மரணதண்டனை என்பது அகிம்சை கொள்கைக்கு எதிரானது. யார் உயிரை கொடுக்க முடியுமோ அவர்தான் எடுக்கவும் வேண்டும். அகிம்சையை மதிக்கும் ஒரு அரசானது ஒரு கொலைகாரனை நோயாளியாகக் கருதி அவனை மாற்ற சிகிச்சை தரவேண்டும். எல்லா குற்றங்களும் நோய்களே; அதற்கு தகுந்த சிகிச்சைதான் தேவை.

 - மகாத்மா காந்தி,  அரிசன் 19, மார்ச் 1937 

இந்திய சமூகத்தில் மரண தண்டனைக்கு எதிரான தொடர்குரல்கள் எல்லாக் காலங்களிலும் ஒலித்து வந்துள்ளது. ஆனால் அக்குரல்களின் எண்ணிக்கை பெருவாரியாக இல்லாதபோதும் நமது சமூகத்தில் மரணதண்டனை எதிர்ப்பென்பது தொடர்ந்து வந்துள்ளது. பொதுச் சமூகத்தில் மரண தண்டனைக்கு எதிரான வாதங்களை முன்னெடுக்கும்போது ஒரு மரண தண்டனை எதிர்ப்பாளராக ஒருவர் பல்வேறு முனைகளிலிருந்து எதிர்ப்புக் குரல்களை எதிர்கொண்டே ஆகவேண்டும். மரண தண்டனை எதிர்ப்பாளருக்கு, குற்றத்துக்குத் துணை போகின்றவனாகவும், குற்றவாளிக்கு பரிந்துரைப்பவனாகவும், சமூகத்தில் குற்றத்தின் எண்ணிக்கை கட்டுப்படுவதை தடுப்பவனாகவும் பல்வேறு பார்வைகளில் அந்த எதிர்ப்பு வருகின்றது. பொதுப் புத்தியில் புதைந்துள்ள கருத்துருவாக்கமான மரண தண்டனை என்பது சமூகத்தில் குற்றத்தின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வடிவமாக உள்ளது என்பதும் அந்த தண்டனையை காணும் பிறர், அது போன்ற குற்றங்களை சமூகத்தில் செய்யத் தயங்குவார்கள் என்ற கருத்தும் இதற்கு பெரும் காரணங்களாக உள்ளன‌. சட்டத்தின் பார்வையில் மரண தண்டனையை ஆதரிக்கும் அதே மனநிலையே காவல்துறை அல்லது பிற அரசு ஆயுதப்படைகள் நடத்தும் சட்டத்திற்கு முரணான கொலைகளான மோதல் சாவுகள் என்ற மரண தண்டனையையும் நியாயப்படுத்தும் நிலைக்கு இட்டுச் செல்கிறது. 

pnbagavathy_400மரண தண்டனையைப் பற்றிய விவாதங்கள் வரும்போது அவை பெரும்பாலும் ஒரு குற்றவியல் தண்டனை தத்துவம் சார்ந்த தளத்திலிருந்து மாறி வெறும் உணர்ச்சி பெருக்கும், பழிவாங்கும் மனநிலையும் மேலோங்கிய விவாதமாகவே மாறி இருக்கிறது. இதற்கு கற்றறிந்த நீதிமான்களும் விதிவிலக்கல்ல. 1974ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டம், மரண தண்டனை வழங்குவதாக இருந்தால் அதற்கான சிறப்புக் காரணத்தை பதிவு செய்ய வேண்டியது நீதிபதிகளின் கடமை என்று கூறியது. 

1979ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வந்த மரண தண்டனை வழங்கப்பட்ட ஒரு வழக்கின் மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றம் எவ்விதமான சிறப்புக் காரணத்தையும் பதிவு செய்யாமல் மரணதண்டனை வழங்கியிருந்தது. இச்சூழலில் மரண தண்டனை தருவதற்கான சிறப்புக் காரணங்களை தேடிய உச்சநீதிமன்றம், “தொழில்முறை கூலிக் கொலையாளிகளால் செய்யப்பட்ட கொலைகள், மோசமான கிரிமினல்கள், கொடூரமான கொலைகள், பலகீனமான சக்திகளான பெண்கள், குழந்தைகளைக் கொல்வது போன்றவை மரண தண்டனை தர ஏற்புடைய காரணம் என்று முடிவு செய்தது. (Bachan Singh Vs State of Punjab AIR 1976 SC 2307) 

