சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு

செப்டெம்பர் மாதத்தில் நூற்றுக் கணக்கான கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தை வாரி இறைத்து தமிழக அரசு நடத்திய சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் 2.42 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தமிழகத்தில் முதலீடு செய்ய இந்திய மற்றும் பன்னாட்டு முதலாளிகள் உறுதி தெரிவித்திருப்பதாக தமிழக அரசு மார் தட்டிக் கொள்கிறது. இதில் ரூ 1 லட்சத்து 4,286 கோடி உற்பத்தி துறையிலும், ரூ.1 லட்சத்து 136 கோடி மின் சக்தி துறையிலும், ரூ.10,950 கோடி தகவல் தொழில்நுட்ப துறையிலும், ரூ.1955 கோடி துணி மற்றும் ஆடைகள் துறையிலும், ரூ.800 கோடி வேளாண் துறையிலும், ரூ.500 கோடி மீன்வளத்துறையிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், தமிழகத்தில் தொழில் பெரும் வளர்ச்சியடையும் என்றும், இலட்சக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும், வருவாய் அதிகரிக்கும் என்றும் அரசு கூறுகிறது.

இந்த முதலீடு பற்றிய அறிவிப்புகளில் பெரும்பாலானவை விளம்பரத்திற்காக மட்டுமே அறிவிக்கப்படுகின்றன. இதில் ஆளும் கட்சிக்கும், பெரு முதலாளிகளுக்கும் மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் கிடைக்கிறது. கடந்த காலத்தைப் போல அறிவிக்கப்பட்ட முதலீட்டில், மிகக் குறைந்த அளவு முதலீடுகள் கூட உண்மையில் வராமல் போகலாம். இது வருகின்ற தேர்தலையொட்டிய விளம்பரம் மட்டுமின்றி, முதலாளிகள் கொள்ளையடிப்பதற்குத் தேவையான அனைத்தையும் தான் செய்யத் தயங்க மாட்டேனெனவும் எனவே தன்னை மீண்டும் அதிகாரத்திற்குக் கொண்டுவர ஆவன செய்ய வேண்டுமெனவும் செயலலிதா பெரு முதலாளிகளுக்கு தெள்ளத் தெளிவான செய்தியை அனுப்பியிருக்கிறார். மேலும் ஆயிரக்கணக்கான கோடி முதலீடுகளுக்கு இணையாக ஆயிரக் கணக்கான இலவசங்களையும் வரி மற்றும் பிற சலுகைகளையும் மக்கள் வரிப்பணத்திலிருந்து வாரி வழங்கும் போது, அதில் ஆளும் கட்சியும்,  அதிகாரிகளும் தங்களையும் வளப்படுத்திக் கொள்ள ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

அரசின் இந்த முயற்சியின் மூலம் முதலீடு செய்ய முன்வந்துள்ள, முதலீட்டாளர்களுக்கு விண்ணப்பித்த 30 நாட்களிலேயே ஒற்றைச் சாளர முறையில் தொழில் திட்டங்களுக்கான அனைத்து விதமான தடையில்லா சான்றுகளும். ஒப்புதல்களும் தரப்படும். இந்தப் பணிகளைச் செய்வதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு திட்டத்திற்கும் தேவையான அனைத்துச் சான்றுகளும் கிடைக்க இந்த அதிகாரிகள் செயல்படுவார்கள். இது தவிர தமிழ் நாட்டில் ஏற்கெனவே பல்வேறு தொழில் திட்டங்களுக்கான ஒப்புதல்கள் ஆன்லைன் மூலம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் முதலீட்டாளர்களிடம் விவரித்துக் கொண்டிருந்த போது, குறுக்கிட்ட ஒரு தொழில் முனைவர், மிகவும் பின்தங்கிய மாவட்டமான அரியலூரில் தொழில் தொடங்க அனுமதி கேட்டு கடந்த 2 ஆண்டுகளாக தான் போராடி வரும் நிலையில் ஆன்லைன் என்றும் 1 மாதத்தில் அனுமதி என்றும் எப்படி கதை சொல்லுகிறீர்களென கேள்வியெழுப்பினார். இந்த ஏற்பாடுகள் பெரு முதலாளிகளுக்கும் ஏகபோக முதலாளிகளுக்கு மட்டும் தான் என்பதையும், அவர்களுக்கும் உரிய "கப்பம்" "உரியவர்களுக்கு"க் கட்டினால் மட்டுமே அது கிடைக்கும் என்பது இந்தத் தொழில் அதிபருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

