தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்களில் ஒன்றான திருநெல்வேலியின் மற்றொரு பெயர் நெல்லை. நெல்லை என்றால் தின்பண்டப் பிரியர்களுக்கு ஞாபகம் வருவது அல்வா.

எழுத்தாளர்களுக்கு சாகித்திய அகடெமி விருது பெற்ற தொ.மு.சி ரகுநாதன், வல்லிக் கண்ணன் மற்றும் ரா.பி. சேதுப்பிள்ளை ஆகியோர் நினைவுக்கு வருவர்.

தலித் மற்றும் இடதுசாரி இயக்கங்கள், ஆய்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்றோருக்கு தாமிரபரணி படுகொலை, சாதி மோதல் போன்றவையே ஞாபகத்திற்கு வரும். ஆனால் இவற்றினைத் தாண்டியும் திருநெல்வேலி இருக்கிறது. இதை திருநெல்வேலிக்கு உள்ளும் வெளியேயும் வசிப்பவர்கள் அறிந்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை.

நாம் அறிந்திராத திருநெல்வேலியை கோடிட்டுக் காட்டுவதற்கு முயற்சிக்கிறேன். திருநெல்வேலி மாநகராட்சியின் மொத்தமுள்ள

55 வார்டுகளில் 130 குடிசைப் பகுதிகளில் அலைந்து திரிந்ததன் விளைவாகவே நாம் அறிந்திராத திருநெல்வேலியை தெரிந்து கொள்ள முடிகிறது. குடிசைப் பகுதிகளில் வறுமை மற்றும் வாழ் வாதார நிலைகளைக் கணக்கெடுப்பதற்கான பணியில் ஈடுபட்டோம்.

இப்பணிக்குத் தேவையான நிதியினை திருநெல்வேலி மாநகராட்சி கொடுத்தது. மனோன் மணியம் சுந்தரானர் பல்கலைக் கழகத்திலுள்ள சமூக விலக்கல் மற்றும் உட்கொணர்வு கொள்கை ஆய்வு மையத்தின் இணை இயக்குநர்கள் பவனந்தி வேம்புலு, புவனேஸ்வரன் மற்றும் அலமேலு மங்கை இணை ஆராய்ச்சியாளர் ரகுபதி, வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் வினோத் வின்சென்ட் ராஜேஸ் ஆகியோரும், தமிழ், வரலாறு, பொருளாதாரம், சமூகவியல், தொடர் பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த முதுகலை மாணவர்கள், இளம் முனைவர் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் சுமார் 70 பேர்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை 2010 காலை எட்டு மணி முதல் மாலை 8 மணி வரை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டோம்.

கணக்கெடுப்புப் பணிக்கான திட்டம் மற்றும் ஒப்பந்தம் போன்ற ஆரம்ப கட்ட பணி களில் ஈடுபட்ட புவனேஸ்வரன் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் சமூகவியல் துறைக்கு இணைப் பேராசிரியராக தேர்வு செய்யப்பட்ட காரணத்தினால் கணக்கெடுப்புப் பணியில் அவரால் ஈடுபட முடியாமல் போய்விட்டது. இதனால் அவர் வருத்தப்படவும் செய்தார்.

மாநகராட்சி என்றால் பெரியநகரம் என்று பொருள். எண்ணற்ற பெரும் தொழிற்சாலைகள், முக்கிய அலுவலகங்கள், முதலாளிகள் மற்றும் நடுத்தவர்க்கம், கூலித் தொழிலாளிகள் போன் றவை மாநகரத்தின் குறியீடுகள். ஆனால் திருநெல் வேலி மாநகாரட்சியில் அரிதாக ஒருசில தொழிற் சாலை மட்டுமே உள்ளன.

