இந்திய பொதுவுடமை இயக்கத்தின் விடிவெள்ளி அன்புத்தோழர் சாரு மசூம்தார் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க எட்டு ஆவணங்களில் அதிலும் 1965ஆம் ஆண்டு 28 ஜனவரியில் “தற்போதைய சூழலில் நமது கடமைகள்“ என்ற தலைப்பில் எழுதப்பட்ட முதல் ஆவணத்தில் ஒரு பொதுவுடமை கட்சி கமுக்க (ரகசியம் அல்லது தலைமறைவு) கட்சியாக இருக்கவேண்டியதன் அவசியத்தையும் அப்பொதுவுடமைக்கட்சியின் உறுப்பினர்கள் தலைமறைவு ஊழியர்களாக இருக்கவேண்டியதன் அவசியத்தையும் குறித்து விளக்குவார். அதிலும் அவர் அதை “நமது அமைப்பின் முழக்கங்கள்“ என்ற தலைப்பின்கீழ் ஏழு முக்கிய குறிப்புகளாக வலியுறுத்துவார். நீண்டகால மக்கள் யுத்தமே இனிமேல் இந்த இருபது மற்றும் இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்கு பலனளிக்கும் என்று பேராசான் மாவோ நடைமுறையால் விளக்கிய பிறகு கமுக்க கட்சியின் தேவையும் அதன் உறுப்பினர்கள் தலைமறைவாக இருக்கவேண்டியதன் அவசியமும் உலகிலுள்ள அனைத்து பொதுவுடமைவாதிகளுக்கும் அரசெதிர்ப்பு போராளிகளுக்கும் புரிய ஆரம்பித்தது. முக்கியமாக இந்தியாவில் இந்திய பொதுவுடமைக்கட்சி (மாவோவியர்) மற்றும் ஈழத்தில் விடுதலைப்புலிகளும் மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் ஒருசில பொதுவுடமைக்கட்சிகளும் தேசிய விடுதலைக்கான அமைப்புகளும் அக்கம் பக்கமான ஆயுதப்போராட்டத்தை நீண்டகால நோக்கில் கைக்கொள்வதால் அந்த அமைப்பிற்கும் அதன் அனைத்து ஊழியர்களுக்கும் கமுக்கம் அல்லது ரகசியத்தை காக்க வேண்டியதன் அவசியங்களும் அப்படி காப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய நடைமுறைகளும் நன்கு தூலம்.

அசந்தால் அரசப்படைகள் நமது மீது பாயும், ரகசியங்களை காப்பதில் சிறிது கோட்டைவிட்டாலும் கைக்கூலிகள்மூலம் கைதுசெய்து போட்டுத்தள்ளி மோதலில் (என்கவுண்டர்) போட்டதாக கதைகட்டி அவார்டை வாங்கி நெஞ்சில் குத்திக்கொள்வார்கள் உளவுத்துறையினர். உலகின் வெள்ளையரசப்படைகள் இப்படி இருக்கிறது என்பதால் இருபத்திநான்கு மணிநேரமும் வடிவேலு சொல்வதுபோல் விளையாட்டாக இருந்தாலும் அலர்ட்டாக இருக்கவேண்டிய தேவை புரட்சியாளர்களுக்கு இருக்கிறது. இல்லையேல் “தோழா தியாகியானாய், உன் தியாகம் பற்பல தோழராய் உருப்பெறும்” என்று வீரமரணமடைய வேண்டியதுதான், சுவரொட்டி போடவேண்டியதுதான். அதுபோக தலைமறைவுதோழர்களுக்கு இந்த ரகசிய செயல்பாடுகள் மீன்குஞ்சு நீந்த கற்றுக்கொள்வதுபோல் மிக இயல்பாக வரும்.

இதுபோன்ற தலைமறைவு ஊழியர்களை மேலும் தலைமறைவாக இருந்து கைது செய்யும் காவல்துறை எவ்வளவு கெட்டிக்காரனாக கொடாக்கண்டனுக்கு விடாக்கண்டனாக இருப்பார்கள் என்பதும் அதுபோக அந்த மக்கள்எதிரிகள் தகவல் தொழில் நுட்பரீதியில் எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளார்கள் (தோழர் பிரபாகரனுக்கு மட்டும் தனி உளவு செயற்கைக்கோள்) என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி. உதாரணமாக இந்திய மாவோவியக்கட்சியின் மாபெரும் தலைவர்களான சியாம், மகேசு, முரளி போன்றவர்கள் போலி மோதலில் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய உளவுத்துறையின் கடுமையான உழைப்பு நமது கண்களுக்கு நன்கு தெரியும். அதிலும் இந்த மாபெரும் தோழர்களை கைதுசெய்வதற்காக பெங்களூரில் காவல்துறையினர் பால்விற்பவனாகவும், செய்தித்தாள் போடுபவனாகவும் வேலைபார்த்து அவர்கள் தங்கியிருந்த வீட்டைப்பற்றி உளவு அறிந்து பின்பு அவர்களை இவர்கள்தான் மாவோவியக்கட்சியின், இந்தியப்புரட்சியின் முக்கிய தூண்கள் என்பதைக் கண்டறிந்து, குடிக்கும் பாலில் மயக்கமருந்தை கலந்து கொடுத்து அந்த மாபெரும் வீரர்களை கோழைத்தனமாக சித்திரவதை செய்து கொன்றது இந்திய உளவுத்துறை. இதிலிருந்து நாம் ஓர் அரசின் உளவுத்துறையின் பாரதூரமான வலிமையைத் தெரிந்து கொள்ளலாம்.

