‘இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்’ என்கிறது பிங்கல நிகண்டு.

‘தமிழே உலக முதன்மொழி; அது திராவிடத்துக்குத் தாய், ஆரியத்துக்கு மூலம்’ என்கிறார் பாவாணர்.

‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமை திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்து துமே’ என்று போற்றுகிறார் மனோன்மணியம் சுந்தரனார்.

‘தனித்தியங்கும் தன்மைத் தமிழினுக் குண்டு; தமிழே ஞாலத்தின் தாய்மொழி பண்டு!’ என்று புகழ்கிறார் பாவேந்தர்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த தமிழ்மொழியை எழுத்துச் சீர்மை அல்லது எழுத்துச் சீர்திருத்தம் செய்வதாகக் கூறிச் சீர்குலைத்து அழித்தொழிக்க முயல்கின்றனர் எழுத்துச் சீர்திருத்தம் செய்வதாகக் கூறுவோர்.

எழுத்துச் சீர்திருத்தம் செய்ய விரும்புவோர் வலிந்து கூறும் கரணியங்கள்: தமிழில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் கலைச்சொல்லாக்கத்திற்கும் எழுத்துச் சீர்மை அதாவது மிக குறைந்த எழுத்து வடிவங்களே தேவை. அந்த எழுத்து வடிவங்களும் ஒரே சீரானதாய் இருக்கவேண்டும்.

தட்டச்சு விசைப்பலகையை எளிதாக்க ஆங்கிலத்தைப் போல் தமிழ் வரிவடிவங்களையும் குறைக்க வேண்டும்.

குழந்தைகளும் பிறமொழியினரும் எளிதாகவும் விரைவாகவும் தமிழ் கற்க வரிவடிவக் குறைப்பு தேவை என்பன போன்ற கருத்துகளை முன்வைக்கின்றனர்.

இவ்வாறான கருத்துகளை வலியுறுத்துபவர்களில் முதன்மையானவர் முனைவர் வா.செ. குழந்தைசாமி. இவர் ‘எழுத்துச் சீர்மை’ என்ற கட்டுரையில் தமிழ் எழுத்து வரிவடிவங்களில் 72 எழுத்துகளில் மாற்றம் கொண்டுவந்து நான்கு புதிய வரிவடிவங்களை உருவாக்கியுள்ளதாகவும் அதை உலகச் செம்மொழி மாநாட்டில் அறிமுகப்படுத்த வுள்ளதாகவும் அறிய முடிகிறது. இவர்கள் கூற்றில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

இல்லாத ஊருக்குப் போகாத வழி

அறிவியல் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி யடைந்த நாடுகளின் வரலாறு நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ன?

தொடக்கக் கல்வி தொடங்கி அறிவியலின் அனைத்துத் துறை சார்ந்த கல்வியை அவர்கள் தாய்மொழி யில் கற்றுத் தந்ததால் அவர்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கின்றனர்.

தமிழில் துறைசார்ந்த கல்வியைக் கற்றுத்தரும் கல்விக் கொள்கையோ திட்டமோ தமிழ்நாட்டில் இல்லாத நிலை யில், தமிழில் கலைச்சொல்லாக்கத்திற்கும் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் எழுத்துச் சீர்மை உதவும் என்பது இல்லாத ஊருக்குப் போகாத வழியைக் காட்டுவதாக உள்ளது.

எல்லா ஒலிகளையும் குறிக்கும் வரிவடிவமுள்ள மொழி உலகத்தில் ஒன்றுமேயில்லை. ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மையும் இலக்கண மரபுகளும் உண்டு. அந்தந்த மொழியின் தனித்தன்மைக்கும் இலக்கண மரபுக்கும் ஏற்ப ஒவ்வொரு மொழியும் கலைச் சொற்களை உருவாக்கிக் கொள்கின்றன.

