கடந்த 30.9.2011 அன்று இந்திய அரசின் அமைச்சரவை வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகக் கூறிக் கொள்ளும், சுரங்கம், தாதுப் பொருட்கள் வளர்ச்சி மற்றும் ஒழுங்குபடுத்தல் மசோதா 2011 (Mines and Minerals Development and Regulation Bill (MMDR) 2011) எனும் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தது. இம்மசோதா வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டு, சட்டமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மசோதாவை வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று ஏன் கூறுகிறார்கள் தெரியுமா?
 
 நிலக்கரி சுரங்கத் தொழிலில் தங்கள் மூலதனத்தை ஈடுபடுத்தும் முதலாளிகள், தங்களுடைய இலாபத்தில் 26 சதவிகிதத்தை, இத்தொழிலினால் இடம் பெயர நேரும் மற்றும் பாதிக்கப்படும் மக்களின் மறுவாழ்விற்காக ஒதுக்க வேண்டும் என்று இம்மசோதாவில் கூறப்பட்டுள்ளது. நிலக்கரி அல்லாத சுரங்கத் தொழில்களைப் பொறுத்த மட்டில் மாநில அரசுக்கு வழங்கும் காப்புரிமைத் தொகைக்குச் சமமான தொகையை ஒதுக்க வேண்டும்.
 
 மேற்கண்ட வாசகத்தை மீண்டும் ஒரு முறை கவனமாகப் படித்துப் பாருங்கள். இலாபத்தில் 26 சதவிகிதம் அல்லது காப்புரிமைத் தொகைக்குச் சமமான தொகையை, முதலாளிகள் தனியாக ஒதுக்கி வைத்துக் கொள்ளத் தான் இம்மசோதா வழி வகுக்கிறதே யொழிய, அதை அரசுக்குச் செலுத்த வேண்டும் என்று கூறப்படவில்லை. அதாவது பாதிக்கப்படும் மக்களின் மறுவாழ்வுப் பணியை அரசு ஏற்காமல் கை கழுவி விடுவது மட்டுமல்லாமல், அம்மக்கள் தங்கள் மறுவாழ்விற்காக முதலாளிகளின் தயவை நம்பித் தான் இருக்க வேண்டும் என்ற பரிதாபகரமான நிலையைத்தான் அரசு ஏற்படுத்துகிறது. இந்த லட்சணத்தைத் தான் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்றும் கூறிக்கொள்ளுகிறது.
 
 மறு வாழ்வு வேண்டி, பாதிக்கப்பட்ட மக்கள் செய்யும் தொடர் போராட்டங்களின் விளைவாகவும், முதலாளிகளின் நலன்களுக்கான செய்திகளை மட்டும் தான் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவோம் என்றும், உழைக்கும் மக்களின் பிரச்சினைகளையும் அவர்களுடைய போராட்டங்களையும் இருட்டடிப்பு செய்தே தீருவோம் என்றும் அடம் பிடிக்கும் ஊடகங்களின் கவனத்தை இழுத்து அம்மாதிரியான செய்திகளின் மீது சிறிதளவாவது வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ள மேதா பட்கர், அருந்ததி ராய் போன்ற போராளிகளின் பங்களிப்பாலும் தான் இத்தகைய மசோதாவும் அமைச்சரவையினால் ஒப்புக் கொள்ளப்பட்டு உள்ளது.
 
 இம்மசோதாவின் உண்மையான நோக்கம் என்ன? "பாதிக்கப்படும் மக்களே! இதோ வருகிறது பாருங்கள்; உங்கள் நலன் காக்கும் சட்டம்; நாங்கள் உங்கள் மறுவாழ்விற்காக நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்து விட்டோம்; ஆகவே அமைதி அடையுங்கள்; போராட்டத் திட்டங்களைக் கைவிடுங்கள்" என்று வெளிப்படையாகச் சொல்வதும், மறைமுகமாக, போரட்டத்திற்குத் தலைமை தாங்கும் மக்களின் பிரதிநிதிகளைத் தனிமைப்படுத்தி வலுவிழக்கச் செய்யும் படி உள்ளுணர்வாக உணர்த்துவதும் தான்.
 