பெருமாள்புரம், என்.ஜி.ஓ. காலனி, பால பாக்கிய நகர், கே.டி.சி. நகர் என ஒருசில நடுத்தர வர்க்க குடியிருப்புகளே இருக்கின்றன. இந்த நடுத்தர வர்க்க குடியிருப்புகளிலும்கூட சில குடியிருப்பின் சில பகுதிகள் சாதி வாரியாகவே இருக்கிறது. இந்த மாநகராட்சியில் சேரிகள் என்ற வகைப்பாட்டிற்குள் பெரும்பாலும் தலித் குடி யிருப்புகளே இருக்கிறது. பெரும்பாலான தலித் குடியிருப்புகள் அடிப்படையில் கிராமங்களே. பெரும்பாலன கிராமங்களில் தேவேந்திரர்களும் (பள்ளர்), இவர்களைவிடவும் குறைவான எண்ணிக்கையில் பறையர் சாதியினரும் வசிக் கின்றனர். தாமிரபரணியின் ஆற்றுக் கரையோரங் களிலும் ஒருசில குடிசை மாற்றுவாரிய குடி யிருப்புகளிலும் அருந்ததியர்கள் மிகுதியாக வசிக் கின்றனர். இவர்களுக்கு அடுத்த நிலையில் எண்ணிக்கையில் குறைவாக மலைக் குறவர்கள் வசிக்கின்றனர். தலித்தல்லாதோர் வசிக்கின்ற பகுதிகளும் ‘சேரி’ என்ற வகைப்பாட்டிற்குள் வருகிறது.

இந்த குடிசைப் பகுதிகளில் முதலில் இரண்டு பகுதிகளில் சோதனைக் கணக்கெடுப் பினை மேற்கொண்டோம். இவைகள் அருந்ததியர் மற்றும் குறவர் வசிப்பிடங்களாகும். மாநகாரட்சி எங்களிடம் கொடுத்திருந்த சம்பந்தப்பட்ட குடிசைப் பகுதிகளுக்கான வரைபடத்தினைக் கொண்டு அப்பகுதியின் எல்லைகளை அடை யாளம் காண்பதற்கு கடும் சிரமப்பட்டோம். காரணம் இவ்வரைபடம் 1980களில் வரையப் பட்டது.

சுமார் 30 வருடங்கள் கழித்து கணக் கெடுப்புப் பணியில் ஈடுபட்டோம். வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பல மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டது. சிறு கால்வாய் சாக்கடை யாக மாற்றப்பட்டிருக்கிறது. குடிசைப் பகுதிகளைச் சுற்றிலும் பெரும் வீடுகள் தோன்றியிருக்கிறது, குடிசைப் பகுதிக்குள் அல்ல. இதனால் குடிசைப் பகுதியினை எல்லைகளை மிகச் சரியாக அடையாளப்படுத்துவதில் சிக்கல் இருந்த போதி லும் அதில் வெற்றியடைந்தோம்.

சோதனை கணக்கெடுப்பிற்குப் பின்னர் தொடர்ச்சியான கணக்கெடுப்புப் பணியில் ஈடு பட்டோம். முதலில் மாவட்ட ஆட்சியர் வளாகத் திற்குப் பின்பகுதியிலுள்ள கொக்கிரகுளம் என்ற பகுதியில் கணக்கெடுத்தோம்.

தாமிரபரணி படுகொலை நடந்த பகுதியைக் கடந்துதான் இப்பகுதிக்குச் செல்ல வேண்டும். இங்கு அதிக எண்ணிக்கையில் தேவேந் திரர்களும் குறைந்த எண்ணிக்கையில் பறையர்களும் வசிக் கின்றனர். எங்களுக்குத் தரப்பட்ட குடிசைப் பகுதி பட்டியலில் பறையர்களின் தெரு இடம் பெற்றி ருக்கவில்லை எனவே, அங்கு நாங்கள் கணக்கு எடுக்கவில்லை. கொக்கிரக்குளம் தேவேந்திரர் பகுதியில் கணக்கெடுத்த பொழுது அவர்களிடத்தில் பலரும் படித்து அரசுப் பணியில் இருப்பதனைக் காணமுடிந்தது. தொலைபேசித் துறையில் ஒப்பந்த அடிப்படையில் குழி தோண்டும் பணியில் ஈடு பட்டிருந்த பல தேவேந்திரர்கள் பின்னர் பணி நிரந்தரம் செய்யப்பட்டிருந்தனர். இதனால் இவர்களின் வாரிசுகள் எளிதாக கல்வி கற்று அரசுப் பணியில் சேரமுடிந்திருக்கிறது. மேலும் இங்குள்ள இளைஞர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணிக்கு சென்றுவிட வேண்டும் என்ற இலக்கினைக் கொண்டு படிக்கின்றனர். இந்த கடினமான உழைப்பே கொக்கிரகுளம் தேவேந்திரர் களுக்கு முன்னேற்றத்தைக் கொடுத்திருக்கிறது. என்னதான் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந் திருப்பினும் அவர்கள் குடிநீருக்காக அல்லல்பட வேண்டிய சூழல் இருந்து கொண்டிருக்கிறது.

