2006 மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணி 228 தொகுதிகளில் வென்றது; மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் 177 தொகுதிகளில் வெற்றி. இது, முன்னர் காணாத மிகப்பெரும் வெற்றி. 1977 முதல் 34 ஆண்டுகளாக இடையின்றித் தொடருகிற - இந்திய அரசியல் வரலாறு கண்டிராத- ஒரு மாநிலத்தின் ஆட்சி. அத்தகைய பெருமையின் அடையாளமாக விளங்கும் இடது முன்னணியின் வெற்றிக்கே வங்க மக்கள் கடந்த 7 சட்டமன்றத் தேர்தல்களிலும் தொடர்ந்து வாக்களித்து வருகிறார்கள். ஆனால், தமக்கு வாக்கு உள்ள தொகுதியில் தொடர்ந்து வாக்களிக்காத பிரதமர் மன்மோகன்சிங், வங்க தேர்தல் பிரச்சாரத்தின்போது, “இடதுசாரிகளை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அசாம் மாநிலத்தில் உள்ள திஸ்பூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு உள்ளது. ஆனால், தற்போது நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில் அவர் அங்கு சென்று வாக்களிக்கவில்லை. நாடாளுமன்ற ஜனநாயகம் கோலோச்சும் ஒரு மிகப்பெரும் நாட்டின் பிரதமர் அவர்.

5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில், நடக்க முடியாத முதியவர்கள், பார்வையற்றவர்கள்கூட, சிரமத்தைப் பொருட்படுத்தாமல் வாக்குரிமை ஜனநாய கத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித் துள்ளனர்.

சரி; ஒரு பிரதமருக்கு அசாம் சென்று வாக்களிக்க வாய்ப்பான நேரம் கிடைக்காமல் போயிருக்கலாம் என்று திருப்தியடைய இயலாது. ஏனென்றால், அவர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த சட்டமன்றத் தேர்தலிலும் வாக்களிக்க வில்லை! ஆனால், 2009-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திஸ்பூர் சென்று மன்மோகன்சிங் வாக்களித்தார். தாம் ஒரு பிரதமர் என்ற நிலையில் சட்டமன்றத் தேர்தலில் போய் வாக்களிப்பது தமது அந்தஸ்துக்கு ஏற்புடையதாக இருக்காதென்று அவர் கருதியிருக்கலாம் போலும்! அவர் முன்னாள் உலகவங்கி அதிகாரியல்லவா! வித்தியாச மான ‘ஜனநாயக’ பார்வை.

இது, அன்று எல்லா பத்திரிகைகளும் ஒரு செய்தியாகிவிட்டது. அரசியல் வட்டாரத்திலும் ஊடக வட்டாரத்திலும் விமர்சிக்கப்பட்டது. மக்களிடையே கூட இது ஒரு பேச்சாக இருந்தது. இவர்தான், மக்களின் வெற்றி வாக்குகளால் 34 ஆண்டுகளாக நல்லாட்சி செய்து வரும் வங்க இடது முன்னணி அரசை அகற்ற வேண்டுமென்கிறார்! வங்கத்தில் வளர்ச்சியில்லை என்கிறார். வளர்ச்சி இல்லாமலா 34 ஆண்டுகளாக ஒரு ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்...

கேரள தேர்தல் பிரச்சாரத்திலும் பிரதமரின் பேச்சு இதே ரீதியில் தான். மத்திய அரசின் தேசிய விருதுகள், சர்வதேசிய விருதுகள், ஊடகங்களின் விருதுகள் என 25 பாராட்டு விருதுகளைப் பெற்றுள்ளது கேரளம். இத்தனை விருதுகளும் இடது முன்னணியின் ஆட்சியில். ஆனால், மன்மோகன்சிங், சோனியா காந்தி, ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரமெல்லாம் ‘இடது சாரிகளின் ஆட்சியில் கேரளம் பொருளாதார வளர்ச்சி பெறவில்லை; பின்தங்கி விட்டது. சட்டம் ஒழுங்கு பாதுகாப் பில்லை. ஆகவே ஆட்சியை அகற்ற வேண்டும்’ என்பதுதான். இந்த 25 விருது களும் ஒரு நல்லாட்சி நிர்வாகத்திற்கு வழங்கியதுதானே? இவர்களின் மத்திய அரசே பாராட்டு விருதுகள் வழங்கியிருக்கும் போது இவர்கள் செய்யும் அவதூறு பிரச்சாரம் அர்த்தமில்லாதது. புதிதாக, ஏப்ரல் 24 அன்றுகூட டெல்லியில் நடைபெற்ற விழாவில் சோனியா காந்தி முன்னிலையில் பிரதமர் மன்மோகன்சிங் சிறந்த உள்ளாட்சி நிர்வாகத்திற்காக மத்திய அரசின் தேசிய விருதினைக் கேரள அரசுக்கு வழங்கியுள்ளாரே!

கறுப்புப்பணம் குறித்தும், உணவுப் பொருள் பாதுகாக்கப்படாமை குறித்தும், ஏழைகளைப் பட்டினி போடுவது குறித்தும் மத்திய அரசு நிர்வாகம் உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு இலக்காகியுள்ளது. மத்திய அமைச்சர்களின் பகாசுர ஊழல் களைக் கண்டு நாடே அருவருக்கிறது.

இவ்வாறிருக்க, இடதுசாரிகளுக்கு எதிரான இவர்களின் தேர்தல் பிரச்சாரத்தில் வெறும் வெறுப்பும் அவதூறும் மட்டுமே மிஞ்சுகிறது.

Pin It