2009-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்ற ஈழப்படுகொலைகளுக்குப் பின்னர் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், மே மாதங்கள் கொடுங்கனவுகளைத் தரும் மாதங்களாக மாறிப் போய்விட்டன. மனிதாபிமானம் கொண்ட, ஈர மனம் கொண்ட எவரது நினைவுகளும் அந்த ரத்தத்தில் தோய்ந்துதான் போயிருக்கும். ஈழத்து மகளிரும், குழந்தைகளும், பதுங்கு குழிகளும்தான் கனவுகளின் உருவங்கள்.

ஈழத்துப்போரில் இந்தியா நடந்து கொண்ட விதமும், மனிதாபிமானமற்ற முறையில் அமைதி காத்த விதமும் நமக்கு எரிச்சலை மட்டுமல்ல, கடுங்கோபத்தையும் ஏற்படுத்தியது. அசோகரின் தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்ட தேசியக் கொடியை ஏற்றவோ, கொண்டாடவோ நமது ஆட்சியாளர்களுக்கு எவ்வித உரிமையும், அருகதையும் கிடையாது. பிரபாகரனை பழிவாங்குகிறேன் என்ற போர்வையில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழ் மக்களை கொன்று குவிக்க இலங்கை அரசுக்கு இந்தியா அனுமதியளித்ததை விக்கிலீக்ஸ் இணையத்தளம் சமீபத்தில் அம்பலப்படுத்தியது.

ஜனவரி 2009-ல் பிரணாப் முகர்ஜியின் திடீர் இலங்கைப் பயணத்திற்குப் பின்னர் அவர் அளித்த பேட்டியொன்றில், “இலங்கை அடையப்போகும் இராணுவ வெற்றி 23 வருடங்களாகப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்குப் பகுதி மக்களுக்கு நிம்மதியான, அமைதியான வாழ்வைத் தரும். தனது நோக்கமும் இதுதான் என ஜனாதிபதி என்னிடம் உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்திருந்தார். அத்தகைய நிம்மதியான, அமைதியான வாழ்வை வடக்கு பகுதி மக்கள் பெற்றுள்ளார்களா? என்பதை பிரணாப் முகர்ஜி தன் மனசாட்சியைப் பார்த்து கேட்டுக் கொள்ளட்டும்.

“இந்தப் போரில் ஐ.நா. எக்காரணம் கொண்டும் தலையிடக்கூடாது. விடுதலை புலிகளுடனும் தற்போதைக்கு பேச்சு வார்த்தை கிடையாது. போர் நிறுத்தமும் கிடையாது என இலங்கை அரசு தெளிவாகக் கூறிவிட்டது” என வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனன் அமெரிக்கத் தூதரக அதிகாரி பீட்டரிடம் ஏப்ரல் 15, 2009 அன்று தெரிவித்திருக்கிறார். அதாவது இலங்கை அரசின் படுகொலைகளை மேனன் ஆமோதிக்கிறார்.

ஏப்ரல் 24 அன்று மேனனும், நாராயணனும் கொழும்புக்குச் செல்கின்றனர். டெல்லிக்கு திரும்பி வந்த பின்பு அமெரிக்கத் தூதரக அதிகாரி பீட்டரிடம் நாராயணன் கூறுகிறார்; “ ஏப்ரல் 27 அன்று மகிந்த ராஜபக்ச ஓர் அறிவிப்பு செய்வார். அதுவரை பொறுமையாக இருக்கவும்.” பிற்பகலில் அறிவிப்பு வரும் என்ற தகவலினால்தான் முதலமைச்சர் காலையில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தாரோ? அறிவிப்பு செய்தார் மகிந்த. போர் நிறுத்தம் அறிவிக்கவில்லை. மாறாக கனரக ஆயுதங்கள் உபயோகிக்க மாட்டோம் என்ற அறிவிப்பைச் செய்தார். அம்புப்படுக்கையில் வீழ்ந்துக்கிடக்கும் ஈழத்தமிழ்ப் போராளிகளையும், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களையும் கொல்ல கனரக ஆயுதங்கள் இனிமேல் எதற்கு? என்பது மகிந்தவுக்குத் தெரியாதா என்ன? அதையும் மீறி போரின் இறுதியில் கொடும் ஆயுதங்கள் கொண்டு தமிழ் மக்களைப் படுகொலை செய்தார்.

