சமீபத்தில், மீண்டும் ‘விக்கிலீக்ஸ்’ இணையதளம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா தொடர்புடைய செய்திகள் என்பதாலும், தேர்தல் காலகட்டம் என்பதாலும் ‘விக்கிலீக்ஸ்’ விறுவிறுப்பை சற்று கூட்டியுள்ளது என்று சொல்லலாம். தனது பதவி காலத்தை தக்க வைத்து கொள்வதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களை காங்கிரசு அரசாங்கம் பணம் கொடுத்து வாங்கிய அரசியல் பேரத்தை ‘விக்கிலீக்ஸ்’ இணையதளம் ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தது. ஏக இந்தியாவை கட்டமைத்து பாதுகாத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் பெரியவர்களின் கறை படிந்த கதர்சட்டையை அடித்து துவைத்து துவம்சம் பண்ணியிருந்தார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே. அசாஞ்சேவின் ஆதாரங்களை வைத்து கொண்டு கதர்சட்டை சகாக்களை ஆட்டிபடைத்து கொண்டிருந்தார்கள் அகண்ட பாரதம் கனவு காணும் அத்வானி வகையறாக்கள்.

assange_330அடுத்த நாளே, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பா.ஜ.க.யின் கபட நாடகத்தை ‘விக்கிலீக்ஸ்’ இணையதளம் தெளிவாக எடுத்து காட்டியது. ‘யோக்கியவான் வருகிறான் சொம்பை எடுத்து உள்ளே வை’ என்கிற பழமொழிக்கேற்ப பா.ஜ.க.யின் செயல்பாடுகள் அமைந்ததை ஊடகங்கள் மூலம் நாம் அனைவரும் அறிந்தோம்.

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.யின் நடவடிக்கைகள் சமூக நீதிக்கு எதிரானது என்பதை ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே சொல்லி தான் நமக்கு தெரியவேண்டியதில்லை. இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், இந்திய தேசியத்தை தாங்கி பிடித்து கொண்டிருக்கும் நமது இடதுசாரிகள் ‘விக்கிலீக்ஸ்’ அசாங்சேவை வரவேற்றுள்ளன. ‘விக்கிலீக்ஸ்’ வெளியிட்டுள்ள ஆதாரங்களை வைத்து காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.யை குற்றம் சாட்டுகின்றன இடதுசாரிகள். வரவேற்கதக்க நிகழ்வுதான். காங்கிரஸ், பா.ஜ.க.யின் முகத்திரையை ‘விக்கிலீக்ஸ்’ கிழிக்கும்போது வரவேற்கும் இடதுசாரிகள் இராசபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்று ‘விக்கிலீக்ஸ்’ ஆதாரங்களை வெளியிட்டபோது மௌனமாக இருந்தன என்பது நமக்கு தெரியும். ஏனென்றால், இராசபக்சே போர்க்குற்றவாளி அல்ல என்றும், மிகவும் நல்லவர் என்று கியூபா உட்பட அனைத்து கம்யூனிச நாடுகளும் சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தன.

தமிழ் தேசிய இனப்பிரச்சனையை தீர்மானிக்கும் அதிகார மையங்களாக கியூபாவும், இரசியாவும் இருக்கின்றன. அந்த நாடுகள் எடுக்கும் முடிவுக்கு அப்படியே இசைவு தெரிவிப்பவர்களாகவே தமிழகத்து பொதுவுடைமைவாதிகளும் இருக்கின்றனர். கண்ணுக்கு முன்னால் இலட்சம் தமிழ் மக்களை கொன்றொழித்த இராசபக்சேவை குற்றவாளி இல்லை என்று சொன்ன இந்தியாவுக்கும், கியூபாவுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று தெரியவில்லை.

ஒடுக்கும் வர்க்கம் எது? அடக்கப்பட்ட வர்க்கம் எது? என்று பகுத்தறிந்து அதன் வழியில் போராட வேண்டியது இடதுசாரிகளின் கடமை. ஆனால், அவர்களுக்கோ, அமெரிக்க எதிர்ப்பு நிலை என்கிற நிலைப்பாடு மட்டுமே பிரதான கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அமெரிக்கா போர்க்குற்றவாளி என்று சொன்ன இராசபக்சே கியூபாவுக்கும், இரசியாவுக்கும் நல்லவராகி போனார். பயங்கரவாதத்தை அடக்கிய போராளி என்றும் பெயர் வாங்கி விட்டார்.

