மக்கள் வசிக்கும் வீட்டிற்கும் குடிக்கும் நீருக்கும் கூட வரி உண்டு, ஆனால் மக்களை சீரழிக்கும் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை.

           முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
           இறையென்று வைக்கப்படும்.

வள்ளுவர் இயற்றிய அரசியல் சட்டத்தினை அவரின் சிலை வைத்து மறைத்தனர் ஆள்வோர். அவரையே மறந்துவிட்டு ஊமையாயினர் எம்மக்கள். ஊழலில் மூழ்கி,குடியில் பிறழும் அரசியல்வாதிகளின் ஊறல்கள் எமக்கு சட்டமாயின.

கொள்ளையடித்து கொண்டாடுவது எமக்கு வியப்பாயின. பொய்யுரைகள் எமக்கு வேதமாயின. அதிகாரத்தை எட்டியவன் இறைவன் ஆனான். அடிமைமுறை எமக்கு வழக்கமானது.

இன்றைய அரசும் அதன் குடிகளின் நிலையும் இதுவே.

கல்வியை ஒழித்து மதுவை வளர்க்கும் இவ்வரசு மக்களை சீரழிக்கும் மக்கள் சீரழியும் திரைத்துறையினை போற்றாமலிருக்குமா?.

மானமுள்ள யாரும் இலவசங்களை மட்டுமே எதிர்பார்த்து வாழார். இயன்றவரையில் தவிர்த்திடுவர். தமிழர்கள் மானமுள்ளவர்கள், கவரிமானை மேற்கோளாகக் கொண்டு வாழ்பவர்கள். இவர்கள் அரசிடம் எதிர்பார்ப்பது இலவசங்களை அல்ல. மானமுள்ள வாழ்க்கை. அதற்குத் தேவையான சூழலை தமிழகத்தை ஆள்வோரிடமிருந்து எதிர்பார்க்கின்றனர்.

இதை துணிந்து சொல்லவும், செய்யத் தவறுபவர்களைக் கண்டிக்கவும் யாருமே முன் வராத்தினால் இவ்வரசின் மக்கள் விரோதம் எங்கும் எதிலும் தொடர்கிறது.

எந்த ஒரு நாட்டிலும் மக்கள் தமது அடிப்படைத் தேவைகளை முழுதாகக் கொண்டு வாழ்வதையே மக்களும் அரசும் விரும்பவேண்டும்.

அவ்வடிப்படையில், வீட்டு வசதிகளை உருவாக்கிக்கொள்ள ஏதுவான சூழ்நிலையும் அதில் நிறைவான வாழ்க்கையை நடத்தவும் அரசின் உதவி என்பது யதார்த்தமாகும்.

ஆனால், தமிழகத்தில் நடைமுறையில் எவ்வாறு உள்ளது. அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து மனைகளின் விலையை எட்டாக்கனியாக்கியுள்ளனர். பசுங்காரை என்கின்ற சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலையையும் தொழில் முதலைகளோடு சேர்ந்துகொண்டு உயர்த்தியே வைத்துள்ளனர். வீடு கட்டுவதற்கு மின்சாரத் தொடர்பு வேண்டினால் கூட அதிக கட்டணம் செலுத்த வேண்டும்.

குடிநீர் இணைப்பிற்குக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் ஒரு மாவட்டத்தின் தேவையையே எடுத்துக்கொள்ளும் உரிமையைப் பெற்றுள்ளன.

மக்கள் வாழும் வீட்டிற்கும் குடிக்கும் நீருக்கும் வரி வசூல் செய்து பிழைக்கும் அரசானது,

வெளிமாநிலத்தவரும் தமிழுக்கும் தமிழருக்கும் எதிரானவர்களும் கூடி இச்சமூகத்தை சீரழிக்கும் பணியை செவ்வனே செய்து வரும் திரைத்துறையினருக்கு “தமிழில் பெயர்வைத்தால்” வரிச்சலுகை என்ற முட்டாள்தனமான அறிவிப்பின் வழி உதவுவதோடு, தமிழை எழுதவும் படிக்கவும் ஊக்குவிக்க ஒரு ரூபாய் செலவு செய்யாமல், தமிழறிஞர்களைப் போற்றாமல், தமிழையும் போற்றாமல், திரைப்படங்களுக்கு வழங்கும் வரிச்சலுகையினை உலகலவு தமிழ்ப்பணியாக்க் காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர்.