மரண தண்டனை குறித்த நீண்ட விவாதங்கள் நமது உச்சநீதிமன்றத்தில் நடந்தேறியுள்ளன. 1979ஆம் ஆண்டு பச்சன்சிங் (எதிர்) பஞ்சாப் மாநில அரசு வழக்கில் மரண தண்டனை என்பது அரசியலமைப்பு வழங்கியுள்ள தனிமனித சுதந்திரம், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உரிமைக்கு எதிரானதா என்ற கேள்வி வந்த சமயம் இந்த விவாதம் அரசியலமைப்பு ஆயத்தில் வைக்க நிர்பந்திக்கப்பட்டது. ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற ஆயத்தில் தலைமை நீதிபதி திரு.ஒய்.வி.சந்திரகுட், நீதிபதிகள் பி.என்.பகவதி, ஆர்.எஸ்.சர்க்காரியா, ஏ.சி.குப்தா மற்றும் என்.எல்.உன்ட்வாலா ஆகியோர் அமர்ந்திருந்தனர். 

நீதிநாயகம் பி.என்.பகவதியைத் தவிர மற்ற நீதிபதிகளின் சார்பில் நீதிநாயகம் சர்க்காரியா எழுதிய தீர்ப்பானது பெரும்பாண்மை தீர்ப்பாக முன்மொழியப்பட்டது. அந்தத் தீர்ப்பின் படி மரண தண்டனை என்பது இச்சமூகத்தில் குற்றத்தின் அளவை மட்டுப்படுத்துவதாகவும் அதற்கு உதாரணமாக 1967-ம் ஆண்டு இந்திய சட்ட கமிஷன் அறிக்கையில் சுட்டிக்காட்டிய கருத்தான மரண தண்டனை குற்றம் செய்பவர்களை அச்சமடையச் செய்து குற்றம் நிகழ்வதைத் தடுக்க துணை புரிவதான கருத்தை முன்வைத்தது. மேலும் பிற காரணங்கள் அடிப்படையில் மரண தண்டனை சட்டரீதியாக அரசியலமைப்புக்கு எதிரானதல்ல என்று முடிவு செய்தது. 

மாறுபட்ட கருத்தை முன்வைத்த நீதிநாயகம் பி.என்.பகவதி மரண தண்டனை கொடூரமானது. அது தண்டனை குறித்த எந்த தத்துவங்களிலும் ஒப்பிட முடியாதது, அந்த தண்டனை சமூகத்தில் குற்றம் நடைபெறுவதை அச்சுறுத்தும் வகையில் இல்லை என்று கூறினார். இக்கருத்தை மிக விரிவான தளங்களுக்கு எடுத்துச் சென்றார். 1982ம் ஆண்டு வெளியான அவரின் மாற்றுக் கருத்து AIR 1982 SC. 1325 என்பது இந்திய நீதிவானில் மனித உரிமைகளின் பார்வையில் மரண தண்டனைக்கு எதிராக சுடர்ந்த ஒரு நட்சத்திரம் போன்ற தீர்ப்பாகும். 

இத்தீர்ப்பின் தரவுகள் வெறும் இந்திய எல்கைகளுக்குள் அதன் பரிணாமம் சுருங்கிவிடாமல் சர்வதேச அளவில் மரண தண்டனை குறித்த ஒரு அளப்பரிய விசாலமான பார்வையை முன்வைத்தது. மரண தண்டனைக்கு எதிரான அறிவியல் பூர்வமான ஒரு விவாதமாக அதனை நீதிநாயகம் பகவதி வடித்தெடுத்திருந்தார்.  

மரண தண்டனை என்பது ஒரு மனிதனை இச்சமூகத்தில் வாழ தகுதியற்றவன் என்று கருதி அழித்துவிடும் நிகழ்வு மட்டும்தானா? மரண தண்டனை கொட்டடியில் வைக்கப்பட்ட மனிதனின் உளவியல் பிரச்சனைகள், விவரிக்க முடியாத குரூரம் நிறைந்த, ஒவ்வொரு நொடிகளிலும் ஆயிரமாயிரம் வலிகளை எதிர்கொள்ளும் கொடுமைமிக்க அந்த காரணங்கள் பற்றிய விவரிப்புகள் நிறைந்துள்ளது. 