அதுபோக பேராசான் லெனின் பொதுவுடமைவாதிகள் ஒரு முதலாளித்துவாதியின் மூளையையும் பொதுவுடமைவாதியின் இதயத்தையும் கொண்டிருக்கவேண்டும் என்று பொருள்பட உரைப்பார் (இதன்மீது பிற்காலங்களில் விமர்சனங்கள் எழுந்தாலும்). உதாரணமாக அமெரிக்க உளவுத்துறையின் உளவாளிகள் மக்கள் பணியில் நின்ற சோவியத் பொதுவுடமைவாதிகளை விட பல மடங்கு ரகசியத்தில் கரைதேர்ந்தவர்கள் என்பதை நாம் மனதில் இருத்தவேண்டும். உளவுத்துறையில் வலிமையான புலிகள் வாழ்ந்த ஈழத்தில் பிறந்தவர் இந்த சோபாசக்தி (ஈழத்தில் இருப்பவர்கள் இருந்தவர்கள் அனைவருக்கும் தங்களை அறியாமலேயே இந்த ரகசியத்தன்மை தானாவே வரும். ஏனெனில் அங்கு இரு அரசாங்கங்கள் சமநிலையில் மோதிக்கொண்டிருந்த காலம் அது). அதுபோக உப்புக்குச் சப்பாணியாக புலிகள் இயக்கத்தில் கொஞ்சகாலம் தின்று கோயில்காளையாக அலைந்து அடிவாங்கி ஓடிவந்தவர். அதன்பின்பாக இந்த உதிரி இலங்கை பேரினவாத அரசின் கையாளாக திரிந்துபோனது ஊரறிந்த உண்மை.

shobasakthi_351வாசகர்களே, மேற்சொன்ன பின்னணியில் இப்போது சோபாசக்தியின்மீது தோழர்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்களை கவனியுங்கள். இலங்கை அரசாங்கத்திடம் கையூட்டு பெற்ற விவகாரம் என்பது போன்று மேலும் பல குற்றச்சாட்டுக்கள் அவர்மீது வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் முக்கியமாக இந்த பணம் பெற்ற குற்றச்சாட்டை நிரூபிக்கச் சொல்கிறார் சோபாசக்தி, அதிலும் குற்றஞ்சாட்டியவர்களுக்குத்தான் அதை நிரூபிக்கவேண்டிய கடமை இருக்கிறது என்று மகஇகவின் வினவு தளம் சொன்னதை வழிமொழிந்து, தோழர்களை மேற்சொன்ன குற்றச்சாட்டுகளை நிரூபிக்கச் சொல்கிறார். ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம், அவராக சுயவிமர்சனம் செய்து தான் செய்த தப்புக்களை ஒத்துக்கொண்டாலன்றி உறுதியாக நம் தோழர்களால் சோபாசக்தியின் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாது. ஏனெனில் அவர் உப்புக்கு சப்பாணியாக புலிகள் இயக்கத்தில் இருந்திருந்தாலும்கூட, அந்த மாபெரும் இயக்கம் அவருக்கு தலைமறைவு உத்திகளையும் ரகசிய செயல்பாட்டின் அடிப்படைகளையும் சொல்லித்தந்திருக்கும். தலைமறைவு உத்திகளைப் பின்பற்றுதலில் தெற்காசிய பிராந்தியத்தின் தலையாய இயக்கமான விடுதலைப்புலிகளிடம் உப்புக்குச் சப்பாணியாக காலந்தள்ளிய சோபாசக்தியும், அப்பேர்ப்பட்ட விடுதலைப்புலிகளையே சில விடயங்களில் மிஞ்சிய இலங்கை பேரினவாத சக்திகளும் (உதாரணம் தோழர் தமிழ்ச்செல்வன் படுகொலை) கூட்டுச்சேர்ந்து ஒரு சதிவேலையைச் செய்யும்போது, சோபாசக்திக்கு கையூட்டு அளிக்கும்போது அதை கீற்று இணையதளமும் வினவு இணையதளமும், தனிநபர்களும் எப்படி கண்டறிய முடியும்?.

இங்கு வாசகர்கள் ஒன்றை நன்றாக நினைவில் வைக்கவேண்டும். இவரின் செலவுகளுக்கு கொடுக்கல் வாங்கல் போன்ற வேலைகளைச் செய்து வருவது இலங்கைப் பேரினவாதத்தை அண்டிப் பிழைக்கும் கைக்கூலிகளே. (புலிகள் இயக்கத்தின் ராணுவத் துறையையே தோற்கடித்த இந்த சக்திகள் அதன் கைக்கூலிக்கு எப்படி கள்ளக்கணக்கு வைக்கவேண்டும் என்று சொல்லித் தந்திருக்காதா என்ன?)