தமிழக அரசு முதலாளிகளுக்கு தர இருக்கும் இலவசங்கள் மற்றும் சலுகைகள் குறித்த விவரங்களை பொது மக்களுக்கு வெளியிடவில்லை. அவற்றை இரகசியமாக இந்திய மற்றும் பன்னாட்டு பெரு முதலாளிகளிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டனர். அரசின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும் என்றும், அவர்களுடைய முதலீடுகளுக்கு "முழு பாதுகாப்பு" தரப்படும் என்றும் கூறியுள்ளனர். அதாவது தொழிலாளிகளை பெரு முதலாளிகள் கடுமையாகச் சுரண்டவும், அதை எதிர்க்கும் தொழிலாளிகளை இரும்புக் கரம் கொண்டு நசுக்கவும், சட்டங்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை என அனைத்தும் முதலாளிகளுடைய மூலதனத்தைப் பாதுகாக்கவும், இலாபத்தைப் பெருக்கவும் பயன்படுத்தப்படும் என்று இதற்குப் பொருள். அது மட்டுமின்றி, ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை உழவர்களிடமிருந்து பிடுங்கி அவற்றை இலவசமாக பெரு முதலாளிகளுக்கு வழங்கப்படும். இதற்காகத் தான் திருவாளர் மோடி அவர்கள், செயலலிதா போன்ற தலைவர்களுடைய உதவியோடு நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வரத் துடிக்கிறார். மேலும் முதலீட்டாளர்களுக்கு தடையற்ற இலவச மின்சாரம், தண்ணீர் மற்றும் அனைத்து வசதிகளும் செய்துத் தரப்படும். இவை மட்டுமின்றி, அவர்களுக்கு எல்லா வகையான வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும். இப்படிப்பட்ட விவரங்கள் தமிழக மக்களுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக, "சனநாயக அடிப்படையில்" "மக்களால்" தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசாங்கம் அவற்றை வெளியிடவில்லை.

தமிழக அரசாங்கம் இந்தியப் பெரு முதலாளிகளையும் பன்னாட்டு முதலாளிகளையும் இவ்வாறு இரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பது இது முதல் முறையல்ல. நோகியா, போர்ட், உண்டாய், டிசிஎஸ் (டாடா), இன்போசிஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் இப்படித் தான் தமிழ்நாட்டிற்குள் ஊடுறுவின. அவர்கள் இலட்சக் கணக்கான கோடி ரூபாய் பெறுமானமுள்ள சேவைகளையும், வளங்களையும், வரிச் சலுகைகளையும் இலவசங்களையும் அரசாங்கத்திடமிருந்து பெற்றிருக்கின்றனர்.

இதனால் தமிழக மக்களுக்குக் கிடைத்ததென்ன?