 அவரின் அந்தத் தீர்ப்பில்…. இரஷ்யாவில் சார்மன்னருக்கு எதிராக கலகம் விளைவித்ததாக வரிசையாக மரண தண்டனை வழங்க நிற்க வைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ளான் ஒரு மனிதன். தனக்கு முன் துப்பாக்கிகளால் சுடப்பட்டு ஒவ்வொரு மனிதனாக விழுந்தபின் தனது முறைவரும் போது தண்டனையை நிறுத்த உத்திரவுடன் ஒருவன் சுடுவதை எதிர்நோக்கிய ஒரு கைதியே இரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளன் தஸ்தவஸ்கி

“அந்த வலியானது காயங்களால் ஏற்பட்டதல்ல அது அக்கணத்தில் உணர்வுகளால் ஏற்படுத்தப்பட்டது. பத்து நொடிகள், ஒரு நொடி, அடுத்த நொடியில் என் உயிர் இந்த உடலை விட்டு பிரியப்போகின்றது. அதன் பின் நான் மனிதனாகக் கருத அருகதையற்றவன், அது மட்டும் நிச்சயம்…. போரில் ஒரு இராணுவ வீரனின் பீரங்கி முன் நிற்க வைக்கப்படும்போது கூட சில நம்பிக்கைகள் மிச்சமிருக்கும். ஆனால் அதே இராணுவ வீரன் நம் முன் நமது மரண தண்டனையை வாசிக்கும்போது எதுவும் மிஞ்சியிருக்காது. எவர் சொன்னது இதனை பைத்தியம் பிடிக்காமல் தாங்கும் மனநிலை மனிதர்களுக்கு இருக்கிறது? ஏன் இந்த கோரம்? எதற்காக இந்த தேவையற்ற வெறியாட்டம்? மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு அந்த நினைவுகளின் வதையில் வாடிய பின் உன்னை விடுவிக்கிறேன் என்று எவரையேனும் விடுதலை செய்தால் அவன் சொல்லுவான் அந்த கணங்கள் எவ்வளவு குரூரமானவையென்று. இயேசு கிருஸ்து அது போன்ற ஒன்றை அனுபவித்தவரே, ஒரு போதும் மனிதனை இவ்வாறு நடத்தக்கூடாது”.

தனது உயிர் பிழைத்தல் பற்றிய தஸ்தவஸ்கியின் பதிலே இது. 

மரண தண்டனை கொட்டடியில் உள்ள மனிதர்களுக்கு மரண தண்டனைக்கு முன்பு நிகழும் உளவியல் பாதிப்புகள் என மரண தண்டனை என்பது சித்திரவதையின் நீட்சியாக மாறுவதை நீதிநாயகம் பி.என்.பகவதி பட்டியலிட்டுள்ளார். மேலும் மரண தண்டனை என்பது பழிவாங்கும் ஒரு நிகழ்வு என்பதனை மறுக்கும் வாதத்தை அவர் முன் வைக்கின்றார். அத்தகைய வெறியானது தண்டனை தத்துவங்களுக்குள் அடங்காதவை என்பது அவரின் கருத்தாகும். அதே போன்று மரண தண்டனை என்பது குற்றத்தைத் தடுப்பதாக குற்ற மனநிலையை அச்சுறுத்துவதாக பெரும்பாலான நீதிபதிகள் உள்ளிட்ட பலர் வைக்கும் வாதம் அபத்தமானவை என்பதற்கு அர்தர் கோய்லாரின் பல்வேறு மேற்கொள்கள் முன் வைக்கப்படுகிறது.

