தமிழ்ச் சமூகத்தில் துறவு என்பதே ஆணுக்கு மட்டுமே உரிய வாழ்நெறியாகக் கருதப்படுகிறது. பெண் உறவை நீத்த ஆணுக்கான மரியாதை நம் சமூகத்தில் நிறையவே உண்டு. சமணச் சார்புடைய திருவள்ளுவரும் “துறந்தார்”. என்னும் பெயரில் ஆண் துறவிகளின் பெருமையை விரிவாகவே கொண்டாடியுள்ளார்.

மாறாக, ஆண் உறவு வேண்டாம் என்று வாழும் பெண்களுக்கு நம் சமுதாயத்தில் உரிய மரியாதை கூடக் கிடைப்பதில்லை. நெடுங்காலம் இதுவே வாழ்நிலையாக இருந்தபோது, காலனி ஆட்சிக்குச் சற்று முன்னர் தமிழ்நாட்டுக்கு வந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவம் மீண்டும் பெண் துறவை இங்கு அறிமுகப்படுத்தியது. பெண் துறவிகள் கல்வி, மருத்துவம் ஆகிய சேவைகளோடு இணைக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் பெண் துறவு பழிப்புக் குள்ளான கதையை மிக நுட்பமாகக் காண வேண்டும். தமிழ்நாட்டுச் சிவன் கோவில்கள் சிலவற்றில் தனித்துவமான ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது. அதாவது இறைவனை (சிவனை) அடைய இறைவி(அம்மன்) தவம் இருப்பதாகவும்-தவத்தின் முடிவில் இறைவன் மனமிரங்கி, கோயிலுக்கு வெளியே ஒரு இடத்தில் காட்சி கொடுப்பதாகவும் இத்திருவிழா நடத்திக் காட்டப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் குறிப்பாக திருநெல்வேலி, சங்கரன் கோவில் ஆகிய இரண்டு இடங்களில் இத்திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு இடங்களில் திருநெல்வேலி அப்பர், சம்பந்தரால் பாடப்பெற்ற ஆகம வழிப்பட்ட தொன்மையான கோவிலாகும்.

நெல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதியிலுள்ள சங்கரன்கோவில் இறைவன் சங்கர நாராயணன் என்று அழைக்கப்படுகிறார். கல்வெட்டுக்களில் இந்நாட்டுப் பகுதி-தென்கல்லக நாடு என்று அழைக்கப்படுகிறது. இந்நாட்டின் தலைமைத் தெய்வமான கல்லக நாடியம்மனுக்கு புளியங்குடியில் ஒரு கோவில் உள்ளது. சங்கரன் கோவில் இப்பொழுது நெல்லை மாவட்டத்தில் பெரிதும் கொண்டாடப்படும் சிவத் தலமாகும். ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் ஆடித் தபசு என்னும் திருவிழாவில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூடுகின்றனர். இறைவி (அம்மன்) தவம் செய்து அவருக்கு இறைவன் சங்கரனார் அருட்காட்சி கொடுப்பதே இத் திருவிழாவின் உச்ச கட்ட நிகழ்ச்சியாகும்.

இக்கோவிலைப் பற்றியோ இத்திருவிழாவினைப் பற்றியோ தொல்லிலக்கியக் குறிப்புகளோ கல்வெட்டுக் குறிப்புகளோ கிடைக்கவில்லை. எனவே இக்கோயிலைப் பழைய சிவன் கோவில் என்று கோயில் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இக்கோவிலின் தனித்துவமான பிற கூறுகளைக் கவனிக்க வேண்டும். இக் கோயிலில் அடியவர்களுக்கு பிரசாதம்(இனிமம்) ஆக பாம்புப் புற்று மண்ணே வழங்கப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வீட்டுக்குள் பாம்பு போன்ற நச்சுயிரிகளின் நடமாட்டம் தென்பட்டால் இக்கோயிலுக்கு நேர்ந்து கொள் கின்றனர். நேர்த்திக் கடனாக வெள்ளித் தகட்டால் ஆன பாம்பு, தேள் உருவங்களைக் காணிக்கை யாகச் செலுத்துகின்றனர். இக்கோயிலுக்குள் அமைந்த தெப்பக்குளம் நாக தீர்த்தம் என்றே வழங்கப்படுகிறது.

இதுபோன்ற ஐயத்துக்கிடமான தோற்றக் கூறுகளை உடைய கோயில்கள் பெரும்பாலும் பிற சமயத்தவரிடமிருந்து பறிக்கப் பட்டதாகும். பிற சமயத்தவர்கள் என்போர் பெரும்பாலும் பௌத்தர்களும் சமணர்களும் ஆவர். பௌத்த சமயம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்குள் தமிழ்நாட்டின் தென்பகுதியிலிருந்து மறைந்து விட்டது. எனவே இக்கோயில் சமணர்களிடமிருந்து பறிக்கப்பட்டது என்பதனைக் கருதுகோளாக வைத்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டுத் திருவிழாக்களிலும் தவம் செய்யும் அம்மன்மார் பெரும்பாலும் வெள்ளை சார்த்தியே தவக்கோலக் காட்சிதருகின்றனர். வெள்ளை சார்த்துதல் என்பது வெண்ணிறத் துணி சார்த்துதல் அல்லது வெண்ணிறத் திருநீற்றுக் காப்பு சார்த்துதல் என இரண்டு வகையில் அமைகிறது.

