சிறையில் த.ஒ.வி.இ. தோழர்கள்

இந்து மதத்தின் சாதிக் கொடுமைத் தாங்க முடியாமல் பல லட்சக்கணக்கானத் தாழ்த்தப்பட்ட மக்கள் 2 ஆம் நூற்றாண்டுகளில் கிறித்துவ மதத்தை தழுவினார்கள்.

அப்படி கிறித்துவ மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக, அரசியல், பொருளியல், பண்பாட்டு நிலைகளில் பெரிய மாற்றம் ஏதும் நடந்துவிட வில்லை. மதம் மாறுவதால் மட்டும் மனித வாழ்வில் எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. இருந்த போதிலும் இந்து மதத்தின் சாதிய சனாதன ஒடுக்குமுறை அமைப்பிலிருந்து விடுபட இவ்வழியை நாடினார்கள். இது அவரவர் தனி மனித நம்பிக்கை யையும், உரிமையையும் சார்ந்தது.

நிலைமை என்னவென்றால் சாதி இழிவுகள் இங்கேயும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை, தாழ்த்தப் பட்டவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் எங்களுக்குத் தேவையில்லை. இனி நாங்கள் எந்தச் சாதியும் இல்லை.

எங்களை யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பது இவர்களின் சூளுரையாக இருந்தது. மேலும் அரசுப் பதிவுகளிலும், சாதி சான்றிதழ்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களாகவே பதிவு செய்து கொண்டனர். ஆனால் என்ன பயன்? பட்டியல் படியும் இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை. இந்து மதத்திலும் இல்லை. இருந்தப் போதிலும் சாதி இவர்களை விடவில்லை. விரட்டிக் கொண்டே வீடு தேடி உட்கார்ந்து கொண்டது.

இப்போது இவர்கள் கிறித்துவ சக்கிலியன், கிறித்துவப் பறையன், கிறித்துவப் பள்ளனானார்கள். அதேபோல சாதி ஆதிக்க வேர்களை வெட்டி எறிந்து விடாமல், அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கிறித்துவ முதலியார்கள், கிறித்துவ வெள்ளாளர்கள், கிறித்துவ உடையார்கள், கிறித்துவ செட்டியார்கள், கிறித்துவ நாயக்கர்கள் என இங்கேயும் சாதி ஆதிக்கத்தை நிறுவிக் கொண்டனர்.

இந்து மதத்தில் இருக்கும் அனைத்து இழிவுகளும், சாதியாதிக்கமும், ஏற்றத்தாழ்வுகளும் கிறித்துவ மதத்திலும் தொழு நோயாகத் தொற்றிக் கொண்டது. சாதி கிறித்துவ மதத்தையும் விட்டு வைக்கவில்லை. கிறித்துவ மதத்தையும் சாதிதான் ஆள்கிறது என்பதும் மறுக்க முடியாது.

இச் சாதி இழிவின் வெளிப்பாடுதான் மேலப்புதூர் (வேர் அவுஸ்) கல்லறைத் தோட்டத்தில் நீண்டு நிமிர்ந்திருக்கும் கல்லறைச் சுவர். இது கடந்த 200 ஆண்டுகளாக சாதி வெறியின் அடையாளமாக, தீண்டாமையின் திமிர்த்தனத்தோடு காட்சி அளிக்கிறது.

இது பிள்ளை மாநகர், செந்தண்ணீர்புரம், மார்சிங் பேட்டை, தர்மநாதபுரம், செங்குளம் காலனி, வரகனேரி, காஜாபேட்டை, சங்கிலியான்டபுரம், ஜங்சன், முடுக்குப்பட்டி, மன்னார்புரம், காஜாமலை உள்ளிட்ட 32 பகுதிகளையும் சேர்ந்த கிறித்துவர்களுக் கான கல்லறைதான் உத்திரிய மாதாகோவிலுக்கானதாக இருக்கிறது.

இதில் ஆதிக்கச் சாதி கிறித்துவர்கள் தங்களை மேல் குலத்தார் என்றும், தாழ்த்தப்பட்ட கிறித்துவர்கள் கீழ் குலத்தார் என்றும் சாதியால் வேறுபடுத்தி உத்திரிய மாதா கோவிலுக்குச் சொந்தமான பொது கல்லறையை இரண்டாகத் தடுத்து தாழ்த்தப்பட்ட கிறித்துவர்கள் தனியாகப் புதைத்துக் கொள்ள வேண்டுமென்று தீண்டாமைச் சுவரை எழுப்பியுள்ளனர்.

இதுகிறித்துவ தாழ்த்தப்பட்ட மக்கள் நடுவே ஆறாத வெந்தப் புண்ணாகவே இதுநாள்வரை இருந்து கொண்டிருக்கிறது. இந்தத் தீண்டாமைச் சுவர் இடித்துத் தள்ளப்படவேண்டும் என்பது இவர்களின் நெடுநாளைய கனவு.