ஆனால் மக்கள் சோபாவின் மீதான குற்றச்சாட்டுக்களை சோபா எழுதும் எழுத்துக்களின் மூலம் ஊகித்து அதன்பின்பாக அவரின் நடைமுறைகளின் மூலம் உறுதிப்படுத்த முடியுமே தவிர உறுதியாக கண்டறிந்து அவர் ஒரு கைக்கூலிதான் என்று அய்யந்திருபுற முதலாளித்துவ நீதிமன்றங்களின் நடைமுறைகளின் வழியாக நிரூபிக்க முடியாது. ஆனால் இன்னொரு விடயம் இங்கு முக்கியம். இந்த கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கமுக்க செயல்பாடுகள் இயல்பாக (அது மக்கள் இயக்கமாக இருந்தாலும் சரி, அரசு ஒடுக்குமுறை நிறுவனமாகயிருந்தாலும் சரி) பாட்டாளிவர்க்கத்திற்கும் குட்டிமுதலாளி வர்க்கத்திற்கும் வரும், ஆனால் என்னதான் உதிரி வர்க்கம் (வர்க்கம் என்று அவர்களை அழைப்பதில் எனக்குத் தயக்கமுண்டு) தலைமறைவுக் கட்சியிலேயோ அல்லது அரசு நிறுவனத்திலோயோ வீரதீரசாகசவாதிகளாக திகழ்ந்தாலும் ஒப்பீட்டளவில் அவர்களால் கடுமையான கமுக்க செயல்பாடுகளை பின்பற்ற இயலாது. அப்படிப்பட்ட உதிரிகள் முக்கியமாக காவல்துறையின் கைக்கூலியாக மாறும்போது என்னதான் கமுக்க நடைமுறைகளை செயல்பாடுகளை கடைப்பிடித்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் சறுக்கி விடுவார்கள் (மன்னார் அன் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டு ஊரெல்லாம் சுற்றுவது, பின்பு அதற்கென்று ஒரு திறமை வேண்டுமென்று தம்பட்டம் அடித்துக்கொள்வது). அப்படி சறுக்கி விழுந்தாலும் ஆய் பூய் என்று சவுண்டு விட்டு தப்பிவிடுவார்கள் (சோபாவின் முகப்புத்தகச்சண்டைகள்). ஏனென்றால் உதிரியின் தன்மை அப்படி.

அதுபோக இந்த உதிரி வர்க்கம் காவல்துறையின் கைக்கூலியாக ஆனபிறகு அந்தப் பணத்தில் ஒரு குட்டிமுதலாளித்துவ வாழ்க்கையை அமைத்துக்கொண்டபிறகு முன்பு தாம் செய்த வீரசாகசங்களை (சோபாசக்திபோல் ஒன்றுமே உருப்படியாக செய்யவில்லையென்றாலும்கூட) வைத்துக்கொண்டே காலத்தை ஓட்டுவார்கள். அதுபோக பணம் என்று வந்தால் எந்தப் பக்கமும் சாயத் தயாராக இருப்பார்கள். என்ன சோபாசக்தியின் வாழ்க்கை குறிப்புபோல் இருக்கிறதா? நான் அவரின் வாழ்க்கைக் குறிப்பை ஒன்றும் எழுதிக்கொண்டிருக்கவில்லை, மாறாக உதிரிகளின் குணாம்சங்களை பற்றிப் பேசுகிறேன். அப்படி இந்த உதிரி + இலங்கை அரசின் நண்பர் சோபாசக்தி சறுக்கி வழுக்கி விழுந்து புட்டாணியை உடைத்துக்கொண்ட இடம் அவரின் கைக்கூலித்தனம். நிற்க.

சமீபத்தில் சோபா சக்தி தனது முகப்புத்தகத்தில் கீழ்க்காணும் நிலைச்செய்தியை வெளியிட்டிருந்தார்.

கீற்று ஆசிரியர்களான ரமேஷ், ப்ரியா தம்பி மற்றும் இவ்விவாதம் குறித்து கருத்துரைத்த தோழர் சார்ள்ஸ் ஆன்டனி மற்றும் தோழர்களுக்கும்... கீற்றுவில் பிரசுரித்த ஆசாத்தின் இந்த பதிவை //சோபாசக்தி இப்படி செலவுசெய்வதற்கு பணம் எப்படி கிடைக்கிறது என்று கணக்கு கேக்கலாம். உண்மையிலேயே அவர் சரியான கணக்குவழக்கை ஒப்படைத்தால் அவருக்கு கடன் இருந்தால் உங்கள் தலைமையிலேயே பணம் வசூலித்துக் கொடுக்கலாம்.// நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். எதிர்வரும் 24ம் தேதியிலிருந்து 28ம் தேதிவரை சென்னையிலிருப்பேன். நீங்கள் எங்கு இதுகுறித்து உரையாட அழைத்தாலும் நான் வருகிறேன். இப்போது உங்கள் சவாலை நீங்கள் நிறைவேற்றவேண்டிய தருணம். நேரில் சந்திப்போம் ஆசாத், ரமேஸ், பிரியா தம்பி, சார்லஸ் ஆன்டனி.. இடத்தை ஒழுங்கு செய்துவிட்டு எனக்கு அறிவியுங்கள். நான் அங்கிருப்பேன். இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். (https://www.facebook.com/permalink.php?story_fbid=2606896573196&id=1278388099)