எடுத்துக் காட்டாக நோக்கியா-வைப் பார்ப்போம். மத்திய அரசும், தமிழக அரசும் கூடி தமிழகத்தில் தொழிற்சாலையை அமைப்பதற்காக நோக்கியா நிர்வாகம் முன்வைத்த நிபந்தனைகளை தலை மேல் சுமந்து செய்து முடித்தார்கள். 2006-இல் திருப்பெரும்புதூரில் 210 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றி மின்சாரம், தண்ணீர் மற்றும் எல்லாத் தேவைகளையும் இலவசமாகப் பெற்று நோக்கியா தொழிற்சாலை அமைக்கப்பட்டது. முதல் 6 ஆண்டுகளிலேயே 151,000 கோடி ரூபாய் பொருமானமுள்ள கைபேசிகள் உற்பத்தி செய்யப்பட்டு 80 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இலாபம் ஈட்டப்பட்டது. 2014-இல் தொழில் நுட்பத்திலும் உலக சந்தையிலும் மாற்றங்கள் ஏற்பட்ட போது, திருப்பெரும்புதூர் ஆலை நோக்கியாவிற்கு அவ்வளவு இலாபகரமாக இல்லையென்று கருதி அதை நிர்வாகம் மூடி விட்டு வியட்நாம் சென்றுவிட்டனர். இங்கு வேலை செய்து வந்த 8000-க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களும், 25,000-க்கும் மேற்பட்ட பிற தொழிலாளர்களும் ஒரே நாளில் வேலையிழந்து வீதிக்கு வந்தனர்.

நோக்கியா செயல்பட்ட 6-7 ஆண்டுகளில் வரிச் சலுகை மூலமாகவும், பிற சலுகைகள் மூலமாகவும், நோக்கியா 40-50 ஆயிரம் கோடி ரூபாய்கள் இலாபமடைந்திருக்கின்றனர். இது மட்டுமின்றி, மத்திய அரசுக்கு 21,000 கோடி ரூபாய் வரி பாக்கியும், தமிழக அரசுக்கு 2,400 கோடி ரூபாய் வரி பாக்கியும் நோக்கியா நிர்வாகம் செலுத்தத் தவறியதாக அரசு தொடுத்த வழக்குகள் கூறுகின்றன. இத்தனைக்குப் பிறகும் ஆலையை மூடி, தொழிலாளர்களை நட்டாற்றில் விட்டது நோக்கியா கம்பெனி. செயலலிதா தலைமையிலான தமிழக அரசும், திருவாளர் மோடி தலைமையிலான மத்திய அரசும், நோக்கியா மற்றும் மைக்கிரோ சாப்ட் நிறுவனங்களுடைய உயர் மட்ட நிர்வாகிகளைக் கைது செய்யவோ, அவர்களுடைய உடமைகளைக் கைப்பற்றவோ, மேற்கொண்டு அவர்கள் இந்தியாவில் தொழில் செய்வதைத் தடை செய்யவோ ஒரு இம்மியைக் கூட அசைக்க வில்லை. வீதிகளில் எறியப்பட்ட 30,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் பரிதாப நிலையைப் பற்றி செயலலிதாவோ, மோடியோ, சிறிதும் கவலைப்பட வில்லை, அது பற்றி அவர்கள் வாயைக் கூடத் திறக்கவில்லை. நோக்கியா மூடப்பட்டது மட்டுமின்றி, இதன் சார்பு நிறுவனங்களாகிய பாக்ஸ்கான், பிஓய்டி, சேல்காம்ப், பெர்லோஸ் ஆகிய நிறுவனங்களும் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களைத் தூக்கியெறிந்து கதவடைப்பு செய்தனர்.

மொத்தத்தில் நோக்கியா நிறுவனம் எல்லா இலவசங்களையும், சலுகைகளையும் பெற்றுக் கொண்டு, தங்களுடைய கொள்ளை இலாபத்தை சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டினர்.

இதே நிலை தான் தற்போது தமிழக அரசு மார் தட்டிக்கொள்ளும் முதலீடுகளிலும், மோடி உலகெங்கிலும் விற்றுவரும் "இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்" என்ற திட்டத்தினாலும் நமது நாட்டிற்கும், நம் தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் நேரும்.