தொழிற்புரட்சி கால கட்டங்களில் இங்கிலாந்தில் நகரங்களை நோக்கி வேலை தேடி வந்த மக்கள் பலர் வீடற்றவர்களாக வறியவர்களாக மாற்றப்பட்டனர். பிக்பாக்கெட் போன்ற திருட்டும், மரம் வெட்டுதல் போன்றவையும் நடந்த சமயம் இதனைத் தடுக்க இந்த சின்ன திருட்டுகளுக்கே மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டது. பிக்பாக்கெட் திருட்டு செய்தவனை தூக்கிலிடுவதை வேடிக்கை பார்த்த கூட்டத்தாரின் பாக்கெட்களில் பிக்பாக்கெட் அடித்த நிகழ்வு நடந்ததை பதிவு செய்கின்றார். இத்தகைய திருட்டு கூட மரண தண்டனையை வழங்கிய நிலையில் அதனை இரத்து செய்ய இங்கிலாந்து பாராளுமன்றத்தல் கொண்டு வரப்பட்ட மரண தண்டனை இரத்து தீர்மானம் பிரபுக்கள் சபையில் நான்கு முறை தோற்கடிக்கப்பட்டது. இத்தனைக்கும் பிரபுக்கள் சபையில் செல்வாக்கு பெற்றிருந்தவர்களில் நான்கு பேர் கிருஸ்துவ பிஷப்புகள் மற்றொருவர் தலைமை பிஷப், அவர்களே கூட மரண தண்டனை இது போன்ற குற்றங்களுக்குக் கூட தரவேண்டும் என்று நம்பிய சோக வரலாறு இங்கிலாந்துக்கு உண்டு. 

மரண தண்டனையை சரியானது என பச்சன் சிங் வழக்கில் பெரும்பான்மை தீர்ப்பு வழங்கிய நீதிபதி சர்க்காரியா போன்றோரின் வாதம் உரிய போதுமான தரவுகளற்ற அனுமானத்தின் அடிப்படையிலான வாதம் என்ற கருத்தை மிகுந்த அறிவு ஞானத்துடன் தன்னடக்கத்துடன் நீதிநாயகம் பி.என்.பகவதி முன் வைத்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் மரண தண்டனை என்பது அச்சுறுத்தி குற்றத்தைத் தடுக்கின்றது என்ற பெரும்பான்மை வாதத்திற்கு அவர்கள் நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யரின் வேறு சில வழக்கு மேற்கோள்களைக் காட்டியுள்ளனர். உண்மையில் மரண தண்டனைக்கு எதிராக ஒரு பெரும் நீதிப்போராட்டத்தை தன் வாழ்நாள் முழுவதும் நடத்திவரும் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரை இது அவமதிக்கும் செயல் என்பதை நீதிநாயகம் பி.என்.பகவதி சுட்டிக் காட்டினார். ஒரு மனிதன் வாழ்வதா அல்லது சாவதா என்பது அவன் வழக்கு எந்த நீதிபதியின் அமர்வு முன் வருகிறது என்பதா தீர்மானிப்பது என்று அவர் கேள்வி எழுப்புகின்றார். தூக்கை உறுதி செய்ய நீதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சுதந்திரமான அதிகாரம் எந்த வழிகாட்டுதல் அடிப்படையில் வழங்கப்பட்டது? அதற்கான விதிகள் என்ன? என்ற கேள்வியையம் நீதிநாயகம் பி.என்.பகவதி எழுப்பினார். 

வெறுமனே நீதிபதியே ஒருவர் வாழ்க்கையை முடிவு செய்யட்டும் என்பது எதேச்சதிகாரமானது. நீதிபதியின் வளர்ப்பு, அரசியல், அவர் நம்பும் தத்துவங்கள் இது மட்டும்தான் ஒரு உயிர்வாழ்வதா சாவதா என்பதைத் தீர்மானிப்பதுதான் நீதியா என்று அவர் எழுப்பும் கேள்விகளுக்கு இன்றுவரை பதிலில்லை. 

பச்சன் சிங் எதிர் பஞ்சாப் மாநில அரசு வழக்கில் நீதிபதி பகவதி வழங்கிய தீர்ப்பில் அவர் அறுதியிட்டுச் சொல்வது இதுதான் "நீதிபதிகள் கடவுள்களல்ல, தவறு நடக்க பல்வேறு வாய்ப்புகள் உள்ளது. அப்பாவி தூக்கில் தொங்கும் சமயம் நீதியும் செத்துப் போகிறது. எனவே மரண தண்டனை கூடவே கூடாது. அது தண்டனையே இல்லை."

மரண தண்டனைக்கு எதிராக முன் வைக்கப்படும் பல்வேறு அறிவியற்பூர்வமான விவாதங்களுக்கு நீதிநாயகம் பி.என்.பகவதி மற்றும் நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யரின் தீர்ப்புகளே ஒரு முன்னுதாரணம். 