இதனையடுத்து எழுந்த சோபாவின் சல்லியடிப்புகளுக்கு விரிவான பதிலாக – முகப்புத்தக நண்பர்களைத் தாண்டி – பொதுவாசகர்களுக்காகவும் இதை எழுத வேண்டியிருக்கிறது. எவ்வளவு அடித்தாலும் ஒருவர் தாங்குவதை வேடிக்கை பார்க்கும் நல்வாய்ப்பைத் தவிர இந்தக்கட்டுரையை வாசிப்பதில் வேறொன்றும் உங்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்ற என் முன்னெச்சரிக்கையை மனதில் நிறுத்திக்கொண்டு இதை வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேற்கண்ட சோபாவின் அறைகூவலுக்கு கீழ்க்காணும் பதில் எழுதியிருந்தேன்.

தோழர் சந்திரசேகர ஆசாத் அன்புத்தோழர் அ.மார்க்சுக்கு,,, அரசியலை ஆணையில் வைப்போம்.. (http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/13577-2011-03-15-15-13-38) என்ற கீற்றுவில் வெளியான கட்டுரையில் தம்பி சோபாசக்தி வெளியிட்ட அந்த வரிகளை எழுதியிருந்தார். அந்தக்கட்டுரை மார்ச் 16 அன்று எழுதப்பட்டது. அதன்பின்பாக நான் ஏப்ரல் 28ந்தேதி அன்று சோபாசக்தி 'குறித்து கருத்துரைத்திருந்'தேன். (http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/14355-2011-04-28-10-40-00). அதில் நான் எழுதியது இதுதான்.

“சரி இப்போது கட்டுரையின் உள்ளடக்கத்திற்கு வருவோம். தோழர் ஆசாத் இவரிடம் கணக்கு கேட்கிறார். அந்தக் கணக்கை மக்கள் மன்றத்தில் வைக்கவேண்டும் என்கிறார். அதற்கு சோபாசக்தியின் பதில் என்னவென்றால் மக்கள் மன்றத்தை கூட்ட வேண்டுமாம். அதன்பின்னால் வருவாராம். வந்து கணக்கு ஒப்படைப்பாராம். எதுக்கு இந்த பஞ்சாயத்து? தோழர் ஆசாத் மக்கள் மன்றத்தை கூட்டுவதாக சொன்னதும் அல்லது அவர் கூட்டுவதும் இருக்கட்டும். சோதாசக்தி உங்களிடம் காண்டம் வாங்கியது வரை கணக்கிருக்கிறது. அதனால என்ன பண்ணுங்க. அத்தனை கணக்கையும் உங்க இணையத்தளத்தில போட்டுருங்க. ஒரு கட்டுரையில எக்கச்சக்க புத்தகம் வைத்திருப்பதாகச் சொன்னீர்கள். அந்தக் கணக்கையும் மறந்து விடவேண்டாம். அப்படியே கடவுச்சீட்டு (அது இல்லையென்றால் அதுக்குண்டான டாக்குமெண்டு) உங்களுக்கு இருந்தால் அதை ஸ்கேன் செய்து போட்டுவிடவும், எந்தெந்த நாட்டுக்கு போனீர்கள் என்பது மக்களுக்கு தெரிய வேண்டுமல்லவா.

இராசபக்சே மற்றும் கருணா

வரவு என்ன, செலவு என்ன, கடன் எவ்வளவு, கடன் கொடுத்த வங்கி எது, வேலையில்லாத ஒருவருக்கு எவ்வளவு வங்கிக் கடன் கிடைத்தது, கடனுக்கு வெளிநாட்டுப் பயணச்சீட்டு கொடுத்த நிறுவனம் எது, அங்கு எவ்வளவு கடன் உள்ளது, காண்டம் கணக்கு எவ்வளவு எல்லாத்தையும் இணையதளத்தில் போட்டுவிடலாமே? எதுக்கு தோழர் ஆசாத், தோழர் நந்தன்? சட்டுப்புட்டுன்னு செய்யுங்கப்பு... வழக்கு, விசாரணை, மக்கள் மன்றம் எல்லாம் அப்பால பாத்துக்கலாம். நம்ம கருணாநிதியே கணக்கை செய்தித்தாளில் வெளியிடும்போது, சோதா சக்தி வெளியிடுவதில் என்ன சிக்கல் இருக்கமுடியும்? ஆனால் ஒண்ணு, எல்லாத்தையும் தெளிவாக ஸ்கேன் செய்து கொடுத்துப்புடணும். வெறுமனே வங்கிப் பெயர் தரக்கூடாது. எந்தக் கிளை, கிளை முகவரி, வங்கிக் கணக்கு விவரம், டிராவல்ஸ் ஏஜென்சியின் முகவரி எல்லாம் சாப்ஜாடா கொடுத்துவிட வேண்டும். அவதூறுகளுக்கு உடனடியா பதில் போடும் நம் சோதாசக்தி இதையும் வேகமா செய்தால் நலம்.”

