அப்பாவித் தமிழர்கள் ராணுவத்தினரால் கொல்லப்படுவது இலங்கையில்தான் நடந்து வந்தது. தற்போது அந்த பாணியைத் தமிழ்நாட்டிலும் நிகழ்த்தி அதிர்ச்சி அளித்திருக்கிறது இந்திய ராணுவம். இலங்கையில் நடந்ததை வேடிக்கை பார்த்தது போல் தற்போதும் மவுனமாய் வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம்.

சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள ராணுவக் குடியிருப்பில் வாதாம் பழக்கொட்டைகளைப் பறிக்கச் சென்ற சிறுவன் தில்சனை துப்பாக்கியால் சுட்டு கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார் ஓர் இந்திய ராணுவ அதிகாரி.

13 வயதிலேயே ராணுவத்தின் கொலைவெறிக்குப் பலியாகியிருகுகும் சிறுவன் தில்சன், அன்றாடம் சோற்றுக்கே அல்லாடும் ஏழைக் குடும்பத்தில் பிறந்து படிக்க வசதியின்றி, வேலைக்குச் சென்று குடும்பத்துக்கு ஆதரவாயிருந்தவன். காலை முதல் இரவு வரை அதிகார வர்க்கத்தால் சட்ட விரோதமாக கசக்கிப் பிழியப்பட்ட அந்தச் சிறுவனுக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை. அன்று தன் நண்பர்களுடன் பக்கத்தில் இருந்த ராணுவக் குடியிருப்புக்குள் சென்று பழங்களைப் பறித்ததுதான் அவன் செய்த ‘இந்திய இறையாண்மைக்கு எதிரான பயங்கரவாதக் குற்றம்’ போலும்.

இந்தக் கொடூரக் கொலையை தமிழ்நாட்டு முதலமைச்சர் உட்பட பல்வேறு கட்சியினரும் வன்மையாகக் கண்டித்துள்ளனர். ஆனாலும் இன்னும் கொலையாளி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர் கைது செய்யப்படக் கூட இல்லை. இந்தக் கொலையையே மூடி மறைக்க ராணுவம் முயன்றது. குடியிருப்பிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது பாதுகாப்பு வேலி குத்தி தில்சன் இறந்ததாகச் சொன்ன ராணுவத்தரப்பின் அபாண்ட பொய், குண்டடி பட்டே இறந்ததாக வந்த பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளுத்தது.

அதற்குப் பின்னரும் அவர்கள் சளைக்கவில்லை. சிறுவனைச் சுட்டது ராணுவவீரர் என்று சொல்லி சம்பந்தப்பட்ட அதிகாரியைத் தப்ப வைக்கவே முயன்றுள்ளனர். தில்சனுடன் சென்ற மற்ற இரண்டு சிறுவர்களான சஞ்சய் மற்றும் பிரவீண் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தில் சம்பந்தப்பட்ட நபர் காரில் வந்ததாகக் கூறியுள்ளனர். அத்துடன் அவரைத் தங்களால் அடையாளம் காட்ட முடியும் என்றும் கூறி ராணுவத்தினரின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளனர்.

குற்றவாளியைக் கைது செய்வதில் காவல்துறைக்கு ராணுவத்தின் ஒத்துழைப்பு கொஞ்சமும் இல்லை என்று கூறப்படுகிறது. சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டு நான்கு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதற்குள் அந்த அதிகாரி பாதுகாப்பாக ‘வெளியேற்றப்பட்டு’ இருப்பார் என்பதில் ஐயமில்லை.

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் காஷ்மீரில் ராணுவத்தினர் செய்யும் அட்டூழியங்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். ‘பயங்கரவாதிகள்’ என்ற பெயரில் எதிர்ப்பவர்களை எல்லாம் அழிப்பது அங்கு அவர்களின் அன்றாடப் பழக்கம். ஆனால் ராணுவத்தின் குற்றங்களை எதிர்ப்பதற்கோ, விமர்சிப்பதற்கோ மக்களுக்கு அதிகாரம் மறுக்கப்படுகிறது. அவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாக சட்டத்தின் பெயரால் பாதுகாக்கப்படுகின்றனர்.

பழம் பொறுக்க வந்த ஒரு ஏழைச் சிறுவனை சுட்டுக் கொல்லும் அளவுக்கு அதிகாரத் திமிரை நம் சமூகம் ராணுவத்துக்கு வழங்கியிருப்பதை இனியாவது ஊடகங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். ராணுவத்தினர் செய்யும் குற்றங்களை தேசியவாதத்தின் பெயரால் நியாயப்படுத்தத் தேவையில்லை.

தமிழ்நாட்டில் இப்படி ஒரு கொடூரக் கொலையை அரங்கேற்றியிருக்கும் ராணுவ அதிகாரியின் குற்றத்தை நியாயப்படுத்தும் விவாதங்களும் தொடங்கிவிட்டன. இந்த விசயத்தில் இரு தரப்பிலுமே தவறு இருப்பதாகக் கூறி இணைய விவாதங்களில் நடுநிலை வேடம் போடுகிறார்கள் சில அறிவுஜீவிகள். பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி அந்தச் சிறுவன் நுழைந்தது, அங்குள்ள வாதாம் பழக் கொட்டைகளைத் திருடியது போன்றவை தவறு இல்லையா என்றெல்லாம் கேட்கிறார்கள்.

தன்னைச் சுற்றியுள்ள சமூகம், மக்கள் குறித்து எந்த ஒரு அக்கறையும் இன்றி, வயதான காலம் வரை முழுப்பாதுகாப்பு கிடைக்கப்பெற்ற நடுத்தர, உயர்நடுத்தர வர்க்கத்தினரின் இந்த மனநிலை எவ்வளவு வக்கிரமானது என்று நினைத்தால் மனம் அருவெறுக்கிறது. இங்கு கொலை செய்வது கூட நியாயம்தான்; செய்வது அதிகார வர்க்கமாயிருந்தால்...