நாங்கள் கணக்கெடுத்துக் கொண்டிருந்த மாலைநேரத்தில் மக்கள் குடங்களுடன் ஓடோடிச் சென்றனர், அங்கு வந்துநின்ற வாகனத்தில் தண்ணீர் பிடிப்பதற்காக. தமிழகத்தின் வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணி ஆற்றிற்கும் கொக்கிரகுளத்திற்கும் பெருத்த இடைவெளி இல்லை, இருப்பினும் அங்கு குடிநீர் இல்லாதது அதிர்ச்சியையே தந்தது.

அடுத்த நாள் நாங்கள் மனகாவலம் பிள்ளை நகருக்குச் சென்றோம். சுமார் இரண்டாயிரம் வீடுகள் இருக்கும் இப்பகுதியில் பலரும் நடுத்தர வர்க்கத்தினைச் சேர்ந்தோரே. ஆனால் இது ஒரு குடிசைப்பகுதியாகும். அதிக எண்ணிக்கையில் பிற்படுத்தப்பட்ட சாதியினைச் சேர்ந்த மக்கள் வசிக் கும் இப்பகுதி அரசு புறம்போக்கு ஆகும். அரசுப் பணியிலிருக்கும் நடுத்தர வர்க்கத்தினைச் சேர்ந்த பலரும் தங்களின் உண்மையான வருமானத்தை கூற மறுத்துவிட்டனர்.

இப்பகுதியில் ஒரு முக்கியமான தரவு கிடைத்தது. தமிழகத்தில் தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டிருப்பது அருந்ததியர் மட்டுமே என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அருந்ததியர்களுக்கு முன்னபிருந்தே தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன செம்மான் என்ற சாதியினரை காணமுடிந்தது. இவர்கள் குறித்த பதிவு சங்க இலக்கியங்களில் இருக்கிறது என்பது இவ்விடத்தில் நினைவு கூறத்தக்கது.

மகிழ்வண்ணநாதபுரம் குறவர்கள் வசிக்கும் பகுதியாகும். இவர்கள் மலைக் குறவர்கள் ஆவர். இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம் அருகே இருக்கும் செங்கோட்டை பகுதியிலுள்ள மலைப்பகுதிகளில் இவர்கள் வசித்த வந்தனர். இது அன்றைய திருவாங்கூர் சமாஸ் தானத்தில் இருந்தது. செங்கோட்டை மலைப் பகுதியில் கிடைத்த மூங்கில் மூலம் கூடை உற்பத்தி செய்து தங்களின் பிழைப்பினை நடத்தி வந்தனர். அரசாங்கத்தின் கொள்கை இத்தொழிலுக்கு முற்றுப் புள்ளி வைத்தது. இதனால் பிழைப்புத் தேடி திருநெல்வேலிக்கு வந்தனர். மலைப் பகுதியிலிருந்து தரைப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்த காரணத்தினால் அரசாங்கம் இவர்களை பழங்குடியினர் என்று அங்கீகரிப்பதற்கு மறுக்கிறது. மரபு ரீதியான தொழிலுக்கு வேட்டு வைத்த அர சாங்கம் பழங்குடியினர் சான்று தர மறுப்பதனால் கல்வி கற்க முடியாத நிலையும் இருக்கிறது. இதனால் பிறரை அண்டி பிழைக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். சிலர் குறவன் குறத்தி ஆட்டம் ஆடுவதற்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

