நான் 'கீற்றில்' எழுதத் தொடங்கிய நேரம். என் மனதில் தோன்றியதை, நிஜத்தில் ஏற்பட்ட அனுபவத்தையும் கொண்டு 'ஆதலினால் காதல் செய்வீர்' என்ற தலைப்பிட்டு எழுதலானேன்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் 1961 ஆம் ஆண்டு.  நான் கர்நாடக  மாநிலத்தில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருந்த நேரம். பள்ளிக்கூட  நாட்களில் இக்காலத்தைப் போலில்லாமல், நாங்கள் எங்கள் வகுப்பில் படிக்கும் பெண்களுடன் பேசிப் பழகியதில்லை. எனவே கல்லூரியில் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து வந்து படித்துக் கொண்டிருந்த மாணவிகளைப் பார்த்து பிரமித்தோம்.

என் வகுப்பி்லும், அறையிலும் இருந்த வாட்ட சாட்டமான தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பன் குரு,       கர்நாடகாவைச் சேர்ந்த உடன் படித்த அழகிய பெண்ணுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ள விரும்பினான். அந்தப் பெண் தன்னை விரும்புவதாகக் குறிப்பேட்டில் எழுதிக் காட்டுவதாகவும் கூறினான். அதனால் படிப்பில் அவன் கவனம் குறைந்தது.

ஒருநாள் இரவில் படித்து முடித்து தூங்கச் செல்வதற்கு முன், நான் அவனிடன், 'படிக்க வந்த இடத்தில், அதுவும் 17 வயதில், காதல் வயப்படுவது முறையல்ல, இது ஒரு இனக்கவர்ச்சியே என்றும், வேற்று மாநிலத்தில் இருக்கிறோம். பிரச்னையில் சிக்கிக் கொள்ளக் கூடாது' என்றும்  சொன்னேன்.

'இன்னும் சில வருடங்கள் செல்லட்டும். கல்லூரிப் படிப்பை முடிக்கும் தருணத்தில், உனக்கு 23  - 24 வயது ஆகும் பொழுது மனப் பக்குவம் வந்திருக்கும். தகுந்த வேலையிலும் அமர்ந்திருப்பாய். அப்பொழுது நம் மாநிலத்தில், முடிந்தால்  உன் சமுதாயத்தை சேர்ந்த நல்ல பெண்ணாகப் பார். விரும்பு. உன் எண்ணத்தைச் (காதல்?) சொல். இருவரின் பெற்றோரின் அனுமதியுடன் திருமணம் செய்யுங்கள்' என்றும் சொன்னேன்.

மறுநாள் காலையில், 'நீ சொன்னதை இரவில் யோசித்தேன், நீ சொன்னதே சரியென்று பட்டது. எனவே இனி அந்தப் பெண்ணிடம் என் கவனம் சிதறாமல், படிப்பில் கவனம் செலுத்துவேன்' என்றான். அவன் இன்று நல்ல நிலையில் மகிழ்வுடன் இருக்கிறான்.           

சமீபத்தில் 'கவிஞர் மீரா' அவர்களின்,

'உனக்கும் எனக்கும்
ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்...
நீயும் நானும்
ஒரே மதம்...
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்பும் கூட,
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்...
மைத்துனன்மார்கள்,
எனவே,
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே...' 

என்ற கவிதையைப் படித்தேன். கவிதையின் கருத்து எனக்கு் மிகவும் பிடித்திருந்தது.

எந்த மதமாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும் தங்கள் பிள்ளைகள் காதல் வயப்பட்டார்கள் என்றால் உடனே ஒத்துக் கொள்வதில்லை. அவர்கள் தங்கள் இனமா, தங்கள் மதமா என்று பார்க்கிறார்கள். பிற மதத்தினர் என்றால் ஒத்துக் கொள்வதில்லை. பெரும்பாலும் கிறித்துவர்களும், முஸ்லிம்களும் இந்துவாக மாறுவதில்லை. இந்து மதத்தைச் சேர்ந்த ஆண் அல்லது பெண் மற்ற மதத்திற்கு மாறித்தான் திருமணம் நடக்கிறது.

கலப்புத் திருமணமான பெற்றோர்கள் மட்டுமே எளிதில் ஒத்துப் போகிறார்கள். காரணம் அவர்கள் இருவரின் இனத்தில் உள்ள பையனாகவோ, பெண்ணாகவோ இருந்தால் காதலுக்கு மறுப்பதில்லை. பிற இனமாகவோ, மதமாகவோ இருந்தால் எளிதில் ஒப்புவதில்லை. காதல் திருமணத்தில் உள்ள ஒரே உடன்பாடான விஷயம் பிள்ளைகளின் படிப்பிற்கான இட ஒதுக்கீட்டிலோ, வேலை வாய்ப்பிலோ சௌகர்யப்படி தாய் அல்லது தந்தையின் இன ஒதுக்கீட்டில் பயன் பெறலாம்.                

'காதலுக்குக் கண்ணில்லை' என்பார்கள். காதலுக்குக் கண்ணும் வேண்டும். கவனமும் வேண்டும். பெண் ஆணைவிட 3  - 5 வயது இளமையாகவும் இருக்க வேண்டும். புறக் கவர்ச்சியையும், அவரவர் வருமானத்தையும் மட்டுமே பார்க்கக் கூடாது. உற்றார் உறவினரையும், அவர்கள் வசிக்கப் போகும் சூழ்நிலையையும் பற்றி முதலிலேயே தெரிந்து கொள்வது நல்லது. குறிப்பாக பெண்கள் இதில் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பது நலம். 

பல வருடங்களுக்கு முன் படித்த ஒரு தொடர்கதையில் ஒரு இந்து மத ஆணும், கிறிஸ்துவ மதப் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்வர். அவர்களுக்குத் துணையாக அந்த ஆணின் தந்தையும், பெண்ணின் அத்தம்மாவும் அவர்களுடன் தங்குவார்கள். இருவரும் அவரவர் மதச் சின்னம் அணிந்து, அவரவர் வழிபாடு முறையையும் பின் பற்றி வீட்டையே இரண்டாக்குவார்கள்.

குழந்தை பிறந்து பெயர் வைப்பதிலிருந்து, குழந்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு வைத்தியம் பார்ப்பது வரை கருத்து வேறுபாடு. கடைசியில் குழந்தை இறந்து விடும். அதன் பின் திருந்துவார்கள். எனவே வெவ்வேறு மதம் மற்றும் இனத்தைச் சார்ந்தவர்கள் விரும்பி திருமணம் செய்ய முற்படும் போது, இனக் கவர்ச்சியை ஒதுக்கி, பின் விளைவுகளையும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

இன்றைய செய்தித் தாளில் 'கேரளாவில் விவாகரத்து அதிகரிப்பு, ஒரே ஆண்டில் 10926 வழக்குகள்' என்ற செய்தி. இதன் பின்னணி என்னவாயிருக்கும்? காதல் திருமணத்தில் தோல்வியா அல்லது பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தில் விரிசலா? பெண்களும் வேலைக்குச் சென்று பொருள் ஈட்டுவதால் ஏற்படும் ஈகோவா?

எனவே பெற்றோர் பார்த்து, அவர்கள் ஆசியுடன் திருமணம் செய்தல் நலம் பயக்கும். அல்லது தன மதம், இனம் பார்த்து, குணம் அறிந்து, வாழப்போகும் சூழலையும் தெரிந்து காதல் செய்வீர். கடிமணம் கொள்வீர். இனிய இல்லறம் பெறுவீர்.

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு" 

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It