இந்தியாவில் தமிழர்களுக்கு அகவிசை முரண்பாடுகளாக இருக்கும், இந்தி திணிப்பு, முல்லை பெரியாறு பிரச்சனை, தேசிய இன ஒடுக்குமுறையை கடை பிடிக்கும் இந்திய வல்லாதிக்க அணுகுமுறை, மார்வாடிகளின் பொருளாதார ஆதிக்கம் என்று தமிழர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் எந்த பிரச்சனைகளையும் இடதுசாரிகள் பிரச்சனைகளாகவோ, களையப்படவேண்டிய இடர்பாடுகளாகவோ கணக்கில் எடுத்துக் கொண்டதில்லை. அமெரிக்க முதலீடுகள் வரும்போது மட்டுமே இந்தியாவுக்கு (ஏக இந்தியாவுக்கும்) பிரச்சனை என்று கருதி குரல் கொடுக்கிறார்கள் நமது பொதுடமை இயக்க தோழர்கள். புற விசைகளின் மூலம் மட்டுமே இந்தியாவிற்கு பாதிப்பு என்பதில் தெளிவாக இருக்கின்றன கம்யூனிஸ்ட் கட்சிகள்.

இந்தியா என்கிற அமைப்பினால் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கோ, சிங்கள பேரினவாதத்தால் தமிழ் தேசிய இனத்திற்கு ஏற்படும் பாதிப்புகளுக்கோ இவர்கள் முக்கியத்துவம் தருவதில்லை. இந்த இடத்தில்தான் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் அசாஞ்சே எனக்கு போராளியாகத் தெரிகிறார். ‘அசாஞ்சே’ தன்னை போராளி என்றோ இடதுசாரி என்றோ அடையாளப்படுத்திக் கொள்ளவே இல்லை. முதன்முதலில் இரசியாவைப் பற்றிய உளவுத்துறை இரகசிய ஆவணங்களை வெளியிட்டு இரசியாவின் முகத்திரையை கிழித்து எறிந்தார் விக்கிலீக்ஸ் அசாஞ்சே. உடனே, அமெரிக்கா அசாஞ்சவை தனது ஆதரவாளர் என்று நினைத்து தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. உடனடியாக அமெரிக்கா, ஈராக் போரில் செய்த கொடுமைகளையும், அந்த போரின் உள்நோக்கங்களையும் ஆதாரத்துடன் வெளியிட்டது விக்கிலீக்ஸ். அமெரிக்கா, விக்கிலீக்ஸ் மீது வழக்கம்போல் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக திணித்தது. இது அமெரிக்காவின் வழமையான செயல்பாடுதான்.

அமெரிக்க எதிர்ப்பு நிலை எடுத்த விக்கிலீக்ஸ் உடனடியாக சோசலிச நாடுகளின் ஆதரவு போக்கு என்கிற நிலைப்பட்டினை எடுக்கவில்லை. தொடர்ந்து பொதுவுடமை சிந்தனை கொண்ட நாடுகளின் அரசு பயங்கரவாத போக்கையும் தோலுரித்துகாட்டி கொண்டே இருந்தார். நமது பொதுவுடைமைவாதிகள் அசாஞ்சேவிடமிருந்து இந்த இடத்தில்தான் வேறுபடுகின்றனர். அமெரிக்க எதிர்ப்பு என்கிற ஒற்றை நிலைப்பாடு கொண்ட இடதுசாரிகளின் செயல் திட்டங்கள் பயன் அளிக்குமா? அல்லது அரசு பயங்கரவாதம் எந்தெந்த இடங்களிலெல்லம் தலை தூக்குகிறதோ, உடனடியாக அந்த பயங்கரவாதத்தை எதிர்க்கும் விக்கிலீக்ஸ் அசாஞ்சேவின் செயல்பாடுகள் பயன் தரக்கூடியதா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

தமிழ் மீனவர்களின் உடைமையான ‘கச்சத்தீவினை’ இலங்கைக்கு இந்தியா வழங்கியதை மூத்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் இராமமூர்த்தி வரவேற்றார். ஒரு பாறைக்காக சிங்கள அரசை இந்தியா பகைத்து கொள்ள கூடாது என்று விளக்கம் அளித்தார். இந்திய தேசிய இறைமையை பாதுக்காப்பிற்காக தமிழ் தேசிய நலனை அடகு வைத்த நிகழ்வுதான் இது. அமெரிக்கா – கோகா கோலா நிறுவனத்திற்காக தாமிரபரணி தண்ணீரை உறிஞ்சும்போது நெல்லை மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பறிபோகிறது என்பதை உணரும் தோழர்கள், தமிழக மீனவர்களின் சொத்தான ‘கச்சத்தீவினை’ சிங்களர்களுக்கு தாரைவார்த்தபோது தமிழ்க மீனவர்களின் வாழ்வுரிமை ஒடுக்கப்படுகிறது என்கிற உண்மையை ஏன் உணர மறுக்கிறார்கள்?