நெல்லை மாநகராட்சியில் மிகவும் மோச மான நிலையில் அருந்ததியர்களின் வாழ்க்கை இருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது. செங்கற் களை அடிக்கி வைத்தாற்போல் அவர்களின் வீடுகள், ஒற்றையறைகள், சுகாதரமற்ற சூழல் போன்றவை. இத்தகைய குடியிருப்புகள் நெல்லை யில் இருக்கிறதா என்று எங்கள் புருவத்தை உயர்த்த வைத்தது. இக்குடியிருப்புகளின் அவலநிலை பேருந்திலோ அல்லது இதர வாகனங்களில் பயணிக்கும் பொழுது காண்பதற்கான வாய்ப்பு இல்லை. அப்பகுதிகளுக்குள் சென்றால் மட்டுமே அந்த அவலத்தைக் காண இயலும்.

இப்பகுதியில் அருந்ததியர் ஒருவரிடம் புள்ளி விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருந் தேன். அவரருகே அவருடைய சுமார் 6வயதுடைய பேரன் இருந்தான். அவரிடம் ஒவ்வொரு கேள்வி யாக கேட்டுக் கொண்டிருதேன் அவரும் பதில் கூறிக் கொண்டிருந்தார்.

நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்று வினவினேன். அவர் பதில் சொல்வதற்குள் அவருடைய பேரன் சொன்னான்:

“இவன் குப்பை அள்ளுதான்”.

மீண்டும் அச்சிறுவன் தொடர்ந்தான், ‘’ஏன் தாத்தா உனக்கு வேறு வேலையே கிடைக்க வில்லையா? போயும் போயும் குப்பை அள்ளு கிறாயா” என்று சினம் கொண்டான்.

அச்சிறுவனின் தாத்தாவிடமிருந்து சிறு புன்னகையைத் தவிர வேறு பதில் இல்லை. சில பகுதிகளில் அருந்ததியர்களுக்கென அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நெல்லை சந்திப்பிற்கு வந்து விட்டு நான் வசிக்கும் பகுதிக்கு நகரப்பேருந்தில் அவ்வப் பொழுது பயணிப்பதுண்டு. அப்பேருந்தில் ஒரு முதியவரும் அவ்வப்பொழுது வருவார். அவரை நான் பல நாட்கள் அப்பேருந்தில் கண்டிருக்கிறேன். அவர் அருந்ததியர்களின் அடுக்குமாடி குடியிருப் பினை கடக்கும் பொழுது இவ்வாறு கூறியதனை நான் கேட்டிருக்கிறேன்:

“சக்கிலியப் பயலுகளுக்கு அடுக்குமாடி”.

இக்கணக்கெடுப்பின்போது அவ்வடுக்கு மாடி களுக்கு சென்றபோதுதான் தெரிந்தது அங்கு வசிப்பது கடினம் என்பது. ஆனால் அந்த முதிய வருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சேவைச் சாதிகளான புதிரை வண்ணார், வண்ணார் போன்றோர் பகுதிகளில் கணக்கெடுத்த பொழுது இளம் வயதுடைய பலரின் தலைமயிரும் நரைத்திருப்பதனைக் காணமுடிந்தது. ஏன் இவ்வாறு நரைத்திருக்கிறது என்று வினவிய பொழுது அது வெளுப்பு வேலையினால் விளைந் திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. வெளுக்கும் போது தெறிக்கும் காரம் அவர்களின் தலைமயிரை நரைக்கச் செய்திருக்கிறது.