“ஆங்கிலேயன் ‘கம்ப்யூட்டர் (Computer)’ என்பதைப் பிரஞ்சுக்காரன் ‘ஓர்திரைத்தோ (Ordinateur)’ என்கிறான். ஆங்கிலேயனுக்கு ‘டெப்ரிக்கார்டு (Tape record)’ பிரஞ்சுக் காரனுக்கு ‘மஞ்ஞெத்தோபோன் (Mageto phone).’ இதனால் பிரஞ்சுக்காரன் அறிவியலில் ஆங்கிலேயனுக்கு இணையாக வளராமல் பின் தங்கிவிட்டானா?’’ என்று கேட்கிறார் முனைவர் இரா. திருமுருகன்.

தமிழ்மொழியின் முன்னோர்கள் எல்லாக் காலங்களிலும் தமிழ்மொழி நிலைத்திருக்கும் வண்ணம் இலக்கணக் கோட்பாடு என்ற மொழிக்கட்டமைப்பை வகுத்துத் தந்துள்ளனர். எனவே புதிய அறிவியல் கண்டுப்பிடிப்பு களுக்கு உடனுக்குடனே வேர்ச்சொல் அடிப்படையிலும், வினைச்சொற்கள் அடிப்படையிலும் தமிழில் கலைச் சொற்கள் உருவாக்குவது மிகவும் எளிது என்பது தெளிவு.

மற்ற மொழியினர் பிறமொழிச் சொற்களைப் பயன் படுத்தும் போது பிறமொழி எழுத்துகளைக் கடன் வாங்குவதுமில்லை, புதிய குறியீடுகளை உருவாக்கு வதுமில்லை. அவர்களிடம் உள்ள எழுத்துகளில் எழுதி அம்மொழித் தன்மைக்கேற்ப ஒலிக்கின்றனர்.

ஆங்கிலேயர் தமிழ் என்பதை ‘டமில்’ (Tamil) என்றுதான் எழுதி ஒலிக்கின்றனர். அவர்களிடம் இல்லாத ‘ழ’கரத்தைக் கடன் வாங்கவுமில்லை, புதிய குறியீட்டை உருவாக்கவுமில்லை. நாம் மட்டும் ‘ஐன்ஸ்டைன்’, ஜான் அகஸ்டஸ் போன்ற பெயர்களை ஐன்சுட்டைன், சான் அகசுட்டசு என்று எழுதக்கூடாதாம். சொல்கிறார் வா.செ. குழந்தைசாமி. (பார்க்க: ‘கிரந்த எழுத்து’ - தினமணி 18-3-96)

ஆங்கில விசைப்பலகைக்கு ஏற்பத் தமிழ் எழுத்து களைக் குறைக்க வேண்டுமாம். ஆயிரக்கணக்கான எழுத்து வடிவங்களைக் கொண்ட சீன-சப்பான் மொழியினர் அவர்கள் மொழியின் எழுத்து வடிவங்களுக்கு ஏற்ப விசைப் பலகையை வடிவமைத்துக் கொண்டது அறிவியல் வளர்ச்சியா? ‘காலுக்கேற்பச் செருப்பை வடிவமைப்பதை விட்டுச் செருப்புக்கேற்பக் காலை வெட்டிக் கொள்ளும்’ இவர்கள் கருத்து அறிவியல் வளர்ச்சியா? சிந்திக்கவேண்டும்.

இன்றைய கணினி ஊழியில் எழுத்துச் சீர்மையாளரின் கருத்துகள் பொய்த்துப்போனவை. இன்றுள்ள தமிழ் எழுத்து வடிவங்களுக்கேற்ப விசைப்பலகை வடிவமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது நடைமுறை உண்மை. தெற்காசிய மொழிகளிலே கணினியில் அதிகம் பயன் படுத்தும் மொழியாக உள்ளது தமிழ்.