வெள்ளை நிறத்துக்கும் துறவுக்கும் உரிய ஒரே தொடர்பு தமிழ்நாட்டுச் சமயவரலாற்றில் (கத்தோலிக்கம் தவிர) சமணத்துக்கு மட்டுமே உரியதாகும். கந்தி, கவுந்தி, ஆர்யாங்கனை, குரத்தியடிகள் ஆகிய பெயரோடு சமணப் பெண் துறவிகள் அழைக்கப்பட்டதனை நிகண்டுகள் பேசுகின்றன. இன்றும் சமண மதத்துப் பெண் துறவிகள் வெண்ணிறச் சேலையும் வெள்ளை முழுக்கைச் சட்டையுமாக வாழ்கின்றனர். தமிழ்நாட்டில் சமணப் பெண் துறவிகள் மிகக் குறைவு. கர்நாடகத்தில் இவர்களை மிக அதிகமாகப் பார்க்கலாம். சமணத்தில் பொதுவாக துறவு நிலைக்கான கட்டுப்பாடுகள் மிகமிக அதிகம். தலை மழிப்பு, வெள்ளாடை, அணிகலன் களையும் சொத்துக்ககளையும் முழுவதும் விட்டு விடுதல் ஆகியவற்றோடு ஆண் குழந்தைகளைத் தொட்டுத் தூக்கக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி உரிமை மட்டுமே முழுமையாக வழங்கப் பட்டுள்ளது. எனவே, வெள்ளாடை உடுத்திய தவம் என்பது சமணத்திலிருந்து வைதீகம் பெற்றுக் கொண்ட நெறியாகும்.

சங்கரன்கோவில் ஒரு நாக வழிபாட்டுத் தலம் என்பதனைப் புற்றுமண்ணும் நாகத்தீர்த்தமும் நமக்கு உணர்த்துகின்றன.சமண சமயத் தீர்த்தங்கரர் 24 பேரும் வணக்கத்துக்குரியோர்கள். அவர்களில் பார்சுவநாதர், சுபார்சுவநாதர் ஆகிய இரண்டு தீர்த்தங்கரர்களின் சிற்பங்களில் அவர்களின் தலைமீது நாகம் குடை பிடிப்பது போன்ற வடிவமைப்பினை நிறையவே காணலாம். இவர்கள் இருவரில் பார்சுவநாதர் தலைமீது ஐந்து தலைநாகமும், சுபார்சுவநாதர் திருமேனி மீது ஏழு தலைநாகமும் குடை பிடித்திருக்கும். இவற்றுள் சங்கரன்கோவிலில் வழிபடப் பெற்ற தீர்த்தங்கரர் யார் என்று அடுத்து வரும் கேள்வியாகும்.இந்த இடத்தில் நெல்லை மாவட்டத்தில் பெருக வழங்கும் ஒரு தாலாட்டுப் பாடல் நமக்குத் துணை வருகிறது.

சங்கரனார் கோயிலிலே

சன்னதியில் புன்னைமரம்

அதிலே குடியிருக்கும்

அஞ்சு தலை செந்நாகம்

இதிலிருந்து சங்கரன் கோவிலில் வழிபடப் பெற்றவர் பார்சுவநாதரே என்று கொள்ளலாம்.

 இதை வலுப்படுத்தும் இன்னொரு சான்றையும் பார்க்கலாம். சமண மதத்தின் தீர்த்தங்கரர் 24 பேருக்கும் ஒவ்வொரு இலாஞ் சனை (இலக்கினை) உண்டு. அதிலே பார்சுவநாதர் சிற்பத்தில் அடிப்புறத்தில் பாம்பு அவரது இலக் கினையாகக் காட்டப்பட்டுள்ளது. (ஏனையோருக்கு நிலாப் பிறை, சங்கு, மான் போன்றவை காட்டப் பெற்றிருக்கும்).

மேற்குறித்த செய்திகளால் சங்கரன்கோவில் பார்சுவநாதர் கோவிலாக இருந்து பின்னர் வைதிகத்துக்கு(இந்து மதத்திற்கு) மாற்றப்பட்ட கோவிலாக இருக்க வேண்டும். இந்த மாற்றம் எந்தக் காலத்தில் நிகழ்ந்திருக்கலாம். கி.பி. 13-ஆம் நூற்றாண்டோடு தென் தமிழகத்தில் சமணத்தின் சுவடுகள் முழுவதுமாக அற்றுப் போகின்றன. எனவே, அதற்குப் பின்னரே இந்த மாற்றம் மெல்ல மெல்ல நிகழ்ந்திருக்க வேண்டும். சங்கராபரணம் என்ற பெயரில் சைவமும், ஆதிசேடன் என்ற பெயரில் வைணமும் பாம்பு வழிபாட்டைத் தனக்குள் கொண்டுள்ளன. எனவே சங்கரரும், நாராயணருமாக இந்தக் கோயிலைச் சமணத்திலிருந்து பறித்துக் கொள்வது எளிதாகப் போயிற்று.

சமணக் கோவில் வைதிகத்தால் பறிக்கப்பட்டு இந்துக் கோவில் ஆனதற்கு இருபதாம் நூற்றாண்டு எடுத்துக்காட்டு நாகர்கோவில் நாகராஜா கோவில் ஆகும். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை அக்கோயிலில் சமணத் துறவிகள் இருந்தனர். இன்றும் அக்கோயில் தூண்களிலுள்ள சிற்பங்கள்-தீர்த்தங்கரர் சிற்பங்கள் அக்கோயில் சமணக் கோயிலாக இருந்தமைக்கான சான்றுகளாக எஞ்சி நிற்கின்றன.

(செம்மலர் செப்டம்பர் 2010 இதழில் வெளியானது)

Pin It