உச்ச நீதிமன்றத்தில் 1980ல் நீதிநாயகம் பி.என்.பகவதியின் குரல் குறிப்பிட்ட பச்சன்சிங் வழக்கில் ஒற்றைக் குரலாக இருந்தாலும், மரண தண்டனை நீதிவழங்கும் முறை குறித்து அவர் எழுப்பிய அதிர்வுகள், கேள்விகளுக்கு இன்று வரை பதிலில்லை. 

நீதிபதிகள் தங்களின் உள்ளே பதிந்துள்ள விருப்பு வெறுப்புகளுக்குத் தக்கபடி நீதியை வளைத்து மரண தண்டனை வழங்குகின்றனர். நமக்குள் ஒளிந்துள்ள கற்கால மனிதனின் வன்முறை நாகரீக சமூகத்தில் மரண தண்டனை வடிவில் வெளிப்படுகின்றது. 

பச்சன் சிங் வழக்கில் “அரிதிலும் அரிதான” வழக்குகளில் மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதற்காக தாங்கள் மரண தண்டனை வழங்க முடிவு செய்த வழக்கின் இறுதியில் “இது அரிதிலும் அரிதானது” என்ற அடைமொழி சேர்க்கப்படுகிறது. 

மரண தண்டனை தரும் தகுதிபெறும் நீதிபதிகள் கட்டாயம் நீதிநாயகம் பி.என்.பகவதியின் நெடிய பொருள் பொதிந்த சாலை போன்ற தீர்ப்பை படிக்க வேண்டியது கட்டாயம் என்று உயர் மற்றும் உச்சநீதிமன்றங்கள் கட்டளையிட வேண்டும். 

நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யரின் மொழியில் சொல்வதானால் தூக்கு விழுங்கும் மனிதர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் நிலையில் கூட இல்லாத ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்கள் விளிம்பு நிலை வாசிகள் என்பதை மரண தண்டனை எழுதும் நீதிபதிகள் உணர்ந்துள்ளார்களா?

 நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அதனை இவ்வாறே வர்ணிக்கின்றார். 

“இறுதியில் தூக்குமேடையில் உயிர்துறக்கும் மனிதர்கள் யார்? பணக்கார குற்றவாளிகளா? அல்லது லாப வெறி கொண்ட வரி ஏய்ப்பு செய்பவர்களா? பல ஆயிரக்கணக்கான மனித உயிர்களை தனது சுய லாபத்திற்காக பலிகடாவாக்கும் சூழலை மாசுப்படுத்தும் கம்பெனி அதிபர்களா? அல்லது தனது ஆதிக்கத்திற்காக ரிமோட் கண்ரோல் முறையில் கொலை செய்ய ஆட்களை ஏவுபவர்களா? இவர்களில் யாருமில்லை. பெரும்பாலும் சிறுநிலத்திற்காக நாட்டுச்சாரயம் குடித்து சண்டையிட்டுக் கொண்ட கிராமத்தவர்கள், போராட்டம் வெற்றிபெறாத சூழலில் கோபம் கொண்ட தொழிலாளர்கள், தனது சமூகத்தின் மீது மாற்றுக் கருத்து கொண்டு தன்னை தியாகம் செய்தேனும் அரசியல் மாற்றம் காண விரும்பிய மனிதர்கள், கோபத்தால் உந்தப்பட்ட கணவன் அல்லது மனைவிமார்கள் இவர்கள்தான் தூக்கு மரம் சாகடிக்கத் துடிக்கும் மனிதர்கள்” (Rajendra prasadd’s case AIR 1979 SC 916) 