அமெரிக்கா என்கிற முதலாளித்துவ வேட்கை கொண்ட நாடு உருவாக்கும் நுகர்வோர் சந்தை என்பது கீழ்திசைநாடுகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அபாயம் இருக்கிறது என்பதில் நமக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால், அதையும்தாண்டி கடுமையாக நாம் முரண்பட வேண்டிய, எதிர்த்துப் போராட வேண்டிய அமைப்புகள் தமிழ் பாட்டாளிகளுக்கு மிக நெருக்கமாகவே இருக்கின்றன என்பதுதான் உண்மை. உலக பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை பேசும் பொதுவுடைமை இயக்கத் தோழர்களுக்கு, தன் சொந்த தேசிய இனத்தின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான போராட்ட வழிமுறைகள் ஏன் தெரியவில்லை? அதற்கான அடிப்படையான காரணம் இங்குள்ள இடதுசாரிகள் அனைவரும் இந்திய தேசியத்தையும், அதன் வல்லாதிக்கத்தையும் ஏற்றுக் கொள்கிறவர்கள். உலகளாவிய பாட்டாளிகளின் பிரச்சனைகளுக்கு இங்கிருந்து தீர்வு காண போராடுபவர்கள் நமது பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள். ஆனால், அவர்கள் ஆளும் மாநிலமான கேரளா அரசாங்கம் தமிழ் பாட்டாளிகளுக்கு தண்ணீர் தராமல் வஞ்சிப்பதற்கு இதுவரை அவர்களிடமிருந்து பதில் இல்லை.

சேலம் இரயில்வே கோட்டம், பாலக்காடு மலையாளிகளின் ஆதிக்கத்தில் செல்வதற்கும் நமது காம்ரேட்களின் பொதுவுடைமை ஆட்சி துணை நிற்கிறது. தமிழ் தேசிய இன பாட்டாளிகளின் பொருளியலை சுரண்டுவதின்மூலமும், நீராதாரத்தை பறிப்பதன் மூலமும் மலையாள தரகு தேசிய முதலாளிகளுக்கு வாழ்க்கை கொடுப்பதுதான் இவர்களின் மார்க்சிய அணுகுமுறையா?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்திய வல்லாதிக்கத்திற்கு எந்த அளவிற்கு துணை நிற்கின்றனர் என்பதற்கு ஒரு சின்ன உதாரணத்தைத் தருகிறேன். கடந்த 27.03.2011 ஞாயிறு அன்று "The Hindu" நாளிதழில் "Sonia more comfortable with left than with regional allies" என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. சுரேஷ் நம்பத் என்பவர் எழுதியிருந்த அக்கட்டுரையில் "More comfortable working with often high caste and well educated communists than with regional satraps" என்று எழுதியிருந்தார். அதாவது மொழிக்கும், இனத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மாநில கட்சிகளைவிட உயர்சாதியினராகவும்,

நன்கு படித்தவர்களாகவும் இருக்ககூடிய கம்யூனிஸ்ட்களுடன் இணைந்து பணிபுரிவது எளிமையாக இருக்கிறது என்று சோனியாகாந்தி உணருவதாக அக்கட்டுரை குறிப்பிட்டிருந்தது.

காரத், யெச்சூரி, நம்புதிரிபாட், பட்டாச்சார்யா போன்ற உயர்சாதியினராகவும், இந்திய தேசியத்தை ஏற்றுக்கொள்வதில் தனது கட்சியின் கருத்தியலோடு ஒத்த சித்தனை கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களை காங்கிரசு தலைமைக்கு பிடிக்கவே செய்கிறது. திராவிட இயக்கங்கள், பிஜி ஜனதாதளம், ஜக்கிய ஜனதாதளம்,ராஷ்ட்ரீய ஜனதாதளம், காஷ்மீர் விடுதலை இயக்கம் போன்ற மாநில நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிகள் காங்கிரஸ் தலைமைக்கு எதிர் கருத்தியல் கொண்ட அமைப்புகளாகவும் அவர்களுடன் இணைந்து பணிபுரிவது கசப்பான அனுபவமாகவும் இருக்கிறது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் என்னவென்றால்,

1) இம்மண்ணின் பிறவி முதலாளித்துவமான பார்ப்பன தலைமையை ஏற்றுக்கொள்ளுதல்,

2) மாநில உரிமைகளுக்கெதிரான இந்திய தேசிய கருத்தியலை உருவாக்குதல் என காங்கிரஸ் உட்பட அனைத்து தேசிய கட்சிகளின் செயல்திட்டங்களும், கம்யூனிஸ்ட் கட்சியின் செயல் திட்டங்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றன என்பது பட்டவர்த்தனமாகிறது.