பழையபேட்டையில் ஒரு தெருவில் வசிக் கும் வண்ணார்கள் வெள்ளாளர்களுக்கு வேலை செய்துவந்த பிரிவினர் ஆவர். இவர்களுக்கு பணிக்கர் என்ற பெயரும் உண்டு. இவர்களிடம் கணக்கெடுத்த பொழுது ஒரே ஒரு பெண்ணைத் தவிர பிற யாரும் ஐந்தாம் வகுப்பு வரைகூட படித்திருக்கவில்லை. இப்பெண்ணும்கூட வேறு ஊரைச் சேர்ந்தவர், அவரை இங்கு திருமணம் செய்து கொடுத்திருக்கின்றனர். அவர்களிடம் நீங்கள் எந்த பிரிவின் கீழ் வருகிறீர்கள்? என்ற கேள்வியை எழுப்பினேன். அதற்கு அவர்களிட மிருந்து பதில் இல்லை. அது, மட்டுமின்றி நான் கேட்ட கேள்வியைக்கூட அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் படித்திருந்தால் சாதிச் சான்று வாங்கியிருக்கக்கூடும், எந்த பிரிவின் கீழ் வருகிறோம் என்பதையும் அறிந்திருப்பர். ஆனால் குலத்தொழிலில் முடங்கிக் கிடக்கும் அவர்களால் கல்வி கற்க இயலாத நிலையில் உள்ளனர். அவர்களின் வீடோ ஒரே ஒரு அறையை மட்டுமே கொண்டிருக்கிறது. அதற்கு கதவு இல்லை, கிழிந்துபோன சீலைதான் கதவு.

     வறுமை நிலை சிலரை சாதியின் இறுக்கத் தினை தளர்த்த வைத்திருக்கிறது என்பதைக் காண முடிந்தது. சாதிய சமூகத்தில் ஒவ்வொருவரும் அவரவர் சாதிய குடியிருப்பிலேயே வசிக்கின்றனர். அதிலும் குறிப்பாக தலித்தல்லாதோர் தலித் குடியிருப்பில் பொதுவாக வசிப்பதில்லை. ஆனால் வறுமை நிலை தலித்தல்லாதோரை தலித் குடியிருப்பில் வசிக்கச் செய்திருக்கிறது. பள்ளர், பறையர், குறவர் தெருக்களில் நாடார், தேவர், ஆசாரி, செட்டியார் போன்ற சாதியினர் வசிப்பதை கணக்கெடுப்பின் பொழுது அறிந்து கொள்ள முடிந்தது. இதில் சிலர் தங்களின் சாதிய அடை யாளத்தினை வெளிப்படையாக காட்டிக் கொண் டும் சிலர் அதனை மறைத்துக் கொண்டும் வாழ்ந்து வருவதனைக் காணமுடிந்தது.

லட்சுமிபுரம் என்ற பள்ளர் குடியிருப்பில் நான் கணக்கெடுத்த பொழுது சாதி குறித்த கேள்விக்கு தாழ்த்தப்பட்டோர் என்று அவர்கள் கூறினால் பள்ளர்தானே? என்று கேட்டேன். அவ்வாறு ஒரு பெண்மணியிடம் பள்ளர்தானே என்று கேட்ட பொழுது உடனடியாக அவர் இல்லை நான் தேவர் என்று பதிலளித்தார். சுற்றியிருந்த பல பள்ளர் பெண்களும், தேவர் என்று கூறிய பெண்ணும் ஒரு நிமிடம் அமைதியாகி விட்டனர். பின்னர் ஒரு பள்ளர் பெண் அக்கா நீங்க தேவராக்கா? எங்களுக்கு இதுவரை தெரியாதே என்றார். அத்தேவர் சாதிப் பெண் புன்னகைத்தார்.

என் கேள்வியின் மூலம் வெளிப்படையாக தெரிந்துவிட்ட சாதி அடையாளம் அவர்களுக்குள் சிக்கலை விளைவித்துவிடுமோ என்ற கேள்வி நான் அப்பகுதியினைவிட்டு வெளியே சென்ற பின்னர் எனக்குள் எழுந்தது. மீண்டும் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கருதினேன். காரணம் இதே பகுதியில் தேவர் மட்டுமின்றி செட்டியார், நாடார் ஆகிய சாதி யினைச் சேர்ந்தோரும் ஒரு சில குடும்பங்கள் வசித்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத் தில் பொதுவாக தலித்தல்லாதோர் தலித் குடியிருப் பிலோ அல்லது தலித்துகள் தலித்தல்லாதோர் குடி யிருப்பிலோ வசிப்பதில்லை. ஆனால் நெல்லை மாநகராட்சியில் தலித் பகுதியில் எவ்வாறு தலித்தல்லாதோர் வசித்து வருகின்றனர்? அவர்களுக் கிடையேயான சமூக உறவு எவ்வாறு இருக்கிறது? என்பது போன்ற கேள்விகள் எனக்குள் எழுந்தன. அக்கேள்விகளுக்கான பதிலைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று விரும்பினேன்.மீண்டும் அப் பகுதிக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய் தேன்.