மேலே நான் எழுதிய கட்டுரையின்படி அவரின் கணக்குவழக்குகளை இணையதளத்தில் போடுமாறு கேட்டுருந்தேன் என்பது இங்கு மிக முக்கியம். ஏனென்றால் கடைசிநேரத்தில் இவர் ஒப்படைக்கும் கணக்குவழக்கு, ஏமாத்துவேலையாக இருந்துவிடுமோ, அதனால் சோபாவின் பெயர் கெட்டுவிடுமோ என்ற அச்சம்தான் காரணம் (அதுபோக கைக்கூலிக்கு கள்ளக்கணக்குக்கு பஞ்சமா என்ன?).

மார்ச் 16ல் எழுதப்பட்ட தோழர் ஆசாத்தின் கட்டுரையை தனக்கு வசதியாக வைத்துக்கொண்டு, பின்பு ஏப்ரல் 28ல் கணக்கு வழக்குகளை இணையதளத்தில் போடச்சொல்லி நான் கேட்ட கட்டுரையை வசதியாக மறைத்துவிட்டு பேசுவதற்குப் பெயர் மருத்துவ மொழியில் செலக்டிவ் அம்னீசியா என்றும் மார்க்சிய மொழியில் குறுக்கல்வாதம் அல்லது வெட்டல்வாதம் (எம் முன்னாள் தோழர் தற்போதைய உங்கள் குரு(டி) நாதரிடம் கேளுங்கள், விளக்குவார்) என்றும் சென்னைமொழியில் மொள்ளமாரித்தனம் என்றும் அறியப்படும்.

வருவதற்கு இன்னும் இரண்டுநாட்கள் இருக்கிறது. இதுவரை கணக்குவழக்கை இணையதளத்தில் போடுவார் என்று காத்திருந்தோம். தம்பி போடாததால் இந்த நினைவூட்டுக்கடிதம். கணக்குவழக்கை தனது இணையதளத்தில் போடுவார் என்று நம்புவோமாக.

பின்குறிப்பு. அதுபோக என்ன அடிச்சாலும் (அய்யய்யோ வன்முறை என்று கத்துவார் பாருங்க…) திரும்ப திரும்ப யாரிடமாவது (போனவாரம் சேனன்) அடிவாங்கிவிட்டு அதுபோனமாசம் என்ற ரேஞ்சில் பேசும் எழுதும் சோபா ரொம்ப நல்லவருதான். இதுதான் முகப்புத்தகத்தில் நான் எழுதிய பதில்.

ஆனால் சோபாசக்தி கடைசிவரைக்கும் கணக்கை வெளியிடவில்லை. அதோடு தனது பதிலில் ஏதோ தோழர் ஆசாத் தன்னையே அழைத்ததுபோல் துள்ளுகிறார் சோபா. ஆனால் அது உண்மையல்ல. ஆசாத் அழைத்தது அ.மார்க்சை. அ.மார்க்சு வேண்டாம், நானே வருகிறேன் என்று சொல்வதன்மூலம் இரண்டு விடயங்களை சாதிக்க நினைக்கிறார் சோபா. ஒன்று ஒரு புரட்சிகரமான வாழ்வை வாழ்ந்து இன்று சறுக்கி விழுந்து நிற்கும் அ.மார்க்சு இடத்தை மிகவும் எளிதாக இவரே பூர்த்தி செய்ய முயல்கிறார். இரண்டாவதாக தன்னை நாடறிந்த துரோகி என்ற நிலையிலிருந்து ‘துரோகியா? இல்லையா?’ என்ற நிலைக்கு உயர்த்திக்கொள்கிறார்.

நான் தோழர் ஆசாத்தை இன்னாரென்று அறியேன் என்றாலும், அவரே சொல்லியிருப்பதிலிருந்து நல்ல மார்க்சிய லெனினிய அமைப்பில் பயிற்சி பெற்றவர் என்ற முறையில் அன்புத்தோழர் அ.மார்க்சுக்கு என்ற கட்டுரையை தோழர் ஆசாத் எழுதியிருக்கிறார் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். உதாரணமாக அந்தக்கட்டுரையைக் கூர்ந்து கவனித்தால் சோபா தோழரா அல்லது கைக்கூலியா என்ற அய்யப்பாட்டில் எழுதப்பட்டதல்ல, மாறாக அவர் துரோகிதான் அதை அ.மார்க்சு உணர்ந்து கொள்ளவேண்டும், இல்லையென்றால் அ.மார்க்சு அம்பலப்பட்டு நிற்கவேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்டது அந்தக் கட்டுரை. அந்தக் கட்டுரை சோபாசக்திக்கான பரீட்சையல்ல... (ஏற்கனவே மக்களால் பெயிலாக்கப்பட்டு, அம்பலப்பட்டு அம்மணக்குண்டியாக நிற்பவருக்கு மீண்டும் பரீட்சையெல்லாம் வைக்க தோழர் ஆசாத் என்ன டுடோரியல் சென்டரா நடத்துகிறார்?)

