றாளர்களை பெருந்துயரில் ஆற்றியுள்ளது.

                தெற்காசிய அளவில் மருத்துவக்கல்வியிலும், மருத்துவ ஆய்விலும் தலைசிறந்த மருத்துவக் கல்வி நிறுவனத்தை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அன்றைய தலைமை அமைச்சர் நேருவின் முன் முயற்சியால் 1956-ஆம் ஆண்டு எய்ம்ஸ் “All Indian Institute of Medical Science” நிறுவனம் உருவாக்கப்பட்டது.

                தில்லியில் அமைந்துள்ள இந்த எய்ம்ஸ் நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பில் 77 இடங்கள் உள்ளன. இட ஒதுக்கீடு உரிமையின் அடிப்படையில் பட்டியலின மாணவர்களுக்கு 11 இடங்களும், பழங்குடியின மாணவர்களுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்படுகின்றன.

                இந்த எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில்தான் இராஜஸ்தான் மாநிலம் பரன் மாவட்டத்தைச் சேர்ந்த அனில் குமார் மீனா என்ற மாணவர் பயின்று வந்தார். இவர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர். 22 வயதே நிரம்பிய இவர் மேல்நிலைக்கல்வி ஆண்டு இறுதித் தேர்வில் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று அக்கல்லூரியில் பயின்று வந்தார்.

                அதுநாள் வரையிலான தனது படிப்பை தன் தாய்மொழியான இந்தியில் பயின்றதால், மருத்துவப்படிப்பில் ஆங்கிலத்தில் நடத்தப்படும் பாடங்களைப் புரிந்து கொள்வதில் சிரமமாய் இருந்தது. எனவே ஆங்கிலம் தொடர்பான ஐயத்தைத் தீர்த்துக்கொள்ள தனது கல்லூரியில் பயிற்றுவிக்கும் பேராசிரியர்களை நாடியுள்ளார்.

                பாடம் தொடர்பான ஐயத்தைத் தீர்த்துக்கொள்ள வந்த மாணவர் அனில் குமாரைத் தொடர்ந்து அவமானப்படுத்தி, சாதி வெறியை உமிழ்ந்திருக்கிறார்கள் பேராசிரியர்கள். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.

                இச்சம்பவம் குறித்து அருணாச்சல பிரதேச மக்களவை உறுப்பினர் தக்கம் சஞ்சய், “மாணவனை தற்கொலைக்குத் தூண்டிய பேராசிரியர்களின் அவமானப் பேச்சு கண்டிக்கத்தக்கது. அகில இந்திய மருத்துவக் கழகத்தின் இந்தச் செயல் மனித உரிமையை பறிப்பதாகும். எனவே சாதிப் பாகுபாடினால் நடந்த இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இது போன்ற சம்பவங்கள் பல எடுத்துக்கூறப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை” என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு விரிவான கடிதத்தை எழுதியுள்ளார்.

                மாணவர் அனில் குமார் மீனாவின் தற்கொலை நிகழ்வை அடுத்து, தொடர்ந்து வன்கொடுமையை அரங்கேற்றும் நிர்வாகத்தைத் கண்டித்து மாணவர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தினார்கள். வழக்கம் போல் 3 லட்சம் நிதியுதவியும், ஆழ்ந்த இரங்கலை மட்டும் தெரிவித்து , சாதிவெறிப் பேராசியர்களுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றி வருகிறது அரசும் எய்ம்ஸ் நிர்வாகமும்.

                எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயின்ற அனில் குமாருக்கு ஏற்பட்ட அநீதி இந்தியா முழுக்க உள்ள பல்வேறு மருத்துவ மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கும் ஏற்பட்டு வருகிறது என்பதை அந்தந்த நிறுவனங்களில் நிகழும் மாணவர் தற்கொலைகள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன.

                கடந்த 2008 சனவரி 27-அன்று சண்டிகர் அரசு மருத்துவக் கல்லூயில் மருத்துவப்படிப்பு நான்காம் ஆண்டு பயின்று வந்த ஐஸ்ப்ரீத் சிங் என்ற பட்டியலின மாணவர் பேராசிரியர் என்.கே.கோயல் என்பவரின் சாதி வெறிக்கொடுமை தாங்காது தன்னை மாய்த்துக் கொண்டுள்ளார்.

                ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவரான ஐஸ்ப்ரீத்சிங் நன்றாக படிக்கக் கூடிய மாணவர். பள்ளி ஆண்டு இறுதித் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்.

