இது குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

மனித உரிமைப் போரளியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞரும் ஐயா பாவலேறு பெருஞ்சித்திரனாரின் பேத்தியுமான அங்கயற்கண்ணி மற்றும் அவரது உதவியாளர் திருமலை ஆகிய இருவரும் முறைப்படி சுற்றுலா விசா பெற்று இலங்கைக்குச் சென்ற பொழுது அங்குள்ள சிங்கள ராணுவ முகாமினைப் புகைப்படம் எடுத்தார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டின் பேரில் நேற்று இலங்கை ராணுவத்தால் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு அவர்களது கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலை என்ன என்பது தற்பொழுது கேள்விக்கிடமாக உள்ளது. அவர் குறித்து கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் இலங்கை அரசிடம் இருந்து உரிய பதில் எதும் கிடைக்கவில்லை. அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதோ என்னும் அச்சம் ஏற்படுகிறது.

அங்கு கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அங்கயற்கண்ணி உலகமெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்; பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகளுக்காக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இங்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளார். மனித உரிமைகளுக்காகப் போராடும் அவரை சட்ட விரோதமாக கைது செய்திருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஈழத்தில் வாழும் தமிழனின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை, கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழனின் உயிருக்கும் பாதுகாப்பில்லை என்னும் இழிநிலை இருக்கும்பொழுது இப்பொழுது உரிய முறையில் இலங்கைக்கு விசா பெற்றுச் சென்ற தமிழர்கள் இருவரின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு இலங்கை ராணுவத்தால் சட்ட விரோதக் காவலில் அடைக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் அங்கயற்கண்ணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், ம. தி. மு. க பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் அவர்களின் பேத்தியும், தமிழறிஞர் இறைக்குருவனாரின் மகளும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான கயல்விழி, தனது உதவியாளர் திருமலையுடன் இலங்கைக்குச் சென்று முகாம்களில் வாழும் தமிழர்களின் அவல நிலைமையை அறிந்து திரும்பும் வழியில் ஓமந்தை எனும் இடத்தில் சிங்கள இராணுவத்தினால் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறோம்.

முறையான கடவுச் சீட்டு, இலங்கை அரசினால் வழங்கப்பட்ட விசா ஆகியவை இருந்தும் அவரை கைது செய்தது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். எனவே இந்த பிரச்னையில் இந்திய அரசு உடனடியாகத் தலையிட்டு அவர்களை விடுவிக்க வேண்டிய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வலியுறுத்துகிறோம்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஆகியோருக்கு தந்திகளையும் அனுப்பி வைத்திருக்கிறோம். தமிழகமெங்கும் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளின் சார்பிலும் தந்திகள் அனுப்பும்படி வேண்டிக் கொள்கிறோம்.