போர்டு, உண்டாய் போன்ற நிறுவனங்களும் இவ்வாறு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இலவசங்களும், வரிச் சலுகைகளும் கொடுக்கப்பட்டு தமிழ்நாட்டில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காகத் துவக்கப்பட்ட நிறுவனங்களாகும். அங்கு நிலைமை என்ன? தொழிலாளர்கள் தாங்கள் விரும்பும் தொழிற் சங்கத்தை அமைக்கக் கூட இந்த பன்னாட்டு நிறுவனங்களில் உரிமை இல்லை. தொழிற் சங்கத்தை அமைக்க முயற்சிகளை மேற்கொண்டதற்காக, தொழிலாளர்கள் வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டு பல்வேறு வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர். வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காகவே புதிய முதலீடுகளை ஈர்த்து வருவதாக மோடியும், செயலலிதாவும் கோயபல்சின் பாணியில் பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள். இவ்வாறு தொழில் தொடங்கிய போர்டு, உண்டாய் போன்ற பெரும் நிறுவனங்களில் 20 % த்திற்கும் குறைவானவர்களே நிரந்தரத் தொழிலாளிகள். மற்ற அனைவரும் தற்காலிகத் தொழிலாளர்கள், பயிற்சித் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற பல்வேறு பெயர்களில் 4000 இலிருந்து 6000 ரூ மாத சம்பளத்தில் எவ்வித உரிமைகளும் இன்றி கடுமையாகச் சுரண்டப்படுகின்றனர்.

தகவல் தொழில் நுட்பத்துறையில் புதிதாக ரூ.10,950 கோடி ரூபாய் முதலீடுகள் வரப்போவதாக செயலலிதா கூறுகிறார். டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல், சிடிஎஸ் போன்ற பல பெரு முதலாளி நிறுவனங்கள் சென்னையில் பல்லாண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. அங்கு உழைப்பவர்களுடைய நிலைமை என்ன? அண்மையில் டாடாவின் நிறுவனமான டிசிஎஸ்-உம், ஐபிஎம், மற்றும் பிற நிறுவனங்களும் ஆயிரக் கணக்கில் அனுபவம் வாய்ந்த வல்லுனர்களை வேலையிலிருந்து தூக்கியெறிந்து வருகின்றனர். இதை எதிர்த்து நாடெங்கிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்திருந்துங்கூட மத்திய மாநில அரசாங்கங்களும், நீதி மன்றங்களும் பிற அரசு நிறுவனங்களும் மயான அமைதி காத்து வருகின்றனர். தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தொழிலாளர்களைக் காட்டுமிராண்டித்தனமாகச் சுரண்டவும், விருப்பம்போல அவர்களைத் தூக்கியெறியவும் அரசாங்கமும், நீதி மன்றங்களும் இந்தப் பெரு முதலாளிகளோடு ஒத்துழைத்து, உரிமைகளைக் கோரும் தொழிலாளர்களை நசுக்கி வருகின்றனர்.

இந்திய மற்றும் பன்னாட்டு பெரு முதலாளிகள் முதலீடு செய்து, நம் தொழிலாளர்களைச் சுரண்டுவதைத் தீவிரப்படுத்தவும், நம் உரிமைகளை காலில் போட்டு நசுக்குவதையும் மேலும் எளிதாக்குவதற்காகவே, திருவாளர் மோடி கொண்டுவரத் துடிக்கும் தொழிற் சட்டத் திருத்தங்களாகும்.

வெப்பமானிகளை உற்பத்தி செய்து அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக பாண்ட்ஸ் - இந்துஸ்தான் லிவர் கம்பெனிகள் கொடைக்கானல் பகுதியில் பாதரச நச்சைப் பரப்பி அந்த மண்ணையும், அங்கு வேலை செய்த தொழிலாளர்களுடைய உடல் நிலையையும் கடுமையாக பாதித்தனர். ஆனால் மாசு படிந்த நிலத்தைத் திருத்தவும், தொழிலாளர்களுடைய பாதரச மாசு தொடர்பான நோய்களைத் தீர்க்கவும் இந்த ஏகபோக நிறுவனங்கள் போதுமான நடவடிக்கைகளை மேற் கொள்ளவில்லை. இயற்கை வளங்களையும், சுற்றுப் புற சூழ்நிலையையும் மாசு படுத்தி சீரழித்த நிலையைத் தடுத்து நிறுத்தவோ, குற்றவாளிகளைத் தண்டிக்கவோ தமிழக அரசும், மத்திய அரசும் வேண்டிய நடவடிக்கை எதையும் மேற் கொள்ளவில்லை.