தந்தை பெரியார் 1960 களில் திருச்சிப் பாலக்கரை கல்லறையில் கட்டப்பட்டுள்ள குறுக்குச் சுவரை இடித்து தள்ளுவேன் என சூளுரைத்திருக்கிறார். 1976 வாக்கில் சைமன் என்ற இளம் பாதிரியார் கிறித்துவர்களைத் திரட்டிக் கொண்டு சாதி வேறுபாட்டைக் கடைப்பிடிக்கும் இந்தத் தீண்டாமைச் சுவரைஇடிக்க முயற்சித்தார். காவல் துறை தடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்நிகழ்வில் கிறித்துவ தாழ்த்தப்பட்டோர்கள் நடுவே எழுச்சியை உருவாக்கியது. மேலும் பல்வேறு சனநாயக இயக்கங்களும் இந்த தீண்டாமைச் சுவருக்கு எதிராக கண்டித்துப் போராடியுள்ளனர்.

த.ஒ.வி.இ. 2005 ஆண்டு வாக்கில் எழுதியும், பரப்புரையும் செய்து வந்தது. இந்நிலையில் கடந்த 29.10.2010 அன்று திருச்சி மாவட்டம் செயலர் தோழர் நிலவழகன் தலைமையில் பொதுக்குழுத் தோழர்கள் தமிழ்க் கனல், மலையரசன் மற்றும் ஜான் மார்ட்டின், ஆமோஸ் ராஜ், ரீகன், சரத்குமார், ஜெகன் பிரான்சிஸ், சகாயம் ஆகிய 9 பேர்கள் அடங்கியக் குழு காலை 9 மணி வாக்கில் எவ்வித அறிவிப்புமின்றி கடப்பாறை, சம்மட்டி, மண் வெட்டி போன்ற ஆயுதங்களை தயார் செய்துகொண்டு முடிந்தவரை தீண்டாமைச் சுவரை இடித்துத் தரைமட்டம் ஆக்குவது என்ற உறுதியான முடிவோடு தோழர்கள் அனைவரும் உற்சாகமாகப் புறப்பட்டுச் சென்றனர். கல்ல றையின் வாயிற் கதவையும் காவலரையும் தள்ளி விட்டு உள்ளே நுழைந்த தோழர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங் களைக் கொண்டு 200 ஆண்டு காலமாகச் சாதித் திமிரோடு நிமிர்ந்திருந்த அதன் தலையில் தட்டி சாதி வெறியின் அடையாளக் குறியீட்டின் ஆணவத் தைச் சாய்த்தனர். உடனடியாகாவல் துறைக்கு ஆதிக்கச் சாதியினர்செய்தி சொல்லியதன் விளைவாக கல்லறை அருகே காவல் நிலையம் இருப்பதால் பெரும் படையோடு திரண்டு வந்து தோழர்களைத்தடுத்தனர். காவல் துறையினரைப் பொருட்படுத்தாத தோழர் களால் இடிக்கப்பட்டது தீண்டாமைச் சுவர்! நெருக்கப்பட்டது சாதி ஆணவக் குறியீடு என்றும், இடித்துத் தள்ளுவோம்! இடித்துத் தள்ளுவோம்! சாதித் தீண்டாமைச் சுவரை இடித்துத் தள்ளுவோம்! முடிவு கட்டுவோம்! முடிவு கட்டுவோம்! சாதிஆதிக்கத்திற்கு முடிவு கட்டுவோம்! என்று முழங்கிய படியே 2 மீட்டர் நீளத்திற்கு சுவரை இடித்துத் தள்ளி விட்டனர்.

இடையில் தோழர்களைக் கைது செய்த காவல் துறையினர் பாலக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பின் கே.கே. நகரில் காவல் துறைக்கு சொந்தமான மண்டபத்திற்கு கொண்டு சென்று இந்தியத் தண்டனைச் சட்டம் 147, 447, 153 (1), 506 (2) ஆகியப் பிரிவுகளிலும் மற்றும் தமிழ்நாடு பொதுச் சொத்து சேதம் விளைவிப்பது தடுப்புச் சட்டம் பிரிவு 3இன் கீழ் (அதாவது 50,000 ரூபாய் மதிப்பினை சேதத்தை விளைவித்தது) வழக்குப் பதிவு செய்துஅன்று மாலை திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிகழ்வினை அறிந்த மாற்று அமைப்புத் தோழர்கள், பலரும் வந்திருந்து வாழ்த்துகளையும், ஆதரவினையும் தெரிவித்துச் சென்றனர். இந்நிகழ்வு திருச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், மிகுந்த எழுச்சியையும் ஏற்படுத்தியது.

இது முடிந்து விட்டப் போராட்டமல்ல, பொதுவாக இடிப்போம் என்ற அறிவிப்புக்கும், ஆர்ப்பாட்டத்திற்கும் மத்தியில் இடித்து விடுவது என்பதே இந்தப் போராட்ட வடிவமாகும். இதுவே மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். அந்த வகையில் இது ஒரு தொடக்கம்தான். தொடர்புடைய மக்களை ஒன்று திரட்டி, வெகுவிரைவில் தீண்டாமைசுவருக்கானச் சுவடுகளே இல்லாமல் இடித்துத் தரைமட்டமாக்கப்படும் என்பது உறுதி

Pin It