இச்சூழலில் அப்பகுதியில் விடுபட்ட வீடுகளைக் கணக்கெடுப்பதற்குச் சென்ற பொழுது அத்தேவர் சாதிப் பெண்மணியை சந்தித்து உரை யாடினேன். “இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அவர் தன் கணவர் மற்றும் மாமியாரோடு பள்ளர்களின் கிராமமான லட்சுமிபுரத்தில் வசித்து வருகிறார். கணவர் ஹோட்டல் ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மற்ற சாதியினர் வசிப்பிடத்திற்குச் சென்றால் அங்கு வாடகை அதிகமா இருக்கும், இங்கு குறைவாக இருப்பதனால் இங்கு இருக்கிறோம். நாங்கள் உழைக்கிறோம் வாழ்கிறோம். வேறு எந்த பிரச் சினையும் எங்களுக்கு இல்லை என்றார் அப் பெண்மணி.

“நாங்கள் உழைக்கிறோம் வாழ்கிறோம்” என்ற கூற்றில் பல பொருட்கள் பொதிந்துள்ளன. சுரண்டல், ஆதிக்கம் செலுத்துதல் போன்ற வற்றினை தாங்கள் செய்வதில்லை என்பதும் அதில் அடங்கியுள்ளன.

தென் மாவட்டங்களில் பள்ளர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே நடைபெற்ற மோத லுக்குப் பின்னர் இரண்டு சாதியினரும் ஒருவருக் கொருவர் பேசிக்கொள்வதில்லை, இச்சூழல் இன்றும் தொடர்வதனைக் காணமுடிகிறது. ஆனால் பள்ளர் குடியிருப்பான லட்சுமிபுரத்தில் எவ்வாறு தேவர், செட்டியார், நாடார் ஆகியோர் இணக்கமான உறவுடன் வாழ்ந்து வரமுடிகிறது என்றால் சமூகத்தில் பள்ளர்களுக்கு மேல்நிலை யிலிருக்கின்ற அவர்கள் தங்களின் ஆதிக்கத்தினை எவ்விடத்திலும் எச்சமயத்திலும் வெளிப்படுத்தி யிருக்காதது அவர்களுக்குள்ளான இணக்கத்திற்குக் காரணமாகும். இது குறித்த ஆழமான ஆராய்ச்சி தேவை.

இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்ட மாணவர் களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. மாணவர்கள் பெரும்பாலும் கிராமப் புறத்தினைச் சேர்ந்தவர்கள், சிலர் நடுத்தர வர்க்கத்தினைச் சேர்ந்தவர்கள். ஆனால் இந்த கணக்கெடுப்பின் போது அவர்கள் இவ்வாறு ஒரு அவலமான உலகம் இருக்கிறதா என்பதை உணர்ந்திருக் கின்றனர். வறுமை எவ்வாறு இருக்கும் என்பதை அவர்கள் நேரில் கண்டறிந்தனர்.

மாணவிகள் புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பொழுது சிலர் தங்களின் வறுமையினை கூறி அழுது புலம்பியிருக்கின்றனர். இந்த அவலம் மாணவிகளிடத்தில் கண்ணீரை வரவழைத் திருக்கிறது.

கட்டாந்தரையில் நான்கு குச்சிகளை நட்டு அதில் கிழிந்த பிளாஸ்டிக் தாளைக் கொண்டு வீடு அமைத்து அதில் வாழ்ந்து வருகின்ற குழுவர் சாதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் கணக்கெடுத்த பொழுது தனக்கு கண்ணீர் வந்துவிட்டது என்றார் கௌதமி என்ற மாணவி.