இன்று, தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் கூடக் கணினியைக் கையாளும் வகையில் திறன்மிக்க மென் பொருள்கள் (Software) வெளிவரத் தொடங்கியுள்ளன.  தமிழ்க் கல்வெட்டு எழுத்துகளைக்கூட கணினிமூலம் இன்றுள்ள எழுத்து வடிவில் மாற்றுவதற்கான மென்பொருட்களை உருவாக்கும் ஆய்வுகள் நடந்துகொண்டுள்ளன.

சீனமொழியில் ஒருமுறை கொண்டுவந்த எழுத்துச் சீர்மையைச் சுட்டிக்காட்டும் இவர்கள் இரண்டாம் முறை பரிந்துரைக்கப்பட்ட எழுத்துச் சீர்மையைச் சீன அரசு ஏற்கத் தயங்கியதையும், தொடக்கக் கல்வி முதல் தொழில்நுட்ப உயர்கல்வி வரை அனைத்துக் கல்வியும் சீனமொழியில் கற்பிக்கப்படுவதையும், நான்காம் வகுப்பிற்குப் பிறகே விருப்பப்பாடமாக ஆங்கிலம் உள்ளது என்ற உண்மையையும் சுட்டிக் காட்டுவதில்லையே ஏன்?

தொடர்ந்து வரும் திராவிடக் கட்சிகளின் (திமுக-அஇஅதிமுக) ஆட்சிக் காலங்களில் தமிழ் கல்வி மொழியாக வும் ஆட்சிமொழியாகவும் வழக்குமன்ற மொழியாகவும் ஆக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் ஒருவர் தமிழ் கற்காமலே தொடக்கக்கல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரை படிக்க முடியும். தமிழைப் படிக்காத, தமிழே தெரியாத பல தலைமுறையை உருவாக்கிவிட்ட நிலை இன்று உள்ளது.

இந்த வரலாற்றுப் பிழைகளைச் சுட்டிக்காட்டித் தமிழ் வளர்ச்சிக்கான ஆக்கப் பணிகளை மேற்கொள்வதை விடுத்துத் தமிழை எளிதாகக் கற்கவும் அறிவியலை வளர்க்கவும் எழுத்துச் சீர்மை கொண்டுவரப் போகிறார்களாம்.

ஆள்வோரின் அரவணைப்போடு இவர்கள் கொண்டு வரப்போகும் எழுத்துச்சீர்மை, தமிழை வேறொரு மொழி யாக மாற்றி, கழக (சங்க)க் காலம் முதல் இன்றுவரை தமிழில் வெளிவந்துள்ள நூல்களைப் படிக்க முடியாமல் செய்யும். உலக முழுவதுமுள்ள தமிழர்களின் எழுத்துமொழியாகவும் பேச்சுமொழியாகவும்  இன்றுள்ள தமிழைச் சீரழித்து அழிக்கவே செய்யும்.

செந்தமிழர் சிந்திய செங்குருதி காயுமுன் செந்தமிழும் செம்மொழி மாநாட்டில் அழிக்கப்படுமா? நாம், கடந்த ஆண்டு சிங்கள இனவெறி அரசு பன்னாட்டுத் துணை யோடு முள்ளிவாய்க்காலில் தமிழினத்தைக் கொடுமையான முறையில் படுகொலை செய்து அழித்ததைப் பார்த்து அமைதியாக இருந்ததுபோல், எழுத்துச் சீர்மை என்ற பெயரில் தமிழ்மொழி அழிக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டு அமைதி காக்கப்போகிறோமா?

தமிழர்களின் அடையாளமாக விளங்குவது தமிழ்மொழி. அந்தத் தமிழ் அழிந்துபோனால் நாமும் அழிந்து போவோம். அதனால்தான் பாவேந்தர்,

செந்தமிழுக்குத் தீமை வந்தபின்பும்

இந்தத் தேகம் இருந்தொரு லாபமுண்டோ?

என்றும்

கெடல் எங்கே தமிழின் நலம்

அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!

என்றும் பாடினார்.

Pin It