மக்களின் வாழ்க்கையையும் வேட்கையையும் படம்பிடிக்கும் தமிழர் கலைகளை உயர்த்த ஒரு பணியும் செய்வதில்லை. அவர்களின் மனங்களை பாழடிக்கும் திரைப்படங்கள் தமிழை வளர்க்கின்றனவாம்.

திரைப்படங்களுக்கு வரிச்சலுகை, மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கு வரி என்று “வரி வருத்தமில்லாத” அரசிற்கு, வலி வருத்தத்தை ஏற்ப்படுத்துவது மக்களின் கடமையாகும். அதற்குத் தக்க கருவி தேர்தலேயாம்.

சொன்னதைச் செய்யமாட்டோம், சொல்லாததைச் செய்துவிடுவோம். ஏழை விவசாயிக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவதாகச் சொன்னதை செய்யமாட்டோம், திரைத்துறைக்கு வழங்கப்படும் மனைகளை சொல்லவில்லையென்றாலும் தருவோம்.
 
"தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
 சொல்லும் வல்லது அமைச்சு.’’
 
தமிழனின் பூர்வத்தொழிலாம் உழவுத்தொழில், அதன் உழவர்களை ஊக்குவிப்போம், உயர்த்திடுவோம் எனக்கூறி, விளைநிலங்களை தொழில் முதலாளிகளுக்குக் கொடுத்துவிட்டு, தரிசு நிலங்களை அப்பாவி உழவனின் தலையில் கட்டுவோம் என்று தொடங்கினார்கள். “இரண்டு ஏக்கர்”   நிலம் வழங்கும் திட்டம்.

மந்திரிக்கும், மாவட்ட செயலாளருக்கும், கரைவேட்டி கழிசடைகளுக்கும் வந்ததா குந்தம், வீட்டுமனை விற்பனைக்கு தரிசு நிலம் மட்டும் என்ன விதிவிலக்கா?.

சொன்னதைச் செய்யமாட்டோம். மறதி ஒன்றே அறிவாகக் கொள்ளும் ”தமிழன்”  என்ன திறமைசாலியா? சொன்னதை செய்ய மாட்டோம். ” இரண்டு ஏக்கர்’’ நிலம் தர மாட்டோம்.

மக்களின் மாண்பைக் குறைக்கும் மடிக்காசைக் கரைத்துவிடும்,அரசியல்வாதிகளின் அறையை எட்டும், தேர்தல் காலத்தில் திரையே உதவிடும். அத்திரைக்கு நாங்கள் உதவ மாட்டோமா?. அரசு நிலம் யார் அப்பன் சொத்து? அள்ளி அள்ளி வழங்கிடுவோம். அரசு அதிகாரம் எங்கள் கையில் யாரு கேட்க?. சொல்லாத்தைச் செய்திடுவோம். சொத்தைப் பயல்கள் நீங்க. சோத்துக்கு திண்டாடினால் என்ன? சொல்லாததையும் செய்திடுவோம். திரைத்துறைக்கே அள்ளி வழங்கிடுவோம்.

சொன்னதைச் செய்யாததும் சொல்லாததைச் செய்வதும் இவ்வரசின் பழக்கமாயிருக்கலாம். இவற்றைச் சொல்லிச் சொல்லி அடிக்க வேண்டியவர்கள் மக்கள்தாம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

தேர்தல் என்பது ஒரு திருவிழா அல்லாமல், மக்களின் அறமன்றங்கள் என்பதை அரசியல்வாதிகளுக்குப் புரியவைப்போம்.

- தமிழ்நாடன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)