இப்போது துரோகிகளின் கைப்பாவையாக மாறிப் போனாலும், முன்னாள் தோழர் என்ற மரியாதையில் அ.மார்க்சிடம் சோபாவின் கணக்குவழக்குகளை சரிபார்க்குமாறு ஆசாத் எழுதியிருக்கலாம். ஆனால் அந்த இடத்தை சோபா பிடிப்பதை என்னவென்று சொல்வது? எதால் சிரிப்பது? கேட்டால் என்னைத்தான் குற்றஞ்சாட்டினீர்கள், அதனால் என்னைத்தான் நேரில் சந்திக்க வேண்டுமென்று அடம் வேறு. ஏதோ ராசபக்சே தமிழ்நாட்டிற்கு வந்து அத்தனை தமிழர்களையும் சந்தித்து நான் இனப்படுகொலையாளன் இல்லை என்று நிரூபிக்க வருவதுபோல் இருக்கிறது இந்தக்கதை.

அதுபோக சோபா அறைகூவலொன்றை விடுத்திருந்தார். அதில் என் பெயரையும் போட்டு (அதுவும் தோழர் என்ற பட்டம் வேறு, துரோகிகளின் வாயினால் தோழர் என்று அழைக்கப்படுவதைக்கூட நான் அவமானகரமானதாக உணர்கிறேன்.) விசாரணைக்கு வரத்தயார், எப்போது என்று சொல்லுங்கள் என்று கொக்கரிப்பு வேறு. வாசகர்களிடம் நான் இங்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அ.மார்க்சைச் சொல்லி மக்கள் மன்றத்தை கூட்டவேண்டும், பெருக்கவேண்டும் என்பதெல்லாம் தோழர் ஆசாத் அவர்களின் கருத்துக்களே. சார்லசு அன்ரனியான நான் எப்போது இந்த சோபாசக்தியை மக்கள் மன்றத்திற்கோ, நீதிவிசாரணைக்கோ வரச்சொன்னேன்? ஒரு காலத்திலேயும் இல்லையே…? ஓரளவிற்கு அ.மார்க்சின் மீது தோழர் ஆசாத்திற்கு நம்பிக்கை இருந்திருக்கிறது (இன்றைய நிலையில் அது இருக்குமா என்பதில் எனக்கு சந்தேகமிருக்கிறது). ஆனால் முன்னாள் தோழர் அ.மார்க்சின் மீதே எமக்கு நம்பிக்கையில்லை என்றபோது கைக்கூலியோடு பேச்சுவார்த்தையாவது, வெங்காயமாவது?

சோபாவுக்காக ஒரு கூட்டம் நடத்த வேண்டுமாம்; அதில் வந்து கணக்கு வழக்குகளைத் தருவாராம்; அதை நமது இணையதளங்களில் போடவேண்டுமாம்; அவர் இணையதளத்தில் போட்டால் வாசகர்கள் வருத்தத்தில் நாண்டுக்கிடுவார்களாம். கடன் உறுதியானதும் அதை நாம் அடைக்க வேண்டுமாம்.
 

அ.மார்க்ஸ் மற்றும் சோபா சக்தி

சோபாசக்தி சொல்கிற வேலைகளை எல்லாம் தலைமேல் போட்டுக்கொண்டு செய்வதற்கு, அவர் ஊற்றிக்கொடுக்கும் சீமை சரக்கிற்காகவும், தூக்கி எறியும் வெள்ளிப்பணத்துக்காகவும் அலைபவர்கள் வேண்டுமானால் தயாராக இருக்கலாம். எங்களைப் பொருத்தவரை சோபா ஒரு திட்டவட்டமான துரோகி. மக்கள் கருத்தியலுக்கு, மக்கள் விடுதலைக்கு எதிரான துரோகியான உதிரி. இந்த துரோகியை மக்கள் முன் அம்பலப்படுத்துவது எங்கள் வேலை. இல்லை என்று நிரூபித்துக் கொள்வதும், காப்பாற்றிக் கொள்வதும் துரோகி அல்லது துரோகியைத் தூக்கி வைத்துத் திரிபவர்களின் வேலை. அ.மார்க்சை தோழர் ஆசாத் ஏன் அழைத்தார் என்பதை இங்கே பொருத்திப் பார்த்தால் வாசகர்களுக்கு இது நன்கு புரியும்.

சோபாசக்தி கடன் வாங்கித்தான் இத்தனை ஆடம்பரங்களும் செய்கிறார் என்பது உறுதியானால், உண்டியல் ஏந்தி அவரது கடனை அடைக்கலாம் என்று தோழர் ஆசாத் சொன்னதிலும் எனக்கு உடன்பாடில்லை (அதுபோக அவர் அப்படிச் சொன்னதே ஒரு நக்கல்தான் என்பதை அந்தக் கட்டுரையை நன்றாக வாசிப்பவர்களுக்குத் தெரியும்). சோபாசக்தி அல்லல்பட்டு, கடன்பட்டு திரிவது வர்க்கப் புரட்சிக்காகவோ, மக்களின் மீட்சிக்காகவோ அல்ல. துரோகியாகிப்போன வாழ்க்கைமுறை, ‘மார்க்சிய வெளிச்சத்தில் பெற்ற ஆய்வில்‘ பொம்பளைகளை பொறுக்குவது, (இதை நாம் பாலியல் சுரண்டல் என்கிறோம்), பாலியல் விடுதிகளில் கும்மாளமடிப்பது, தலித்வேடம் போட்டு ஊரை ஏய்ப்பது (பார்க்க: சோபாசக்தியின் கலைந்து போன தலித் வேடம்), நாடுநாடாக பறந்து ஈழப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது – இவைதான் கடன்வாங்கி சோபாசக்தி ஆற்றுகிற வர்க்கப் போராட்டங்கள். சொந்த உழைப்பில் ஒருவன் இந்த பொறுக்கித்தனங்களை செய்தாலே ஊரில் கட்டிவைத்து அடிப்பார்கள். சோபாசக்தி கெட்ட கேட்டுக்கு, இதை கடன் வாங்கி செய்திருக்கிறாராம். அந்தக் கடனை நாம் அடைக்க வேண்டுமாம். அண்ணாத்தே!! சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டி பகையாளியை பங்காளியாக்குகிற இந்த பிசினசு வேண்டாம்.