                ஆனால் சாதி வெறியன் பேராசிரியர் என்.கே.கோயல், “தலித் என்பதால் தான் உனக்கும் இங்கே படிக்க அனுமதி கிடைத்துள்ளது” என்று மாணவர் ஐஸ்ப்ரீத் சிங்கை அவமானப்படுத்தி வன்கொடுமை செய்துள்ளார். எனவேதான் ஜஸ்ப்ரீத் சிங் மனமுடைந்து தற்கொலை செய்து மாண்டுள்ளார்.

                அதே போல் மத்தியப் பிரதேசம் குணதேஸ்வர் என்ற பகுதியைச் சேர்ந்த பால்முகுந்த பார்தி. இவர்; ஒடுக்கப்பட்ட சாம்பர் சமூகத்தைச் சேர்ந்தவர். படிப்பில் கெட்டிக்காரர். மேல்நிலை வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று குடியரசுத் தலைவர் விருதையும், ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் 8-வது இடத்தையும் பெற்றவர்.

                கல்விக் கேள்வியில் சிறந்து விளங்கிய பால்முகுந்த் பார்தி, மருத்துவம் படிக்க எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றார். அவரின் சாதியை அறிந்த எய்ம்ஸ் பேராசிரியர்கள் “நீ சாதி அடிப்படையில் மருத்துவம் படிக்க வந்தவன்” என்று கேலி செய்து தொடர்ந்து அவமானப்படுத்தியுள்ளார்கள். கல்லூரி முதல்வர் உள்ளிட்ட 5 பேராசிரியர்கள் அவரை சாதியின் பெயரால் ஏளனம் செய்துள்ளார்கள்.

                ஒரு கட்டத்துக்குப் பிறகு சாதிக்கொடுமை தாங்காது மார்ச் 3 -2010 அன்று தற்கொலை செய்து உயிர்விட்டுள்ளார்.

                இவர்கள் நீங்கலாக, மும்பை ஐ.ஐ.டி-யில் பி.டெக் பயின்ற ஸ்ரீகாந்த், ஐ.ஐ.எஸ்.சியின் ஆய்வு மாணவர் அஜய் , எஸ்.சந்திரா, ஹைதராபாத் பல்கலை இயற்பியல் ஆய்வு மாணவர் பிரசாத் குரீத், எம்.டெக் மாணவர் இ.சுமன், அகமதாபாத் நர்சிங் மாணவி அங்கிதவெந்தா, ஷியாம்குமார் என்ற பி.டெக் மாணவர், ஆந்திர குத்துச்சண்டை வீராங்கனை அமராவதி, ஆந்திராவைச் சேர்ந்த பி.காம் மாணவி பாந்தி அனுஷா, பெங்களுர் எம்.பி.ஏ மாணவர் புஷ்பாஞ்சலி பூர்தி, லக்னோ மருத்துவக் கல்லூரி மாணவர் சுசில்குமார் சவுத்ரி, பெங்களுரில் விவசாய அறிவியல் பயின்ற இரமேஷ், கான்பூர் ஐ.ஐ.டி-யில் பி.டெக் பயின்ற மாதுரி செல், ஹைதராபாத் பி.டெக் மாணவி வீ.வீரலெட்சுமி, ரூர்கியின் பி.டெக் மாணவன் மனீஷ்குமார் டெல்லி பிராந்திய பொறியியில் கல்லூரி ஆய்வு மாணவன் லினேஷ் மோகன் காவ்லே என உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் முதல்வர் மற்றும் பேராசிரியர்களின் சாதிவெறிக் கோரப்பசிக்கு இரையான மாணவச் செல்வங்களின் பட்டியல் நீண்டே போகிறது.

                “கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயின்ற பட்டியலின மற்றும் பழங்குடியன சமூகத்தைச் சேர்ந்த 18 மாணவர்கள், முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களின் சாதி வெறிக்குப் பலியாகியுள்ளனர் என்று இன்சைட் ஃபவுண்டேஷன் என்ற மாணவர் ஆய்வுக்குழு சமீபத்தில் மேற்கொண்ட புலனாய்வு கூறுகிறது. “இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள். காலம் மாறிப்போய்விட்டது” என்ற உபதேசம் செய்யும் பெருமக்களே! மேற்கண்ட ஆய்வைப் பார்த்தாவது உங்கள் உபதேசத்தை நிறுத்திக்கொள்ளுங்கள்! நெஞ்சத்தில் நேர்மை இருந்தால் நடுநிலையோடு சாதிவெறிக்கு எதிராகக் குரல் கொடுங்கள்.