கணவனை இழந்தோர், ஆதரவற்றோர் போன்றோரின் வறுமை தங்களை நிலைகுலையச் செய்ததாக மாணவிகள் கூறிய பொழுது வகுப்பறை பாடம் எதையும் கற்றுக் கொடுத்து விடாதோ என்ற கேள்வியே எனக்குள் எழுந்தது. வறுமையினால் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டு எந்த அளவிற்கு மாணவிகள் பாதிப்படைந்தனரோ அந்த அளவிற்கு நடுத்தர வர்க்கத்தினர் மீது அவர்களுக்கு கோபமும் வந்திருக்கிறது.

தலித்துகளுக்கு வழங்கப்பட்ட நிலம் நடுத்தர வர்க்கத்தினரால் வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அப்பகுதி குடிசைப் பகுதியே! அங்கு மாணவிகள் கணக்கெடுத்த பொழுது நடுத்தர வர்க்கத்தினர் ஆணவத்தோடும் அதிகாரத்தோடும் பதிலளித் திருக்கின்றனர். இது அவர்கள் மீது மாணவிகளுக்கு வெறுப்பை உண்டாக்கியது. எனவே, மாணவிகள் தயவு செய்து நடுத்தர வர்க்கப் பகுதிகளுக்கு எங்களை அனுப்பாதீர் என்று முறையிட்டனர்.

     ஒட்டுமொத்தமாக குடிசைப் பகுதி கணக் கெடுப்பிலிருந்து சில உண்மைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. தென்னிந்தியாவின் ஆக்ஸ் போர்டு என்று திருநெல்வேலியை அழைப் பதுண்டு. ஆனால் இம்மாநகராட்சியில் பெரும் பாலான தலித்துகள் கல்வி கற்காமல் இருக் கின்றனர். இவர்கள் விவசாயக் கூலி, கட்டிடத் தொழிலாளி, துப்புரவுப் பணி போன்ற வேலை களை நம்பியே இவர்களின் அன்றாட பிழைப்பு நகர்ந்து கொண்டிருக்கிறது. மாநகராட்சிக்குள் இருந்தபோதிலும் இவர்களின் வாழ்க்கை முன் னேற்றம் அடைந்துவிடவில்லை. உண்மையைக் கூறினால் மாநகராட்சிக்குள் இருக்கின்ற காரணத் தினால் பல நலத்திட்டங்கள் இவர்களுக்கு மறுக்கப்படுகிறது.

எனவே, மாநகராட்சி அல்லாத பகுதிகளில் வசிக்கும் தலித்துகளின் நலனுக்காக அமுல்படுத்தப் படும் திட்டங்கள் அனைத்தும் மாநகராட்சிக்குள் வசிக்கின்ற பகுதிக்கும் அமுல்படுத்தப்பட வேண் டும். இது ஒரு சிறிய முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். திருநெல்வேலி மாநகராட்சியில் அனைத்து தலித்துகளும் கூலிகளாகவா வாழ்ந்து வருகின்றனர் என்ற வினவக்கூடும்.

இங்கு கணிசமான எண்ணிக்கையில் தலித் நடுத்தர வர்க்கம் இருக்கிறது. ஆனால் இவர்கள் பெரும்பாலும் திருநெல்வேலியோடு இணைக்கப் பட்டிருந்த பாரம்பரிய கிராமத்தினைச் சேர்ந்தவர் கள் அல்ல, அவர்கள் வெளியூர்களைச் சேர்ந்தவர் கள். குறவர் சாதியினரைப் பொறுத்த மட்டிலும் ஒருசிலரே கல்வி கற்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இட ஒதுக்கீடு, அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் போன் றவை திருநெல்வேலி மாநகராட்சிக்குள் இருக் கின்ற பாரம்பரியமான கிராமத்து மக்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவி புரிந்திருக்க வில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

கணக்கெடுப்பிற்கான கேள்வித்தாள் படிவத்தில் வியாபாரி மற்றும் சாலையோர வியபாரி குறித்த கேள்வி இடம்பெற்றிருந்தது. தலித்துகளிடத்தில் இத்தகைய வியாபாரிகள் இல்லை என்பதைத் தெரிவிக்கும் கோடு மட்டுமே மாணவர்கள் குறித்திருந்தனர். அது குறித்து விசாரித்து அக்கேள்விக்கான பதிலை எழுதவும் என்று மாணவர்களிடம் கூறினார் பவனந்தி வேம்புலு. மீண்டும் அதே பதில்தான் வந்தது.