சாதி ஒழிப்பு அரசியலை முன்னெடுக்கும் பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் அதற்கான தீர்வாக பார்ப்பன எதிர்ப்பு அரசியலை நடைமுறைப்படுத்துவதில்லை. ஈழமக்கள் பிரச்சனைக்காக போராடும் நமது செஞ்சட்டை தோழர்கள் அதற்கான தீர்வாக தமிழீழத்தை அங்கீகரிப்பதில்லை. தமிழ் தேசிய இனப்பிரச்சனையை பற்றி விவாதிக்கும் தோழர்கள் ‘ஏக இந்தியா’ கோட்பாட்டை எதிர்ப்பதில்லை. தமிழ் பாட்டாளிகளும் சிங்கள பாட்டாளிகளும் இணைந்து(!) சிங்கள பேரினவாத பாசிசத்தை எதிர்க்க வேண்டும் என்று அறிக்கைவிடும் கம்யூனிஸ்ட் அறிஞர்களும் உண்டு.

அரசு என்பதே ஒடுக்குமுறைகளின் பிறப்பிடம்தான். அதனிடமிருந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதே சரியான மார்க்சிய சிந்தனையாளனின் அணுகுமுறை. இங்குள்ள தமிழ் பாட்டாளி மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்கா இருக்க வேண்டும் என்று தரகு தேசிய முதலாளியம் நினைக்கிறது. ஆனால், நமது காம்ரேட்டுகளோ, தமிழ் தேசிய இனத்தின் வாழ்வாதாரத்தையும், சுயநிர்ணய உரிமையையும் தீர்மானிக்கும் சக்தியாக கியூபா, இரஷ்யா போன்ற நாடுகள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மேற்கூறிய இரண்டுமே, பாட்டாளிவர்க்க விடுதலைக்கு முரண் அரசியல் என்பதை நமது பொதுவுடைமை இயக்க தோழர்கள் எப்போது புரிந்து கொள்ள போகிறார்கள்? நம் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ண உரிமையை, பொருளியல் அரசியலை, வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் உரிமை நம் மக்களிடம்தானே இருக்க வேண்டும். அதுதானே சரியான ஒடுக்கப்பட்டோர்க்கான அரசியலாக இருக்கும்.

இந்த கட்டுரையின் நோக்கம் இடதுசாரி ஆளுமைகளை விமர்சிக்க வேண்டும் என்பது அல்ல, தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை, வர்க்கம் சார்ந்த போராட்டங்கள் என இம்மண்ணில் எத்தனையோ வீரியமுள்ள போராட்டங்களை பொதுவுடைமைத் தோழர்கள் நடத்தியிருக்கிறார்கள் என்பதில் எனக்கு துளி அளவும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், இம்மண்ணின் அனைத்து ஒடுக்கு முறைகளுக்கும் தோற்றுவாயாக உள்ள பார்ப்பனியத்தையும், அதனை தாங்கும் சக்தியாக செயல்பட்டு கொண்டுருக்கும் இந்திய தேசியத்தையும் எதிர்க்கும் அரசியல் அவர்களிடம் இன்று வரை சிந்தனை அளவிலும், நடைமுறை அளவிலும் கிடையாது.

சோசலிச ஆதரவு, அமெரிக்க எதிர்ப்பு என்கிற குறிப்பிட்ட அரசுக்கு சார்பு மற்றும் எதிர் நிலைப்பாடு எதுவுமில்லாமல் எல்லா நாட்டு ஊழல்களையும் அம்பலபடுத்தும் விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் அசாஞ்சே போராளி குணத்துடனும், கியூபாவை, மெக்காவைப் போல, இஸ்ரேலைப் போல, புனிதத் தலமாகவும், அந்த அரசின் மூலம் மட்டுமே ஒடுக்கப்பட்ட வர்க்கத்திற்கு, மோட்சம் கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்ளும் நமது கம்யூனிஸ்ட்கள் அடிப்படைவாத சிந்தனையுடனும் இருப்பதாக நான் உணருகிறேன். மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது என்கிற மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் இயங்கியல் தன்மையுடன் அவர்கள் தங்கள் செயல்திட்டங்களை மாற்றி அமைக்க முன்வரவேண்டும்.