சோபாசக்தி கடன் வாங்கி இதைச் செய்தார் என்றால், அவர் கைக்கூலி இல்லை என்பதை வேண்டுமானால் ஒத்துக்கொள்ள முடியும். மற்றபடி, குடி, கூத்து எனத் திரிந்து சொத்து சுகங்களை இழந்து ஒரு வர்க்க எதிரி/ஜமீன்தார் கடனில் தவிக்கிறான் என்றால், அது பாட்டாளி வர்க்கத்துக்கு மகிழ்ச்சியான செய்தியே. ஏன் விசய் மல்லய்யா கடனாளி ஆனதற்கு நம்மால் வருத்தப்படமுடியுமா, என்ன?

வாசகர்களின் மனம் புண்படும் என்ற ‘உட்டாலக்கடி’ டயலாக்கு எல்லாம் வேண்டாம். இவரின் படைப்பிலக்கிய அறுவைக்கே பயப்படாத, அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு புலி எதிர்ப்பு மற்றும் பாலியல் கதைகளுக்கே பதறாத இவரது வாசகர்கள் காண்டம் வாங்கியது உட்பட இவ்வளவு கடன் வச்சிருக்கிறார் என்று தெரிந்தால், கிளுகிளுப்பில் மூழ்கிப்போவார்கள், சும்மா இணையதளத்துக்கு hits கூடாதா என்ன?. அதனால் சோபாசக்தி கைக்கூலியில்லையென்றால், அவர் தூய்மையானவர் என்று நிரூபிக்கவேண்டுமென்று அவருக்கு ஆசையிருந்தால் ஒன்று அவரின் இணையதளத்தில் கணக்குவழக்குகளை போடவேண்டும், அல்லது ‘வேலையில்லாத வெட்டிநாயி‘க்கு (நான் சொல்லவில்லை, அவரே அவரைச் சொல்கிறார்) எப்படி இவ்வளவு பணம் குவிகிறது என்று தானே ஒரு பிளாக் ஒன்று ஆரம்பித்து போடட்டும். அடிப்பொடிகளிடம் சொன்னால் தனியே பிளாக்கோ, இணையதளமோ தொடங்கித் தருவார்கள். (அ.மார்க்சு நொந்து நொம்பலமானபோது லும்பினி தொடங்கித் தரவில்லையா?). அதைவிட இந்தக் கணக்குவழக்குகளையும் உங்களது நல்லமனம் படைத்த பதிப்பாளர் மூலம் புத்தகமாக வெளியிட்டால், விற்பனை பிய்த்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ‘எம்ஜிஆர் கொலை வழக்கு’ போல் ‘சோபாசக்தியின் பாலியல் கணக்குவழக்கு’ என்று தலைப்பு வைத்தால் விற்பனை பிய்ச்சுக்கும்; கடனும் அடைய வாய்ப்பிருக்கிறது. எவ்வளவோ பண்றீங்கே, இதை பண்ணமாட்டீங்களா பாஸ்?

அதுவுமில்லாமல் இத்தனையும் பொதுவில் நடந்த விவாதங்கள்தான். பொதுவில் வைப்பதுதான் முறை. ‘open accountability’ குறித்து உலகமே பேசிக்கொண்டிருக்கும் நேரமிது. எல்லா கணக்குவழக்குகளையும் எல்லார் முன்னிலையிலும் வைப்பதும், திறந்த விவாதம் நடத்துவதும்தான் சரியான அணுகுமுறையாக இருக்கும். அதைவிடுத்து, தனியாக சந்திக்கலாம் என்று சொல்வது; பிறகு நான் கொடுத்ததில் அதைக் காணவில்லை, இதைத் தொலைத்துவிட்டார்கள் என்று சொல்கிற கதையே வேண்டாம்.

கேள்வி கேட்பவர்களை எல்லாம் முகப்புத்தகத்தில் இருந்து நீக்கிவிட்டு, அடிப்பொடிகள் மத்தியில் சோபாசக்தி இப்படி அறைகூவல் விடுப்பதைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது. அடிப்பொடிகள் வேண்டுமானால் அதில் சமாதானமடையலாம். பொதுவாசகர்கள் முன்பு சோபா என்றோ அம்மணமாகிவிட்டார். இணையதளங்களில் சகட்டுமேனிக்கு அடிவாங்குகிறார். முகப்புத்தகத்தில்கூட சனநாயகவெளியை அனுமதிக்காத இந்த கைக்கூலியோடு நாங்கள் சனநாயகமாக சந்தித்து சனநாயக வழிமுறைகளைப் பின்பற்றி இவர் நல்லவரா கெட்டவரா என்று தீர்ப்பளிக்க வேண்டுமாம். கழுதை கனாக்காணுமாம் கத்தலும் கதக்கலுமா என்றொரு பழமொழிதான் ஞாபகம் வருகிறது.