இந்திய நாடாளுமன்ற தேர்தல் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் உயிர்களை பலி எடுத்தது இலங்கையின் மகிந்த அரசு. பிரணாப் முகர்ஜியும், மேனனும், நாராயணனும் மத்திய மாநில அரசுகளும் விளையாடிய கண்ணாமூச்சி ஆட்டமும் முடிவுக்கு வந்தது.

2009 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் போரை நிறுத்த, தாக்குதலை நிறுத்த மேற்குலக நாடுகள் மேற்கொண்ட கடுமையான முயற்சிகள் எல்லாம் இந்தியாவால் தோற்கடிக்கப்பட்டன. ஏனென்றால் இந்தியாவின் போரை இலங்கை நடத்தியது. இந்தியப்பிரிவினைக்குப் பிறகான மிக மோசமான இனப்படு கொலைகள் தனது அருகாமை நாடொன்றில் நடைபெற்றுக் கொண்டிருக்க, இந்திய ஆட்சியாளர்கள் அதை ஊக்குவித்தனர். இந்திய மக்களும், தமிழக மக்களும் தொலைக்காட்சிகளில் அதை வேடிக்கைப்பார்த்தனர். தமிழ் உணர்வாளர்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். அப்போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்ய தமிழக ஆட்சியாளர்கள் செய்த தந்திரங்களை உலகம் அறியும். விக்கிலீக்ஸ் தகவலின்படி தமிழ்நாட்டில் நடைபெறும் ஈழ ஆதரவுப் போராட்டங்களுக்கு மட்டுமே இந்திய அரசு பயந்தது. தமிழ்நாட்டில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எழுச்சி தோன்றியிருக்குமானால் நிலைமை தலைகீழாக மாறியிருக்கும். ஆனால் ஆறு கோடி தமிழ்நாட்டு மக்கள் என்றைக்குமே ஒன்றுபட மாட்டார்கள் என்பதை மத்திய அரசு நன்கு அறிந்திருந்தது. அதற்கும் மேல் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களை எப்படி சரிகட்ட வேண்டும் என்பதை மத்திய அரசுக்கு சொல்லியா தெரிய வேண்டும்?

போர் முடிந்தவுடன், பிரபாகரன் ஒழிக்கப்பட்ட பிறகு தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை வழங்க மகிந்தவின் இசைவைப் பெற்றுவிட முடியும் என்ற இந்திய அரசின் பகற்கனவு என்ன ஆனது?

போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னரும் தமிழ் மக்களுக்கு உரிய உரிமைகளைத் தர மறுக்கும் மகிந்த அரசு, இலங்கையில் மிகப்பெரும் இராணுவப் பொருளாதாரத்தைக் கட்டமைத்து வருகிறது. சர்வாதிகாரியாக தன்னையும், தன் சந்ததிகளையும் மகிந்த வளர்த்துக் கொண்டிருக்கிறார். சிங்களக் குடியேற்றங்கள் வடக்கு, கிழக்கில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மறுக்கப்படுகிறது. வீடு கட்டிக்கொடுக்க இந்திய அரசு தந்த நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகக்கோப்பைப் போட்டியை ரசித்துப் பார்க்க பிரதம, ஜனாதிபதிகளுக்கு நேரமிருக்கிறது.“தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை எப்போது வழங்கப்போகிறாய்?” என்று மகிந்தவிடம் கேட்க மட்டும் நம் தலையாட்டிகளுக்கு நேரமிருப்பதில்லை. அதற்கான மனமும் இருப்பதில்லை.

முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட வடு மிகப்பெரியது. அடுத்து வரும் பல தலைமுறைகளுக்கும் அதைக் குணப்படுத்த முடியாது. அப்படுகொலைகளை வெறுமனே தகவல்களாகக் கேட்ட, பார்த்த எனக்கே கொடுங்கனவுகள் வருமானால், களத்தில் மாட்டிக்கொண்ட, அலைக்கழிக்கப்பட்ட, பதுங்கு குழிகளில் வாழ்க்கையைத் தொலைத்த பல லட்சம் ஈழத்தமிழ் மக்களுக்கு அதன் நினைவுகளும், கனவுகளும் எவ்வளவு ஆழமாக இருக்கும்? ஈழப்படுகொலை காட்சிப்பதிவுகள் அடங்கியப் புத்தகம் “என்ன செய்யலாம் இதற்காக?” இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒவ்வொரு தமிழனின் இல்லத்திலும் இருக்க வேண்டிய ஆவணப்புத்தகம் இது. இட்லரின் வதைமுகாம் காட்சிகளை தோற்கடிக்கச் செய்யும் பல்வேறு கொடூரக் காட்சிகள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக நன்பர் ஒருவர் தெரிவித்தார். “இப்புத்தகத்தை பார்த்து முடிக்க எனக்கு பத்து நாட்கள் தேவைப்பட்டது. தினமும் அப்புத்தகத்தை எடுத்து ஒன்றிரண்டு பக்கங்கள் புரட்டுவதற்குள் துக்கம் தாளாமல் மூடி வைத்துவிடுவேன்” என்று மதிப்பிற்குரிய எழுத்தாளர் பா.செயபிரகாசம் அவர்கள் புத்தகம் வெளியிடப்படுவதற்கு முன்னரே அதைப் பற்றி என்னிடம் தெரிவித்திருந்தார். நானும் அப்புத்தகத்தை வாங்கிவிட்டேன். கொடூரக்காட்சிகள் அச்சேறியிருக்கும் பக்கத்திலிருந்து இரண்டு மூன்று பக்கங்களுக்கு மேல் என்னால் செல்ல முடியவில்லை. துக்கம் தாளாமல் அழுது மூடிவிடுகிறேன். இதை எழுதும் போது கூட அப்புத்தகத்தை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது.

ஈழப்போராட்டத்தின் பின்னனியில்தான் தற்போதைய லிபியக் கிளர்ச்சியையும் பார்க்க வேண்டியுள்ளது. லிபியாவின் மேற்குப்பகுதியில் கதத்பா, மாக்ரகா, வர்பல்லா என்ற பழங்குடி இனங்கள் வசிக்கிறார்கள். கிழக்குப் பகுதியில் செனூசி என்றப் பழங்குடி இனமக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். 1951-ல் லிபியாவில் ஆட்சிக்கு வந்த மன்னர் இத்ரியஸ் செனூசிப்பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். 1969-ல் மன்னரை விரட்டிவிட்டு ஆட்சியை கைப்பற்றுகிறார் கதத்பா பழங்குடி இனத்தைச் சேர்ந்த கடாபி. அன்று முதல் அவர்தான் லிபிய சர்வாதிகாரி. மற்ற அரேபிய ஆட்சியாளர்களைப் போல் அயல்நாடுகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ளார் என்றக் குற்றச்சாட்டு கடாபி மீது இல்லை. அவருடைய இராணுவ ஆட்சிமுறை, பல கட்சி ஜனநாயக முறையை அனுமதிப்பது கிடையாது. எதேச்சாதிகாரமும், ஊழலும்தான் லிபிய மக்கள் கண்ட பலன்கள். கிழக்குப் பகுதியில் செனூசிப் பழங்குடி மக்களை அவர் பல ஆண்டுகள் துன்புறுத்தியே வந்துள்ளார். மத்திய கிழக்கு கிளர்ச்சிகளின் தொடர்ச்சியாக, லிபியாவிலும் பற்றிக் கொண்ட கிளர்ச்சிக்குப் பின் நாட்டின் இரண்டாவது பெரிய நகரான பென்காசியை மையமாகக் கொண்ட தேசிய நிர்வாக சபையையும் கிளர்ச்சியாளர்கள் அமைத்துள்ளனர். லிபிய இராணுவத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திப் போராடுகிறார்கள். கிளர்ச்சியாளர்களின் நிர்வாகத்தை சில ஐரோப்பிய நாடுகள் மட்டும் அங்கீகரித்திருக்கிறார்கள். அமெரிக்கா அதனை அங்கீகரிக்கவில்லை என்பதிலிருந்தே கிளர்ச்சியாளர்கள் அமெரிக்காவின் பேச்சைக் கேட்பவர்கள் அல்ல என்பது நமக்குப் புரியும். கடாபியின் சர்வாதிகாரத்தனத்திற்கு எதிராகப் போராடக் கிளம்பிய லிபியக் கிளர்ச்சியாளர்களின் திசை எத்திக்கில் அமையும் என்பதை காலம்தான் சொல்லும்.