 பாதிக்கப்படும் மக்களின் மறுவாழ்வில் அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் என்ன செய்ய வேண்டும்? மூலதனமே மறுவாழ்விற்கான நிதியாக இருக்க வேண்டும் என்று தான் விதிமுறைகளை வகுக்க வேண்டும். முதலாளி முதலீடு செய்து, இலாபம் சம்பாதித்து, அதன் பிறகு நிதி ஒதுக்கீடு செய்வது என்றால் அதுவரையிலும் பாதிக்கப்பட்ட மக்கள் என்ன செய்வார்கள்? முதலாளி தொழிலைத் தொடங்குவதற்கு முன்பே இடம் பெயர நேரும் மற்றும் பாதிக்கப்படும் மக்களின் மறுவாழ்விற்காக முதலீட்டின் முதல் செலவாகச் செய்ய வேண்டும் என்றும், மறுவாழ்வு நிலை திருப்திகரமாக இருந்தால் தான் தொடர்ந்து தொழில் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் விதிமுறைகள் இருந்தால் தான், அரசு இப்பிரச்சினையில் உண்மையான அக்கறை கொண்டுள்ளது என்று கூற முடியும். அப்படி இல்லாமல், முதலாளி இலாபம் சம்பாதிக்கும் வரை - அது எத்தனை ஆண்டுகள் ஆகுமோ - காத்திருக்க வேண்டும் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? அதன் பிறகும், முதலாளிகளின் தயவிருந்தால் தான் ஏதாவது பெற முடியும் என்ற நிலையில் அவர்களை வைத்தால், அவ்வரசை எப்படி அனைவருக்கும் பொதுவான அரசு என்று கூற முடியும்? ஐயந்திரிபற இவ்வரசு பொது மக்களுக்கு எதிரானதும், முதலாளிகளின் நலன்களை மட்டும் காப்பதுமான அரசு தான்.
 
 மக்களின் போராட்டங்களைப் பிசுபிசுக்க வைப்பதற்காகவே இயற்றப்படும் இச்சட்டத்திற்கே, தங்கள் நலன்கள் பெரிதும் பாதிக்கும் என்று சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள முதலாளிகள் மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள அனைத்து முதலாளிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்பு மட்டுமல்ல; இம்மசோதா சட்டமாக்கப்பட்டால் சுரங்கத் தொழிலில் இருந்து மூலதனம் வெளியேறிவிடும் என்று எச்சரித்தும் உள்ளனர்.
 
 இம்மசோதா சட்டமாக்கப்படுமா? சட்டமாக்கப்பட்டாலும், அது நடைமுறைப்படுத்தப்படுமா? நடைமுறைபடுத்தப்பட்டாலும், பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா? எதுவும் நிச்சயம் இல்லை. முக்கியமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைத்தே தீர வேண்டும் எனும் படியான விதிமுறைகள் இம்மசோதாவில் இல்லவே இல்லை.
 
 அரசின் இந்த நடவடிக்கை மக்களை ஏமாற்றத் தான் என்பது ஒரு சிறு எடுத்துக்காட்டு தான். ஏறத்தாழ நம் நாட்டின் அனைத்துச் சட்டங்களும் விதிமுறைகளும் இது போன்று தான் உள்ளன. ஆனால் நாடளுமன்றத்தில் இவை விவாதிக்கப்படும் பொழுது நம்மிடம் ஓட்டுகள் வாங்கி நம் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு அமர்ந்திருப்பவர்கள் மெளன விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர். முதலாளித்துவக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மெளனம் சாதிப்பது ஒரு புறம் இருக்கட்டும். பொதுவுடைமைக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் முதலாளித்துவ அரசின் இது போன்ற அயோக்கியத்தனமான தந்திர உத்திகளை நாடாளுமன்றத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டு வராமல் இருப்பது மிகவும் வேதனைக்கு உரியது.
 
 உழைக்கும் மக்கள் இதை உணர வேண்டும். தனித் தனிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப் போராடுவதை விட, முதலாளித்துவ அரசை வேருடன் கிள்ளி எறிந்து விட்டு உழைக்கும் மக்களின் நலன்களை மட்டுமே முன்னெடுக்கும் சோஷலிச அரசை அமைக்கப் போராடுவது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.
 
- இராமியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It