இந்த அனுபவங்களைத் தொகுத்துப் பார்க்கையில், அரசாங்கத்தின் முதலீட்டைக் கவர்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உண்மையில், நம்முடைய வரிப் பணத்தை பெரு முதலாளிகள் கொழுப்பதற்காக இலவசங்களாகவும், சலுகைகளாகவும் வாரி வழங்கவும், இந்திய மக்களை மலிவான உரிமைகளற்ற கடுமையாகச் சுரண்டுவதற்கேற்ற ஆடுமாடுகளாக இந்த முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்து கொடுப்பதும், பெரு முதலாளிகளுடைய இலாபத்தை பாதிக்கும் வகையில் தொழிலாளர்கள் போராடுவார்களேயானால் அவர்களை ஈவு இரக்கமின்றி ஒடுக்குவதும். இயற்கை வளங்களை பெரு முதலாளிகள் கொள்ளையடிக்கவும் சீரழிக்கவும் திறந்துவிடுவதும் நோக்கமாகும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வருவது என்பதைப் பெரு முதலாளிகள் தீர்மானிக்கின்ற காரணத்தால், பெரு முதலாளிகளை அதிகமாகக் கொழுக்க வைப்பது யார் என்பதில் முதலாளித்துவ கட்சிகளிடையேயும், மாநிலங்களுக்கு இடையிலும் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டா போட்டியில் இலவசங்களாலும், சலுகைகளாலும் திக்குமுக்காடி மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைப்பது பெரு முதலாளிகளும், ஏகபோக முதலாளிகளும் ஆவர். மற்றொரு பக்கம், இந்தத் திட்டத்தாலும், இந்த ஒட்டுமொத்த அமைப்பாலும் இழப்பவர்கள் மக்களும், குறிப்பாக தொழிலாளர்களுமே ஆவர்.

எனவே செயலலிதாவும், மோடியும் முன்வைத்து வரும் முதலீட்டை வரவேற்கும் பொருளாதாரப் போக்கு வளத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவருவதற்கு மாறாக, மக்களுடைய உழைப்பையும், வரிப் பணத்தையும் பெரு முதலாளிகளின் காலடியில் கொடுத்து அவர்களை மேலும் கொழுக்க வைப்பதாகவும், அவர்கள் எறியும் சில பருக்கைகளைக் கொண்டு நாம் திருப்தியடைய வேண்டும் என்று கூறுவதாகவும் இருக்கிறது. நமது தொழிலாளர்களும், உழவர்களும், பிற உழைக்கும் மக்களும் மிக அதிகமான உபரி மதிப்பை உருவாக்குகிறார்கள். அதைப் பெரு முதலாளிகள் கைப்பற்ற விடாமல் தடுத்து, தொழிலாளர்களே தாங்கள் உருவாக்கும் உபரி மதிப்பை பயன்படுத்தவும், அதனைப் பொது மக்களும் சமுதாயமும் பயனடையும் வகையில் முதலீடு செய்யவும், உற்பத்தி சக்திகளைப் பெருக்கவும் முடியும். ஆனால், அதைச் செய்வதற்கு முதலாளித்துவத்திற்கும், முதலாளிகளுடைய ஆட்சிக்கும் முடிவு கட்டிவிட்டுத் தொழிலாளர்கள் - உழவர்களுடைய ஆட்சியை நாம் நிறுவ வேண்டும்.