மூன்றாம் உலக நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தலைவர்களான பிடல் காஸ்ட்ரோவும், சாவேசும் நமது பெரும் வணக்கத்துக்குரியவர்கள். ஆனால் மூன்றாம் உலக நாடுகளின் சர்வாதிகாரிகளாக, மனிதத்தை நசுக்குபவர்களாகத் திகழும் மகிந்தவையும், கடாபியையும் அவர்கள் ஆதரிப்பதை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். மூன்றாம் உலக நாடுகளில் நடைபெறும் சுதந்திரத்திற்கான, தேசிய இனங்களின் எழுச்சிக்கான வெகு மக்கள் போராட்டங்களை அரசுகள் அடக்கி, ஒடுக்கி, நசுக்குவதுதான் சரி என ஏற்றுக்கொள்வதுதான் மார்க்சியமா?

மூன்றாம் உலக நாடுகளின் வெகுஜனப் போராட்டங்களுக்கு உலக மார்க்சியத் தலைவர்கள் ஆதரவு தர மறுப்பார்களானால் மனிதாபிமானத்தையும், மனித உரிமைகளையும் தன் புறத்தோற்றமாகக் கொண்டுள்ள மேற்குலக ஏகாதிபத்தியங்கள் நோக்கித்தான் அப்போராட்டக்காரர்கள் செல்ல வேண்டும். சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்த்து மக்கள் திரள் போராடும் போது யார் பக்கம் இருக்க வேண்டுமென இவ்வுலகத்தில் உள்ள மார்க்சியத் தலைவர்களுக்கு வழிகாட்ட மார்க்ஸ் தான் வர வேண்டும்.

“என்ன செய்யலாம் இதற்காக?” புத்தகத்தை மிகவும் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். தமிழினம் பட்ட இன்னல்களை நம் பின் தலைமுறைகள் அறிய அது ஒரு சிறந்த ஆவணமாகத் திகழும்.

போரின் இறுதிக் கட்டத்தில் தமிழ் மக்களைப் படுகொலை செய்த இலங்கை அரசை சட்டத்தின் முன் நிறுத்தும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. குழுவின் அறிக்கையை ஐ.நா.அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இலங்கை அல்லது ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் யாராவது கேட்டுக்கொண்டால் மட்டுமே போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் என ஐ.நா. பொதுச் செயலர் அறிவித்துள்ளார். விசாரணையை இந்தியாவின் உதவியுடன் தடுத்து நிறுத்த இலங்கையும் தயராகி வருகிறது.ஐ.நா.மனித உரிமை ஆணையம் 2009-ல் கொண்டு வந்த தீர்மானத்தின் போது இலங்கை அரசுக்கு ஆதரவான நிலை எடுத்த இந்தியா, தற்போது மீண்டும் ஒருமுறை அறநெறி பிறழ்ந்து அவ்வரலாற்றுப் பிழையைச் செய்யுமானால் ஐநா.வின் அடிப்படை உறுப்பினர் பதவியைக் கூட வகிக்கும் தார்மீகத் தகுதியை அது இழந்து போகும்.       

- செ.சண்முகசுந்தரம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)