s_balamurugan_360காலகாலமாக அரசு என்பது அடக்கு முறையின் வடிவமாகவே இருந்து வந்துள்ளது. நீதிமன்றங்கள் அரசின் ஒரு அங்கமாகவே செயல்படுகின்றன. காந்தியடிகள் குற்றவாளிகளை நோயாளிகளாகவே பார்த்தார். தண்டனை என்பது சிகிச்சை போல இருக்க வேண்டும் என்பதனை காந்தியவாதிகளின் விருப்பமாக இருந்தது. மத்தியப் பிரதேசத்தில் சம்பல் பள்ளத்தாக்கில் கொள்ளையடித்து வந்தவர்களை சரணடைய வினோபா விடுத்த வேண்டுகோள் கொள்ளையர்களை சரணடையச் செய்தது. அது போன்றே லோக் நாயாக் ஜெயப்பிரகாஷ் நாராணயனின் வேண்டுகேளும் அமைந்தது. நிரந்தரமான ஒரு அமைதியை அப்பகுதியில் ஏற்படுத்திய முயற்சி பழிவாங்கும் செயலால் அமைந்ததல்ல. பழிக்குப் பழிவாங்கும் இரத்த வெறி கொண்ட தத்துவம் பல்வேறு சமய‌ங்களில் பல்வேறு வடிவங்களில் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது. அரசின் எல்லா தூண்களிலும் அது கெட்டித்துப் போய் உள்ளது. இதன் எதிர்வினையே கொலைத் தண்டனையை நமது சட்டங்கள் தக்க வைத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளியுள்ளது. 

நமது உச்சநீதி மன்றத்தில் பல்வேறு சமயங்களில் மரண தண்டனைக்கு எதிராக உயிர் பிழைக்க செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்குக் கூட ஏற்றுக் கொள்ளாது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சந்தன வீரப்பன் வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த சைமன், பிலவேந்திரன், மீசைக்காரன் மாதையன் என்பவர்களின் வழக்கில், நீதிபதி கபர்பால், நீதிபதி அகர்வால் ஆகியோர் "உங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது குறைவு… ஏன் உங்களுக்கு தூக்கு தண்டனை வழங்கக்கூடாது?" என்ற‌ கேள்வியை கையறுந்த நிலையிலிருந்த கைதிகளிடம் கேட்டு அதனைத் தூக்கு தண்டனையாக உயர்த்திய அவலம் நடந்தேறியது. 

உச்சநீதி மன்றத்திலிருந்து ஓய்வு பெறும் போது நீதிபதி க‌பர்வால் தான் மரண தண்டனைக்கு எதிரானவன் என்று செய்தியாளர்களிடம் சொல்லிவிட்டு சென்ற முரண்நகையும் நடந்தது. 

நீதிபதிகளின் இந்த உளநிலை குறித்து விரிவான ஆய்வையே நீதிநாயகம் பி.என்.பகவதி தனது மரண தண்டனை எதிர்த்த தீர்ப்புகளில் வலிமையாகப் பதிந்துள்ளார். நமது மண்ணின் உயரிய நீதிபரிபாலன அமைப்பிலிருந்து தனது கருத்துக்கு போதிய ஆதரவு தனது சக நீதிபதிகளிடம் இல்லாத போதும் அந்த நீதிபதிகளின் சொத்தை வாதங்களை கேள்விக்குள்ளாக்கி மரண தண்டனை சமூக விரோதமானது என்பதைத் தெளிவாக்கினார். பல்வேறு சமய‌ங்களில் மரண தண்டனைகள் அரசியல் உள்நோக்கத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது என்பதை நீதிநாயகம் பி.என்.பகவதியின் தீர்ப்புக்கள் வெளியாகிய பின் நாட்களில் சமூகம் உணர்ந்தே வந்துள்ளது. 

பாரத பிரதமராயிருந்த இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வில் சுட்டவர்களில் ஒருவரான பியான்சிங்குடன் அவரின் உறவினர் என்ற அடிப்படையில் கேசர் சிங் என்பவர் கைது செய்யப்பட்டு அவருக்கு மரண தண்டனை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. 

கேசர் சிங் அன்றைய ஜனாதிபதி வெங்கட்ராமனுக்கு செய்த கருணை மனு நிராகரிக்கப்பட்டு 06.01.1989ல் தூக்கிலிடப்பட்டார். சில வருடங்களுக்குப் பின்பு வெங்கட்ராமன் எழுதிய தனது சுயசரிதையில் இந்நிகழ்வைக் குறிப்பிட்டுள்ளார். கேச‌ர் சிங் வழக்கில் கேச‌‌ர்சிங்கின் குற்றம் குறித்து தனக்கு பல்வேறு சந்தேகங்கள் இருந்ததாகவும், தன்னை வற்புறுத்திய சூழலில், அரசின் அறிவுரையின்றி தன்னால் என்ன செய்திருக்க முடியும் என்று அவர் அரை மனதுடன் கேசர் சிங்கின் உயிரை பறிக்க உத்தரவிட்டதை பதிவு செய்துள்ளார். 

