தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், சில்லாங்குளம் ஊராட்சி மன்ற உறுப்பினரும், ஒட்டப்பிடார வட்டாரத்தின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயலாளராகவும் செயல்பட்டு வந்த தோழர்.பெ.கருப்பசாமி உடல்நலக் குறைவால் 26-11-2014 அன்று இயற்கையெய்தினார். தோழர். கருப்பசாமி அவர்கள் சிறு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். கடந்த 25 ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் சங்கத்திலும், இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியிலும் இணைந்து விவசாயிகளுடைய உரிமைகளுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் இடையறாது போராடி வந்தவராவர். மறைந்த தோழர் குருசாமி தேவருடன் இணைந்து, கம்யூனிஸ்டு கெதர் கட்சிக்காக இரவும் பகலும் உழைத்தவர் இவர். உழவர்களுடைய பிரச்சனைகளை உரிய அரசு அதிகாரிகளிடம் எழுப்பி உரிமைகளுக்காகப் போராடுவதில் என்றும் சளைத்தவர் அல்ல. கம்யூனிஸ்டு கெதர் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களிலும், கருத்தரங்குகளிலும் முன்னணியில் நின்று செயல்பட்டவர்.

தோழர். கருப்பசாமி அவர்களை இழந்து வாடும் அவரது துணைவியார் திருமதி சீதாலட்சுமி அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், இயக்கப்பணிகளில் அவரோடு இணைந்து வேலை செய்த தோழர்களுக்கும், உழவர்களுக்கும் தொழிலாளர் ஒற்றுமைக் குரல் ஆறுதல்களையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கிறது. தோழருடைய மறைவை ஈடுகட்டும் வகையிலும், அவருடைய நினைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், ஒட்டப்பிடார வட்டாரத்தைச் சேர்ந்த உழவர்களும், இளைஞர்களும் அவர் ஆற்றிய பணிகளைத் தொடர வேண்டும்.