ஈழத்தில் தமிழ்மக்கள்அதுபோக சோபாசக்தி, ‘சரி நான் கைக்கூலியாகவே இருந்துவிட்டு போகிறேன். என்னோடு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்’ என்றுகூட நம்மை அழைக்கலாம். அதற்கு பேராசான் மாவோ சொன்ன மேற்கோள் ஒன்றை அவர் துணைக்கு கூட்டி வரலாம். அது என்னவெனில் ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற மேற்கோள்தான். அதில் பேராசான் மாவோ எல்லாருக்கும் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை வழங்கியிருப்பதுபோல் தோன்றும். ஆனால் நடைமுறையில் நடந்தது வேறு. ஒளிந்திருந்த துரோகிகளை வெளியில் வரவைத்து போட்டுத் தள்ளுவதற்கான போர்த்தந்திர யுக்தியே அது. மேலும் இன்னொன்று தோழர் ஸ்டாலின் எதிரிகளைவிட துரோகிகளே நமது முதல் எதிரிகள் என்கிறார். எதிரிகளோடுகூட சிலநேரங்களில் மக்கள் இயக்கங்கள் பேச்சுவார்த்தைக்குச் செல்லும், ஆனால் அம்பலப்பட்ட துரோகிகளோடு எந்த மக்கள் இயக்கங்களோ அல்லது மக்களுக்கு உண்மையாக உழைப்பவர்களோ அல்லது உழைக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களோ எந்தப் பேச்சுவார்த்தைக்கும் செல்லமாட்டார்கள். துரோகிகள் தமது செயல்களுக்கு சுயவிமர்சனம் ஏற்றுக்கொண்டால் ஒழிய அவர்களோடு நமக்கு எந்த உறவும் இல்லை. நியுயார்க்கில் வால்ஸ்டிரீட்டைக் கைப்பற்றுவோம் என்ற போராட்டத்தில் துண்டறிக்கையொன்றில் அரசு ஒடுக்குமுறை நிறுவனங்களின் எந்த ஊழியரோடும் பேச்சுவார்த்தை வைக்காதீர்கள் என்று சொல்லப்பட்டிருந்தது. அதுதான் நாம் பின்பற்ற விரும்புவதும், பின்பற்றுவதும்.

சோபா இப்படி தனது முகப்புத்தகத்தில் அறைகூவல் விடுத்திருக்கிறார் என்று தோழர்கள் கூறியதுடன் எனக்கு சோபாவின் மீது பச்சாதாபம்தான் ஏற்பட்டது. ஏனென்றால் முந்தைய கட்டுரையில் நாம் எழுதியிருந்தபடி அவருக்கு பயம் அல்லையைப் பிடிக்கிறது. அதுவும் உப்புக்கண்டம் போட்டுவிடலாம் என்றெல்லாம் மிரட்டினால் பச்சைப்புள்ள பயப்படாமலா இருக்கும்? அதனால்தான் இந்த கொலைமுயற்சி புகார்மனு. ‘யப்பா நான் சென்னை வருகிறேன், எனக்கு ஏதாவது என்றால் தோழர்கள் ஆசாத், கீற்று நந்தன், பிரியா தம்பி, சார்லசு அன்ரனி போன்றவர்கள்தான் காரணம்’ என்று அவர் கொடுத்த கொலைமுயற்சி புகார்மனுதான் இந்த முகப்புத்தக அறைகூவல். ஆனால் என் தரப்பிலிருந்து சோபாசக்திக்கு ஓர் உறுதிமொழியை அளிக்கமுடியும். நாங்கள் மரணதண்டனையை நம்புவதில்லை. ஏனெனில் மரணதண்டனைக்கெதிரான மக்கள் இயக்கத்தில் நாங்கள் இருக்கிறோம். எனவே நீங்கள் முன்பு வாசித்த காந்தியாரின் புத்தகங்களில் கூறியுள்ள அகிம்சாவாதம் எங்களிடம் இல்லையென்றாலும் தோழர் வினோத் மிஸ்ரா மாலெ குழு பாணியிலான வன்முறையில் எமக்கு நம்பிக்கையில்லை. அதேநேரத்தில் எம்போன்ற பொறுமையும், அன்பும், கருத்துப்போராட்டமும் எல்லா பொதுவுடமைவாதிகளும் துரோகிகளுக்கு காட்டுவார்கள் என்று நம்பிவிடாதீர்கள். ஏனெனில் இந்த பாழாய்ப்போன தோழர் சாருமசூம்தார் வர்க்க எதிரியின் ரத்தத்தில் கைநனைக்காதவன் பொதுவுடமைவாதியல்ல என்று வேறு சொல்லித்தொலைத்திருக்கிறார்.

- சார்லசு அன்ரனி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)