மேற்குவங்கத்தில் பள்ளி மாணவி கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 14 ஆண்டுகள் மரணத்தை எதிர்நோக்கி வாழ்ந்த தனஞ்சயன் ச‌ட்டர்ஜியை தூக்கிலிடப்போவதாக பொதுக்கூட்டத்தில் உறுதி கூறி அதனை செயல்படுத்தியும் காட்டினார் மேற்கு வங்கு முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா. மரண தண்டனை வாயிலில் சிலர் காத்துக்கிடக்கின்றனர். இவர்களில் சிலர் ஏறக்குறைய மரணத்தை கணம்தோறும் எதிர்நோக்கி ஆயுள் தண்டனைக்கு சமமாகக் கழித்தவர்கள். இவர்களில் இராஜிவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பேரறிவாளனும் அடக்கம். 

பல்வேறு இடர்பாடுகள், மரண தண்டனை ஆதிக்கக் கருத்தாக்கங்கள் நிறைந்திருந்த சூழலில் கூட நாம் மரண தண்டனை ஒழிப்பு நிலையை உறுதிப்படுத்தியே வருகின்றோம். 1950க்களுக்கு முன்பு கொலை வழக்குகளில் மரண தண்டனை தரவில்லை என்றால் அதற்கு சிறப்புக் காரணத்தை நீதிமன்றம் தெரிவிக்க வேண்டும். அதன் பின் தண்டனையைத் தீர்மானிப்பது வழக்கின் தன்மை என அறியப்பட்டது. 1973 குற்றவியல் நடைமுறைச் சட்டம் வந்த பின்பு மரண தண்டனை தர சிறப்பான காரணத்தை நீதிமன்றம் பதிய வேண்டும். 1980 பச்சன் சிங் வழக்கின் பெரும்பான்மைத் தீர்ப்பின்படி அரிதிலும் அரிதான வழக்குக்கு மரண தண்டனை என முன்னேறி உள்ளோம்.

2003ம் ஆண்டு சட்ட கமிஷனனின் 187-வது அறிக்கையானது மரண தண்டனை வழங்கப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் தானாகவே மேல்முறையீடு எடுத்துக் கொள்ள வலியுறுத்தியுள்ளது. 1958-ம் ஆண்டு இதே சட்ட கமிஷன் தனது 14வது அறிக்கையில் இவ்விதமான தன்னிச்சையான மேல்முறையீட்டை நிராகரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. சனநாயக சமூகத்தில் தனிமனித கண்ணியம், அது சார்ந்த உரிமைகள், உயிர்வாமும் உரிமைக்கான கோட்பாடுகள் என்ற பயணத்தில் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் ஒரு ஆக்கப்பூர்வமான பயணத்தை முன்னோக்கி நடத்தி வருகின்றோம். இப்பயணத்தின் பாதையில் நமக்கு வழிகாட்டியாக‌வும், வெளிச்சமாகவும் உள்ளது தான் நீதிபதி பி.என்.பகவதியின் மனித நேய சிந்தனைகள். அந்த நெஞ்சுரமிக்க நீதிநாயகத்தின் 90வது பிறந்த நாள் விழா எடுக்கும் சோக்கோ அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் தோழர்.மகபூப் பாட்சாவுக்கு எனது வாழ்த்துக்கள். 

இந்த நீதிநாயகங்களின் ஒவ்வொரு நாள் ஆயுளும் இச்சமூகம் பயனுறவே பணிக்கப்பட்டுள்ளது. இம்மனிதர்கள் ஏற்றிய உரிமை தீபத்தை அணையாது காத்து அடுத்த தலைமுறைக்கு முறையே ஒப்படைக்கும் அரும்பணி நம்முன் உள்ளது. உங்கள் கைகளை சற்று குவியுங்கள் உரிமை தீபம் காற்றில் அசைகிறது. 

(இந்திய உச்சநீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி நீதிநாயகம் பி.என்.பகவதி அவர்களின் 90வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 08.01.2011 அன்று மதுரையில் சோக்கோ அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த “மனித உரிமை சட்டவியலுக்கு நீதிநாயகம் பி.என்.பகவதி அவர்களின் பங்களிப்பு” என்ற கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை.)