ஏன் தலித்துகளிடத்தில் வியாபாரியோ சாலையோர வியாபாரியோ இல்லை என்ற கேள்வி எங்களுக்குள் எழுந்து கொண்டே இருந்தது. தலித் முதியவர் ஒருவர் இதற்கான காரணத்தைத் தெளிவாக இவ்வாறு கூறினார்: ‘’சாலையோர வியாபாரமோ அல்லது கடை நிறுவி வியா பாரமோ செய்ய வேண்டும் என்றால் அடிப்படை யில் அதற்கு சரக்கு வேண்டும். இதற்கு நிதி மூலதனம் வேண்டும். அது தலித்துகளிடத்தில் இல்லை. மொத்த சரக்கு விற்பனையாளர்களாக தலித்தல்லாதோர்தான் இருக்கின்றனர். எனவே, அவர்களிடம் கடனுக்காகக்கூட சரக்கு பெறுவது இயலாது. சாதிய அடையாளம் தெரியாமல் கடனுக்கு சரக்கு தருவது கிடையாது. சாதிய அடை யாளம் தெரிந்தால் தலித்துகளுக்கு எவ்வாறு அவர்கள் கடனுக்கு சரக்கு தருவார்கள்? ஒருவேளை அவ்வாறு தந்தாலும்கூட தலித்துகளிடம் யார் பொருட்கள் வாங்குவதற்கு முன்வருவார்கள். இதனால்தான் நாங்கள் வியாபாரம் செய்வ தில்லை” என்றார்.

இதனால் தலித்துகளிடத்தில் வியாபாரிகளே திருநெல்வேலி மாநகரத்தில் இல்லையா? என்ற கேள்வி எழும். நான் அறிந்தவரையில் ஒரேயொரு வர் இருக்கிறார். அவர் திருநெல்வேலி நகரத்தில் ஒரு கடை வைத்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்: “நான் எனது சாதிய அடையாளத்தை மறைத்துக் கொண்டுதான் வியாபாரம் செய் கிறேன். நான் தலித் என்று தெரிந்தால் மொத்த வியாபாரிகள் சில்லறை விற்பனைக்கு சரக்கு தரமாட்டார்கள். அதனால்தான் நான் தலித்தல்லாத வேறு ஒரு சாதியாக (நாடார்) வாழ்ந்து கொண் டிருக்கிறேன்”.

இதே கருத்தினை நாவிதர் ஒருவரும் தெரிவித்தார். இவர் திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் கடை நடத்தி வருகிறார். அவர் நாடார் சாதியாக வாழ்ந்து வருகிறார்.

திருநெல்வேலி மாநகரத்தில் நான் அறிந்த வரையில் ஒடுக்கப்பட்ட சாதியினைச் சேர்ந்தவர்களில் இவ்விருவர் மட்டுமே வியாபாரிகள். திருநெல்வேலியில் தேவர்களுக்கும் தேவேந்திரர்களுக்கும் (பள்ளர்) மோதல் நடைபெற்றது போல் தேவர்களுக்கும் நாடார்களுக்கும் நடைபெற்றது. முன்னவர்களுக்கு இடையிலான சிக்கலுக்கு அடிப் படைக் காரணம் சமூக ஏற்றத்தாழ்வு.

பின்னவர் இருவர்களுக்கும் இடையில் யார் திருநெல்வேலி நகரத்தில் வியாபாரத்தைக் கைப் பற்றி ஆதிக்கம் செலுத்துவது என்பதே சிக்கல். இவ்விரண்டுக்கும் அடிப்படையிலேயே சாதிதான் சிக்கல். சாதி சமூகத்தின் சிக்கல்களில் ஒன்றல்ல அது அடிப்படையான சிக்கல்.

Pin It