                இனியும் தொடரக்கூடாது இந்தத் தற்கொலைப் பட்டியல். சாதிவெறிப்பிடித்து அலையும் ஈனப்பிறவிகளாம் பேராசியர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். அப்பாடம்தான் இனி கற்பிக்க வரும் பேராசிரியர்கள் பேராசிரியர்களாக இல்லை, மனிதர்களாக இருக்கவாவது வழிவகை செய்யும்.

மாணவர்கள் உலக நடப்பை அறியாமல், மனனம் செய்து மதிப்;பெண் பெறுவது ஒன்றை மட்டுமே உலகமாகக் கருதி பயின்று வருவதால் தான், சாதிவெறி பிடித்த பேராசிரியர்களுக்கு எதிராக போராட வேண்டிய மாணவர்கள் கோழைத்தனமான தற்கொலை முடிவுக்குப் போகிறார்கள். எனவே ஒப்பற்ற சக்தியாகிய மாணவர்கள் தற்கொலை முடிவுக்குப் போகுமுன், “பேராசிரியர்” முகமூடி அணிந்த சாதியவாதிகளையும், அவர்களை வைத்துப் “பாடம் கற்பிக்கும்” கல்வி நிறுவனங்களையும் எதிர்த்து குரல் கொடுத்து போராட வேண்டும். சாதிவெறிக்கு எதிராக மாணவர்கள் அணிதிரண்டு சாதி ஒழிப்புப் போரை முன்னின்று நடத்த வேண்டும். அந்தப் போரின் வாயிலாகத் தான் எதிர்வரும் தலைமுறையினரையாவது சாதிவெறிக்கொடுமைக்கு காவு கொடுக்காமல் காப்பாற்றலாம். மேலும் கல்விக்கூடங்கள் சாதிவெறிக் கூடங்களாக மாறாமல் தடுக்கலாம்.

                இச்சாதிவெறிக் கொடுமைகள் வட மாநிலங்களில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்களில் மட்டுமில்லை. தமிழ்நாட்டில் அமைந்துள்ள சில பல்கலைக்கழகங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்-பேராசிரியைகள் சிலர் மாணவர்களுக்குச் சாதியப் பார்வையோடு பாடம் கற்பிப்பதாகவும், விடைத்தாள் மதிப்பீடு செய்வதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. (இது குறித்து பிறிதொரு வாய்ப்பில் விரிவாகக் காண்போம்)

                இந்தியாவில் பள்ளி கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மட்டுமில்லை, பயிலக்கூடிய எதிர்கால தலைவர்களாகிய மாணவர்களும் தங்கள் கை, மேலாடை ஈருருளி இயந்திர முகப்பு, கைபேசி என வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் “சாதி வெறியன் குறியீட்டை” பயன்படுத்தி எதிர்கால “தலைவலி”களாக மாறிக்கொண்டிருக்கிறார்.

                இவ்வாறான மாணவர்களின் சாதிவெறிச் செயல்பாடுகள் தான் சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதலுக்கும் வழிவகுத்தது எனலாம்.

                கல்வி வணிகமயமாக்கப்பட்டு காசு உள்ளவன் மட்டுமே கற்க முடியும்; அரசுப்பணியில் கோலோச்ச முடியும் என்ற நெருக்கடியான இந்தக் காலச் சூழலிலும் கூட, அற்பச் சாதியை அடையாளப்படுத்தியும், வறட்டுத்தனமான சாதிப்பெருமை பேசியும் தங்களின் அடிப்படை உரிமைகள் பறிபோவதையே அலட்சியமாகக் கருதிக்கொண்டு வீதிகளில் திரியும் மாணவர் சமூகம், சாதிய அடையாளத்தை அகற்றியெடுத்து விட்டு, இன உணர்வோடு வீதிக்கு வந்து போராடுவதன் மூலம் தான் தன் உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்பதை உணர வேண்டும்.

                இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் புரையோடிப் போய்க்கிடக்கும் சாதியை வேரோடும் வேறடி மண்ணோடும் பிடுங்கி எறிய சாதி ஒழிப்பு அரசியலும், அமைப்பாக்கமும் மிகவும் அவசியமானதாகும்.

                சாதி ஒழிப்புடன் கூடிய இன விடுதலை அரசியல் பயணம்தான் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த மாணவர்களுக்குமான சரியான போராட்டத் திசைவழியாக அமையும்.

Pin It